இந்தியாவுக்கு நெருக்கமான ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியா? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
- பதவி, ஆசிரியர், பிபிசி ஹிந்தி
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக ஷேக் ஹசீனா அரசு பெரும் சவால்களை சந்தித்து வந்தது. முடிவில் ஆட்சி கவிழ்ந்தே விட்டது. அவர் நாட்டை விட்டே வெளியேறி தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.
ஹசீனா உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அதேநேரத்தில், இந்தியா மற்றும் சீனா இடையே ராஜ தந்திர அளவிலான கொள்கை எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை.
கடந்த மாதம் சீனா சென்ற ஷேக் ஹசீனா, திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பே தாயகம் திரும்பினார்.
ஷேக் ஹசீனாவுக்கு சீனாவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் எதிர்பார்த்த சந்திப்பு கூட நடக்கவில்லை என்றும் வங்கதேசத்துக்கான இந்திய முன்னாள் உயர் ஆணையர் வீணா சிக்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"சீன அரசு ஏன் இப்படி செய்தது என்பது புரியவில்லை’’ என்கிறார் வீணா. ஏனெனில் அதுநாள் வரை சீன அரசு வங்கதேச அரசுடன் நட்புறவைக் காட்டி, அதை பிரதிபலிக்கும் அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தது.
ஷேக் ஹசீனா சீனாவில் இருந்து திரும்பியவுடன் இந்தியாவுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். டீஸ்டா திட்டத்தில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் அந்த திட்டத்தை இந்தியா கையில் எடுக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் ஷேக் ஹசீனா கூறினார்.
இதற்கிடையில், இந்தியா மற்றும் சீனாவுடனான ஹசீனா அரசாங்கத்தின் உறவுகள் குறித்து வங்கதேசத்தில் பல தரப்புகள் கேள்வி எழுப்பின.
அதற்கு ஹசீனா, “நாங்கள் சீனாவுடன் நல்லுறவு வைத்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.
"முன்பு நான் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, இந்த நாட்டை இந்தியாவுக்கு விற்றுவிட்டேன் என்று குற்றம்சாட்டினர். நான் சீனாவுக்குச் சென்றபோது, நான் எதையும் சாதிக்கவில்லை என்றனர். இப்படியான அறிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படி பேசுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறேன்" என்றார் ஹசீனா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரசியலில் குழப்பம்
இந்தியா மற்றும் சீனா பற்றிய ஷேக் ஹசீனாவின் அறிக்கை வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தின் வரலாற்றை மாற்றும் நாளாக அமைந்தது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாடு தழுவிய போராட்டமாக மாறியதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
டெல்லிக்கு அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தை (Hindan Air Force Station) அவர் ராணுவ விமானத்தில் சென்றடைந்தார்.
ஷேக் ஹசீனாவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்ததாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், வங்கதேசத்தில் ராணுவ தலைமை தளபதி வக்கார் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
வெளிநாடுகளின் தலையீடு?
தற்போது வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கொந்தளிப்பு தொடர்பாக எழும் முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த முழுச் சம்பவமும் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதா அல்லது அதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பதுதான்.
வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
வங்கதேசத்துக்கான இந்திய முன்னாள் உயர் ஆணையர் வீணா வெளிநாடுகளின் தலையீடு இருக்கும் என்பதை மறுக்கவில்லை.
இட ஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பாக தொடங்கிய போராட்டத்தின் ஒட்டுமொத்த தன்மையும் எப்படி மாறியது என்பதை உற்றுநோக்க வேண்டும் என்கிறார். போராட்டம் கலவரமாக மாறிய விதம் பல விஷயங்களை புரிய வைக்கிறது.
ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய வங்கதேசத்துக்கான இந்திய உயர் ஆணையர் ஹர்ஷ் ரிங்லா, "வங்கதேசத்தின் நலன்களுக்கு எதிராகவும், நமது பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகவும் இருக்கும் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருப்பதை நீங்கள் நிராகரிக்க முடியாது.” என்றார்.
இருப்பினும், ஹர்ஷ் ரிங்லா இந்த முழு சம்பவத்தின் பின்னணியில் பொருளாதார காரணங்கள் இருப்பதாகவும் கருதுகிறார்.
கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு வங்க தேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பு, யுக்ரேன் நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை அவர் பட்டியலிடுகிறார். இதன் காரணமாக, வங்கதேசம் இறக்குமதி செய்யும் எரிபொருள், உணவு, உரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்தது.
இந்த காரணங்களால் வங்கதேச மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவானது என்று ரிங்லா நம்புகிறார்.
"கவனமாக திட்டமிடப்பட்ட உத்தி"
வீணா சிக்ரி சமீபத்திய போராட்டம் கவனமாக திட்டமிடப்பட்ட உத்தி என்கிறார். இடஒதுக்கீடு பிரச்னையில் அரசாங்கமும் மாணவர்களும் ஒரே கருத்தில் இருந்தனர் என்றும் கூறுகிறார்.
