குடிமைப் பணிகளில் மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீடு குறித்து தெலங்கானா ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கருத்து சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Instagram/Smita_Sabharwal1
- எழுதியவர், அன்சுல் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் பயிற்சி பெற்று வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் செயல்பாடுகள் சமீபத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின.
புனேவில் அவர் துணை ஆட்சியராகப் பதவி வகித்த போது அவரது நடவடிக்கைகள் மற்றும் நிறைவேற்ற இயலாத கோரிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகத் துவங்கின. இதனைத் தொடர்ந்து அவர் வாசிம் மாவட்டத்திற்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பூஜா வெளியில் பேச அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இந்த விவகாரம் பூதாகரமான பிறகு பூஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC). மேலும் 2022-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் அவர் தேர்ச்சியானதை ரத்தும் செய்தது தேர்வாணையம்.
இது தொடர்பாகத் தீர விசாரணை செய்த பிறகு அவர் குற்றவாளி என்பதைக் கண்டறிந்ததாக அறிவித்துள்ளது தேர்வாணையம்.
பூஜா குடிமைப் பணிகளுக்கான தேர்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 2022-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால் தற்போது, அவர் மாற்றுத் திறனாளி தான் என்று அளித்த சான்றிதழும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இதற்கு மத்தியில் ஸ்மிதா சபர்வால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். தற்போது அது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பட மூலாதாரம், பிபிசி தமிழ்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், ani_digital
பூஜா கேத்கர் விவகாரம்
புனே மாவட்ட ஆட்சியரகத்தில் பயிற்சித் துணை ஆட்சியராக இருந்தவர் பூஜா கேத்கர். இவர் 2023-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவர்.
சமீபத்தில், அவர் மாற்றுத் திறனாளிச் சான்றிதழ் மற்றும் மற்ற பிற்படுத்தப்பட வகுப்பினருக்கான (ஓ.பி.சி) சான்றிதழ்களை முறைகேடாக மாற்றி, அதன்மூலம் குடிமைப் பணித் தேர்வில் அவர் தேர்வானதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.
பூஜா கேத்கர் சமர்பித்திருந்த சன்றிதழ்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சரிபார்த்து வருகிறது.
பூஜா கேத்கர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தனது பெயர், தந்தை பெயர், தாயார் பெயரை மாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளதாகத் தேர்வாணையம் கூறியுள்ளது. தேர்வுப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது தனது புகைப்படம், கையொப்பம், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்றியதன் மூலம், பூஜா கேத்கர் தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வரம்பையும் மீறிவிட்டதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதனால் பூஜா பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.
இச்சம்பவட்தைத் தொடர்ந்து இந்தியக் குடிமைப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் ஒன்று கிளம்பியுள்ளது.
தெலங்கானா ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன சொன்னார்?
தெலங்கானா 2001 பிரிவை சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், ஜூலை 21-ஆம் தேதி அன்று எக்ஸ் பக்கத்தில் (டிவிட்டர்) மாற்றுத்திறனாளிகள் குறித்தும் குடிமைப் பணிகள் குறித்தும் எழுதியிருந்தார்.
"மாற்றுத் திறனாளிகளுக்கான முழுமையான மரியாதையுடன் இதைக் கேட்கின்றேன். ஒரு விமான நிறுவனம், ஒரு மாற்றுத் திறனாளியை விமானியாக நியமிக்க முடியுமா? நீங்கள் ஒரு மாற்றுத் திறனாளி அறுவை சிகிச்சை மருத்துவரை நம்புவீர்களா?" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
குடிமைப் பணியாளர்கள், கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும். மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்க வேண்டும். இவை அனைத்தையும் செய்ய முழுமையான உடல் தகுதி தேவை. இது போன்ற சேவைகளில் ஏன் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்," என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Smita Sabharwal
இந்தப் பதிவைப் பலரும் விமர்சனம் செய்யவே, ஜூலை 22-ஆம் தேதி அன்று ஸ்மிதா மீண்டும் ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"என்னுடைய பதிவுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். உண்மையில் இருக்கும் பிரச்னை பற்றிப் பேசினால் இத்தகைய பதில்களே கிடைக்கும் என்று நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "மாற்றுத்திறனாளி செயற்பாட்டாளர்கள் இந்த (மாற்றுத் திறனாளிகளுக்கான) இட ஒதுக்கீடு இந்திய காவல் பணிச் சேவை மற்றும் இந்திய வனச் சேவைகளில் ஏன் இல்லை என்பதை கேள்விக்குட்படுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ் பணியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதே என்னுடைய வாதம்," என்றும் அவர் கூறியிருந்தார்.
“அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் வாழ வேண்டும் என்ற கனவு நம் அனைவருக்குமானது. உணர்ச்சியற்ற எண்ணங்களுக்கு என் இதயத்தில் இடமில்லை,” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Smita Sabharwal
'ஸ்மிதாவின் கருத்துகள் அவமதிப்பானவை, ஆதாரமற்றவை'
ஸ்மிதாவின் கருத்துகள் பாரபட்சமானதும் அறியாமையை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும் கூறுகிறார் அர்மான் அலி. மாற்றுத் திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் தேசிய கவுன்சிலின் செயல் இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார்.
