'கொல்கத்தா போல சென்னையிலும் நடக்கலாம்' - தமிழக மருத்துவ மாணவிகள் கூறுவது என்ன?

சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
படக்குறிப்பு, சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"மேற்கு வங்க சம்பவம் எங்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்துக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது. நாங்கள் இதுவரை பாதுகாப்பாக உணர்ந்த இடமே தற்போது அச்சமூட்டுகிறது" என்கிறார், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி கமலிகா.

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவ மாணவி இறந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தின் போது, பிபிசி தமிழிடம் இவ்வாறு கமலிகா தெரிவித்தார்.

மருத்துவர்களைப் பாதுகாக்க தேசிய மருத்துவர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரக் கோரியும் கொல்கத்தா மாணவி மரணத்துக்கு நீதி கேட்டும் இந்திய மருத்துவர் சங்கம், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர், சனிக்கிழமையன்று (ஆக 17) மருத்துவப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.

இதை ஏற்று, 'தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு 24 மணிநேரம் இயங்காது' என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியானது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிண்டி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பதாகைகளை ஏந்தியபடி மருத்துவ மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
படக்குறிப்பு, மருத்துவக் கல்லூரி மாணவி வர்ஷினி

'கடுமையான தண்டனைகள் வேண்டும்'

போராட்டத்தின்போது, பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி வர்ஷினி, "மாணவி கொல்லப்பட்ட வழக்கில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இந்த வழக்கு சிபிஐ-க்கு ஒப்படைக்கப்பட்டதை வரவேற்கிறோம். தண்டனை கடுமையாக இருந்தால்தான் மற்றவர்கள் தவறு செய்ய அச்சப்படுவார்கள்" என்றார்.

சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
படக்குறிப்பு, மருத்துவ மாணவி கமலிகா

எங்கள் உயிரை யார் காப்பாற்றுவார்கள்?

பிபிசி தமிழிடம் பேசிய மாணவி கமலிகா, "நாங்கள் அவ்வளவு எளிதாக இந்தத் துறைக்கு வரவில்லை. கொல்கத்தா சம்பவத்தை தேசிய நிகழ்வாகப் பார்க்க வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் கோவையிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு மாணவி ஆளாகியுள்ளார். அதேபோன்று இங்கும் நடப்பதற்கு நேரம் ஆகாது" என்கிறார்.

"கொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு, மனித நேயத்துடன் இங்கு கூடியிருக்கிறோம். மக்கள் உயிரை நாங்கள் காப்பாற்றுகிறோம். எங்கள் உயிரை யார் காப்பாற்றுவார்கள்?

உங்கள் வீட்டில் மனைவி, சகோதரி, தாயாராக இருந்தால் எப்படிக் காப்பாற்றுவீர்களோ, அவ்வாறு எங்களையும் மக்கள் பாதுகாக்க வேண்டும்" என்கிறார் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவி சுபேதா.

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சொல்வது என்ன?

இதுதொடர்பாக, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலாஜி கூறுகையில், "காவல்துறை பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு என அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் இனிவரும் காலத்தில் மேம்படுத்தப்படும். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இன்னும் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

'மருத்துவ சேவையில் பாதிப்பில்லை'

சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்
படக்குறிப்பு, சென்னையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

"மருத்துவ மாணவர்களுக்குப் பாதுகாப்பு கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். மக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் போராட்டம் நடந்தது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார், இந்திய மருத்துவர் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் மருத்துவர் சந்திரசேகர்.

"மாணவர்கள் போராட்டத்தால் மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை" என்கிறார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன்.

கொல்கத்தாவில் என்ன நடந்தது?

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 'கொல்கத்தாவை போன்ற சம்பவம் நாட்டில் வேறு எங்கும் நடந்துவிடக் கூடாது' என்பதை மையமாக வைத்து நாடெங்கிலும் மருத்துவ மாணவர்கள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் பணிப் பாதுகாப்புக்கு உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்பதைப் போராட்டத்தின் மையக்கருவாக அவர்கள் முன்வைத்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)