செயலிழந்த கைகளுக்கு புத்துயிர் தரும் 'எலெக்ட்ரிக் பல்ஸ்' சிகிச்சை

பட மூலாதாரம், BBC News/Tony Jolliffe
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை சவாரி செய்தபோது மெலனி ரீட்-க்கு ஏற்பட்ட விபத்தில் அவருடைய கழுத்துப் பகுதி பாதிக்கப்பட்டது. இதனால், அவருடைய இடது கை தன் செயல்பாட்டை இழந்தது.
ஆனால், இப்போது அவர் தனது இடது கையால் ஸ்மார்ட்போனை மீண்டும் பயன்படுத்த முடிகிறது, அவரது சீட் பெல்ட்டைக் கட்ட முடிகிறது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன சிகிச்சையால் இது சாத்தியமாகியிருக்கிறது.
பிசியோதெரபியுடன் எலெக்ட்ரிக் பல்ஸ்-ஐ (மின்னோட்ட துடிப்புகள்) பயன்படுத்தி மேம்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதன் மூலம், அவரால் தனது கையை அசைக்க முடிகிறது.
இந்த சிகிச்சையானது 60 நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் அளிக்கப்பட்டது, அவர்களில் 43 பேருக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர்களின் கைகளிலும் உள்ளங்கைகளிலும் அசைவுகள் காணப்பட்டன. அவர்களால் இப்போது தங்கள் கைகளை தாங்களாகவே நகர்த்த முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இத்தகைய சிகிச்சை முறையை உருவாக்கிய குழு, அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த முறையைப் பயன்படுத்த அனுமதிக்க கோரி விண்ணப்பித்துள்ளது.
பாதிக்கப்பட்ட உடல் பகுதியைச் சுற்றி மின்முனைகளை இணைப்பதன் மூலம் இது செயல்படுகிறது.
நரம்புகள் மற்றும் சமிக்ஞைகள் மூலம் உயர் அதிர்வெண் கொண்ட மின் கற்றைகள் நம் கைகளுக்கு தூண்டுதல்களை அனுப்ப மூளையைத் தூண்டுகின்றன.
மெலனியின் விஷயத்தில், கழுத்து மற்றும் முதுகில் ஏற்பட்ட காயங்களால், அவரது மூளையில் இருந்து கைக்கு வரும் சமிக்ஞைகள் நின்றுவிட்டன.
"முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது"

பட மூலாதாரம், Getty Images
67 வயதான மெலனி, டைம்ஸ் ஆஃப் லண்டனில் பத்திரிகையாளராக உள்ளார். இந்த புதிய சிகிச்சை முறையை முயற்சித்த நோயாளிகளில் இவரும் ஒருவர்.
இந்த சிகிச்சைக்கு முன், அவரது கைகள் மற்றும் உள்ளங்கைகள் அசையவே இல்லை.
குறிப்பாக இடது கையை அசைக்கவே முடியவில்லை.
பிசியோதெரபியுடன், இரண்டு மாதங்களுக்கு எலெக்ட்ரிக் பல்ஸ் சிகிச்சையையும் மேற்கொண்டார்.
இந்த சிகிச்சையானது தனது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக மெலனி கூறினார்.
“எனது இடது கையின் கட்டை விரலால் சீட் பெல்ட்டை கழற்ற முடிந்தது. இப்போது நான் ஒரு கோப்பை காபியை என் கையால் பிடிக்க முடியும். கொதிக்கும் உலையில் அரிசியை போடுவது போன்ற சிறிய வேலைகளை என்னால் செய்ய முடிகிறது” என்றார்.
"இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்ட சில மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுகிறது," என்று ஆராய்ச்சி குழுவில் ஒருவரான லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை பேராசிரியரான ராபர்ட் பிரவுன்ஸ்டோன் கூறினார்.
"இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது"

பட மூலாதாரம், BBC News
எலெக்ட்ரானிக் பல்ஸ் இயக்கத்தில் இருக்கும் போது தன் முகத்தில் தண்ணீரைத் துடைப்பது, பொருட்களைத் தானே தூக்குவது போன்றவற்றை தன்னால் செய்ய முடியும் என்கிறார் மெலனி.
இந்த சிகிச்சை பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மெலனி நம்புகிறார்.
“எனக்கு மின் தூண்டுதலால் இந்த முன்னேற்றம் கிடைத்தது என்று சொல்ல முடியாது. ஆனால், இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
"முதுகு உடைந்த பிறகு எந்த அற்புதமும் நிகழவில்லை. ஆனால், இந்தச் சாதனத்தின் உதவியால், கையால் உணவு உண்ணவும், தண்ணீரைக் குடிக்கவும் முடிகிறது. அதைவிட சிறப்பானது வேறு என்ன இருக்க முடியும்?’’ என்கிறார் மெலனி.
எலெக்ட்ரானிக் பல்ஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி, முதுகில் முன்பு ஏற்பட்ட காயங்களால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நடக்க முடிந்தது.
இந்த சிகிச்சைக்குப் பிறகு முதுகுத் தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.
1 முதல் 34 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான, எவ்வித முன்னேற்றமும் இல்லாத அல்லது சிறிய முன்னேற்றம் மட்டுமே உள்ள நோயாளிகள் இந்த சிகிச்சை மற்றும் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு காயம் அடைந்த மெலனிக்கு மர்ல் பர்செல் சிகிச்சை அளித்து வருகிறார்.
மரில் பர்செல், கிளாஸ்கோவிலுள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் முதுகுத் தண்டு சிகிச்சையில் புதுமைக்கான ஸ்காட்டிஷ் மையத்தின் ஆராய்ச்சி இயக்குநராக உள்ளார்.
இத்துறையில் உலகின் முன்னணி ஆராய்ச்சி மையம் இது என்பதால் அவரது பிரிவும் ஆய்வில் ஈடுபட்டது.
எல்லோராலும் பயன்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
நீண்ட கால காயம் உள்ள ஒருவருக்கு இந்த முன்னேற்றத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.
இது லொசானில் உள்ள EPFL மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகத்தின் பேராசிரியர் கிரிகோயர் கோர்டின் தலைமையிலான சுவிட்சர்லாந்தை சேர்ந்த குழுவால் புதிதாக உருவாக்கப்பட்ட சாதனமாகும்.
இதுவரை முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 26 பேரின் முதுகைத் தூண்டும் வகையில், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் மீண்டும் நடக்க உதவியிருக்கிறார்கள்.
கழுத்து எலும்பு முறிவு காரணமாக கை அசைவுகளை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆய்வுக் குழு மேற்கொண்ட முதல் முயற்சியே இந்த புதிய சிகிச்சை முறையாகும்.
மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட சான்றுகளின்படி, பிசியோதெரபியுடன் மின் தூண்டுதல் சிகிச்சையானது சேதமடைந்த நரம்புகளை சிறிது சரிசெய்ய முடியும் என்று பேராசிரியர் கோர்டின் தெரிவித்தார்.
"இது போன்ற நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வின் தரவை மதிப்பாய்வு செய்துவருகிறது. இந்த நடைமுறை பாதுகாப்பானதா என அந்த அமைப்பு மதிப்பாய்வு செய்கிறது.
ஒழுங்குமுறை அமைப்பு இந்த அணுகுமுறையில் திருப்தி அடைந்தால், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மருத்துவ சாதனம் உரிமம் பெறும்.
அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டால், இந்த தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள குழு உலகின் பிற பகுதிகளில் அதைப் பயன்படுத்துவதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












