'கேப்டனாக இருக்க விரும்பவில்லை' - இலங்கையை வென்ற பிறகு சூர்யகுமார் இவ்வாறு கூறியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றியது.
இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவுக்கு முதல் தொடர் வெற்றி இதுவாகும். அது மட்டுமல்லாமல் புதிய தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள கெளதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.
இந்திய அணி குறைந்த ஸ்கோர் மட்டுமே எடுத்திருந்த போதிலும் வெற்றிகரமாக அதை டிபெண்ட் செய்துள்ளது. இந்திய அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், கடந்த 2 போட்டிகளைப் போன்று இந்த ஆட்டத்திலும் இலங்கை அணி நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் திணறினர். ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் முன்னெப்போதும் இல்லாமல் முதல்முறையாக கடைசிக் கட்டத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினர். இதனால், ஆட்டம் டையில் முடிந்தது.
சூப்பர் ஓவரிலாவது இலங்கை சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கவே இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
தொடர் நாயகன் ஸ்கை
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வானார். 3 போட்டிகளிலும் 92 ரன்களும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் தொடர் நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை எந்த சர்வதேச டி20 போட்டியிலும் பந்துவீசாத சூர்யகுமார் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல ரிங்கு சிங் முதல்முறையாகப் பந்துவீசி ஒரு ஓவரில் 3 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
"நான் கேப்டனாக விரும்பவில்லை"
தோனி போன்றே புதுமையான முடிவுகளால் முதல் தொடரிலேயே முத்திரை பதித்த சூர்யகுமார் யாதவ் 'நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை' என்று கூறியுள்ளார். முதல் முறையாக கேப்டன் பதவி ஏற்று டி20 தொடரை வென்ற மகிழ்ச்சியில் சூர்யகுமார் கூறுகையில் “ இந்த ஆடுகளத்தில் 140 ரன்களே வெற்றிக்கான ஸ்கோர்தான். கடைசி வரிசைவரை பேட்டிங்கிலும் எங்கள் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்தனர். இதுபோன்ற ஆட்டங்களை பார்த்திருக்கிறேன் என்றும், முழுமனது வைத்து கடைசி வரை போராடினால் ஆட்டத்தை திருப்ப முடியும் என்று சக வீரர்களிடம் தெரிவித்தேன்.
அதிகமான திறமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் அனைத்தையும் எளிதாக்கும். ஒவ்வொரு வீரரும் சக வீரரை கவனித்துக் கொண்டதும், உதவியதும் நம்ப முடியாததாக இருந்தது. நான் பேட் செய்ய வந்தபோது எனக்கு சற்று அழுத்தம் இருந்தாலும் என்னை மட்டுமே வெளிப்படுத்தினேன். என் பணியை சக வீரர்கள் எளிதாக்கினர். நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை, தலைவனாக இருக்கவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், BCCI
இலங்கை மோசமான பேட்டிங்
இலங்கை அணி இந்தத் தொடர் முழுவதும் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங்கில் மோசமான சரிவை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் 37 ரன்களுக்கு 9 விக்கெட், 2வது ஆட்டத்தில் 31 ரன்களுக்கு 7 விக்கெட் , இந்த ஆட்டத்திலும் சூப்பர் ஓவரைச் சேர்த்து 29 ரன்களுக்கு 9 விக்கெட் என மோசமான சரிவை எதிர்கொண்டது.
இலங்கை அணியின் பேட்டிங்கைப் பார்க்கும் போது கடந்த 1980கள் மற்றும் 1990களில் இருந்த இந்திய அணி நினைவூட்டுகிறது. அதாவது தொடக்கத்தில் சிறப்பாக ஆடும் இந்திய அணி திடீரென சரிவைச் சந்தித்து மளமளவென விக்கெட்டுகளை இழக்கும் அளவுக்கு மோசமான நிலையில் இருந்தது. அதேபோன்ற நிலையில் இலங்கை அணி இருக்கிறது.
கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணியைவிட தொடக்க வரிசை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இலங்கை சிறப்பாகவே செயல்பட்டாலும், கடைசி நேரத்தில் சந்திக்கும் மாபெரும் விக்கெட் சரிவு அந்த அணியை தோல்வியில் தள்ளியது.

பட மூலாதாரம், BCCI
வெற்றியை தவறவிட்ட இலங்கை
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 2 ஓவர்களில் இலங்கை வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. இதற்கு முன் பந்துவீசிய அனுபவமே இல்லாத ரிங்கு சிங் ஓவரில் 3 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது.
கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன, கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன. கேப்டன் சூர்யகுமார் யாதவ் துணிச்சலாக பந்துவீசினார். பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணிக்கு தண்டனையாக 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை இருந்தது.
அப்படி இருந்தும், சூர்ய குமார் ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் ஆட்டம் டையில் முடிந்தது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்று வெற்றியை இழந்திருக்கிறது இலங்கை.

