உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க ஆதரவாளர்களே யோகி ஆதித்யநாத் அரசின் மீது கோபத்தில் இருப்பது ஏன்?

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
- எழுதியவர், நீது சிங்
- பதவி, பிபிசி இந்திக்காக, லக்னெளவில் இருந்து
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னெள நகரில் 5-ஆம் வகுப்பு படிக்கும் அனம் என்ற சிறுமியின் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், அனம் தனது வீட்டைக் காப்பாற்றுமாறு கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கதறி அழுது கொண்டிருந்தார்.
ஜூலை 16-ஆம் தேதி இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறார் அனம்.
அனம் இன்னும் சிறுமிதான். ஆனால் பெரிய பெண் போலப் பேசுகிறார். "சட்டவிரோதம் என்று அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு, சிவப்பு குறியால் அடையாளப்படுத்தப்பட்ட வீடுகள் இப்போது முதல்வரால் சட்டப்பூர்வமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வரைச் சந்தித்து எங்கள் வீடுகளை இடிக்காமல் காப்பாற்றியதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்," என்று அனம் கூறுகிறார்.
ஜூலை 16-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மக்களுடன் கூட்டம் நடத்திய முதல்வர், வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என உறுதியளித்ததால் மக்கள் கொண்டாடினர். மக்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
அனம் வெளிப்படையாகக் குரல் கொடுக்கிறார். ஊடகங்களை நான்காவது பலம் வாய்ந்த தூண் என்று வர்ணித்த அவர், "ஊடகங்களால்தான் எங்கள் வீடுகள் பிழைத்துள்ளன. ஊடகங்கள் இல்லை என்றால் எங்களைப்பற்றிய செய்தி முதலமைச்சரிடம் சென்றிருக்காது," என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'சிவப்புக் குறி'
லக்னெளவின் அக்பர் நகரில் சுமார் 1,200 வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்ட பின்னர், அப்ரார் நகர், ரஹீம் நகர், பந்த் நகர் மற்றும் இந்திரபிரஸ்தா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படும் என்று கூறப்பட்டது.
நீர்ப்பாசனத் துறை, லக்னெள மேம்பாட்டு ஆணையம், மாவட்ட நகர்புற மேம்பாட்டு அமைப்பு, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சிவப்பு ‘X’ குறிகள் வரையப்பட்டபோது இங்குள்ள மக்களின் கலக்கம் மேலும் அதிகரித்தது.
இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்தனர். கூடவே பெண்களும், குழந்தைகளும் காந்திய வழியில் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 16-ஆம் தேதி, 14 பேரிடம் சுமார் அரை மணி நேரம் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார்.
தன் கடையின் பக்கத்து சுவரில் இருந்த சிவப்புக் குறியை 60 வயதான கம்லேஷ் காஷ்யப்பினால் தாங்க முடியவில்லை. அடையாளம் போடப்பட்ட அன்றே அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று.
ஆனால் இன்று கம்லேஷின் முகத்தில் புன்னகையும் திருப்தியும் தெரிந்தது.
அன்றைய தினத்தை நினைவு கூர்ந்த கம்லேஷ், “எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீடு இடிக்கப்பட்டிருந்தால் எங்கள் வாழ்க்கையில் அதை மீண்டும் கட்டியிருக்கவே முடியாது. 15 நாட்களாக அக்கம் பக்கம் முழுவதும் துக்கச் சூழல் நிலவியது. யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. என் கணவர் வண்டியில் தேநீர் விற்கிறார். வீடு கட்டவேண்டிய சூழலால் கடையைக் கட்ட முடியவில்லை. அப்ரார் நகர், இந்திரபிரஸ்தா நகர், ரஹீம் நகர், பந்த் நகர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த காரணத்தால் நாங்கள் வெற்றி பெற்றோம்,” என்று கூறினார்.