"மாற்றுத்திறனாளிகளை விமானிகளுடனும் அறுவைசிகிச்சை நிபுணர்களுடனும் ஒப்பிட்டு அவர்கள் இந்த பணிக்குச் சரியானவர்கள் என்று குறிப்பிடுவது அவமதிக்கும் செயல். மேலும் ஆதரமற்றது," என்று குறிப்பிடும் அர்மான், "மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் எனில் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மருத்துவர் சத்தேந்திர சிங்," என்றும் மேற்கோள்காட்டினார்.
"அனைத்து இந்திய சேவைத்துறைக்கும் உடல் தகுதி மட்டுமே போதுமானது. அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்கக் கூடாது என்ற எண்ணம் பிற்போக்கானது. மாற்றுத்திறனாளிகள் என்றால் செயல்திறன் அற்றவர்கள் என்று பொருள் அல்ல," என்றும் அர்மான் விளக்கினார்.
"மாற்றுத் திறனாளிகள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக வரக்கூடாது என்று பரிந்துரை செய்வது அறியாமை மட்டுமல்ல அது அவமதிக்கும் செயலும் கூட. இந்திய குடிமைப் பணிகளில், மாற்றுத் திறனாளிகள் மாறுபட்ட கண்ணோட்டங்களையும் அனுபவத்தையும் தங்களின் சேவைகளில் வழங்குகின்றனர். அது கொள்கை முடிவுகளில் பெரிய அளவில் உதவுகிறது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேலான மக்கள் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர்," என்றும் குறிப்பிட்டார்.
ஸ்மிதாவின் கருத்துகள் அனைத்தும் முன் அனுமானங்களைக் கொண்டவை என்று கூறுகிறார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆராய்ச்சி மாணவரான முகேஷ் பவார்.
இந்தி சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய விவாதம் (1982 - 2020) என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் அவரும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.
"இந்தியக் குடிமைப் பணிகளில் உள்ள 24 சேவைகளில் மாற்றுத் திறனாளிகளை 7 முதல் 8 வரையிலான சேவைகளில் மட்டும் பணியமர்த்துவதில்லை. இந்தியக் காவல் துறை (IPS), மற்றும் இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைச் சேவை (Indian Railway Protection Force Services (IRPFS)) உள்ளிட்ட சில சேவைகளில் அவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. கள நிலவரங்களை அறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி செல்வது குறித்து அக்கறை செலுத்தும் போது, ஏன் ஒரு ஆட்சியர் தனியாக தான் களத்துக்கு செல்வார் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகின்றீர்கள். மாற்றுத்திறனாளியோ இல்லையோ எந்த ஒரு ஆட்சியருக்கும் அவருக்கு உதவ கூடுதலாக இதர அதிகாரிகள் வருவார்கள். நடக்க முடியவில்லை என்றால் அவர் சக்கரநாற்காலியில் செல்வார். பார்வையற்றவராக இருந்தால் கையில் தடியுடன் செல்வார்," என்று கூறீனார்.
"மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 2016-இல் உள்ள பிரிவு ஒன்றில், எந்த இடத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பணியமர்த்தப்படுகிறாரோ அவருக்கு ஏற்றவகையில் அந்தச் சூழலை உருவாக்கித் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் அரசு அதன் கடமையை செய்ய வேண்டும். ஸ்மித்தாவின் இந்த கருத்துகள் ஆதாரமற்றவை," என்றும் குறிப்பிட்டார் அவர்.

பட மூலாதாரம், Smita Sabharwal
ராணுவத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?
பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் பற்றி குறிப்பிடும் அர்மான், அனைத்து வேலைகளிலும் சவால்கள் இருக்கின்றன. அவற்றை கடந்து வருவது மாற்றுத் திறனாளிகளுக்கு புதிது ஒன்றும் கிடையாது என்று குறிப்பிட்டார்.
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஐயன் கார்டோசோ பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற அவரும் ஒரு மாற்று திறனாளி. இந்திய ராணுவத்தில் ஒரு படையை வழி நடத்திச் சென்ற முதல் மாற்றுத்திறனாளி அவர் என்றும் மேற்கோள் காட்டினார் அர்மான்.
டாட்டா நிறுவனத்தின் செயல் இயக்குநர் கே.ஆர்.எஸ். ஜம்வால் மற்றும் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் சுரேஷ் அத்வானி இருவரும் சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் தான். மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பு துறை உட்பட ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் அவர்.
பாதுகாப்பு துறையில் பணியாற்றும் மாற்று திறனாளிகளை நான் பார்த்திருக்கிறேன். ஸ்மித்தாவும் அவர்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என முகேஷ் பவார் கூறினார்.
