கோலார் தங்க வயல் யாரால், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? உண்மை வரலாறு

தங்கலான், கோலார் தங்க வயல்

பட மூலாதாரம், Neelam Productions/X

படக்குறிப்பு, தங்கலான் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோலார் தங்க வயல் குறித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் நேற்று வெளியாகியிருக்கிறது. கோலார் தங்க வயல் உண்மையில் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? அதன் வரலாறு என்ன? அந்த சுரங்கம் ஏன் மூடப்பட்டது?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது 'தங்கலான்' திரைப்படம்.

19-ஆம் நூற்றாண்டில் கோலாரில் தங்கம் கிடைக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை, தொன்மக் கதைகளைக் கலந்து சொல்கிறது இந்தப் படம்.

ஆனால், கோலார் தங்க வயல் உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? அங்கிருந்த தங்கச் சுரங்கம் மூடப்பட்டது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோலார் தங்க வயல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம்

கோலார் தங்க வயல் பகுதிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய தங்கச் சுரங்கம் இருந்த பகுதி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1880-ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தங்கம் எடுக்கும் முயற்சிகள் துவங்கின. அப்போதிலிருந்து சுரங்கம் மூடப்பட்ட 2001-ஆம் ஆண்டுவரை இங்கிருந்து சுமார் 800 டன் தங்கம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு முந்தைய காலகட்டத்தில் எவ்வளவு தங்கம் எடுக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. உலகின் தங்க உற்பத்தியில் கோலாரின் பங்களிப்பு மட்டும் 2% அளவுக்கு இருந்தது.

இங்குள்ள சுரங்கங்களின் நீளம் மட்டுமே 1,360 கி.மீ அளவுக்கு இருக்கும். உலகின் இரண்டாவது மிக ஆழமான சுரங்கம் – சுமார் 3 கி.மீ. ஆழத்தில் இங்கேதான் அமைந்திருந்தது.

கோலார் தங்க வயல் பகுதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் போவரிங்பேட் தாலுகாவில் அமைந்திருக்கிறது. இது பெங்களூரில் இருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, இன்று வெறிச்சோடிக் கிடக்கும் கோலார் தங்கவயல்

தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

5-ஆம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே இங்கு தங்கம் எடுக்கப்படுவதாக தனது ‘Kolar Gold Fields Down Memory Lane’ நூலில் குறிப்பிடுகிறார் ப்ரிஜெட் ஒயிட்.

வேங்கடசாமி என்பவர் எழுதி இந்திய நிலவியல் அளவைக் கழகம் வெளியிட்ட ‘Kolar Gold Mines’ என்ற நூல், சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்டது கோலாரில் இருந்து கிடைத்த தங்கம்தான் எனக் குறிப்பிடுகிறது.

கங்க மன்னர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றின் கீழ் கோலார் இருந்தது. இதற்குப் பிறகு, பீஜப்பூரின் ஜாகிதார்கள் வசம் வந்த கோலார், முடிவில் ஹைதர் அலி, திப்பு சுல்தானின் கீழ் வந்தது.

நான்காவது மைசூர் போரில் திப்பு சூல்தான் கொல்லப்பட்ட பிறகு, மைசூர் ராஜ்ஜியத்தை நில அளவை செய்ய ஜான் வாரன் என்ற ராணுவ அதிகாரியை கிழக்கிந்தியக் கம்பனி நியமித்தது.

அவர் எர்ரகொண்டா மலைப் பகுதிக்கு வந்தபோது, ஊர்காவ்ன், மாரிக்குப்பம் போன்ற பகுதிகளில் தங்கம் கிடைப்பது குறித்து கேள்விப்பட்டார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாறைகளில் உள்ள தங்க ரேகைகளில் இருந்த தங்கத்தை எடுத்துக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து இந்தப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களை ஆராய முடிவுசெய்தார் வாரன். "அவரோடு பணியாற்ற தெரு, தேடு பழங்குடியைச் சேர்ந்த 12 பேர் முன்வந்தனர். 3 பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வெள்ளி நாணயம் ஊதியமாக வழங்கப்பட்டது," எனக் குறிப்பிடுகிறது ‘Kolar Gold Mines’ நூல். இந்தத் தொழிலாளர்கள் ஒரு மாதம் வேலை பார்த்தால், 30 பகோடா தங்கத்தை எடுப்பார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பல முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுசெய்ய முன்வந்தனர். இந்தத் தருணத்தில் ஜான் வாரன் ஒரு அறிவிப்பைச் செய்தார். தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டுபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

ஊர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தங்கம் கிடைக்கும் இடம் தனக்குத் தெரியும் எனக் கூறி, ஒரு பழங்காலச் சுரங்கப் பகுதியைக் காட்டினார். அங்கிருந்து கிடைத்த மண்ணில் குறிப்பிடத்தக்க அளவில் தங்கம் கிடைத்தது.