பந்த்நகரைச் சேர்ந்த இளைஞர் நதீம் கான், வீடுகளில் போடப்பட்ட சிவப்புக் குறியைப் பற்றிப் பேசும்போது, "இது முழுக்க முழுக்க ஒரு மாதத்தில் நடந்த சம்பவம். ஜூன் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ஜூன் 20-ஆம் தேதி ஆய்வு செய்ய குழு வந்தது. ஜூலை 10-ஆம் தேதி சிவப்புக் குறி போடப்பட்டது. எங்களிடம் சட்டப்பூர்வ ஆவணங்கள் இருந்தன. அதனால்தான் நிர்வாகம் பின்வாங்க வேண்டியதாயிற்று. இப்பகுதி மக்கள், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பினர்,” என்று குறிப்பிட்டார்.
இந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சிவப்புக் குறி போடப்பட்ட நாள் முதல் இங்குள்ள மக்கள் ஊடகங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். பா.ஜ.க ஆதரவாளர்களும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டங்களை நடத்தினர். இதற்காக ‘டிரான்ஸ் கோமதி சங்கர்ஷ் கமிட்டி’ என்ற குழு உருவாக்கப்பட்டது.
யாருடைய உத்தரவின் பேரில் வீடுகளுக்குச் சிவப்புக் குறி போடப்பட்டது என்ற கேள்விக்கு இங்கு வசிக்கும் உள்ளூர் மக்களிடமோ அல்லது முதலமைச்சரிடமோ பதில் இல்லை.
கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இதற்கான பதிலை முதல்வர் கேட்டுள்ளார் என்றும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
வீடுகளில் சிவப்புக் குறி போடப்பட்டது ஏன்?
"கங்கை வெள்ளப் பெருக்குச் சமவெளியின் கீழ் வரும் எல்லா ஆறுகளின் வெள்ளப் பகுதிகளையும் குறிக்க தேசிய பசுமைத் தீர்பாயம் (NGT) எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சிவப்புக் குறிகள் தவறாகப் போடப்படவில்லை. அதை மக்கள் வீடுகளில் போட்டிருக்கக்கூடாது. அது தவறு," என்று பெயர் குறிப்பிட விரும்பாத நீர்ப்பாசனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் மக்களின் வீடுகளில் சிவப்புக் குறிகள் போடப்பட்டது ஏன்?
"ஆற்றின் கரையில் இருந்து வெள்ளப்பெருக்கு நிலத்தைக் குறிக்க வேண்டும். ஆற்றிலிருந்து அதிக தொலைவில் உள்ள, அடுத்த 100 ஆண்டுகளில் ஒருமுறையாவது வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளையும் குறிக்க கோடு வரைய வேண்டி இருந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு எவ்வளவு தூரம்வரை போகக்கூடும் அதாவது 20 மீட்டர், 10 மீட்டர் என்று நாங்கள் எதைக் கருதினோமோ அதை எழுதினோம். இந்த அடையாளம் சமவெளியில் போடப்பட வேண்டும். இங்கு வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் சமதளம் இல்லை. அதனால் வீடுகள், சாலை, கம்பம் என்று எங்கு இடம் இருந்ததோ அங்கு சிவப்புக் குறியை இட்டோம்,” என்றார்.
இதுதான் காரணம் என்றால் வீடுகள் இடிக்கப்படும் என்ற வதந்தி எங்கிருந்து வந்தது?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நீர்ப்பாசனத்துறை அதிகாரி, "எனக்கும் சரியான தகவல் இல்லை. ஆனால் சமீபத்தில் அக்பர்நகரில் வீடுகள் இடிக்கப்பட்டன. அங்கு வீடுகளில் சிவப்பு அடையாளங்கள் காணப்பட்டன. அது ஒரு காரணமாக இருக்கலாம். அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டதால் இங்கும் இடிக்கப்படலாம் என்று மக்கள் பயந்தனர். அக்பர்நகர் வெள்ளப்பெருக்கு மண்டலத்தில் இருந்தது. எனவே அங்கு வீடுகள் இடிக்கப்பட்டன. வீட்டை இடிப்பதற்காக இந்த சிவப்பு அடையாளங்கள் போடப்பட்டன என்று எந்த அரசு அதிகாரியும் கூறவில்லை,” என்றார்.
