சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டின் அளவு என்ன?

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகிலேயே அதிக அளவில் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது
    • எழுதியவர், மிர்சா ஏபி பெய்க்
    • பதவி, பிபிசி உருது

பாதுகாப்புக்காக அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்று, சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் அமைப்பான ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகிலேயே அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

பாதுகாப்புத் துறைக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்தியாவின் பொது பட்ஜெட்டும் காட்டுகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024-25-ஆம் ஆண்டுக்கான 48 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இது மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 13% ஆகும்.

கடந்த ஆண்டைப் போலவே 2024-25 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டும் சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ராணுவ நவீனமயமாக்கலுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் அண்டை நாடுகளை மனதில் வைத்துச் செய்யப்படுகிறது என்று பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து எழுதும் செய்தியாளர் பிரதிக் பிரசாந்த் முகானே 'லைவ் மிண்ட்' செய்தித் தளத்தில் எழுதியுள்ளார். கூடவே, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட் விவரங்களின் சுருக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 6.3 லட்சம் கோடி ரூபாய் (75 பில்லியன் டாலர்கள்) ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில் சீனா 2024-ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக சுமார் 20 லட்சம் கோடி இந்திய ரூபாய்க்கும் (230 பில்லியன் டாலர்களுக்கும்) அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.

மறுபுறம், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் பாகிஸ்தானை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்.

அத்தகைய சூழ்நிலையில் பாதுகாப்பு பட்ஜெட் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற இந்திய அரசின் கூற்றை முதலில் பார்க்க வேண்டியது அவசியம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் எங்கு பயன்படுத்தப்படும்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் வெளியிட்ட செய்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த அதே வேளையில், இந்தத் தொகையின் பயன்பாடு குறித்த தகவலையும் அவர் அளித்துள்ளார்.

பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து 1.72 லட்சம் கோடி ரூபாய் முதலீடு, ஆயுதப்படைகளின் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் எழுதினார்.

“கடந்த பட்ஜெட்டில் மூலதனத்தலைப்பின் கீழ் எல்லையோரச் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை இந்த பட்ஜெட்டில் 30% உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். பி.ஆர்.ஓ-வுக்கு (Border Road Organisation) 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது நமது எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்தும்," என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னுரிமை, பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதாகும். இதற்காக 2022-23 நிதியாண்டின் உண்மையான செலவினத்தை விட, மூலதனத் தலைப்பின் கீழ் இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட தொகை 20.33% அதிகம் என்று பத்திரிக்கை தகவல் பணியகம் (PIB) தெரிவிக்கிறது.

'நடப்பு நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் நிதி, நடப்பு மற்றும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் பெரிய கொள்முதல்களுக்கான இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்திலானது' என்று இந்திய அரசு கூறியுள்ளது.

நவீன தொழில்நுட்பம், ஆயுதங்கள், போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தளங்கள், விமானிகள் இல்லாத விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு வாகனங்கள் ஆகியவற்றை வழங்குவதும் தயாரிப்பதும் இதன் நோக்கமாகும்.

ராணுவ நவீனமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை மனதில் வைத்து நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற பொதுவான கருத்து இந்தியாவில் இருந்தாலும் கூட, அது போதுமானதாக இல்லை என்று ஒரு ஆய்வாளர் கருதுகிறார்.

இந்திய ராணுவத்திற்கான பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் 60% ராணுவ தளவாடங்கள் சோவியத் ரஷ்யா காலத்தைச் சேர்ந்தவை

பாகிஸ்தான், சீனாவை மனதில் வைத்து தான் பட்ஜெட் ஒதுக்கப்பட்டதா?

இந்தியாவின் பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியிடம் பிபிசி உருது பேசியபோது, பழைய ஆயுதங்களுக்கு மாற்றாக புதிய ஆயுதங்களை வாங்குவது மற்றும் பிற காரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்திய பட்ஜெட் அதிகரிப்பால் இவை சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5% அதிகரிப்பை அதிகம் என்று சொல்லமுடியாது என்றார் அவர். "சரியாகப் பார்த்தால் இந்த அதிகரிப்பு 4.79% மட்டுமே," என்று ராகுல் பேடி சுட்டிக்காட்டினார்.

"பாதுகாப்பு பட்ஜெட் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று ரெவென்யூ. மற்றொன்று மூலதனம். ரெவென்யூவில் உணவு, போக்குவரத்து, ராணுவ வீரர்களின் சம்பளம் போன்றவற்றுக்கான செலவுகள் அடங்கும். பட்ஜெட்டின் மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கீடு இதில் செலவாகிறது. அதே நேரத்தில் ஓய்வூதியங்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்று அவர் விளக்கினார்.

"ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் மூன்றில் ஒரு பங்கிற்குச் சற்று அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ராணுவத்தின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப அதிகம் இல்லை,” என்றார் அவர்.

