குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் இந்த நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு, நடுத்தர வர்க்கத் தொழில்துறையினருக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் போதுமானவையா? தொழில்துறையினர் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவின் உற்பத்தித் துறையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையின் (எம்.எஸ்.எம்.இ) பங்களிப்பு 2022ஆம் ஆண்டில் 35.4 சதவீதமாக இருந்ததாக இந்தியாவின் சமீபத்திய பொருளாதார சர்வே தெரிவித்தது. அதேபோல, 2024ஆம் நிதியாண்டில் ஏற்றுமதியான பொருட்களில் எம்எஸ்எம்இ துறையில் உற்பத்தியான பொருட்களின் பங்கு 45.7 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, இந்தியாவின் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இந்தத் துறையினருக்கு எவ்விதமான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன என்பது வெகுவாகக் கவனிக்கப்படும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
"எம்எஸ்எம்இகளுக்கும், தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றக்கூடிய தொழில்துறையினருக்கும் இந்த நிதிநிலை அறிக்கை சிறப்பு கவனத்தைத் தருகிறது. இந்தத் துறையினர் வளரவும் உலக அளவில் போட்டியிடவும் ஏதுவாக இந்தத் துறையினருக்கு நிதியுதவி செய்தல், கட்டுப்பாடுகளில் மாற்றங்கள், தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறோம்" என எம்எஸ்எம்இ துறை குறித்து தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அறிவிப்புகளில் முதலாவதாக, எம்எஸ்எம்இ துறையினருக்கு என இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்குவதற்கான கடனை எளிதாகப் பெற ஒரு கடன் உத்தரவாதத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, இதற்கென ஒரு உத்தரவாத நிதி உருவாக்கப்படும். அந்த நிதியின் மூலம் 100 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும். கடனை வாங்கவிருப்பவர் இதற்கென உத்தரவாதக் கட்டணம் ஒன்றை செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
அறிவிப்புகள் என்னென்ன?

அடுத்ததாக, ''எம்எஸ்எம்இ துறையினருக்குக் கடன் வழங்க, குறிப்பிட்ட நிறுவனத்தின் திறன் பற்றி அறிய வங்கிகள் வெளி அமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பொதுத் துறை வங்கிகளே எம்எஸ்எம்இக்களை மதிப்பிடும் திறன் உருவாக்கப்படும். இந்த எம்எஸ்எம்இ நிறுவனங்களின் சொத்து மதிப்பு, உற்பத்தி மதிப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக அந்த நிறுவனங்களின் டிஜிட்டல் தடங்களை வைத்து அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிடும் முறை உருவாக்கப்படும்'' என அறிவிக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் கடன் உச்சவரம்பு பத்து லட்ச ரூபாய்க்குப் பதிலாக 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
இது தவிர, பெரிய அளவில் எம்எஸ்எம்இ தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) தனது கிளைகளைத் திறக்கும் என்றும் இந்த ஆண்டு 24 கிளைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எம்எஸ்எம்இ துறையினருக்கு என குறிப்பிடப்பட்ட இந்த அறிவிப்புகள் தவிர, இந்தத் தொழில்துறையினர் மூலப்பொருளாகப் பயன்படுத்தக்கூடிய சில உலோகங்கள் மீதான சில வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததும் இந்தத் துறையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
"நடைமுறையில் வித்தியாசம்"

ஆனால், இந்த அறிவிப்புகள் போதுமானவை அல்ல என்கிறார் இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவரான கே.இ. ரகுநாதன்.
"இந்தியாவில் குறு, சிறு தொழிற்சாலைகள்தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளைத் தருகின்றன. இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் 4 கோடி பேர் வேலை தேடுவார்கள். தற்போது வேலை இல்லாமல் இருப்பவர்களையும் சேர்த்தால், அது மிகப் பெரிய எண்ணிக்கையாக உருவெடுக்கும். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை எம்எஸ்எம்இ போன்ற முறைசாரா துறையில்தான் உருவாக்க முடியும். ஆகவே அந்தத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறது.
ஒரு நிறுவனத்தின் கடன் பெறும் திறனை வங்கிகளே ஆராயும் என அறிவித்திருக்கிறார்கள். இப்போதே, வங்கிகள் கடன் விண்ணப்பங்களில் மிகத் தாமதமாக முடிவெடுக்கிறார்கள். நம்முடைய வங்கிகள் அந்த அளவுக்குத் திறன்படைத்தவையாக இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எண்ணத்திற்கும் நடைமுறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
100 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் தரும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. 100 கோடி அளவுக்கு உத்தரவாதம் தரப்படும் என்றால், இதில் மத்தியரக தொழில் பிரிவினர்தான் பலன் பெறுவார்கள். பெரும்பாலான குறு, சிறு தொழில்துறையினர் 2 - 3 கோடி ரூபாய் அளவுக்குத்தான் கடனைப் பெறுவார்கள். ஆகவே, கடன் உத்தரவாத மட்டம் 10 கோடிக்குள் இருந்தால் போதுமானது" என்கிறார் ரகுநாதன்.
தொழில்துறையினர் கூறுவது என்ன?

முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது எனக் கூறும் அவர், "குறு, சிறு தொழில்துறையினருக்கு கடன் அளிக்க தனி வங்கியை உருவாக்க வேண்டும்" என்கிறார்.
"SIDBI என்பது கடன் வழங்க ஏற்பாடு செய்யும் ஒரு அமைப்பு. ஆகவே, குறு, சிறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க தனியாக வங்கியை உருவாக்க வேண்டும் என்பது ஒரு நீண்ட காலக் கோரிக்கை" என்கிறார் ரகுநாதன்.
பெரிய நிறுவனங்களில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், அதனை குறு, சிறு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் திட்டமாக வகுத்திருந்தால் இந்தத் துறையினருக்கு கூடுதலாக தொழிலாளர்கள் கிடைத்திருப்பார்கள். அரசின் மானியமும் இத்துறையினருக்கு உதவியிருக்கும் என்கிறார் அவர்.
ஆனால், இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸின் கோயம்புத்தூர் பிரிவின் முன்னாள் தலைவரான பாலசுந்தரம் இந்தக் கருத்தில் மாறுபடுகிறார்.
"புதிதாக வருபவர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி வழங்கும் அளவுக்கு குறு, சிறு நிறுவனங்களிடம் திறன் இருக்காது. இப்போது அறிவிக்கப்பட்டிருப்பதைப் போல பெரிய நிறுவனங்களில் பயிற்சி அளித்தால், அவர்கள் பயிற்சியை முடித்த பிறகு, இந்தச் சிறு நிறுவனங்களுக்குதான் வந்து சேருவார்கள். அது அந்நிறுவனங்களுக்கு பயனளிக்கும்" என்கிறார் பாலசுந்தரம்.
மேலும், "கடன் உத்தரவாதத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது, இந்தத் துறைக்கு பயனளிக்கும்" என்று கூறும் அவர், "நிறுவனத்தின் மதிப்பை உற்பத்தி மதிப்பை வைத்து கணக்கிடாமல், டிஜிட்டல் தடத்தின் மூலம் மதிப்பிடுவதாகச் சொல்வதும் சிறந்த ஏற்பாடுதான்" என்கிறார்.
அதேபோல, சில உலோகங்களுக்கான வரிகள் மாற்றியமைக்கப்படுவது குறு, சிறு தொழில்துறையினருக்கு உதவிகரமாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.

மூலப்பொருட்கள் குறித்த கோரிக்கை
"இரும்பு, தாமிரம் போன்ற பல உலோகங்களின் 'ஸ்க்ராப்'களை இறக்குமதி செய்யும்போது அவற்றுக்கான அடிப்படை சுங்க வரி (BCD) குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மூலப் பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி அதிகரிக்கவும் இது உதவும்" என்கிறார் இந்திய தொழில் கூட்டமைப்பின் கோயம்புத்தூர் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இவற்றின் தாக்கம் இருக்கும் என்கிறார் பாலசுந்தரம் அவர்.
"காரணம், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும் நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசினால் நேரடியாக செய்ய முடியாது. ஆகவே இவை எப்படி செயல்படுத்தப்படவிருக்கின்றன எனப் பார்க்க வேண்டும்" என்கிறார் அவர்.
எம்எஸ்எம்இ துறையினரின் பல நீண்ட காலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். "குறு, சிறு தொழில்களுக்கான வங்கி வட்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. வேறு நிறுவனங்களுக்கு செய்து தரும் பணிகளுக்கான (Job Orders) ஜிஎஸ்டியை 5 சதவீதம் அளவிற்கு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல, குறு, சிறு தொழில்களுக்கான இயந்திரங்கள் கொள்முதலுக்கு 15 சதவீத மானியம் வழங்க வேண்டுமென கோரியிருந்தோம். அது குறித்த அறிவிப்புகள் இல்லை" என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ்.
அரசு பொருட்களை கொள்முதல் செய்யும்போது குறிப்பிட்ட சதவீதத்தை எம்எஸ்எம்இ துறையினரிடமிருந்து வாங்க வேண்டும் என இலக்கு வகுத்தால் அது இந்தத் துறையினருக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என்கிறார் பாலசுந்தரம்.
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதையும் சில நிறுவனத்தினர் கோரிக்கையாக குறிப்பிடுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












