வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்?

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது.

வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது.

டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார்.

இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக.

யார் இந்த தமிழ் வம்சாவளி வீரர்?

2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போதிருந்து அவர் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த வதோதரா ஒருநாள் போட்டிக்கு முன்பு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் அதன்பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருவருமே வேலை பெற்றார்கள். அவருடைய நான்கு வயதிலிருந்து நியூசிலாந்தில் இருக்கிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் வரிசையில் இவரும் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடுகிறார்" என்று கூறினார்.

சோதி, அஜாஸ் படேல் போல் ஆதித்யாவும் ஸ்பின்னர் தான். இவர், கூக்ளி அதிகம் வீசக்கூடிய லெக்பிரேக் பௌலர். நியூசிலாந்து முன்னாள் வீரர் தருன் நேதுலாவிடம் பயிற்சி பெற்று அவர் தன்னுடைய கூக்ளியை மெருகேற்றியிருக்கிறார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

ஆந்திராவில் பிறந்தவரான நேதுலா, நியூசிலாந்துக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி, 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான இண்டோர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஆதித்யா செயல்பட்டிருக்கிறார்.

இவர், 2020-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி அவர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார்.

ஆக்லாந்து அணிக்காக 2021-ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டிகளில் அறிமுகமான ஆதித்யா, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் அணிக்கும் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடினார்.

ஆனால், அதன்பிறகு அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பெரிதளவு அவதிப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பு பெற்றிருக்கிறார் ஆதித்யா அஷோக்.

ஆதித்யா அஷோக்

பட மூலாதாரம், Instagram/Adhitya Ashok

படக்குறிப்பு, ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

இதுபற்றி இந்தப் போட்டிக்கு முன்பாக பேசிய அவர், "நானும் என் தாத்தாவும் எங்கள் பூர்வீக வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். மதிப்புகள், ஒழுக்கங்கள் என அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடினோம். அப்போது பின்னால் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது."

"அப்போது அந்த வசனம் வந்தது. அது எனக்கு மிகவும் பெர்சனலான ஒரு விஷயம். அந்த உரையாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதன்பிறகு சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாள்களில் நான் அந்த வசனத்தை டாட்டூ குத்திக்கொண்டேன். இது எனது தமிழ் வேர்களுடனும், வேலூருடனும், பிரபலமான ஒரு தமிழ் சின்னத்துடனும், அதே சமயம் உலகளாவிய சின்னத்துடனும் உள்ள ஒரு தொடர்பாகும்" என்று இஎஸ்பிஎன்-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் ரசிகர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு