பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: அன்று புல்லட் வாங்கவே கடன், இன்று துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் - ஸ்வப்னில் குசாலேவின் பின்னணி

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Getty Images

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் குசாலே ஆவார்.

ஸ்வப்னில் குசாலே

ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று மனு பாக்கர் சாதனை படைத்தார். இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

மனு பாக்கர் சரபோஜித் சிங் இணை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும், வெண்கலம் வென்றது.

தற்போது இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் ஸ்வப்னில் குசாலே மூலமாகக் கிடைத்திருக்கிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்வப்னில் குசாலேவின் பயணம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம், ராதாநகரியைச் சேர்ந்தவர் 28 வயதான ஸ்வப்னில். அவர் நாசிக்கின் கிரிடா பிரபோதினி பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். புனேவில் ரயில்வே துறையில் பணிபுரிகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்வப்னில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், மகாராஷ்டிராவில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசாலே மிகவும் பரிட்சையமானவர்.

கடந்த பத்து-பன்னிரண்டு ஆண்டுகளில், முதலில் ஜூனியர் பிரிவில் பின்னர் சீனியர் மட்டத்தில், ஸ்வப்னில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு, அவர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் கால்பதித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

'புல்லட் வாங்க வங்கியில் கடன் வாங்கிய ஸ்வப்னில்'

“இத்தனை ஆண்டுகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது அவர் ஒருமுறைகூட சலித்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. அவர் எப்போதுமே பயிற்சி செய்யத் தயாராக இருப்பார். இதுதவிர, அவர் மிகவும் அமைதியான மற்றும் ஒழுக்கமான இளைஞர்” என்று அவரது தந்தை சுரேஷ் குசாலே பிபிசி மராத்தியிடம் பேசும்போது கூறினார்.

ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Getty Images

ராதாநகரி, கம்பல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் குசாலே ஒரு ஆசிரியர். ஸ்வப்னிலின் தாயார் அனிதா, கம்பல்வாடி கிராமத்தின் தலைவராக உள்ளார்.

தனது மகன் விளையாட்டில் காட்டிய ஆர்வத்தைக் கண்டு, நாசிக்கின் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஸ்வப்னிலை சேர்த்தார். ஸ்வப்னில் அங்கு துப்பாக்கி சுடுதல் விளையாட்டைத் தேர்வு செய்தார். ஸ்வப்னில் 2009இல் 14 வயதில் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி எடுத்து வருகிறார்.

ஆனால் துப்பாக்கி சுடுதல் என்பது அவ்வளவு எளிதான விளையாட்டல்ல. பயிற்சியின் போதே செலவுகளும் அதிகமாக இருக்கும். பயிற்சி மேற்கொள்பவர்கள் துப்பாக்கிகள் வாங்கவும் ஜாக்கெட்டுகள் வாங்கவும் செலவிட வேண்டும். புல்லட் வாங்குவதில்கூட நிறைய பணம் செலவாகும்.

ஸ்வப்னில் பயிற்சிக்காக தோட்டாக்கள் வாங்கப் போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்ட காலகட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அவரது தந்தை கடன் வாங்கிச் செலவு செய்து, மகனை விளையாட ஊக்குவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Swapnil Kusale

“விளையாட்டு மீதான என் ஆர்வத்தைப் பாதிக்கக்கூடாது, பயிற்சியை நிறுத்தக்கூடாது என்பதற்காக, எனது தந்தை வங்கியில் கடன் வாங்கி தோட்டாக்கள் வாங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அப்போது ஒரு புல்லட்டின் விலை 120 ரூபாய். அதனால் ஷூட்டிங் பயிற்சியின் போது ஒவ்வொரு புல்லட்டையும் கவனமாகப் பயன்படுத்தினேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்துக்கு இந்தச் செலவு கட்டுப்படியாகவில்லை. நான் இந்த விளையாட்டுக்கான பயிற்சியைத் தொடங்கியபோது, என்னிடம் போதுமான உபகரணங்கள்கூட இல்லை" என்று ஸ்வப்னில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

ஸ்வப்னில் மேலும் கூறுகையில், பெற்றோர் மட்டுமின்றி, அவரது பயிற்சியாளர் தீபாலி தேஷ்பாண்டேவும் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

"தீபாலி மேடம் எங்களுக்கு வாழ்க்கை மற்றும் விளையாட்டில் சரியான ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர் தனது செயல்களின் மூலம் இந்த விஷயங்களை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். துப்பாக்கி சுடுவதைத் தவிர்த்து ஒரு மனிதனாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்," என்று ஸ்வப்னில் கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் தனது திறமையைக் காட்டத் தொடங்கினார். அந்த நேரத்தில் 'லக்ஷ்யா ஸ்போர்ட்ஸ்' என்ற அமைப்பு அவருக்குத் துணை நின்றது.

