நள்ளிரவில் ஆளுநரை சந்தித்த தினகரன்: ஆட்சியமைக்க விஜயை ஆளுநர் அழைப்பாரா? விசிக முடிவு என்ன?

பட மூலாதாரம், Lok Bhavan, TN
தமிழ்நாட்டில் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆளுநரை மூன்றாவது முறையாக விஜய் சந்தித்ததும் புதிய ஆட்சி அமைவதில் நிலவிய சிக்கல் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினகரனும் ஆளுநரை சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
'அமமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கே ஆதரவு தெரிவிக்கிறார்' என்று ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்.
"விஜய் தரப்பு கொடுத்த ஆதரவு கடிதத்தில் காமராஜ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கடிதம் இருந்ததாக செய்தி வந்தது. அது போலியான கடிதம். ஒன்று இது மோசடியாக இருக்க வேண்டும் அல்லது குதிரை பேரமாக இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளேன். காமராஜை நீண்ட நேரம் தொடர்புகொள்ள முயன்றபோதும் அவரிடம் பேச முடியவில்லை." எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காமராஜ் ஆதரவு கடிதம் எழுதியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் உடன் நள்ளிரவில் ஆளுநரை மீண்டும் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது ஆளுநர் அலுவலகத்திலிருந்து தங்களைத் தொடர்புகொண்டு அந்தக் கடிதம் உண்மைதானா எனக் கேட்டதாக தினகரன் தெரிவித்திருந்தார். அதோடு கடிதம் தொடர்பான செய்தி வந்ததும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பதறி தன்னைச் சந்திக்க வந்ததாகவும் தினகரன் குறிப்பிட்டார்.
"காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்"
"தவெக தரப்பில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறி எஸ்.காமராஜ் பெயரிலான கடிதத்தின் நகல் என ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மோசடியான செயல். அதன் அசலை ஆளுநர் கேட்டபோது கொண்டு வருகிறோம் எனக் கூறிவிட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இதுவரை ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பையும் விசாரிக்க வேண்டும். ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிப்பேன்," என செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காமராஜ், "நான் புதுச்சேரியில் தங்கியிருந்தேன். ஆளுநர் மாளிகையிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். 6 மணிக்கு ஆளுநர் அலுவலகத்திலிருந்து செயலாளர் பேசினார். தொலைக்காட்சியில் செய்தி வந்ததால் உடனடியாக வழக்கறிஞரை சந்தித்து ஆலோசித்தேன். ஆளுநரை நேரில் சந்தித்து விளக்குமாறு வழக்கறிஞர் கூறினார். புதுச்சேரியில் இருந்து நேரடியாக கிளம்பி சென்னை வந்தேன்." எனத் தெரிவித்தார்.
பெரும்பான்மையை திரட்ட தவெக முயற்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி முதலாவதாக ஆதரவு தெரிவித்திருந்தது.
108 இடங்களைப் தவெக பெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் 5 இடங்கள் சேர்த்து 112 இடங்கள் அதன் வசம் இருந்தன.
ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காண்பிக்காமல் பதவியேற்புக்கு அழைக்க முடியாது ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசிகள் தெரிவித்துள்ளன.
விசிக முடிவு என்ன?

இந்த நிலையில் தவெகவிற்கு ஆதரவு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை இணைய வழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று இரவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதற்கு மத்தியில் விசிகவின் பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்-இனி, உயர்வோம் மேலும் மேலும்!" எனத் தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