"ராணுவத்தில் Non-combat என்ற பிரிவு உள்ளது. அதில் மாற்றுத் திறனாளிகள் அலுவல் வேலை மற்றும் தொழில்நுட்ப வேலைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களால் எல்லைக்கு சென்று சண்டையிட முடியாது என்பது வெளிப்படையானது தான். இந்தியாவில் பெண்கள் கூட தான் எல்லையில் பணியாற்ற பணி அமர்த்தப்படுவதில்லை. ஆனால் ஏன் மாற்றுத்திறனாளிகளை மட்டும் இவ்வாறு காண்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் பவார்.
"இந்தச் சமூகத்தில் இருக்கும் பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் தன்னுடைய செயல்திறனை ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தன்னுடைய முன் அனுமானங்களின் அடிப்படையில் தான் இந்த சமூகம் விதிகளை வகுக்கிறாது. மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகளை வழங்க மறுக்கிறது," என்றும் பவார் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Smita Sabharwal / X
சமூக வலைதளங்களில் மக்கள் கூறுவது என்ன?
உத்தவ் பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ப்ரியங்கா சதுர்வேதி ஸ்மித்தாவின் பதிவை விமர்சனம் செய்தார். "குறுகிய சிந்தனை," மற்றும் "அதிகாரத்தில் இருக்கும் சிறப்புரிமையை" பிரதிபலிக்கும் கருத்து என்று குறிப்பிட்டார்.
இது மிகவும் பரிதாபகராமனது. (மாற்றுத் திறனாளிகளை) விலக்கும் செயல் என்று குறிப்பிட்ட அவர் "அதிகாரிகளின் தங்களின் குறுகிய சிந்தனைகளையும் அதிகாரத்தில் உள்ள உரிமைகளையும் வெளிகாட்டும் விதமானது ஆச்சரியம் அளிக்கிறது," என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Priyanka Chaturvedi / X
இதற்கு பதில் அளித்த ஸ்மித்தா "அதிகாரிகள் என்ன நடக்கிறது என்று பேசவில்லை என்றால் யார் பேசுவார்கள்? என்னுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் என்னுடைய 24 வருட அனுபவத்தில் இருந்து வந்தது. குறைந்த அனுபவத்தில் இருந்து இல்லை," என்றும் பதில் கூறினார்.
"என்னுடைய பார்வையை முழுமையாகப் புரிந்து கொள்ளவும். நான் மத்திய பணிகளுக்கான சேவைகளில் இருந்து அனைத்திந்திய சேவைகளின் தேவைகள் வேறுபட்டது என்று தான் கூறினேன். திறமை மிக்க மாற்றுத் திறனாளிகள் நிச்சயம் நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள்," என்றும் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Smita Sabharwal / X
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி "ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு மாற்றுத் திறனாளிகள் பற்றிய அடிப்படையே தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். பெரும்பாலானோரின் இத்தகைய குறைகள் அவர்களின் உத்வேகம் மற்றும் அறிவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஸ்மித்தாவுக்கு பன்முகத்தன்மை மற்றும் அறிவு தேவை" என்றும் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Karuna Nundy / X
இதற்கும் பதில் அளித்த ஸ்மிதா, "எனக்கு இந்த பணிக்கான அடிப்படை தகுதிகள் என்ன என்று நன்றாக தெரியும். ஆனால் களத்தில் சென்று பணியாற்ற தேவைப்படும் தகுதிகள் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இது தவிர்த்து அவர்கள் இதர அலுவல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளை அவர்களுக்கு வழங்கலாம்," என்று பதில் கூறினார்.
எதையும் உடனே தீர்மானித்து விடாதீர்கள். சம உரிமைகளை உறுதி செய்ய சட்டங்கள் இருக்கின்றன. அதில் எந்த விவாதமும் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Smita Sabharwal/X
சட்டங்கள் சொல்வது என்ன?
மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 2016, உடல் குறைபாடுகளின் 21 வகைகளைப் பட்டியலிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தச் சட்டத்தின் கீழ் தான் செயல்படுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ், இட ஒதுக்கீடானது கீழே பட்டியலிடப்பட்டுள்ள உடல் குறைப்பாடுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது
- பார்வை குறைபாடு
- முழுமையாக காது கேளாமை, குறைவாக கேட்கும் திறன், அல்லது கேட்பதில் குறைபாடுகள் இருப்பது
- நடப்பதில் சிரமம் உள்ள நபர்கள், ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நபர்கள், தசை வளர்ச்சி அடையாதவர்கள்
- ஆட்டிசம், அறிவாற்றல் குறைபாடு, மனநல பிரச்சனைகள்
- பட்டியலிடப்பட்டுள்ள பிரச்னைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளை கொண்டிருத்தல்
இந்த அடிப்படையில் 4% இட ஒதுக்கீடு மாற்று திறனாளிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழங்குகிறது. அவர்களின் உடல் குறைபாடு குறைந்தபட்சம் 40% இருக்க வேண்டும்.
ஆனால் இந்திய காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சேவை மற்றும் DANIPS போன்ற சேவைகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அதிகாரிகளை தேர்வு செய்ய இயலாது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












