'ஃபின் ஆலன் அதிரடி சதம்' - 15 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்து கொல்கத்தா வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் 2026 தொடரின் 51வது போட்டியில் இன்று (மே 8) டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இந்த சீசனின் முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூடப் பெறாத நைட் ரைடர்ஸ் கடைசி 4 போட்டிகளிலுமே தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியோ தங்களின் கடைசி 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்திருக்கிறது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் மற்றும் நடராஜன் ஆகியோருக்குப் பதிலாக விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசன்கா அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். கேகேஆர் பௌலர்களில் அதிகபட்சமாக அனுகூல் ராய் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
அடுத்து விளையாடிய கேகேஆர் 14.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்கவீரர் ஃபின் ஆலன் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தார்.
தடுமாறிய டெல்லி பேட்டர்கள்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதன் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசன்கா ஆகியோர் ஓரளவு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த இணை 5 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்தது. 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல், கார்த்திக் தியாகி பந்துவீச்சில் கேமரூன் கிரீன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ராகுலின் விக்கெட்டுக்குப் பிறகு டெல்லி அணியின் வேகம் வெகுவாகக் குறைந்தது. 6வது ஓவரில் 6 ரன்கள் மட்டும் வர, பவர்பிளேவை 55/1 என முடித்தது கேபிட்டல்ஸ்.
வேகமாக ரன் எடுக்க சிரமப்பட்ட நித்திஷ் ராணா 8 ரன்கள் (10 பந்துகள்) எடுத்திருந்த நிலையில் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். அனுகூல் ராய் மற்றும் சுனில் நரைன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின.
சமீர் ரிஸ்வி 3 ரன்களில் நரைன் பந்துவீச்சில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார் பதும் நிசன்கா. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவரை வெளியேற்றினார் அனுகூல் ராய். அதே ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார் அனுகூல். அதனால் 89/5 என்று தடுமாறியது டெல்லி கேபிட்டல்ஸ்.
தொடர் விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக அக்ஷர் பட்டேல் - அஷுதோஷ் ஷர்மா ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 46 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தது. 22 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வைபவ் அரோரா பந்துவீச்சில் வெளியேறினார் அக்ஷர் பட்டேல்.
கடைசி கட்டத்தில் அஷுதோஷ் ஷர்மா ஓரளவு அதிரடி காட்டியதால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அஷுதோஷ் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கார்த்திக் தியாகி மற்றும் அனுகூல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

பட மூலாதாரம், ANI
ஆலன் அதிரடியில் கேகேஆர் வெற்றி
143 என்ற இலக்கை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 3வது ஓவரின் கடைசிப் பந்தை, ஃபின் ஆலன் நேராக அடிக்க, பந்துவீச்சாளர் ஸ்டார்க் கையில் பட்ட பந்து, பௌலிங் முனையில் இருந்த ஸ்டம்புகளைத் தகர்த்தது. அப்போது நான் ஸ்டிரைக்கராக இருந்த ரஹானே கிரீஸுக்கு வெளியே இருந்ததால் ரன் அவுட் ஆனார்.
அடுத்த ஓவரில் இப்படி எதிர்பாராத முறையில் ஆட்டமிழந்தார் அங்க்ரிஷ் ரகுவன்ஷி. அக்ஷர் பட்டேல் பந்துவீச்சை ஸ்வீப் அடிக்க முயற்சி செய்தார் ரகுவன்ஷி. பந்து அவர் கைகளில் பட்டு மேலே எழும்பியது. பந்தை நன்கு கவனித்த கீப்பர் கே.எல்.ராகுல் அதைப் பிடிக்காமல் விட, ஸ்டம்புக்கு அருகே பிட்சாகி ஸ்டம்புகளைத் தகர்தது பந்து. அதனால் ரகுவன்ஷி போல்டாகி வெளியேறினார்.
31/2 என்ற நிலையில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் பெரிய நம்பிக்கையாக விளங்கியது. ஃபின் ஆலன் - கேமரூன் கிரீன் இருவரும் இணைந்து 64 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார்கள். அதிலும் குறிப்பாக ஃபின் ஆலன் இந்தப் போட்டியில் சிக்ஸர் மழையாகப் பொழிந்தார்.
குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகம் இருவரின் பந்துவீச்சிலும் மிகப் பெரிய சிக்ஸர்கள் விளாசினார் அவர். மிட்செல் ஸ்டார்க் வீசிய அதிவேகப்பந்தைக் கூட எளிதாக லேப் ஷாட் மூலம் சிக்ஸர்களாக்கினார். 32 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த ஆலன், அடுத்த 15 பந்துகளில் மேலும் 50 ரன்கள் எடுத்தார். 47 பந்துகளில் தன் முதல் ஐபிஎல் சதத்தை அவர் நிறைவு செய்தார்.
இந்த சீசனில் இதற்கு முன் விளையாடிய எந்த போட்டியிலுமே அவர் பவர்பிளேவைக் கடந்து ஆடவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று தன் அணிக்கு ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 5 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் விளாசினார். மற்றொருபக்கம் அவருக்கு உறுதுணையாக இருந்த கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது கேகேஆர்.
இந்த சீசனில் அவர்கள் தொடர்ச்சியாகப் பெறும் நான்காவது வெற்றி இது. இதன்மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸை முந்தியது.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 வெற்றிகளும், 7 தோல்விகளும் பெற்று 8வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகள் பெற்றிருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 9 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி 7வது இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், ANI
பிளேயிங் லெவனில் யார்?
டெல்லி கேபிட்டல்ஸ்
இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. கருண் நாயர் மற்றும் நடராஜன் ஆகியோருக்குப் பதிலாக விப்ராஜ் நிகம் மற்றும் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டனர்.
பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, நித்திஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், லுங்கு எங்கிடி, முகேஷ் குமார்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கருண் நாயர், குல்தீப் யாதவ், அபிஷேக் பொரெல், டி.நடராஜன், டேவிட் மில்லர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்தப் போட்டிக்கான நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளேயிங் லெவன்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ராவ்மன் பவெல், மனிஷ் பாண்டே, அனுகூல் ராய், சுனில் நரைன், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி,
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஃபின் ஆலன், ரமன்தீப் சிங், டிம் செய்ஃபர்ட், நவ்தீப் சைனி, தேஜஸ்வி தாஹியா.






























