ஆப்ரிக்கா தாண்டி பிற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு - இந்தியாவில் மீண்டும் பரவுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முராரி ரவி கிருஷ்ணா
- பதவி, பிபிசிக்காக
காங்கோ உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளில் எம்பாக்ஸ் (குரங்கம்மை நோய்) பரவி வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ஆகஸ்ட் 14 அன்று சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR) நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பாய்வு செய்தார்.
இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர்?
காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்த ஆண்டு இதுவரை 15,664 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 548 பேர் இறந்துள்ளனர். இந்த நோய் புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR), கென்யா மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்த மறுநாளே (ஆகஸ்ட் 15) ஆப்பிரிக்காவுக்கு வெளியே, தங்கள் நாட்டில் எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஸ்வீடன் அறிவித்தது. இந்த வைரஸ், க்ளேட் 1-இன் திரிபு என அடையாளம் காணப்பட்டது.
பாகிஸ்தானில் இதுவரை மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் என்ன நிலை?
இந்தியாவில் கடந்த காலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்ப இருந்துள்ளது. ஆனாலும், தற்போது இதுவரை ஒருவருக்கு கூட அதன் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு முன் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவிய போது, இந்தியாவிலும் சிலர் பாதிக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் வெளியிட்ட அறிக்கையில், 2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதிக்கு முன்பாக நாட்டில் 27 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். கேரளாவில் 12 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்தியாவில் மீண்டும் குரங்கம்மை ஏற்படுமா?
மூத்த ஆலோசகர் மருத்துவர் சிவராஜூ பிபிசியிடம் பேசுகையில், “உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே, அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும். நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
“விமான நிலையங்களில், நாட்டுக்குள் வரும் பயணிகளின் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார்கள் என்பதை பதிவு செய்வது அவசியம். குறிப்பாக, இந்நோய் பரவும் நாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை ஆராய வேண்டும். விமான நிலைய சுகாதார அதிகாரிகள் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை பரிசோதிக்க வேண்டும்” என்றார்.
இருப்பினும், ஹைதராபாத்தில் உள்ள காய்ச்சல் மருத்துவமனை சி.எஸ்.ஆர்.எம்.ஓ., இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று கூறியுள்ளது.
குரங்கம்மை என்பது என்ன?
குரங்கம்மை வைரஸ் ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ். இது எம்பாக்ஸ் நோயை உண்டாக்குகிறது. இது பெரியம்மை போன்ற அறிகுறிகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதன் தீவிரம் குறைவு. 1980-ல் பெரியம்மை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை இன்னும் உள்ளது.
இந்நோய் முதன்முதலில் 1958 இல் குரங்குகளில் கண்டறியப்பட்டது. பின்னர் 1970களில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
மே 2022 முதல், ஆப்பிரிக்கப் பகுதிக்கு வெளியேயும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. குரங்கம்மை வைரஸின் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை- கிளேட் I, கிளேட் II.
இது பெரியம்மையுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், குரங்கம்மை பரவுவது குறைவு. அதன் தீவிரம் குறைவு. இருப்பினும், இது பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
எம்பாக்ஸின் அறிகுறிகள்
நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஒரு வாரத்திற்குள் எம்பாக்ஸின் அறிகுறிகள் தோன்றும். இருப்பினும், அவை ஒன்று முதல் 21 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக 2-4 வாரங்கள் நீடிக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது கூடுதல் நாட்கள் நீடிக்கலாம்.
எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, தசை வலி, முதுகுவலி மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு, எம்பாக்ஸ் முதலில் சொறி வடிவில் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

பட மூலாதாரம், Mike Roemer/Getty Images
ஒரு புண் போல் தொடங்கி திரவம் நிறைந்த கொப்புளமாக உருவாகிறது. சொறி குணமாகும் போது புண்கள் காய்ந்து கொப்புளங்கள் உதிர்ந்து விடும்.
