கருத்துக்கணிப்பில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - அமெரிக்க அதிபர் தேர்தலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர்
- பதவி, பிபிசி, வாஷிங்டன்
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பின்வாங்கிய நிலையில், தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்துள்ளார் கமலா ஹாரிஸ்.
பைடனின் முழு ஆதரவையும் பெற்ற கமலா ஹாரிஸ் தன்னுடைய முதல் உரையை விஸ்கான்சினில் நிகழ்த்தினார்.
துப்பாக்கி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துதல், கருக்கலைப்பு மருத்துவ சிகிச்சைகளை எளிமையாக அணுக வழிவகை செய்தல், வறுமையான சூழலில் வாழும் குழந்தைகள், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் பற்றி தன்னுடைய உரையில் பேசினார்.
அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்பை ஒரு குற்றவாளி என்று அழைத்தும் காட்டமான முதல் பரப்புரையை மேற்கொண்டார் கமலா ஹாரிஸ்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குற்றவாளியா - வழக்கறிஞரா? - கமலா ஹாரிஸின் முதல் பரப்புரை
"ஒரு முன்னாள் வழக்கறிஞருக்கும், ஒரு குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது," என்று அதிபர் பதவிக்கான தன்னுடைய முதல் பரப்புரையில் குடியரசுக் கட்சியினரை விமர்சித்து உள்ளார் கமலா ஹாரிஸ்.
3000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த விஸ்கான்சின் பரப்புரை மைதானத்தில் பேசிய கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்பை மோசடிக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், அமெரிக்க எல்லைப் பகுதியில் கமலா ஹாரிஸின் பணிகளை சுட்டிக்காட்டி, "அவர் தொடும் எல்லாம் அழிவைத்தான் சந்திக்கின்றன," என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அதிகரிக்கும் ஆதரவு
அதிபர் வேட்பாளருக்கு தேவையான ஆதரவை ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு வழங்கிய பிறகு இந்த பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் டிரம்புக்கு எதிரான விவாத நிகழ்வுக்கு பிறகு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் நன்கொடையாளர்களின் அதிருப்திக்கு ஆளான ஜோ பைடன், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார். மேலும், தன்னுடைய ஆதரவை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.
ராய்ட்டர்ஸ் மற்றும் இப்ஸோ இணைந்து தேசியளவில் நடத்திய ஒரு புதிய கருத்துக் கணிப்பில், டிரம்பை விட கமலா ஹாரிஸ் இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நீதித்துறை பணிகளை நினைவு கூறும் கமலா ஹாரிஸ்
மில்வாக்கி புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் உயர் நிலைப் பள்ளியில் நடந்த பரப்புரையில் ஜூலை 23ம் தேதி அன்று பேசிய கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய தன்னுடைய அனுபவம் குறித்து நினைவு கூர்ந்தார்.
"பெண்களை மோசமாக நடத்தும் குற்றவாளிகள், நுகர்வோர்களை ஏமாற்றும் மோசடிக்காரர்கள், தங்களின் சொந்த நலனுக்காக விதிமுறைகளை உடைக்கும் ஏமாற்றுக்காரர்கள் என பலவகையான குற்றவாளிகளை நான் பார்த்திருக்கின்றேன்," என்று கூறிய கமலா ஹாரிஸ், ''டிரம்பைப் போன்ற நபர்களை நான் அறிவேன்'' என்றும் குறிப்பிட்டார்.
இந்த பேச்சுக்கு ஆரவாரமான கைதட்டிய மக்கள், "கமலா, "கமலா", என்று கோஷமிட்டனர். பைடனைக் காட்டிலும் கமலாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
2016ம் ஆண்டு ஹிலாரி க்ளின்டனின் டிரம்புக்கு எதிரான பரப்புரையிலும் இதே போன்ற போக்கு நிலவியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற துணை அதிபராக கமலா ஹாரிஸ் உள்ளார் என கூறும் ஒரு கருத்துக்கணிப்பு முடிவுகளை டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கி கட்டுப்பாடு, கருக்கலைப்பு சிகிச்சைகளை எளிமையாக அணுகுதல், வறுமையில் வாடும் குழந்தைகள், அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான மருத்துவ சேவைகள் போன்ற விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து பேசினார் கமலா ஹாரிஸ்.
"சுதந்திரமான, இரக்க குணம் கொண்ட, சட்டத்தின் ஆட்சியை கொண்டுள்ள நாட்டில் நாம் வாழ வேண்டுமா, இல்லை குழப்பம், அச்சம் மற்றும் வெறுப்பை கொண்டுள்ள நாட்டில் இருக்க வேண்டுமா?" என கமலா ஹாரிஸ் பொதுமக்கள் மத்தியில் கூறினார்

பட மூலாதாரம், Getty Images
அவர் முன்பு இருக்கும் சவால்கள் என்ன?
ஆனால் இந்த வேகத்தை கமலா ஹாரிஸ் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். கருத்துக் கணிப்பாளர் டோனி ஃபேப்ரிஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாக்காளர்களுடனான கமலாவின் 'தேனிலவு' காலம் முடிவுக்கு வரும். பிறகு, பைடனின் ஆட்சியில் துணை அதிபராக, கூட்டாளியாக அவர் ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்து கவனம் திரும்பும்'' என்று கூறியுள்ளார்.
அமெரிக்க - மெக்சிகோ எல்லைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கமலா ஹாரிஸ் தவறிவிட்டார் என்று டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பரப்புரையில் குற்றம் சாட்டுகிறார்.
பைடன் - ஹாரிஸ் ஆட்சியின் போது அதிகரித்த குற்றம் மற்றும் பணவீக்கம் குறித்தும் டிரம்பின் பரப்புரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொலைக் குற்றவாளிகள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு கமலா ஹாரிஸ் ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் குழு அனுப்பியுள்ளது.
மேலும் இஸ்ரேலை அவமதித்தது, குறைந்துவரும் பைடனின் திறன் குறித்து மக்களுக்கு தெரிவிக்காதது என அந்த மின்னஞ்சலில் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.
பத்திரிக்கையாளர்களிடம் போனில் பேசிய டிரம்ப், "கமலா ஒரு தீவிர இடதுசாரி. ஆனால் ஒரு இடதுசாரி நபர் இந்த நாட்டை அழிக்க இந்த நாடு விரும்பவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.
"பைடனைக் காட்டிலும் அவர் எளிமையானவராக இருப்பார் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் பைடன் கொஞ்சம் பொதுநிலைப்பட்ட நடைமுறையில் இருந்தவர்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏபிசி செய்திகளில் பைடனுடன் டிரம்பின் விவாத நிகழ்வு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் போட்டியில் இருந்து விலகவே, கமலா ஹாரிஸுடன் செப்டம்பரில் விவாத நிகழ்வில் பங்கேற்க தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் பைடனுடன் விவாதிக்கவே ஒப்புக் கொண்டேன். ஆனால் இப்போது இவருடன் விவாதிக்க விரும்புகிறேன். எந்த வேறுபாடும் இருக்காது," என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 24 அன்று பைடன் தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் தேர்தலில் இருந்து பின்வாங்கியது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பைடன், செவ்வாய் கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
ஜார்ஜ் க்லூனி, பார்பரா ஸ்ட்ரெய்சான்ட் மற்றும் ஜேமி லீ கர்டீஸ் போன்ற ஹாலிவுட் பிரபலங்களும் கமலாவுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர். இது கமலாவுக்கான நன்கொடை தொடர்ந்து வருவதை உறுதி செய்யலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












