திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள் - பின்னணி என்ன?

திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவர்கள் சாதி மோதல் காரணமாக காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்கிழமை காலையில் நடந்த இந்த மோதலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ஒவ்வொரு பிரிவையும் சேர்ந்த 11 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 22 மாணவர்களும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி கழிவறை சுவரில் பிற சாதியினர் குறித்து தரக்குறைவாக எழுதியுள்ளார். அதன் பின் பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் ஒரு தலித் மாணவரும், மற்றொரு சாதியை சேர்ந்த மாணவர் ஒருவரும் காயமடைந்தனர்” என்று அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ந.முருகன் கூறினார்.

அந்தப் பள்ளியில் இதுபோன்று நடப்பது முதல் முறையல்ல என்று சுட்டிக்காட்டுகிறார் முருகன்.

“கடந்த கல்வியாண்டில், ஐந்து முறை வெவ்வேறு சம்பவங்களில் மாணவர்கள் இளைஞர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களில் இது இரண்டாவது சம்பவமாகும். கடந்த மாதம், ஒரு சாதி மாணவியை பிற சாதி மாணவர் பார்த்ததாக கூறி பிரச்னை ஏற்பட்டது” என்கிறார் அவர்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜூலை மாதம் முதல் வாரத்தில் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது, மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். எனினும் இந்த மோதல்களுக்கு சாதி காரணம் இல்லை என்று காவல்துறை கூறியிருந்தது.

இதே மாவட்டத்தில் கடந்த ஆண்டு, நாங்குநேரியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த தலித் மாணவர், மற்றும் அவரது 9ம் வகுப்பு படிக்கும் சகோதரி, பிற சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்டனர்.

சாதி ரீதியிலான இந்த தாக்குதல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துருவின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை, மோதல்களை தடுக்க தேவைப்படும் நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

சாதி மோதல்கள் தொடர்ந்து நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்துள்ளதாக திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“நாங்குநேரி, வள்ளியூர், மருதகுளம் உள்ளிட்ட பத்து பள்ளிகளில் தொடர்ச்சியாக மோதல்கள் ஏற்படுகின்றன. மாணவர்களிடையே மோதல்களுக்கான காரணங்களை ஆழமாக சென்று விசாரிக்கும்போது, அவை பெரும்பாலான நேரங்களில் சாதியாக இருக்கிறது."

"'அன்போடு ஒன்றில்' என்ற பெயரில் ஒவ்வொரு பள்ளியிலும் வாரம் இருமுறை வருவாய், சுகாதாரம், கல்வி, சமூகநலன், காவல் என பல்வேறு துறை சார்ந்தவர்கள் மாணவர்கள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் இதுபோன்ற சம்பவங்களை முழுவதும் தடுக்க இயலவில்லை” என்றார்.

திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஏன் திருநெல்வேலியில் சாதி மோதல்கள் அதிகம் ஏற்படுகின்றன?

சாதி பாகுபாடுகள் எல்லா இடங்களிலும் இருந்தாலும், திருநெல்வேலி மாவட்டம் சாதி ரீதியான மோதல்கள் அடிக்கடி நடப்பதற்கு வரலாற்று காரணங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார், எழுத்தாளர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மணிகுமார்.

“1995ம் ஆண்டு சாதி கலவரங்கள் அதிகரித்தபோது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட கள ஆய்வு ஒன்றில், சாதி எண்ணங்கள் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் புரையோடிக் கிடக்கிறது என்று கண்டறியப்பட்டது. எதிர் தரப்பினர் மீதுள்ள வன்மம் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. சிறார்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை என்று அந்த ஆய்வு கூறியது ” என்று கூறும் மணிக்குமார், 1980கள் முதல் முக்குலத்தோர் மற்றும் தலித்துகளின் அரசியல் ரீதியான ஒன்று திரட்டல் தீவிரமாக நடைபெற்று வந்தது என்று குறிப்பிடுகிறார் .

“இந்த அணி திரட்டல் அவர்களுக்கு இடையில் இருந்த வித்தியாசங்களை கூர்மைப்படுத்தியது. சில இடங்களில் பிராமணர்களின் கையில் இருந்த நிலங்கள் தேவர்களிடம் வந்தது. வீரநாட்டு பள்ளர்கள் கல்வி பெற்றனர், முன்னேறினர், நல்ல வீடுகள் கட்டினர். இது பிற சாதியினருக்கு கோபத்தை தூண்டியது. இது போன்ற பல்வேறு காரணங்களால் இரு தரப்பினரும் தங்கள் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள நினைக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத, கல்வித் துறையின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற மோதல்களை கையாள திறன் இல்லையா அல்லது ஆர்வம் இல்லையா என்று தெரியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது, ஆசிரியர்களிடம் விசாரித்தால், பலரும் தங்களுக்கு எதுவும் தெரியாது, திடீரென மோதல்கள் ஏற்பட்டன என்று கூறுகின்றனர். இது போன்ற இடங்களில் நமக்கு எதுக்கு பிரச்னை என்று பயத்திலோ கூட இருக்கலாம்” என்றார்.

