கைபேசிகள் மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய முடியுமா? கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாம் ஊக்
- பதவி, பிபிசி செய்திகள்
முதல் கைபேசி அழைப்பு நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், நமது சட்டைப் பையில் இருக்கும் இந்தக் கையடக்கக் கருவி இப்போது உலகின் மிகப்பெரிய பூகம்பத்தைக் கண்டறியும் அமைப்பை உருவாக்க உதவி வருகிறது.
2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு அசைவு போலத்தான் இருந்தது. ஆனால் அப்பகுதி முழுவதும் வசிப்பவர்களின் அந்த நிலனடுக்கத்தை உணர்ந்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துக்குத் தகவல் அனுப்பினர். சேதம் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் உள்ள பலர் தங்கள் தொலைபேசிகளில் எச்சரிக்கைச் செய்திகளைப் பெற்றனர்.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை கலிஃபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் நகருக்கு தெற்கே மையம் கொண்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பும் இதே போன்ற எச்சரிக்கைகள் தெற்கு கலிபோர்னியாவில் வசிப்பவர்களுக்கு கைபேசிகளில் வந்தன.
இன்னும் முக்கியமாக, இந்தக் கைபேசிகள் பல பூகம்பங்களை முதலில் கண்டறிய உதவின.
நிலநடுக்கம் வருவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு பயனர்களை எச்சரிக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்க, கலிஃபோர்னியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், மற்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துடன் கூகுள் நிறுவனம் பணி செய்து வருகிறது.
இது சில வினாடிகள் முன்கூட்டிய எச்சரிக்கை தான், ஆனால் ஒரு நிலநடுக்கத்தின் போது சில வினாடிகளில் ஒரு மேஜையின் கீழ் சென்று நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இது போதுமான நேரத்தை அளிக்கும். ரயில்களின் வேகத்தைக் குறைக்கவும், விமானங்கள் புறப்படுவதை அல்லது தரையிறங்குவதை நிறுத்தவும், பாலங்கள் அல்லது சுரங்கங்களில் கார்கள் நுழைவதைத் தடுக்கவும் இது போதுமான நேரமாகும்.
எனவே, வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படும் போது இந்த அமைப்பு உயிர்களைக் காப்பாற்றும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
இது எப்படிச் செயல்படுகிறது?
இது இரண்டு தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம், மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் நில அதிர்வு நிபுணர்களால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 நில அதிர்வு அளக்கும் கருவிகளின் வலைப்பின்னலை நம்பியிருந்தது. இவை பூமி அதிர்வுகளைக் கண்டறியும் சாதனங்கள் மூலம் பெறப்படும் தரவுகள்.
ஆனால் கூகுள் நிறுவனம், பொதுமக்களுக்குச் சொந்தமான கைபேசிகள் மூலம் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது.
கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் முடுக்க மானிகள் (ஆக்சலெரோமீட்டர்கள் - accelerometers) உள்ளன. இது ஒரு கைப்லைபேசி நகர்த்தப்படும் போது அதைக் கண்டறியும் அமைப்பு. கைபேசி சாய்ந்திருக்கும் போது, போர்ட்ரெய்ட் மோடில் இருந்து லேண்ட்ஸ்கேப் மோடுக்கு மாற இது பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் ‘ஃபிட்னஸ் டிராக்க’ருக்கான தகவலை வழங்கவும் இது உதவுகிறது.
மேலும், ரேடியோ சிக்னல்கள் நில அதிர்வு அலைகளை விட வேகமாகப் பயணிப்பதால், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து விலகி இருக்கும் பகுதிகளில், நிலநடுக்கம் தொடங்கும் முன்பே எச்சரிக்கைகள் வந்து சேரும்.
ஆண்ட்ராய்டில் உள்ள மென்பொருள் பொறியாளர் மார்க் ஸ்டோகைடிஸ் இதைப் பற்றி கூறுகையில், "நாங்கள் அடிப்படையில் ஒளியின் வேகத்தை (தொலைபேசியில் இருந்து வரும் சமிக்ஞைகளின் வேகம்) பூகம்பத்தின் வேகத்திற்கு எதிராக ஓட்டுகிறோம். மேலும் எங்களக்து அதிர்ஷ்டம், ஒளியின் வேகம் மிக வேகமாக உள்ளது!" என்கிறார்.
பெரும்பாலான தரவுகள் மக்களிடமிருந்து பெறப்படுவதால், விலையுயர்ந்த நில அதிர்வு அளவீடுகளின் விரிவான நெட்வொர்க்குகள் இல்லாத பகுதிகளில் பூகம்பங்களைக் கண்காணிப்பதற்கான சாத்தியத்தை இந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது. இது உலகின் தொலைதூர மற்றும் ஏழ்மையான பகுதிகளில் கூட பூகம்ப எச்சரிக்கைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
என்ன சிக்கல்?
2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நில அதிர்வு அலைகள் மையப்பகுதியிலிருந்து பயணித்தபோது, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி முழுவதும் உள்ள தொலைபேசிகள் பூகம்ப எச்சரிக்கைத் தரவுகளுடன் ஒளிர்வதை கூகுள்-இன் பொறியாளர்கள் கண்டனர்.
இந்த அமைப்பு இப்போது இந்த நில அதிர்வுகளைக் கண்டறிகிறது. பின்னர் அவை உச்ச வரம்புகளைக் கடக்கும்போது அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் ‘ஷேக்அலர்ட் செயலி’ மூலம் எச்சரிக்கைச் செய்திகளாக வழங்கப்படுகின்றன. இது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பயனர்களின் மொபைல் ஃபோன்களில் எச்சரிக்கைச் செய்திகளை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த எச்சரிக்கைச் செய்திகளைப் பெறமுடியும். இது பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது பயனர்களின் மொபைல் போன்கள் நிலையாக இருக்கும் போது அவற்றை நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவிகளாக மாற்றி, அதன் தொலைபேசியின் இருப்பிடத்தின் அடிப்படையில் எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகிறது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கங்கள் பொதுவான நிகழ்வாகும். அங்கு ஒரு நாளைக்கு 100 சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்குச் சிறியவை. இருப்பினும், கலிபோர்னியாவில் பொதுவாக வருடத்திற்கு பல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ரிக்டர் அளவு 4.0-க்கு மேல் 15-20 நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.
இன்னும் பரவலாக, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 1,600 கோடி மொபைல் போன்களில், 300 கோடிக்கும் அதிகமானவை ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குகின்றன. இவற்றில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கைபேசிகளில் இந்த எச்சரிக்கை அமைப்பு இருக்கிறது.
ஆனால் இந்த அமைப்புக்கும் வரம்புகள் உள்ளன. குறிப்பாக, குறைவாகவே கைபேசி பயன்படுத்துபவர்கள் உள்ள தொலைதூரப் கடலோரப் பகுதிகளில் சுனாமிகளைத் தூண்டக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம். அங்கு இந்த எச்சரிக்கை அமைப்பு வேலைசெய்யப் போதுமான தரவுகள் கிடைப்பது கடினம். நிலநடுக்கத்துக்குச் சில வினாடிகளுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வெளியிட இது உதவும் என்றாலும், அவை நிகழும் முன்னரே கணிக்கும் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












