அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா ஹாரிஸால் தோற்கடிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அந்தோணி ஸர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க நிருபர்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்குவதற்கான பாதை தெளிவாகிவிட்டது.
உட்கட்சியில் 'அதிபர் வேட்பாளர்’ போட்டியில் வெற்றி பெறுவது எளிதான விஷயம்தான். ஆனால், நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பது மிகப்பெரிய சவால். கமலா ஹாரிஸ் எதிர்கொள்ள வேண்டியது இந்த சவாலைதான்.
கமலா ஹாரிஸை முன்னிலைப்படுத்தி இருப்பது ஜனநாயகக் கட்சியினருக்கு புதிய பலத்தைக் கொண்டு வரும் என்ற போதிலும், இது அதிபர் பைடனின் பலவீனங்களை அம்பலப்படுத்தி உள்ளது.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டிரம்பை விட சற்று பின்தங்கியுள்ளார். பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக சொன்ன வரலாற்று அறிவிப்புக்கு முன், கருத்துக் கணிப்புகளில் எந்த நிலையில் இருந்தாரோ, ஏறக்குறைய அதே நிலையில்தான் தற்போது கமலா ஹாரிஸ் இருக்கிறார்.
ஆனால் கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருக்க உண்மையான வாக்கு பதிவுகளில் அந்த எண்கள் மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
ஜனநாயக கட்சியினர் கடந்த மூன்று வாரங்களாக அதிபர் பைடனின் திறனை எண்ணி கையைப் பிசைந்தபடி ஒருவித பயத்தில் இருந்தனர்.
அதிபர் பைடனின் உடற்தகுதி மற்றும் அவர் பிரசாரத்தை மேற்கொள்ளும் திறன் ஆகியவற்றின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தது. தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு ஆசுவாசத்தை அளித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஜனநாயக கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவரான முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட, அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்த பலரும் தற்போது கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களில் உள்ள நடுநிலை வாக்காளர்களை ஈர்ப்பதும், டிரம்ப் மீது அதிருப்தியில் இருப்பவர்களை ஈர்ப்பதும்தான் கமலா ஹாரிஸ் முன்பிருக்கும் முதன்மை சவாலாகும். மேலும், கடந்த சில வாரங்களாக விரக்தியில் இருந்த ஜனநாயகக் கட்சியை உற்சாகப்படுத்துவதும் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
டாலர் மழை
கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பு, ஜனநாயகக் கட்சியினரின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இந்த புத்துணர்வு டாலர் மழையையும் பொழிய வைத்துள்ளது.
கமலா ஹாரிஸ் பரப்புரை அதிகாரிகள் கூற்றுபடி, பைடனின் விலகல் அறிவிப்புக்குப் பிறகு 24 மணி நேரத்தில் 80 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஒரே நாளில் இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்ததில்லை.
பைடன்-ஹாரிஸ் நிதி திரட்டும் கஜானாவில் ஏற்கனவே உள்ள 100 மில்லியன் டாலர்களும் கமலா ஹாரிஸுக்கு வரும். தற்போது கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய நன்கொடையுடன், வரவிருக்கும் பிரசாரத்திற்கு உறுதியான நிதி அடித்தளம் கமலா ஹாரிஸுக்கு கிடைத்துள்ளது.
குடியரசுக் கட்சியினர் தங்கள் எதிர்கட்சிக்கு எதிராகச் செலுத்திய முக்கிய தாக்குதல்களில் ஒன்று அதிபர் பைடனின் வயது. தற்போது கமலா ஹாரிஸ் வேட்பாளராக மாறினால், குடியரசுக் கட்சியின் இந்த விமர்சனங்களும் செயலிழந்து போகும்.
இனி வயதை பற்றி பேச முடியாது!

பட மூலாதாரம், Getty Images
பல மாதங்களாக, டிரம்ப் பிரசாரத்தில் பைடனை பலவீனமானவர் என்றும், எளிதில் குழப்பமடைபவர் என்றும் விமர்சிக்கப்பட்டது. நான்கு வாரங்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலின் விவாத நிகழ்ச்சியில் பைடனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தது.
துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வயது 59. மிகவும் ஆற்றல் மிக்க பேச்சாளர். அவரது கட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பவர். எனவே வயதையும், பிரசார ஆற்றலையும் வைத்து இனி ஜனநாயகக் கட்சியை விமர்சிக்க முடியாது.
இன்னும் சொல்லப்போனால் 78 வயதான டிரம்பின் வயதை தற்போது அவருக்கு எதிரான பிரசார ஆயுதமாக கமலா ஹாரிஸால் மாற்ற முடியும். ஏனெனில் கமலா ஹாரிஸுடன் ஒப்பிடும்போது டிரம்ப் மிகவும் வயதான நபர்.
கறுப்பின வாக்காளர்களை ஈர்ப்பாரா?
கமலா ஹாரிஸ் கறுப்பின வாக்காளர்களை தன் வசம் ஈர்க்க முடியும். அவர்கள் சமீபத்திய மாதங்களில் பைடனிடமிருந்து விலகிச் செல்வதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2008 மற்றும் 2012ஆம் ஆண்டு பராக் ஒபாமாவின் வெற்றிக்கு உதவியது சிறுபான்மையினர் மற்றும் இளம் வாக்காளர்களின் ஆதரவுக் கூட்டணி தான். கமலா ஹாரிஸும் அந்த வாக்காளர்களை ஒன்றிணைத்தால், இந்த ஆண்டுத் தேர்தலை தீர்மானிக்கும் போட்டி மிகுந்த சில மாகாணங்களில் அவருக்கு ஆதரவு அதிகரிக்கும்.
ஒரு வழக்கறிஞராக கமலாவின் அனுபவம், அவரது நற்பெயரை அதிகரிக்க உதவும். 2019 இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான முயற்சியில் தோல்வி அடைந்த போது, சட்ட அமலாக்க அதிகாரி (Kamala is a cop) என்று இடதுசாரிகள் அவரை கேலி செய்தனர். அவரது சட்ட அமலாக்க பின்னணி முன்னர் பாதகமாக இருந்தாலும், இப்போது அது டிரம்பிற்கு எதிராக அவருக்கு சாதகமாக செயல்படக்கூடும்.
கூடுதலாக, கருக்கலைப்பு உரிமை தொடர்பான விவகாரத்தில் நிர்வாகத்தின் முக்கிய புள்ளியாக கமலா ஹாரிஸ் இருந்துள்ளார். இது ஜனநாயக கட்சியின் அடித்தளத்தை ஊக்குவிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் கருக்கலைப்பு உரிமை விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக பைடன், சில சமயங்களில் இந்தப் பிரச்னையில் தயக்கத்துடன் வாதிட்டார்.
கமலா ஹாரிஸுக்கு இருக்கும் சவால்கள்
கமலா ஹாரிஸிடம் அனைத்து சாதகங்கள் இருந்தபோதிலும், சில ஜனநாயகக் கட்சியினர் பைடனை ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுக்க முதலில் தயங்கினர். அதற்கு முக்கிய காரணம் பைடன் விலகிவிட்டால் கமலா ஹாரிஸ்தான் அதிபர் வேட்பாளர் தேர்வாக இருப்பார் என்பது அவர்களுக்கு தெரியும். கமலா ஹாரிஸ் மீதும் சில எதிர்மறை கருத்துக்கள் வைக்கப்பட்டது.
கருக்கலைப்பு உரிமை விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை உருவாக்கிய போதிலும், துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு கிடைத்த ஆதரவு கலவையானது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லை வழியாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தோர் வரும் பிரச்சனையை நிவர்த்தி செய்யும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. என்பிஎஸ் நியூஸ் தொகுப்பாளரான லெஸ்டர் ஹோல்ட்டுடன் ஜூன் 2021இல் நேர்காணலில் புலம்பெயர்ந்தோர் பிரச்னை பற்றி பல தவறான கருத்துகளைப் பேசியது அவரது நிலையை பாதித்து, பழமைவாதிகளில் தாக்குதல்களுக்கு இடங்கொடுத்தது.