புண்கள் குணமடைந்து புதிய தோல் உருவாகும் வரை, அவை மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும்.
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள் எம்பாக்ஸால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
எப்படி பரவுகிறது?
எம்பாக்ஸ் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வாய் அல்லது பிறப்புறுப்பில் உள்ள தோல் புண்கள் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவைதவிர, பின்வரும் காரணங்களாலும் இந்நோய் பரவலாம்.
- நேருக்கு நேர் (பேசுதல் அல்லது சுவாசித்தல்)
- தொடுதல் அல்லது உடலுறவு வாயிலாக
- உதட்டோடு உதடு சேர்த்து முத்தம்
- வாய்வழி உறவு அல்லது தோலில் முத்தமிடுதல்
- சளி, தோல் காயம் வாயிலாக இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. எம்பாக்ஸ் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கலாம். அதிக நபர்களுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், கீறினால், மனிதர்களுக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்படலாம்.
எம்பாக்ஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
மற்ற நோய்த்தொற்றுகள் போல தோற்றமளிப்பதால், எம்பாக்ஸ் நோயைக் கண்டறிவது கடினம். எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க பரிசோதனை மிகவும் முக்கியமானது, இதனால் மக்கள் கூடிய விரைவில் சிகிச்சை பெற முடியும்.
பி.சி.ஆர் பரிசோதனை மூலம் வைரஸ் டிஎன்ஏவை கண்டறிவது எம்பாக்ஸ்-ஐ கண்டறிவதற்கான ஒரு சிறந்த முறையாகும். இதில் நோயறிதலுக்காக தோல், திரவம் அல்லது கொப்புளங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
இருப்பினும், நோயறிதலுக்கு ரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படவில்லை. ஆன்டிபாடி கண்டறிதல் முறைகள் பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் அவை வெவ்வேறு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களை வேறுபடுத்துவதில்லை.
சிகிச்சை என்ன?
உலக சுகாதார நிறுவனத்தின் படி, எம்பாக்ஸ்-க்கு மூன்று தடுப்பூசிகள் உள்ளன. MBA-BN, LC16 மற்றும் OrthopoxVax என மூன்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன.
எம்பாக்ஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கலாம். எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வெளிப்பட்ட 4 நாட்களுக்குள் (அல்லது அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்குள்) தடுப்பூசி போடப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள் சுகாதாரப் பணியாளர்கள், தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தடுப்பது எப்படி?
எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 2-4 வாரங்களுக்குள் குணமடைவார்கள்.
- அறிகுறிகளைக் குறைக்கவும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனி அறையில் தங்க வைக்க வேண்டும்.
- கைகளை சானிட்டைசர் அல்லது சோப்பு மூலம் அடிக்கடி கழுவ வேண்டும்.
- புண்களைத் தொடுவதற்கு முன் அல்லது சொறி குணமாகும் வரை முகக்கவசத்தை அணிய வேண்டும்
- மற்றவர்கள் அருகில் இருக்கு ம்போது காயங்களை மறைக்க வேண்டும்.
- உங்கள் வாயில் புண்கள் இருந்தால், உப்பு நீரில் கொப்பளிக்க வேண்டும்.
- பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
- கொப்புளங்களை உடைக்கவோ அல்லது புண்களை கீறவோ கூடாது, இது குணமடைவதை தாமதப்படுத்தும். உடலின் மற்ற பகுதிகளுக்கு சொறி பரவும். கொப்புளங்கள் குணமாகும் வரை அப்பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- மற்றவர்களுக்கு எம்பாக்ஸ் பரவுவதைத் தடுக்க, எம்பாக்ஸ் உள்ளவர்களை நோய் குறையும் வரை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்த வேண்டும்.
- மற்றவர்கள் முன்னிலையில் முகக்கவசத்தை அணிந்தால் அத்தொற்று பரவாமல் தடுக்கலாம்.
- உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












