யானைகளும் ஒன்றை ஒன்று பெயர் வைத்து அழைக்குமா? ஆய்வில் புதிய தகவல்

உலக யானை தினம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

(இன்று உலக யானைகள் தினம். 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.)

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான். ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள்.

சமீபத்தில் ஆப்பிரிக்க யானைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மனிதர்களைப் போலேவே யானைகளும் ஒன்றுக்கொன்று பெயர் வைத்து அழைத்துக் கொள்கின்றன என கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கேல் பார்டோ தலைமையிலான குழு, கென்யாவில் வாழும் ஆப்பிரிக்க காட்டு யானைகளை ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்தனர்.

இந்த ஆய்வு முடிவுகள் ஆசிய யானைகளுக்கும் பொருந்துமா? யானைகள் தங்களுக்குள் எப்படி தொடர்புகொள்கின்றன மற்றும் அவற்றின் சமூக கட்டமைப்பு எவ்வாறு உள்ளது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘பிறருக்கு தீங்கு நினைக்காத உயிரினம்’

 ஆண் யானை

பட மூலாதாரம், Sangita Iyer

படக்குறிப்பு, அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், சங்கீதாவின் குழுவை வழிமறித்த ஆண் யானை

‘யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் எழுதியுள்ளார்.

“மேலே இருக்கும் வரிகளைப் படித்தால், சிலர் யோசிக்கலாம், யானைகள் மனிதர்களைத் தாக்குவதை, விரட்டுவதை, பார்த்திருக்கிறோமே என்று. ஆனால் என் பல வருட அனுபவத்தில் சொல்கிறேன், மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையைத் தீர்மானிப்பவை” என்கிறார் எழுத்தாளர், வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் மற்றும் உயிரியலாளர் சங்கீதா ஐயர்.

ஆசிய யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016இல் உருவாக்கப்பட்ட ‘வாய்சஸ் ஃபார் ஏசியன் எலிபன்ட்ஸ்’ (Voices for Asian Elephants) என்ற அமைப்பின் நிறுவனரான சங்கீதா, பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

“ஆண் யானைகளுக்கு இனப்பெருக்க காலத்தில் மஸ்த் எனும் மதனநீர் வெளியேறும். அப்போது யானைகள் மிகவும் மூர்க்கமாக இருக்கும். தங்களது பாதையில் எது வந்தாலும், யோசிக்காமல் அழித்துவிட்டு முன்னேறும். மிகவும் எளிதாக மதம் பிடிக்கும். அப்படி மதனநீர் வெளியேறும் பருவத்தில் இருந்த ஒரு ஆண் காட்டு யானையை, ஆய்வின் போது நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது” என்கிறார் சங்கீதா.

சங்கீதா

பட மூலாதாரம், @Sangita4eles/X

படக்குறிப்பு, சங்கீதா பல வருடங்களாக யானைகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு, வனவிலங்குகள் குறித்த தனது ஆவணப்படத்திற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்றிருந்தார் சங்கீதா.

“எங்கள் குழு சென்ற வாகனத்திற்கு சில நூறு மீட்டர்கள் தொலைவில் அது நின்றிருந்தது. அதன் காதுகளுக்கு பக்கத்தில் மதனநீர் வழிந்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை எங்களை நோக்கி முன்னேறியது. நாங்கள் வாகனத்தின் இன்ஜினை அணைத்துவிட்டு காத்திருந்தோம்”

“பாதையில் இருந்த மூங்கில் மரங்களை உடைத்து சாப்பிட்டவாறே, அது எங்களை நோக்கி வந்தது. நாங்கள் பதற்றப்படவில்லை, கத்தவில்லை, அதை பயமுறுத்தவில்லை.” என்று அன்று நடந்ததை விவரித்தார் சங்கீதா.

அவ்வப்போது யானை தங்களைத் தாக்க வருவது போல பாவனைகள் செய்ததையும், சுமார் 18 நிமிடங்கள் வரை பாதையை மறித்தவாறு நின்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

“பின்னர் அந்த யானை அமைதியாக திரும்பிச் சென்றது. எப்படி மதனநீர் வழியும் ஒரு யானை தாக்காமல், திரும்பிச் சென்றது என அந்தக் காணொளியை பார்த்த விலங்கு ஆய்வாளர்கள் பலர் ஆச்சரியப்பட்டனர். அதனால்தான் சொல்கிறேன், மனிதர்களுடனான அனுபவங்கள்தான் அவற்றின் நடவடிக்கையைத் தீர்மானிக்கின்றன.” என்கிறார் சங்கீதா.

யானைகள் தங்களுக்குள் உரையாடிக்கொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான்

யானைகள் தொடர்பு கொள்ளும் முறை

மைக்கேல் பார்டோ தலைமையிலான குழுவினர், கென்யாவின் தேசிய பூங்காக்கள், வன காப்பகங்கள் மற்றும் சவானாக் காடுகளில், 1986 முதல் 2022 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட யானைகளின் 625 பிளிறல் ஒலிகளை ஆய்வு செய்தனர். செயற்கை நுண்ணறிவின் உதவியோடு இந்த பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து, அதற்கு செய்தியைக் கூறுகின்றன என பகுப்பாய்வு முடிவுகள் உணர்த்தின.

இதற்கு முன்பாக இக்குழு செய்த ஆய்வில், ‘டால்பின்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஒரு குறிப்பிட்ட டால்பினின் விசில் ஒலியைப் பாசங்கு செய்கின்றன, கிளிகள் ஒரு குறிப்பிட்ட கிளியின் குரலைக் மிமிக்ரி செய்து அழைக்கின்றன’ போன்ற ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன.