அவர்களின் வீடுகளில் சிவப்புக் குறிகள் ஏன் போடப்பட்டன என்ற தகவல் மக்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை?
"ஒவ்வொரு நபரிடமும் சொல்வது கடினம். ஆனால் இந்த சிவப்புக் குறிகள் ஏன் போடப்படுகின்றன என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற 100 பேரை என்னால் பெயரிட முடியும், அவர்களுக்கு இந்த அடையாளம் ஏன் போடப்பட்டது என்ற முழுத் தகவலும் தெரியும்,” என்றார் அவர்.
அடுத்த 100 ஆண்டுகளில் ஒரு முறையேனும் வெள்ளப்பெருக்கு வர வாய்ப்புள்ள ஆறுகள், கங்கை நதி, மற்றும் கோமதி ஆற்றின் எல்லா பகுதிகளும் என்.ஜி.டி-யின் வழிகாட்டுதலின் படி அடையாளம் காணப்பட வேண்டும் என்று நீர்ப்பாசனத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.
குறிக்கப்பட்ட வெள்ளச் சமவெளி மண்டலம், கட்டுமானம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
ஊடகங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீர்ப்பாசனத்துறை அதிகாரி, "இதுகுறித்து சரியாக விசாரிக்காமல் செய்தியாக வெளியிடுவது சரியல்ல. உள்ளூர் மக்களின் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இது போன்ற செய்திகள் செய்திதாள்களிலும் வெளியானது. இங்கு புல்டோசர் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உருவாக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.
நீர்ப்பாசனத்துறை மற்றும் லக்னெள மேம்பாட்டு அதிகார அமைப்பால் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பும் வெள்ளப் பிரதேசம் அடையாளம் காணப்பட்டதை உறுதிப்படுத்தியது.

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
உள்ளூர் மக்கள் பயந்தது ஏன்?
இங்கு நீர்ப்பாசனத்துறை சிவப்புக் குறி வைத்ததற்காகத் தெரிவித்த காரணத்தை ஏற்க அப்பகுதி மக்கள் மறுக்கின்றனர்.
"சிவப்புக் குறி போட, பல அதிகாரிகள் வந்திருந்தனர். கேட்டதற்கு, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்று மட்டுமே சொன்னார்கள். என்ன உத்தரவு வந்திருக்கிறது என்பதை இதிலிருந்து எப்படி புரிந்துகொள்வது? ஒரு வாரம் நாங்கள் அனுபவித்த துயரத்தை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது,” என்று கிரண் கஷ்யப் கூறினார்.
"யோகி அவர்கள் உறுதி அளித்தாலும்கூட வீடு எவ்வளவு காலம் தப்பிக்கும் என்று சொல்ல முடியாது. எங்களுக்கு எழுத்துபூர்வமான எந்த ஆவணமும் தரப்படவில்லை. எந்த அதிகாரியும் இந்த சிவப்புக் குறியை அகற்றவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
அடையாளம் போடப்பட்ட நாளில் சுமார் 100-150 அதிகாரிகள் இருந்தனர் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். சிவப்புக் குறி ஏன் போடப்படுகிறது என்ற கேள்விக்கு மேலிடத்து உத்தரவு என்ற ஒரே பதில்தான் அதிகாரிகளிடம் இருந்தது.
சரியான பதில் கிடைக்காததால், மக்கள் மத்தியில் பீதி அதிகரித்தது. இதனாலேயே இங்குள்ளவர்கள் நில ஆவணத்தின் நகல், பதிவேட்டின் நகல் மற்றும் பல முக்கிய ஆவணங்களின் நகல்களை வீடுகளுக்கு வெளியே ஒட்டியுள்ளனர். இதனால் இது அவர்களின் வீடு மற்றும் இது சட்டபூர்வமானது என்பதை நிரூபிக்க முடியும்.

