காஸா: இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களில் 141 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற அந்த பகுதி இஸ்ரேலிய ராணுவத்தால் மனிதாபிமான மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
வான் தாக்குதல் நடந்த இடம் 'பூகம்பம்' தாக்கியது போல் தெரிகிறது என்று அல்-மவாசியில் நேரில் கண்ட சாட்சி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
தாக்குதல் நடத்தப்பட்டது எங்கே?

பட மூலாதாரம், Getty Images
புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிதைவுகள் மற்றும் ரத்தம் தோய்ந்த உடல்கள் ஸ்ட்ரெச்சர்களில் ஏற்றப்படுவதை அப்பகுதியில் இருந்து வெளியான வீடியோக்கள் காட்டுகின்றன.
ஒரு பெரிய பள்ளத்தில் இடிபாடுகளை தங்கள் கைகளால் அகற்ற மக்கள் தீவிரமாக முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.
வான் தாக்குதலின் பின்விளைவுகளின் காட்சிகளை பிபிசி ஆய்வு செய்தது. இது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) இணையதளத்தில் மனிதாபிமான மண்டலமாக காட்டப்பட்ட பகுதிக்குள் நடந்ததை ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
பாதுகாப்புப் படையினரால் விளக்கப்பட்ட பின்னர் நடவடிக்கையை தொடர உத்தரவு பிறப்பித்ததாக நெதன்யாகு கூறினார்.
அருகில் பிணைக்கைதிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், சேதத்தின் அளவு மற்றும் என்ன வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பதையும் தான் அறிய விரும்பியதாக அவர் கூறினார். ஹமாஸ் குழுவின் மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் ஒழிக்கப் போவதாக செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீண்டும் உறுதிபடக் கூறினார்.
'போர் நிறுத்த முயற்சிகளை சீர்குலைக்க முயற்சி'

காஸா போர் நிறுத்த முயற்சிகளை 'கொடூரமான படுகொலைகள்' மூலம் நெதன்யாகு சீர்குலைக்க முயல்வதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குற்றம் சாட்டியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.
தங்கள் தலைவர்கள் குறி வைக்கப்பட்டனர் என்ற கூற்று 'தவறானது' என்று ஹமாஸ் கூறியது.
"பாலத்தீன தலைவர்களை குறிவைப்பதாக இஸ்ரேல் கூறுவது இது முதல் முறையல்ல. அது பொய் என்று பின்னர் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள் யாரும் இல்லாத திறந்த வெளியில் இந்த தாக்குதல் நடந்தது”, என இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் தாக்குதல் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்துவிட்டார். ஆனால் ஹமாஸ் தலைவர்கள் பொதுமக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு தங்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் எவரும் அந்தப் பகுதியில் இருக்கிறார்களா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
துல்லியமான வான் தாக்குதலுக்கு முன்னர் துல்லியமான உளவுத்தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Reuters
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் இது எங்களின் கருப்பு நாட்களில் ஒன்று என்று கூறினார்.
பிபிசி உலக சேவையில் ’நியூஸ் அவர்’ நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் முகமது அபு ரய்யா, மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட பெரும்பாலானவர்கள் இறந்திருந்ததாகவும், மற்றவர்கள் வெடிகுண்டுகளில் இருந்து தெறிக்கும் உலோக துண்டுகளால் தாக்கப்பட்டு காயமுற்றிருந்ததாகவும் கூறினார்.
நரகத்தில் இருப்பது போல அது இருந்தது என்று கூறிய அவர் உயிரிழந்தவர்களில் பலர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் குறிப்பிட்டார்.
அருகிலுள்ள குவைத் கள மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
"கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகம் செயல்பட முடியாத அளவிற்கு மக்களால் நிரம்பி வழிகிறது" என்று பாலத்தீனர்களுக்கான பிரிட்டிஷ் மருத்துவ உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த முகமது டெயிஃப்?

பட மூலாதாரம், AFP
ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் தலைவரான முகமது டெய்ஃப், இஸ்ரேலால் தேடப்படும் நபர்களில் ஒருவர்.
பல படுகொலை முயற்சிகளில் இருந்து அவர் உயிர் பிழைத்துள்ளார். 2002இல் நடந்த அத்தகைய ஒரு முயற்சியில் அவர் ஒரு கண்ணை இழந்தார்.
அவர் 1989இல் இஸ்ரேலிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த அவர், இஸ்ரேலிய வீரர்களை சிறைபிடிக்கும் நோக்கத்துடன் படைப்பிரிவுகளை உருவாக்கினார்.
1996இல் பெரும் எண்ணிக்கையில் இஸ்ரேலியர்களைக் கொன்ற பேருந்து குண்டுவெடிப்புகளை திட்டமிட்டதுடன், அதனை மேற்பார்வையிட்டதாகவும், 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து, கொலை செய்ததாகவும் அவர் மீது இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர் என்று கருதப்படுகிறது. அந்த தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். 251 பேர் பிணைக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது காஸாவில் மாபெரும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக 38,400 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை தாக்குதலை ஒரு 'கடுமையான விஸ்தரிப்பு' என்று அழைத்த ஒரு ஹமாஸ் அதிகாரி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதில் இஸ்ரேல் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
கத்தார் மற்றும் எகிப்தில் நடத்தப்பட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
மற்றொரு சம்பவத்தில் காஸாவின் மேற்கில் இஸ்ரேலிய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்று காஸாவில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. காஸா நகரின் மேற்கில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் உள்ள பிரார்த்தனை கூடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இஸ்ரேலிய ராணுவம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