ஆனால், இந்த யானைகள் தொடர்பான ஆய்வில் அவை பாசாங்கோ, மிமிக்ரியோ செய்யாமல், தனித்துவமான ஒரு பிளிறலை வெளிப்படுத்தி அழைக்கின்றன எனக் கண்டறியப்பட்டது.

யானைகள் ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இதை உறுதிப்படுத்த, பார்டோவும் அவரது குழுவினரும், பதிவு செய்யப்பட்ட பிளிறல்களை, 17 யானைகள் முன்பு ஒலிக்கச் செய்தனர். அப்போது யானைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்தனர்.

தமது 'பெயர்' ஒலிக்கும்போது அந்த யானை சத்தம்வரும் திசையை நோக்கித் உற்சாகமாக ஓடிச் சென்றுள்ளது. அந்தக் குறிப்பிட்ட யானை மட்டும் அந்தப் பிளிறல் ஒலியை உன்னிப்பாகக் கவனித்தது, ஆனால் பிற யானைகள் அது தனக்கானது அல்ல என உணர்ந்து புறக்கணித்து விட்டன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஆசிய யானைகளுக்கும் இந்த ஆய்வு பொருந்துமா?

ஆசிய யானைகளுக்கும் இந்த ஆய்வு பொருந்துமா?

பட மூலாதாரம், Getty Images

“பிளிறல்கள், எக்காளம் போன்ற மனிதர்கள் கேட்கக்கூடிய ஒலிகள் தவிர்த்து நம்மால் கேட்கமுடியாத இன்ஃப்ராசோனிக் ஒலிகள் மூலமாகவும் யானைகள் தொடர்புகொள்ளும். எனவே இந்த ஆய்வு முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்கிறார் வனவிலங்கு ஆய்வாளர், டாக்டர் லக்ஷ்மிநாராயணன்.

மத்திய அரசின் வனஉயிர் நிறுவனத்தில் (Wildlife Institute of India) பணிபுரிந்து வரும் லக்ஷ்மிநாராயணன், “யானைகள் பொதுவாக தன் குழுவில் இருக்கும் பிற யானைகளைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும். ஒலி மூலம் மட்டுமல்லாது, சிறுநீர், மதநீர், சாணம் மூலமாகவும் அவை தகவல்கள் பரிமாறிக் கொள்ளும்” என்று கூறினார்.

ஆப்பிரிக்க யானைகள் குறித்தான மைக்கேல் பார்டோ தலைமையிலான ஆய்வு, பெரும்பாலான ஆசிய யானைகளுக்கும் பொருந்தும் என்று கூறியவர், இந்தியாவில் ஆசிய யானைகளின் தொடர்பாடல் குறித்து ஆய்வுகள் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

“ஒரு இடத்தில் மனிதர்கள் இருந்தால், முன்னால் செல்லும் யானை அதைக் குறித்து தகவல் தெரிவித்துவிடும். யானைகள் முடிந்தவரை மனிதர்களைத் தவிர்க்கவே முயற்சி செய்யும்” என்று கூறுகிறார் லக்ஷ்மிநாராயணன்.

யானைகளின் சமூக கட்டமைப்பு

யானைகளின் சமூக கட்டமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது

“யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். அப்படியிருக்க ஒரு நாளில் இவ்வளவு உணவையும், நீரையும் ஒரே இடத்தில் பெற முடியாது, அவை 40 முதல் 50 கி.மீ வரை பயணிக்கும். ஒரு யானைக் கூட்டத்தை பெண் யானைதான் வழிநடத்தும்” என்கிறார் பி.ராமகிருஷ்ணன்.

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். யானைகளின் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

“அப்படி வழிநடத்தும் ஒரு பெண் யானைக்கு அந்தப் பகுதியில், தனது கூட்டம் தவிர்த்து வேறு எத்தனை யானைகள் உள்ளன என்பது துல்லியமாகத் தெரியும். புதிதாக ஒரு யானை அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலும் அது கண்டறிந்துவிடும். எனவே ‘பெயர் வைத்து அழைப்பது’ என்பதைக் கடந்து, அதை விட பல வித்தியாசமான தகவல் தொடர்பு முறைகளை அவை பயன்படுத்துகின்றன” என்று கூறுகிறார் ராமகிருஷ்ணன்.

தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன.

பி.ராமகிருஷ்ணன்
படக்குறிப்பு, பி.ராமகிருஷ்ணன் 23 ஆண்டுகளாக யானைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

தொடர்ந்து பேசிய பி.ராமகிருஷ்ணன், “ஒரு சிறு குழுவில், தாய் யானை, அதன் மூத்த குட்டிகள், சிறு குட்டிகள் என பயணிக்கும். ஆண் யானைகள் சற்று தனிமையை விரும்புவை. ஆனால் பயணிக்கும்போது மீண்டும் குழுவுடன் சேர்ந்துவிடும். 3, 4 சிறு குழுக்கள் சேர்ந்தும் பயணிக்கும்”

“ஒரு யானை கர்ப்பமாக அதை பிற யானைகள் சூழ்ந்து, பாதுகாப்பு அரண் அமைத்துச் செல்லும். ஒருவேளை ஏதேனும் ஒரு யானை பிரிந்துவிட்டால், தலைவி பிரத்யேக ஒலி எழுப்புவதை நாங்கள் பலமுறை கவனித்தது உண்டு” என்று கூறினார்.

யானைகள் தொடர்பான மேலும் பல்வேறு ஆய்வுகள் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்,

“2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை 'தேசிய பாரம்பரிய விலங்காக' அறிவித்த பிறகுதான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவேதான் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதும் இயற்கையைப் பாதுகாப்பதும் வேறில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது” என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)