தமிழ்நாடு, கேரளாவில் 'நிபா வைரஸ்' தடுப்பு நடவடிக்கை தீவிரம் - பரவாமல் தற்காப்பது எப்படி?

நிபா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த 14 வயது சிறுவன்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, உயிரிழந்த சிறுவன் உடலை எடுத்துச் செல்லும் மருத்துவ ஊழியர்கள்

கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. அவரின் கிராமமான பாண்டிக்காடு பகுதி சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு , கேரள – தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

2018ம் ஆண்டு 17 நபர்களின் உயிரிழப்புக்கு காரணமான நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 வயது மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? அதனை தடுப்பது எப்படி? இரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

14 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஜூலை 10ம் தேதி அன்று உடல் நலக் குறைவால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், எந்த முன்னேற்றமும் இல்லை.

அவர் உடல்நிலை மேலும் மோசமடையவே, தனியார் மருத்துவமனையில் இருந்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சிலால் கொண்டு வரப்பட்ட மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து அவருக்கு செலுத்தப்பட்டது.

நோயின் அறிகுறிகள் தெரிய துவங்கிய நாளில் இருந்து ஐந்து நாட்களுக்குள் இந்த மருந்து வழங்கப்பட வேண்டும். ஆனாலும், “உயிர் காக்க தேவையான நடவடிக்கைகளில் ஒன்றாக அவருக்கு அந்த மருந்து வழங்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

இருப்பினும், ஜூலை 21ம் தேதி அன்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அமைச்சர் வீணா கூறினார். நிபா தடுப்பு நடவடிக்கைகள் வழிகாட்டுதல் படி அவரின் உடல் புதைக்கப்பட்டது.

அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த அவரின் உறவினர்கள் அனைவரும் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிபா வைரஸ் தொற்றால் 21 பேர் உயிரிழந்தனர்.

நிபா எப்படி பரவுகிறது?

நிபா வைரஸ் பொதுவாக வௌவால், பன்றிகள், நாய்கள், குதிரைகள் மூலமே மனிதனுக்கு பரவுகிறது. உணவு மூலமும் மற்றும் நோய் தொற்று உள்ளவருடன் தொடர்பில் இருப்பதும் இந்த நோய் பரவ வழி வகை செய்கிறது.

விலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகின்ற காரணத்தால் விலங்குகளும் மனிதர்களும் அருகருகே வாழும் சூழல் இருக்கிறது. எனவே ஒரு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்றுவது எளிதாகிவிடுகிறது.

இந்த நோய் தொற்று முதன் முறையாக மலேசியாவில் 1998ம் ஆண்டு கண்டறியப்பட்டது. பழந்தின்னி வௌவால்களிடம் இருந்து இந்த தொற்று பன்றிகளுக்கு ஏற்பட்டது.

2004ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பழங்களை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. அப்போதுதான், மனிதர்களையும் தாக்கும் அபாயம் கொண்டது இந்த வைரஸ் என்று கண்டறியப்பட்டது.

இந்தியாவை பொருத்தவரை நிபா தொற்று மேற்கு வங்கத்தில் 2001 மற்றும் 2007ம் ஆண்டுகளில் பரவியது உறுதி செய்யப்பட்டது.

2018ம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோட்டில் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஐந்து முறை கேரளாவில் தொற்றுகள் உறுதியாகியுள்ளன.

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழந்தின்னி வௌவால், பன்றிகள், நாய்கள் மூலம் இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

  • இந்த நோய் தொற்று ஏற்பட்டு 5 முதல் 21 நாட்களில் அதன் அறிகுறிகள் தென்படும்.
  • பொதுவாக இந்த நோய் தொற்றுக்கு ஆளாகும் நபர்களுக்கு கடும் காய்ச்சலும் தலைவலியும் ஏற்படும்.
  • இருமல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவையும் இந்த தொற்றால் ஏற்படும்.
  • உடல்வலி, தசைகளில் வலி, அயர்வு, சுவாசப் பிரச்னைகள், மனக் குழப்பம் போன்ற இன்னல்களுக்கும் இவர்கள் ஆளாவார்கள்.
  • நோய் தொற்றின் தீவிரத்தை பொறுத்து இறப்பு விகிதம் இருக்கும்.
  • 40 முதல் 75% வரை இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிதீவிர பாதிப்புகளுக்கு ஆளாகும் போது 100% வரை இறப்பு விகிதம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
கேரளாவில் பரவும் நிபா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுவனின் உறவினர்களில் மூவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

பரவாமல் தற்காப்பது எப்படி?

  • கைகளை 20 நொடிகள் வரை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்
  • வௌவால்கள் மற்றும் பன்றிகளின் எச்சில் மற்றும் எச்சங்களின் வழியே நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் விலங்குகள் சாப்பிட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பழங்களை நன்றாக கழுவி உட்கொள்ள வேண்டும்.
  • கைவிடப்பட்ட கிணறுகள், நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்
கேரளாவில் பரவும் நிபா வைரஸ்

பட மூலாதாரம், special arrangement

படக்குறிப்பு, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் சோதிக்கப்பட்ட பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்

கேரளாவில் மீண்டும்மீண்டும் நிபா பரவ காரணம் என்ன?

காடுகள் அழிக்கப்படுவதும் நகரமயமாக்கலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற சூழலில் மக்களும் விலங்குகளும் அருகருகே வாழ்கின்ற சூழல் உருவாகியுள்ளது.

ஒரு காலத்தில் இதுபோன்ற வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் விலங்கினங்கள் மனிதர்களின் தொடர்புக்கு வெகு அப்பால் இருக்கும். ஆனால் இந்த நகர்மயமாக்கல் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவுவதை எளிமையாக்கிவிடுகிறது.

கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவது அந்த மாநிலத்தை இதுபோன்ற தொற்றுகள் அதிகமாக தாக்கும் இடமாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 40 வகையான வௌவால் இனங்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய 95 வகையான வைரஸ்கள் வௌவால்களில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எபோலா, சார்ஸ், மர்பர்க் மற்றும் நிபா போன்ற வைரஸ்களும் இதில் அடங்கும்.

2018ம் ஆண்டில் இருந்து கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு மக்கள் ஆளாவது தொடர் கதையாகி வருகிறது. 2018ம் ஆண்டு நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் 2021ம் ஆண்டு ஒருவரும், 2023ம் ஆண்டு இரண்டு பேரும் இந்த தொற்றால் உயிரிழந்தனர். தற்போது இந்த 14 வயது மாணவனின் இறப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இதுவரை நிபா வைரஸ் தொற்றால் 21 பேர் உயிரிழந்தனர்.

வௌவால்களால் பரவும் நிபா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விலங்குகள், அணில்கள், வௌவால்கள் தின்று கீழே போட்ட பழங்களை உட்கொள்ள கூடாது.

தடுப்புப் பணிகளை தீவிரமாக்கும் தமிழகம் மற்றும் கேரளா

மலப்புரத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். பாண்டிக்காடு ஆனக்காயம் பஞ்சாயத்து, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். வினோத், அடுத்த அறிவிப்பு வரும் வரை முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாண்டிக்காடு, ஆனக்காயம் பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் செயல்படும் கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்குள் மூடிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் வகையிலான நிகழ்வுகளை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவனந்தபுரத்தில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் மாதிரிகளை பரிசோதிக்கும் வசதி இருந்தாலும், புனேவில் இருக்கும் வைராலஜி மையத்திடம் இருந்து நடமாடும் பரிசோதனை மையம் மலப்புரத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிபா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)