இந்தியாவின் 60% ராணுவத் தளவாடங்கள் சோவியத் ரஷ்யா காலத்தைச் சேர்ந்தவை. அதன் மீது நாம் அதிக பணம் செலவிடுகிறோம் என்று ராகுல் பேடி கூறுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டு வந்தாலும், யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு, இது பயன்பாட்டிற்கு ஏற்றதா இல்லையா என்ற கவலை அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

யுக்ரேனுடனான போரில் ரஷ்ய ஆயுதங்கள் மிகவும் பயனுள்ளவை என்பது நிரூபிக்கப்படவில்லை.

இந்திய பாதுகாப்பு பட்ஜெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 231 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட மிக அதிகம்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா - யாருடைய பாதுகாப்பு பட்ஜெட் பெரியது?

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 20 லட்சம் கோடி இந்திய ரூபாய்க்கும் (230 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும்) அதிகமாக உள்ளது. அதே நேரம் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 6.3 லட்சம் கோடி ரூபாய் (75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடப்படவில்லை என்பது ராகுல் பேடியின் கருத்து. அதே நேரம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது மற்ற ஆய்வாளர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள் என்று அவரிடம் கேட்டோம்.

இதற்குப் பதிலளித்த அவர், "சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 231 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டான 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட மிக அதிகம். ஒவ்வொரு ஆண்டும் சீனா தனது பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது,” என்று கூறினார்.

"அதேபோல், பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் ஏழு பில்லியன் டாலர்களுக்கு (59,000 கோடி இந்திய ரூபாய்க்குச்) சற்று அதிகமாக உள்ளது. ஆனால் அணு ஆயுதங்களுக்கான அவர்களின் ரகசிய பட்ஜெட் பகிரங்கமாக வெளியாவதில்லை. எனவே, இதைப் பற்றி எதுவும் கூற முடியாது. இருப்பினும் பாகிஸ்தானின் சமீபத்திய பாதுகாப்பு பட்ஜெட்டில், கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டாவது பெரிய அதிகரிப்பைப் பார்க்க முடிகிறது,” என்று ராகுல் பேடி கூறினார்.

சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து இந்தியா தனது பட்ஜெட்டை தயாரித்துள்ளது என்பதை தெரிவிக்கும் சில அறிகுறிகள் சமீபத்திய பட்ஜெட்டில் இருப்பதாகவும், இது BRO வுக்கான பட்ஜெட் அதிகரிப்பில் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இம்முறை எல்லைச் சாலைகள் அமைப்பிற்கு (பி.ஆர்.ஓ - BRO ) 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30% அதிகம் என்று அவர் சொன்னார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ-விற்கு ஒதுக்கப்பட்ட தொகை, எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைப்பதற்கும், பிற விஷயங்களுக்கும் செலவிடப்படும். எல்லையின் பாதுகாப்பிற்கும், தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவீனமயமாக்கலின் கீழ் பாதுகாப்புத் திறன் மேம்பாட்டு ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணுவ உபகரணங்களை உற்பத்திசெய்யும் உள்ளூர் தொழில்துறைக்கு ஊக்கம் கிடைக்கும் என்று ராகுல் பேடி தெரிவித்தார்.

"இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் தேவை. பழைய உபகரணங்களைப் புதியதாக மாற்றுவதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அது இப்போது இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தற்போது சுமார் 13 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 8 லட்சமாக குறைக்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் வீரர்களின் சம்பளம் மற்றும் பிற செலவுகள் குறையும் மற்றும் இந்தத் தொகையை வேறு இடங்களில் செலவு செய்யமுடியும்," என்றார் ராகுல் பேடி.

ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் குறைக்கப்பட்டால், ஓய்வூதியம், சம்பளம், மருத்துவம் மற்றும் இதர வசதிகளுக்கான செலவுகளும் அதற்கேற்ப குறையும் என்று முன்னொரு சமயத்தில் பிபிசி உருதுவிடம் பேசிய அவர் கூறியிருந்தார்.

இந்தியா சீனாவுடன் 3,500கி.மீ நீள எல்லையையும், பாகிஸ்தானுடன் 774கி.மீ நீள எல்லையையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட ராகுல் பேடி இவற்றில் பெரும்பாலானவை மலைப்பாங்கான மற்றும் அணுக முடியாத பகுதிகள் என்று சொன்னார்.

அந்தக்கடினமான எல்லைகளை தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்காணிப்பது இந்திய ராணுவத்திற்கு எளிதான பணி அல்ல.

“வீரர்கள் அங்கு தங்க வேண்டிய அவசியம் உள்ளது. அங்கு ராணுவ வீரர்களுக்கான தேவை உள்ளது. நவீன தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆனால் அதை அடைய நிறைய பணம் தேவைப்படுகிறது," என்று ராகுல் பேடி கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)