ரூ.5 கோடி நகை கொள்ளை: 2,000 சிசிடிவி காட்சிகளை சேகரித்து துப்பு துலக்கியது எப்படி?

"பொதுவாக சில வழக்குகளில் தங்கம் கொள்ளை போனதாக சிலர் நாடகம் ஆடுவார்கள். ஆனால், இது உண்மையாகவே நடந்த கொள்ளையாக இருந்தது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை 48 மணிநேரத்தில் நெருங்கிவிட்டோம்"
விழுப்புரத்தில் மார்ச் 3 ஆம் தேதி நான்கு கிலோ தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி சாய் பிரணீத் பிபிசி தமிழிடம் இவ்வாறு தெரிவித்தார்.
கொள்ளை போன நான்கு கிலோ தங்க நகைகளும் 3 லட்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுவிட்டதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்க நகைகளின் இன்றைய சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தங்கக் கொள்ளை விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் பிடிபட்டது எப்படி?
4 கிலோ தங்க நகைகள் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் விராட்டிகுப்பத்தில் உள்ள பாதை கனகராஜ் கார்டனில் வசிக்கும் ராஜமாணிக்கம், தங்க ஆபரணங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தனது வீட்டிலேயே சுமார் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து தங்கக் கம்மல், தங்க மோதிரம் ஆகியவற்றைத் தயார் செய்து சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களுக்கு விற்பனைக்குக் கொடுப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளது.
"ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் நகைகளை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு சென்று வந்துள்ளார். இதை நன்கு அறிந்த கும்பல்தான் அவரிடம் இருந்து நகைகளை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளது" எனக் கூறுகிறார், விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
கடந்த 3 ஆம் தேதி சுமார் 4 கிலோ எடையுள்ள நகைகளை லேப்டாப் பையில் எடுத்துக் கொண்டு ராஜமாணிக்கம் சென்னைக்குக் கிளம்பியுள்ளார். விழுப்புரம் ரயில் நிலையம் வரை செல்வதற்கு தனது கடையில் பணிபுரியும் முரளி என்ற நபரை இருசக்கர வாகனத்தில் அவர் அழைத்துச் சென்றுள்ளார்.
கோட்டை விநாயகர் கோவில் எதிரில் காலை சுமார் 11.15 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், ராஜமாணிக்கம் சென்ற வாகனத்தின் மீது மோதுவதுபோல நெருங்கி சென்றுள்ளனர். பின்னர், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகைப் பையைப் பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டதாக காவல்துறையில் ராஜமாணிக்கம் புகார் அளித்தார்.
'ஆட்களைக் கண்டறிவதில் சிரமம்'

"அவர்கள் வந்த வாகனங்களின் எண்களைக் கண்டறிய முடியவில்லை. வாகனத்தின் ஒரு நம்பர் பிளேட்டை மடக்கி வைத்துள்ளனர். அதனால் அங்கு வந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது" என்கிறார், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
நான்கு கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து மாவட்ட எஸ்.பி சாய்பிரணீத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் குப்தா உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, மூன்று காவல் ஆய்வாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"ராஜமாணிக்கம் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை சம்பவம் நடந்த அன்று காலை 11 மணியளவில் சிலர் பின்தொடர்ந்துள்ளனர். 11.15 மணியளவில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்" என்கிறார், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
"முகமூடி அணிந்தும் முகத்தை கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தும் சிலர் கொள்ளையில் ஈடுபட்டதால் ஆள் யார் என்று அடையாளம் கண்டறிய முடியவில்லை. அதனால் கொள்ளை சம்பவத்துக்கு முன்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்வது என முடிவு செய்தோம்" என்கிறார் அவர்.
'2 ஆயிரம் சிசிடிவி காட்சிகள்'

இதற்காக தனிப்படை போலீசார் ஏராளமான கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்துள்ளனர். "அந்தவகையில், கிராமம், நகரம் என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளை சேகரித்தோம்" என்கிறார், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே முக்கிய ஆதாரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி காவல்துறை உதவி
தொடர்ந்து, புதுச்சேரி மாநில காவல்துறையின் உதவியை விழுப்புரம் போலீஸார் நாடியுள்ளனர். "புதுச்சேரியில் இருந்து அந்த கும்பல் கிளம்பியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண முடிந்தது" என்கிறார், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
"கண்காணிப்பு கேமரா காட்சிகள், பழைய குற்றவாளிகளின் விவரங்கள், பாண்டிச்சேரியில் அவர்கள் மீதான குற்ற வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தங்கக் கொள்ளை வழக்கில் குற்றத்தில் ஈடுபட்டவர்களை நெருங்கினோம்" என்கிறார் மாவட்ட எஸ்.பி சாய்பிரணீத்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி, சேலம், கோவை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று விழுப்புரம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். "இதில் சில விவரங்கள் பொருந்திப் போனதால் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய முடிந்தது" எனவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.
"புதுச்சேரி மாநில போலீஸாரிடம் விசாரித்தபோது சிலரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தன. அவர்களில் சிலர் மீது புதுச்சேரியில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், அவர்கள் மீது விழுப்புரத்தில் எந்த வழக்குகளும் பதிவாகவில்லை" என்கிறார் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
நகரம், கிராமங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை எளிதில் அடையாளம் காண முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல் கொடுத்த 'முகம் தெரியாத நபர்' யார்?

தங்கம் கொள்ளை வழக்கில் புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் கொள்ளையடித்த 4 கிலோ தங்க நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தங்கக் கொள்ளை வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அவர் விவரித்தார்.
"நகைகயைப் பறிகொடுத்த ராஜமாணிக்கத்துக்கு நன்கு அறிந்த நபர் அளித்த தகவலின் பேரில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், தகவல் கொடுத்த நபரின் முகத்தைப் பார்த்ததில்லை. அந்த நபரையும் கைது செய்ய உள்ளோம்" என்கிறார் அவர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சாய்பிரணீத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "பொதுவாக சில வழக்குகளில் தங்கம் கொள்ளை போனதாக சிலர் நாடகம் ஆடுவார்கள். இது உண்மையாகவே நடந்த கொள்ளையாக இருந்தது" எனக் கூறுகிறார் அவர்.
கொள்ளைச் சம்பவத்தில் 48 மணிநேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்டவர்களை நெருங்கிவிட்டதாகக் கூறிய அவர், " அதிகளவு தங்கம் கொள்ளையடிக்கப்பட்டும் தொடக்கத்தில் ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முடிந்தது" என்கிறார்.

காவல்துறை அறிவுறுத்தல்
விழுப்புரம் சம்பவத்துக்குப் பிறகு ரயில் மற்றும் பேருந்துகளில் அதிகளவில் தங்கம் கொண்டு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சில அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது.
"தங்கத்தைப் பாதுகாப்பாக கொண்டு செல்லுமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். முன்கூட்டியே காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தால் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு கொடுக்க முடியும்" என்கிறார், விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி.
"அதிகளவில் நகைகள் இருந்தால் காரில் கொண்டு செல்லலாம். இதுதொடர்பாக தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், பலரும் அதைக் கேட்பதில்லை" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