தனக்குக் கிடைத்த தங்கம் எவ்வளவு தரமானது என்பதை அறிய அதனைச் சென்னைக்கு அனுப்பினார் வாரன். அங்கு நடந்த சோதனையில் அது தரமான தனிமம் எனத் தெரியவந்தது. ஆனால், அப்போதைய அரசு தங்கம் தோண்டுவதில் ஆர்வம் காட்டவில்லை.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கோலார் தங்கவயலின் சுரங்கக் கட்டுமானங்கள்

தங்கம் எடுப்பது எப்போது துவங்கியது?

அதே தருணத்தில் பெங்களூரில் இருந்த மைக்கல் லாவல் என்ற ராணுவ வீரருக்கு இந்தத் தகவல் கிடைத்தது. அவர், கோலாரில் தங்கம் தோண்ட மைசூர் அரசிடம் விண்ணப்பித்து, பலத்த சிரமத்திற்கு இடையில் 1875-இல் உரிமம் பெற்றார்.

ஆனால், இவர் தனக்குக் கிடைத்த உரிமத்தை 1876-லேயே வேறு சிலருக்குக் கைமாற்றிவிட்டார்.

பிறகு பலர் இணைந்து 5,000 பவுண்டுகளை முதலீடு செய்து ‘Kolar Concessionaries’ என்ற பெயரில் கூட்டாகச் சேர்ந்து தங்கம் தோண்டத் தொடங்கினர். முதலில் பெரிய அளவில் தங்கம் கிடைக்கவில்லையென்றாலும் பிறகு, குறிப்பிடத்தக்க அளவில் தங்கம் கிடைக்க ஆரம்பித்தது.

இதைக் கேள்விப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஊர்காவ்ன் அண்ட் கம்பனி என்ற நிறுவனம் 10,000 பவுண்ட் முதலீட்டில் ஒரு நிறுவனத்தைத் துவங்கியது. இதற்குப் பிறகு மைசூர் மைன்ஸ் கம்பனி, நந்திதுர்க் கம்பனி ஆகியவை கோலாரில் முதலீடு செய்தன. முடிவில், மொத்தம் 11 நிறுவனங்கள் ஒரு லட்சத்து 20,000 பவுண்டுகளை முதலீடு செய்தனர்.

ஆனால், விரைவிலேயே அங்கு தங்கம் கிடைப்பது குறைய ஆரம்பித்தது. எல்லோரிடமும் இருந்த முதலீடும் தீர ஆரம்பித்திருந்தது. மைசூர் மைன்ஸ் நிறுவனம், கையில் எஞ்சியிருந்த முதலீட்டை வைத்து, ஒரு நிபுணரை அனுப்பி அந்தப் பகுதியை முழுமையாக ஆராய விரும்பியது. அதன்படி கேப்டன் பிளம்மர் என்பவர் கோலார் தங்க வயலுக்கு அனுப்பப்பட்டார்.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, இன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கோலார் தங்கவயலின் சுரங்கக் கட்டுமானங்கள்

கோலார் சுரங்கத்தின் உண்மையான முகம்

கேப்டன் பிளம்மர் தனது ஆய்வின்போது, மாரிக்குப்பத்தில் ஏற்கனவே கிடைத்த பழங்காலச் சுரங்கத்திற்குள் இறங்கினார். அந்தச் சுரங்கத்தில் இதற்கு முன்பு ஆய்வுசென்றவர்கள் சென்ற திசையில் செல்லாமல் எதிர்த்திசையில் தோண்டலாம் என்றார். அப்போதுதான் கோலாரின் தங்கச் சுரங்கம் உண்மையிலேயே தனது முகத்தைக் காட்டியது.

தங்கம் கொட்ட ஆரம்பித்தது. 1885-ஆம் ஆண்டின் இறுதியில் இது நடந்தது. சுமார் 6,000 அவுன்ஸ் தங்கம் இந்த இடத்தில் இருந்துமட்டும் கிடைத்தது.