'நல்லாசிரியர்' செய்தது என்ன?

வள்ளியூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் ஐந்து ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஜே.ரேமண்ட். அந்தக் காலக்கட்டத்தில் பெரிய அளவிலான மோதல்கள் ஏதும் ஏற்படவில்லை என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் முருகன் குறிப்பிடுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர் விருது’ பெற்றிருந்த ரேமண்டை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

“இது போன்ற சம்பவங்கள் அந்தப் பள்ளியில் நடப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நான் அந்தப் பள்ளியில் பொறுப்பேற்று மூன்றாவது நாள் சாதி ரீதியிலான மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்தேன். நான் சார்ந்திருக்கும் சாதிக்கு ஆதரவாக நான் செயல்படுவதாக உடனே புகார்கள் எழுப்பப்பட்டன." என்றார் ரேமண்ட்.

"நாடார், தேவர், தலித் மாணவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர் என்பது பெற்றோர்களை நேரில் அழைத்து பேசிய போது அவர்களுக்கு புரிந்தது. மாணவர்கள் மோதலில் ஈடுபடமாட்டார்கள் என்று பெற்றோர்கள் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தப் பிறகே, மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்வேன்." என்று அவர் கூறினார்.

பின்னர், காவல்துறையினர், குழந்தைகள் உதவி எண் (சைல்டு ஹெல்ப் லைன்) உடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றும், பள்ளி நேரம் தாண்டி, பள்ளிக்கு வெளியில் மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதாக தெரிந்தால், பலமுறை நேரில் சென்று மாணவர்களை கண்டித்து, விலக்கி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"நான் பணிபுரிந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட காவல்துறையினர் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒவ்வொரு மாதமும் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது” என்றார் ரேமண்ட்.

திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தீர்வாகுமா?

ஓய்வு பெற்ற நீதிபதி கே சந்துருவின் பரிந்துரைகளில், பள்ளி மாணவர்கள் கைகளில் சாதியைக் குறிக்கும் கயிறுகள் கட்டக் கூடாது, ஆசிரியர்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியை சேர்ந்த ஆசிரியர் அந்தப் பள்ளியில் பணி செய்யக் கூடாது போன்றவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதிப் பெயர்களை அரசுப் பள்ளிகளின் பெயர்களிலிருந்து நீக்க வேண்டும், அனைத்துப் பள்ளிகளையும் கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

ஒரு புறம் இந்த பரிந்துரைகளை பலர் வரவேற்றாலும், இவை களத்தில் சாதிய எண்ணங்களை களைவதற்கு உதவாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாநிலச் செயலாளர் ச.மயில் பேசுகையில், “சாதி ரீதியிலாக மாணவர்களை தூண்டும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்கள் மீது பணியிட மாற்றம் அல்லாமல் அதை விட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வது இந்தப் பிரச்னைக்கு தீர்வாகாது. ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு கொடுத்த பரிந்துரைகளின் படி, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் பள்ளியில் பணிபுரியக் கூடாது என்பது சரியல்ல” என்றார்.

திருநெல்வேலி பள்ளிகளில் தொடரும் சாதி மோதல்கள்

பட மூலாதாரம், Manikumar

படக்குறிப்பு, பேராசிரியர் கே ஏ மணிக்குமார்

சாதி கலவரங்கள், மோதல்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த ரத்னவேல் ஆணையம் மற்றும் மோகன் ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டும் மணிக்குமார், சாதி மோதல்கள் அதிகரிக்க வேலையின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்.

“திருநெல்வேலியில் கிராமத்தில் நடப்பது போன்ற சாதி மோதல் ஏன் ஈரோட்டில் ஒரு கிராமத்தில் நடைபெறுவதில்லை? கோவை மண்டலத்தில் இருக்கும் ஏராளமான துணி தொழிற்சாலைகளே அதற்கு காரணம். வளர்ந்து வரும் சமூகத்தின் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.'' என்றார்.

மேலும் அரசியலுக்கும் சாதிக்கும் இருக்கும் பிணைப்பை உடைக்காமல் உண்மையான மாற்றங்கள் எதுவும் நடைபெறாது என்கிறார் அவர்.

“தேர்தல் நேரத்தில் சாதி தலைவர்களை அழைத்து அரசியல் கட்சிகள் வாக்கு கேட்கின்றனர். இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கு அல்ல. இன்று வாக்குகள் இழப்பதை பற்றி கவலைப்படாமல் யாராவது சாதி சங்கங்களை தடை செய்வார்களா?” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)