பட மூலாதாரம், Getty Images
சூப்பர் ஓவரிலும் சொதப்பல்
சூப்பர் ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். முதல் பந்தை வைடாக, அடுத்த பந்தில் மென்டிஸ் ஒரு ரன் எடுத்தார். பெரேரா அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லையில் பிஷ்னோய் கேட்ச் பிடித்தார். அடுத்த பந்தில் நிசாங்கா பெரிய ஷாட்டுக்கு முயல, அதை ரிங்கு சிங் கேட்ச் பிடிக்கவே இலங்கை அதிர்ச்சியில் உறைந்தது.
இதையடுத்து, 3 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தீக்சனா வீசிய முதல் பந்திலேயே சூர்யகுமார் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி விளாச இந்திய அணி எளிதில் வென்றது.
தொடரும் பேட்டிங் சரிவு
இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் மோசமான பேட்டிங் சரிவைச் சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, பெரேரா, மென்டிஸ் ஆகியோர் கடந்த 2 போட்டிகளைப் போன்ற வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். 110 ரன்கள் வரை இலங்கை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றியின் பக்கத்தில் இருந்தது.
ஆனால், நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே இந்த திடீர் சரிவுக்கு காரணம். இந்த ஆட்டத்திலும் கூட நிசாங்கா(43) மென்டிஸ்(26) இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் எனும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குஷால் பெரேரா(46), நிசாங்கா(26) ஆகியோர் நல்ல ஸ்கோர் செய்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் அசலங்கா(0), ஹசரங்கா(3), ரமேஷ் மென்டிஸ்(3), கமிந்து மென்டிஸ்(1) தீக்சனா(0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி பதற்றத்தில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் ஏமாற்றிய சாம்ஸன்
இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரிஷப் பந்த், அர்ஷ்தீப், அக்ஸர், ஹர்திக் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன், கலீல் முகமது, ஷிவம் துபே, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.
சுப்மான் கில், ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்கத்திலிருந்தே கவனமாக பேட் செய்தனர். ஆனால், ஜெய்ஸ்வால் சிறிது முன்னெடுப்பு செய்து, தீக்சனா ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், ஜெய்ஸ்வால் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று கால் காப்பில் வாங்கி 10 ரன்னில் தீக்சனாவிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்துவந்த சஞ்சு சாம்ஸன் 4 பந்துகளைச் சந்தித்தும் ரன் எடுக்காமல் விக்ரமசிங்கே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து 2வது முறையாக டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
4வது வீரராக களமிறக்கப்பட்ட ரிங்கு சிங்கும் ஜொலிக்காமல் 2 பந்துகளைச் சந்தித்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் சூர்யகுமாரும் 8 ரன்னில் பெர்னான்டோ ஓவரில் ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவரில் இந்திய அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
களத்தில் இருந்த சுப்மான் கில், ஷிவம் துபே இருவரும் சரிவிலிருந்து இந்திய அணி மீட்க முயன்றனர். ஆனால், துபே 13 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மென்டிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில், ரியான் பராக் கூட்டணி நிலைத்து ஆடி இந்திய அணியின் ஸ்கோரை 9வது ஓவரில் 50 ரன்களை எட்ட வைத்தனர்.
6 ஓவர்களாக பவுண்டரி இல்லை
ஏறக்குறைய 6 ஓவர்களாக இந்திய பேட்டர்கள் பவுண்டரி அடிக்காத நிலையில் ரமேஷ் மென்டிஸ் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் பவுண்டரி அடித்து வறட்சியை போக்கினார். ஹசரங்கா வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸர்களை ரியான் பராக் பறக்கவிட்டார்.
ஹசரங்கா வீசிய 16-வது ஓவரில் கில்(39) 2வது பந்திலும், 5வது பந்தில் ரியான் பராக்கும்(26) விக்கெட்டை இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்திருந்தது. 120 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

பட மூலாதாரம், Getty Images
மானம் காத்த தமிழக வீரர்
ஆனால், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என கேமியோ ஆடி 25 ரன்கள் சேர்த்து தீக்சனா ஓவரில் விக்கெட்டை இழந்தார். சுந்தரின் கேமியோதான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாக அமைந்தது. இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்து 137 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோரை எட்டியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்களை வீசி 107 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