பின்னர், ரயில்வே துறை ஸ்வப்னிலுக்கு வேலை கொடுத்தது. 2015 முதல் மத்திய ரயில்வேயின் புனே பிரிவில் பயணிகள் டிக்கெட் பரிசோதகராகப் (TTE) பணியாற்றினார்.

அன்றிலிருந்து அவர் பலேவாடியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கிரிடா பிரபோதினியில் (Chhatrapati Shivaji Maharaj Krida Prabodhini) பயிற்சி செய்தார்.

உடல்நலப் பிரச்னை இருந்த போதிலும் சிறப்பான செயல்திறன்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Swapnil Kusale

ஸ்வப்னில் துப்பாக்கி சுடும் வீரர்களான விஸ்வஜித் ஷிண்டே, தீபாலி தேஷ்பாண்டே ஆகியோரால் வழிநடத்தப்பட்டார்.

ஸ்வப்னிலை பற்றி அவரது பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், “ஸ்வப்னில் மிகவும் அமைதியான இயல்புடையவர். அதிகம் பேசமாட்டார். வேறு எந்த விஷயங்களிலும் ஈடுபடாமல், பயிற்சியில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்” என்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தேசிய அளவில் முன்னேறிய பிறகும், ஸ்வப்னிலின் பயணம் கடினமான பக்கங்களைக் கொண்டிருந்தது.

பல ஆண்டுகளாக அவர் கடுமையான வலி, காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் அவதிப்பட்டார். டான்சில்லிடிஸ் (tonsillitis) பகுதியில் அவ்வப்போது வலி, தொடர்ந்து தலையை உயர்த்தினால் வலி என அவதிப்பட்டார்.

வலியின் காரணம் என்ன என்பது உடனடியாகக் கண்டறியப்படவில்லை. அதனால் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

இறுதியாக, 2023 டிசம்பரில், இந்தப் பிரச்னைக்கான உண்மையான காரணம் வெளிப்பட்டது. ஸ்வப்னிலுக்கு `பால் ஒவ்வாமை’ இருப்பது தெரிய வந்தது. பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடுவதை ஸ்வப்னில் நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இறுதிப் போட்டியில் பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் - துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ஸ்வப்னில் குசாலே

பட மூலாதாரம், Swapnil Kusale

ஸ்வப்னிலுக்கு சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் இதுவரை விளையாடிய போட்டிகளில் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அபாரமாக விளையாடி வருகிறார்.

“இதுவரை, அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிறகு பெரும்பாலான போட்டிகளில் வென்றுள்ளார். பாரிஸிலும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று பயிற்சியாளர் கூறினார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும், பல ஏற்ற தாழ்வுகளைக் கடந்து ஸ்வப்னில் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

``இந்த இலக்குக்காகத்தான் ஸ்வப்னில் இதுவரை கடுமையாக உழைத்தார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தவம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று சுரேஷ் குசாலே, ஸ்வப்னில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றபோது கூறியிருந்தார். தற்போது ஸ்வப்னில் வெண்லகப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்வப்னில் துப்பாக்கி சுடுதலில் எந்த பிரிவில் விளையாடினார்?

துப்பாக்கி சுடும் விளையாட்டுகளில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. ரைஃபிள் (rifle), பிஸ்டல் (pistol) மற்றும் ஷாட் கன் (shotgun). அவற்றில் எந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு வகைகள் உள்ளன.

ஸ்வப்னில் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள், மூன்று நிலைப் போட்டியில் விளையாடினார்.

அதில் மூன்று நிலைகள் உள்ளது: முழங்காலிட்டு சுடுதல் (kneeling), ப்ரோன் (prone) மற்றும் நின்று சுடுதல் (standing shooting).

பயிற்சியாளர் விஸ்வஜித் ஷிண்டே கூறுகையில், இந்தப் பிரிவு மற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவுகளைவிட சவாலானது. துப்பாக்கி சுடும் வீரர் மூன்று வெவ்வேறு நிலைகளில்சுட வேண்டும் மற்றும் துல்லியமாகக் குறிவைக்க வேண்டும் என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)