விரைவிலேயே கோலார் தங்க வயல் சுரங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. 1888 - 89-இல் 48 சுரங்கக் குழிகள் தோண்டப்பட்டுத் தங்கம் எடுக்கப்பட்டுவந்தது.

சுரங்கம் தோண்டும் பணிக்காக, அருகிலிருந்த தமிழ்நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கோலார் தங்க வயலுக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆரம்ப காலத்தில் சுரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் படுமோசமாக இருந்ததால், விபத்துகளில் பலர் உயிரிழந்தனர்.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கே தங்கம் கிடைப்பது மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. சுரங்க நிறுவனங்களுக்கு நஷ்டங்கள் பதிவாக ஆரம்பித்தன.

இந்தியா சுதந்திரமைடந்து மைசூர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைந்தது. இதற்குப் பிறகு, கே.ஹனுமந்தையா மைசூரின் முதல்வராக இருந்தபோது தங்கச் சுரங்கங்களை தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழ ஆரம்பித்தது. முடிவில் நிஜலிங்கப்பா முதலமைச்சராக இருந்தபோது சுரங்கம் மாநில அரசின் வசம் வந்தது.

கோலார் தங்க வயல்
படக்குறிப்பு, இன்று கோலார் தங்கவயல் பகுதியில் தமிழர்களும் கணிசமான அளவில் வசிக்கிறார்கள்

அரசின் கீழ் வந்த கோலார் தங்கச் சுரங்கம்

1956-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி ஜான் டைலர் அண்ட் கம்பனி, தனது நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைத்தது. ‘Kolar Gold Mining Undertaking’ என்ற பொதுத் துறை நிறுவனமாக சுரங்கம் இயங்க ஆரம்பித்தது.

அப்போது, பல மீட்டர் ஆழத்திற்குச் சுரங்கம் தோண்டப்பட்டு, மிகக் குறைவான அளவுக்கே தங்கம் எடுக்கப்பட்டு வந்தது. கம்பனி பொதுத் துறை நிறுவனமான பிறகு தங்கம் கிடைப்பது இன்னும் குறைந்தது.

1956 முதல் 1962 வரை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமே அங்கிருந்து கிடைத்தது. இனிமேலும் இந்த நிறுவனத்தை நடத்துவதில் லாபமில்லை என்பதை கர்நாடக அரசு உணர்ந்தது. 1972-இல் மத்திய அரசின் சுரங்கத் துறையின் கீழ் பாரத் கோல்ட் மைன்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. கோலார் தங்கச் சுரங்கம் இந்த நிறுவத்தின் கீழ் வந்தது.

ஆனால், தங்கம் கிடைப்பது அரிதாகிக்கொண்டே போனது. கே.ஜி.எஃப்-இன் சாம்பியன் ரீஃப் சுரங்கம் சுமார் 3,200 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுவிட்டது. ஒரு டன் மண்ணுக்கு 14 கிராம் தங்கம் கிடைப்பது குறைந்து, குறைந்து ஒரு டன் மண்ணுக்கு 4 கிராம் தங்கம்தான் கிடைத்தது. வெளிச் சந்தையில் கிடைக்கும் தங்கத்தைவிட, இங்கே அதே அளவு தங்கத்தை எடுக்க பத்து மடங்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருந்தது. 1998-இலேயே நிறுவனத்தின் கையிருப்பு தீர்ந்துவிட்ட நிலையில், 2001-இல் தங்கம் எடுக்கும் பணிகளை நிறுத்த முடிவுசெய்யப்பட்டு, நிறுவனம் மூடப்பட்டது.

இப்போது கோலார், ஒரு சிறு நகரம். ஆனால், சுரங்கம் தீவிரமாக இயங்கிவந்த காலத்தில் அது ஒரு ஆச்சரியகரமான பகுதியாக இருந்தது. 1894-இல் பெங்களூரில் இருந்து கே.ஜி.எஃப்-க்கு மீட்டர் கேஜ் தண்டவாளத்தில் ரயில் விடப்பட்டது. 1902-இல் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சிவசமுத்திரம் அணையிலிருந்து உற்பத்தியான மின்சாரம் வழங்கப்பட்டது.

2001-இல் தான் கோலார் சுரங்கம் மூடப்பட்டது என்றாலும், 1972-இல் மத்திய அரசு சுரங்கத்தைக் கையகப்படுத்தியதிலிருந்தே அந்த நிறுவனம் இழப்பைத்தான் சந்தித்துவந்தது. 1998-இல் சுரங்கங்களை மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தத் தருணத்தில் கே.ஜி.எஃப்-இல் 3,800 பேர் பணியாற்றிவந்தனர் (இரண்டாம் உலகப் போர் காலத்தில் 32,000 பேர் பணியாற்றியனர்). சுரங்கங்களை மூட யூனியன்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தபோதும், 2001-இல் சுரங்கம் மூடப்பட்டது.