அவர், “இந்த இடஒதுக்கீடு சீர்திருத்த இயக்கம் 2018 இல் தொடங்கியது. அப்போது ஷேக் ஹசீனா அரசு போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இதை எதிர்த்து ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இட ஒதுக்கீடு தொடர வழிவகை செய்யப்பட்டது. ஆனால் ஷேக் ஹசீனா அரசு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. மாணவர்களுடன் இருந்த அவர், இடஒதுக்கீட்டை நிறுத்துவோம் என்று வாக்களித்தார்.
பின்னர் வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு முறையை கிட்டத்தட்ட ரத்து செய்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாணவர்கள் விரும்பியது கிடைத்ததால், இந்த முழு சம்பவத்தில் இருந்தும் மாணவர்கள் பின்வாங்கினர் என்கிறார் வீணா.
"இடஒதுக்கீடு சீர்திருத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். இப்போது ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் எதிர்க்கட்சயின பி.என்.பி.யின் மாணவர் பிரிவைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் உள்ளே வந்ததாகவும், அங்கு பெரும் வன்முறை நடந்ததாகவும் தெரிகிறது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி செய்தியாளர் அக்பர் ஹொசைன்,
வங்கதேசத்தில் எந்த அரசு அமைந்தாலும் அதற்கு சட்டம் ஒழுங்கு பெரும் சவாலாக இருக்கும். பல இடங்களில் கொள்ளை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களைக் கட்டுப்படுத்துவது சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இடைக்கால அரசாங்கம் தவறினால் நிலைமை மேலும் மோசமாகும் என பல அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லாம் தெளிவாக இருந்த போதிலும், ஷேக் ஹசீனா நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது நாட்டின் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.
வங்கதேச இளைஞர்கள் அரசியல் ரீதியாக மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். இட ஒதுக்கீடு பிரச்னை இருந்தது, ஆனால் அவர்கள் அனைத்து தரப்புக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.
வங்கதேசத்தின் சமீபத்திய தேர்தல்களும் விமர்சிக்கப்பட்டன. எதிர்கட்சிகள் முழுமையாக செயலிழந்ததால், மேற்கத்திய நாடுகள் தேர்தல்கள் குறித்து கேள்விகளை எழுப்பின. மனித உரிமைகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் ஹசீனா யாருடைய பேச்சையும் பொருட்படுத்தவில்லை.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டது. இதன் பின்னர் இளைஞர்களின் கோபம், பயம், விரக்தியால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு வீதியில் இறங்கினர்.
வங்கதேச ஜனநாயகமும் ராணுவமும்
தற்போது, வங்கதேச ராணுவம் நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஒரு காலத்தில் வங்கதேசத்தில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பல காலமாக அது ஆட்சியில் இல்லை.
போராட்டங்களுக்குப் பின் எழுந்துள்ள அசாதாரண சூழலில் ராணுவம் முன் வந்து, நாட்டின் நிலைத்தன்மை குறித்து பேசுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ராணுவம் இந்த நடவடிக்கை எதைக் குறிக்கிறது?
வங்கதேச ராணுவம் அங்கு ஆட்சியை கைப்பற்ற விரும்புவதாக தாம் நினைக்கவில்லை என்று வீணா சிக்ரி கூறுகிறார்.
"ராணுவம் முன்வந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறியதற்கு வேறு எந்த பின்னணியும் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் மட்டுமே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இலங்கையிலும் இதேதான் நடந்தது. அங்குள்ள ஜனாதிபதி இல்லத்தையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அதன்பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ராணுவ தளபதி கூறியுள்ளார்." என்றார்.
வங்கதேச சூழல் இந்தியாவை எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் இருக்கிறார், வங்கதேசம் என்னும் அண்டை நாட்டில் ஏற்பட்ட இந்த அரசியல் பூகம்பத்தின் அதிர்ச்சியை இந்தியாவிலும் உணர முடியும்.
இது இந்தியாவைப் பாதிக்கும் என்றும் இந்தியா ஸ்திரத்தன்மையை விரும்புகிறது என்றும் வீணா சிக்ரி நம்புகிறார்.
அவர் கூறுகையில், “வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் அரசியல் நிலைத்தன்மையுடனும், அங்கே ஜனநாயகம் வேரூன்றி இருக்கவும் இந்தியா விரும்புகிறது. இந்தியாவின் ஆசை இதுதான். எனவே இந்த விவகாரத்தில் இந்தியா ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முயற்சிக்கும்.
அரசியல் தவிர, வங்கதேசத்துடனான இந்தியாவின் வணிக உறவுகளும் மிகவும் வலுவானவை. தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக வங்கதேசம் உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் துறைமுகங்கள் அமைப்பதற்காக இந்தியா ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வங்கதேசத்துக்கு வழங்கியுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதியும் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார், இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












