டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் திருப்பம் - நடப்பது என்ன?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், ஆந்தனி ஸர்க்கர்
- பதவி, வட அமெரிக்க நிருபர்
சனிக்கிழமை அன்று பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. ஆனால் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டதற்கும், இருவர் படுகாயம் அடைந்ததற்கும் அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் காரணமாகிவிட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை உலுக்கியதோடு மட்டுமல்லாது, அந்த நாட்டின் சமூக மற்றும் கலாசார கட்டமைப்பையும் இந்த தோட்டாக்கள் சேதப்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசியலில் பாதுகாப்பு குறித்து பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டிருந்த மாயை அதிர்ச்சிகரமான முறையில் சிதைந்துவிட்டது.
டிரம்புக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. ஆனால் நூலிழையில் அவர் தப்பித்தார் என்று தான் சொல்ல வேண்டும். நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான புகைப்படத்தில், முன்னாள் அதிபரின் தலைக்கு அருகே காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு தோட்டா பாய்வதைக் காண முடிகிறது.
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் 1981இல் ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவரால் சுடப்பட்டதற்கு பிறகு அதிபர் அல்லது அதிபர் வேட்பாளருக்கு எதிராக இப்படியொரு வன்முறைச் செயல் நடந்ததில்லை.
அமெரிக்க அரசியலின் இருண்ட காலம்

பட மூலாதாரம், Getty Images
இது அமெரிக்க அரசியல் வரலாற்றின் ஒரு இருண்ட காலத்தை நினைவுபடுத்துகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு, இரண்டு கென்னடி சகோதரர்கள், ஒருவர் அதிபர், மற்றொருவர் அதிபர் வேட்பாளர், கொலையாளிகளின் தோட்டாக்களால் வீழ்ந்தனர்.
மெட்கர் எவர்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மால்கம் எக்ஸ் போன்ற சிவில் உரிமைக்காக போராடிய தலைவர்களும் அரசியல் வன்முறையில் உயிர் இழந்தனர்.
இன்று உள்ளதைப் போலவே, 1960கள் காலகட்டத்திலும் தீவிர அரசியல் பிரிவினைகள் மற்றும் குழப்பங்கள் நிலவின. அதாவது ஒரு துப்பாக்கியும் அதைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் ஒரு நபரும் வரலாற்றின் போக்கை மாற்றக்கூடும் என்ற நிலை அப்போதும் இருந்தது.
சனிக்கிழமை நிகழ்வுகள் அமெரிக்கா மற்றும் அதன் அரசியல் பிரசாரங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போதே கணிப்பது கடினம். ஏற்கனவே, இருதரப்பினரின் தீவிரமான பிரசாரங்களை தணிக்கவும் மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும் இரு கட்சிகளைச் சேர்ந்த சிலரிடமிருந்து அழைப்புகள் வந்துள்ளன.
சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குள் டிரம்பின் போட்டியாளரும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன், டெலவேரில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. இது மிகவும் மோசமானது. நாம் இதை எளிதில் கடந்து செல்ல முடியாது, மன்னிக்கவும் முடியாது.” என்றார்.
பின்னர் அதிபர் பைடன் முன்னாள் அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஜனநாயகக் கட்சியினர் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
சில குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இந்த தாக்குதலுக்கு ஜனநாயகக் கட்சியினர் மீது பழி சுமத்தியுள்ளனர். டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்ற ஜனநாயகக் கட்சியினரின் கடுமையான குற்றச்சாட்டு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்கின்றனர் டிரம்ப் தரப்பு.
"பைடன் பிரசாரத்தின் மையக் கருத்து என்னவென்றால், 'முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகார பாசிஸ்ட் சக்தி. அவர் எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என்பதாகும். இத்தகைய மோசமான தேர்தல் பிரசார உத்தி தான் டிரம்பின் படுகொலை முயற்சிக்கு வழிவகுத்தது." என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார் செனட்டர் ஜேடி வான்ஸ்.
இவர் டிரம்பின் ஆதரவாளர் மட்டுமல்லாது, குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளருக்கான பட்டியலிலும் இருக்கிறார்.
டிரம்ப் பிரசார மேலாளரான கிறிஸ் லாசிவிடா, "இடதுசாரி ஆர்வலர்கள், ஜனநாயகக் கட்சியின் நன்கொடையாளர்கள் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் நவம்பர் மாத தேர்தலில் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்களின் அருவருப்பான கருத்துகள் தான் சனிக்கிழமை தாக்குதலுக்கு வழிவகுத்தது." என்கிறார்.
இதை ஜனநாயகக் கட்சியினர் ஆட்சேபிக்கலாம். ஆனால் 2011ஆம் ஆண்டு அரிசோனாவில் அரசியல்வாதி கேபி கிஃபோர்ட்ஸ் சுடப்படுவதற்கு சில மாதங்கள் முன்பாக, வலதுசாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை விவரிக்க, இடதுசாரிகள் பலர் இதே போன்ற பிரசாரங்களை பயன்படுத்தினர்.
திங்களன்று தொடங்கும் குடியரசுக் கட்சியின் மாநாட்டில் பென்சில்வேனியா வன்முறை சம்பவம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்படும். மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகில் வழக்கமாக நடக்கும் எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு புதிய முன்னெச்சரிக்கை உணர்வுடன் அணுகப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், அடுத்த வாரம் வியாழக்கிழமை இரவு டிரம்ப் பிரசாரத்திற்காக மேடை ஏறும்போது அவர் மீது தேசத்தின் கவனம் இன்னும் அதிகமாக இருக்கும்.
முன்னாள் அதிபர், ரத்தம் தோய்ந்த முகம், உயர்த்தப்பட்ட கையுடன் இருக்கும் படங்கள் மூலம் மில்வாக்கியில் ஒரு பெரும் கூட்டம் கூடும் என்பது உறுதி. குடியரசுக் கட்சி ஏற்கனவே பைடனுக்கு எதிராக 'வலிமை மற்றும் வீரம் நிறைந்த தலைமை' என்பதை பிரசாரத்தின் மையக் கருப்பொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. சனிக்கிழமை நடந்த சம்பவம் அதற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, "அமெரிக்காவிற்கு தேவையான போர் வீரர் இவர் தான்!" என்ற வாசகத்துடன் எரிக் டிரம்ப் தனது தந்தையின் புகைப்படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
டிரம்ப் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டிற்காக அமெரிக்க புலனாய்வு அமைப்பும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
சபாநாயகர் மைக் ஜான்சன் இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த விசாரணைகள் முடிவடைய காலம் எடுக்கும். இப்போதைக்கு, ஒன்று தெளிவாக உள்ளது, அமெரிக்காவின் அரசியலில் இந்த சம்பவம் ஒரு புதிய, எதிர்பாரா திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