அதற்குப் பிறகு அந்தப் பகுதி முழுமையாகக் களையிழந்தது. இங்கிருந்தவர்கள் வேலை தேடி பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர். இப்போது, கோலார் தங்கச் சுரங்கப் பகுதியில் எவ்வித வேலைவாய்ப்பும் கிடையாது. பழைய மூச்சில் வாழும் ஒரு நகரமாக இருக்கிறது கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயல்.

தங்கலான்

பட மூலாதாரம், Neelam Productions/X

படக்குறிப்பு, வரலாற்றில் இருந்த சம்பவங்களை ஒரு தொன்மத்துடன் இணைத்து தங்கலான் உருவாகியிருக்கிறது

தங்கலான் திரைப்படத்தின் கதை எப்படி உருவானது?

தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயலைப் பின்னணியாகக் கொண்டே உருவாகியிருக்கிறது. குறிப்பாக, சுரங்கம் தோண்டுவதற்கு குடியாத்தம் பகுதியிலிருந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வந்தது, பழங்காலச் சுரத்தைக் கண்டுபிடிப்பது போன்றவை வரலாற்றில் இருந்த சம்பவங்கள்தான். அதனை ஒரு தொன்மத்துடன் இணைத்து தங்கலான் உருவாகியிருக்கிறது.

தங்கத்திற்கு லத்தீன் மொழியில் ஆரம் என்ற சொல் வழங்கப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்தே, ஆரன், ஆரத்தி என்ற கடவுள்கள் இந்தப் படத்தில் காண்பிக்கப்படுவதாகச் சொல்கிறார், இந்தப் படத்தின் கதையிலும் வசனத்திலும் பணியாற்றிய எழுத்தாளர் அழகிய பெரியவன்.

"நான் இந்தப் படத்தில் இணைவதற்கு முன்பாகவே, பா.ரஞ்சித்தும் தமிழ் பிரபாவும் இந்தக் கதையை உருவாக்கி வைத்திருந்தார்கள். நான் வசனம் எழுதுவதற்காகத்தான் இந்தப் படத்தில் இணைந்தேன். ஏனென்றால், நான் வட ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவன் என்பதாலும் என்னுடைய தகப்பன்கோடி போன்ற நாவல்களில் வரலாற்றுத் தொடர்போடு இருந்தவை என்பதாலும் இதில் இணைந்துகொண்டேன்,” என்கிறார்.

“திரைக்கதையைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் கிராமத்திலிருந்து வெளியேறும் பகுதிகள், பௌத்தம் சார்ந்த பகுதிகள், தங்க வயல் தொழிலாளர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் போன்ற பகுதிகளில் நான் பணியாற்றினேன்," என பிபிசியிடம் கூறினார் அழகிய பெரியவன்.

 எழுத்தாளர் அழகிய பெரியவன்

பட மூலாதாரம், Facebook/Azhagiya Periyavan

படக்குறிப்பு, எழுத்தாளர் அழகிய பெரியவன்

கோலாரின் வரலாற்றை நேரடியாகச் சொல்லாமல், தொன்மத்துடன் இணைத்துச் சொன்னது ஏன்?

"ஒரு வரலாற்றுக் கதையை நேரடியாகச் சொல்வதைவிட, ஒரு மாயத் தன்மையையும் தொன்மத்தையும் இணைத்துச் சொல்வது இந்தத் தலைமுறைக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என ரஞ்சித் நினைத்தார். அதனால்தான் அப்படி உருவாக்கப்பட்டது," என்கிறார் அழகிய பெரியவன்.

இந்தப் படத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டவை, வசனங்கள்.

"குடியாத்தம் பகுதியில் என்னுடைய உறவினர்கள், என்னுடைய அத்தைகள், பாட்டிகள் பேசிய மொழியைத்தான் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். குறிப்பாக, தங்கலானின் மனைவியாக வருபவர் பேசும் மொழி, அந்த காலகட்டத்தின் துல்லியமான மொழி," என்கிறார் அழகிய பெரியவன்.

தங்கலான் திரைப்படம், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஏழாவது திரைப்படம். இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் இந்திய சுதந்திர தினத்தன்று வெளியாகியுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)