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
முதலமைச்சரைச் சந்திக்கச் சென்ற 14 பேரில் இந்திரபிரஸ்தா நகரைச் சேர்ந்த அஷூதோஷ் பதக் என்பவரும் ஒருவர்.
அசுதோஷ் பதக் சிவப்புக் குறியிடும் செயல்முறையைச் சரியானது என்று கருதவில்லை.
"சிவப்பு அடையாளம் போடும் பணி முடிவடையவில்லை. ஒரு பகுதியில் சிவப்பு அடையாளம் போட வேண்டும் எனும்போது, முதலில் அப்பகுதியை வரையறுக்க வேண்டும். அதன்பின் அப்பகுதி அளக்கப்படும். அதன்பிறகு, அடையாளம் போடப்பட்டு பதிவேடு சரிபார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
"இந்த வேலையெல்லாம் முடிந்த பிறகு வெள்ளப்பெருக்கு பகுதியில் மக்கள் இருப்பது தெரிந்தால் அடையாளம் போடப்படவேண்டும். ஆனால் இவர்கள் ஜி.பி.எஸ்-ஐப் பார்த்து நினைத்த இடங்களில் எல்லாம் அடையாளம் இட்டனர்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
முதல்வர் யோகி என்ன சொன்னார்?
இந்த நான்கும் செழிப்பான பகுதிகள். பிரமாண்டமான கட்டிடங்கள் மற்றும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும் இங்கு கட்டப்பட்டுள்ளன. எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதேனும் கிடைக்கும் வரை முழு நிம்மதியுடன் இருக்க முடியாது என்று இந்த மக்கள் கவலைப்படுகிறார்கள்.
டிரான்ஸ் கோமதி சங்கர்ஷ் கமிட்டி சார்பில் அஷூதோஷ் பதக் முழு விஷயத்தையும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
"எல்லோருடைய ஆவணங்களையும் முதல்வர் பார்த்தார். சிவப்புக் குறிகள் போட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். விசாரணைப் பொறுப்பைக் கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். நான் பொதுமக்களின் பக்கம் இருக்கிறேன், நிர்வாகத்துறையினரின் பக்கம் அல்ல என்று முதல்வர் எங்களிடம் கூறினார். ஆற்றிலிருந்து 35 மீட்டர் சுற்றளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். யாருடைய வீடாவது இடிக்கப்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்,” என்று அவர் விளக்கினார்.
இந்தக் குறிகள் 35 மீட்டருக்கு பதிலாக 50 மற்றும் 87 மீட்டர் வரை இடப்பட்டன. எந்த வரைபடத்தின்படி அடையாளங்கள் போடப்பட்டனவோ, அங்கு ஒரு வடிகால்தான் இருந்தது. ஆறு இல்லை. நதி மறுபுறம் உள்ளது என்று அஷூதோஷ் பதக் குறிப்பிட்டார்.
வீடுகள் இடிக்கப்பட மாட்டாது என்று மக்களை சந்தித்தபோதும், எக்ஸ் தளத்திலும் முதல்வர் உறுதி அளித்தார்.
தனியார் வீடுகளில் அடையாளத்தை குறித்ததில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவ்வாறு செய்தவர்கள் அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ஆனால் இந்தச் செய்திக்கட்டுரை எழுதப்படும் வரை சிவப்புக்குறிகள் நீக்கப்படவில்லை.

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
'கோபத்தில் பா.ஜ.க ஆதரவாளர்கள்'
அரசின் இந்த முடிவுக்கு காரணம் இந்த பகுதியின் செழிப்பு மற்றும் ஆதிக்கம் என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் இந்து பெரும்பான்மையும் ஒரு காரணம் என்று சிலர் நம்புகிறார்கள்.
இந்திரபிரஸ்தா நகரில் வசிக்கும் அமித் குமார் கவுர், லக்னெள உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக இருக்கிறார்.
“எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளில் சிவப்பு அடையாளங்களை போட்டது தவறு. இரண்டாவதாக, கிட்டத்தட்ட ஒரு மாதமாக இங்குள்ளவர்கள் மன வேதனையை அனுபவித்திருக்கிறார்கள், அதற்கு இழப்பீடு யார் கொடுப்பார்கள்?" என்று அவர் வினவினார்.
"இங்குள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் எதிர்ப்பும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அழுத்தத்திற்கு உள்ளானது. 2027 தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் அவர்கள் இதை செய்யத்தான் வேண்டும்."

பட மூலாதாரம், NEETU SINGH/BBC
குக்ரைல் நதி அழகுபடுத்தும் திட்டம்
லக்னெளவின் ’பக்ஷி கா தலாப்’ அருகே உள்ள அஸ்தி கிராமத்தில் குக்ரைல் நதி உருவாகும் இடம் உள்ளது என்று லக்னெள மேம்பாட்டு ஆணையத்தின் (எல்.டி.ஏ) அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல் கூறுகிறது.
இங்கிருந்து 28கி.மீ தொலைவில் கோமதி நதியை சந்திக்கும் வரை அது அழகுபடுத்தப்பட உள்ளது. இந்த 28கி.மீ நெடுகிலும் 20 நீர் ஆதாரங்கள் உள்ளன. அவற்றுக்கும் புத்துயிர் ஊட்டி மாசற்றதாக மாற்ற வேண்டும்.
குக்ரைல் ஆற்றுப் பகுதியின் அகலம் 35 மீட்டராக வைக்கப்பட வேண்டும்.
ஆற்றில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள பகுதி ’வெள்ள சமவெளி பகுதி’, அதாவது நீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதி என்று என்ஜிடி வழிகாட்டுதல்களின்படி கருதப்படுகிறது.
பந்த்நகர், இந்திரபிரஸ்தா, அப்ரார் நகர் மற்றும் ரஹீம் நகர் ஆகிய இடங்களில் சிவப்பு அடையாளம் போடப்பட்டதில் எல்.டி.ஏ-வின் பங்கு என்ன?
வருவாய்த்துறை, நகராட்சி, டி.யு.டி.ஏ., நீர்ப்பாசனத் துறை, எல்.டி.ஏ. அதிகாரிகள் அடங்கிய குழு மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டதாக எல்.டி.ஏ. அலுவலகம் தெரிவித்தது. அந்தப்பகுதியில் அடையாளம் போடுவது நீர்ப்பாசனத்துறையின் பணி. அதே சமயம் LDA வின் வேலை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது மட்டுமே.
அக்பர்நகர் இடிப்புக்குப் பிறகு ஜூலை 20 முதல் துவங்கிய அழகுபடுத்தல்
குக்ரைல் ஆற்றில் இருந்து நாலரை கிலோ மீட்டர் தூரம் வரை சுமார் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமை பகுதி தயார் செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஜூலை 20 ஆம் தேதி அக்பர்நகர் ஒன்று பகுதியில் மரக்கன்றுகளை நடும் இயக்கத்தைத் தொடங்கினார். இங்கு சுமார் 25 ஏக்கர் நிலம் காலி செய்யப்பட்டது.
அக்பர்நகர் ஒன்று பகுதியில் ’சௌமித்ர வனமும்’ இரண்டாவது பகுதியில் ’சக்தி வனமும்’ ஊருவாக்கப்படும். இங்கு உள்ளுர் இன மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
ஒரு காடு உருவாக சுமார் 20 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்தப்பகுதியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் காரணமாக இங்கு இரண்டு ஆண்டுகளில் காடு தயாராகிவிடும் என்று எல்.டி.ஏ. தெரிவிக்கிறது.
தண்ணீர் தேங்கினாலும் செழித்து வளரும் செடிகள் ஆற்றங்கரையில் நடப்பட்டு வருகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