குடியரசுக் கட்சியினர் ஏற்கனவே அவரை அதிபரின் 'எல்லைப் பேரரசி' என்று விமர்சித்து வருகின்றனர். பொது கருத்துக் கணிப்புகள் பைடன் நிர்வாகத்தின் 'செல்வாக்கற்ற குடியேற்றக் கொள்கை'களின் முகமாக கமலாவை மாற்ற முயற்சிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் பிரசாரம், கமலா ஹாரிஸின் வழக்குரைஞர் பின்னணியை அவருக்கு எதிராக மாற்ற முயற்சிக்கும். அவரது முந்தைய பரோல் மற்றும் வழக்குத் தொடர்பான முடிவுகளை விமர்சிக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், டிரம்ப் ஆட்சியில் குற்றவியல் நீதி சீர்திருத்தத்தை அமல்படுத்திய சாதனையை குறிப்பிட்டும் கமலா ஹாரிஸை தாக்க வாய்ப்புள்ளது.
கமலா ஹாரிஸின் மற்றொரு பலவீனம், ஒரு வேட்பாளராக அவரது சீரற்ற வரலாறு.
2020இல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேசிய பதவியை வெல்வதற்கான அவரது முயற்சி தோல்வியடைந்தது. அவர் ஆரம்பத்தில் கவனம் பெற்றிருந்தாலும், தொடர்ச்சியான மோசமான நேர்காணல்கள், தெளிவற்ற கருத்துகள் மற்றும் திட்டமிடாத பிரசாரம் ஆகியவை வேட்பாளர் போட்டியிலிருந்து இருந்து அவரை விலகச் செய்தன.
அதிபர் வேட்பாளராக மக்களிடம் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
பைடனுடன் ஒப்பிடுகையில், இதற்கு முன்பு அதிபராக இருந்ததில்லை என்பது கமலா ஹாரிஸுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். அதே சமயத்தில், பைடனின் அரசியல் வாழ்க்கையின் சில சர்ச்சை விஷயங்களில் இருந்து விலகியே இருந்தார் கமலா ஹாரிஸ்.
மற்றொருபுறம், குடியரசுக் கட்சியினர் சந்தேகத்திற்கு இடமின்றி கமலா ஹாரிஸை மிகவும் அனுபவமற்றவராகவும், அதிபராக பணியாற்ற ஆபத்தானவராகவும் சித்தரிக்க கடுமையான முயற்சியை மேற்கொள்வார்கள்.
இப்போது தான் மட்டும்தான் அதிபராவதற்கு முழு தகுதி பெற்றவர் என்பதை நிரூபிக்க டிரம்ப் முயற்சிப்பார். இவற்றையெல்லாம் கமலா ஹாரிஸ் சமாளிக்க வேண்டும்.
வரும் நாட்களில், அமெரிக்க மக்களிடம் புதிய எண்ணத்தை ஏற்படுத்த துணை அதிபருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
ஆரம்பத்திலேயே நல்ல கருத்தை ஏற்படுத்த தவறிவிட்டால், அது ஜனநாயகக் கட்சியினர் தங்கள் தேசிய மாநாட்டை நடத்தும் ஆகஸ்ட் இறுதி வரை நீடித்த அதிகாரப் போருக்கு வழிவகுக்கும். கமலா ஹாரிஸ் திறனில் திருப்தி ஏற்படாதப் பட்சத்தில், கட்சி பிளவுபடும் அல்லது புதிய வேட்பாளரைச் சுற்றி அணித்திரளக் கூடும்.
முந்தைய நான்கு வாரங்களை பார்க்கும்போது, அதிபர் தேர்தலை சுற்றியிருக்கும் வாய்ப்புகள் கடுமையாகவும் வேகமாகவும் மாறக்கூடும் என்பதை நிரூபித்துள்ளன.
அமெரிக்க அரசியலில், மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றைப் பெற்றுள்ள கமலா ஹாரிஸ், இப்போது தனது முழு அரசியல் திறனையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












