கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி - பதவிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக, பெங்களூருவில் இருந்து
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) மூலம் தனது மனைவி பார்வதிக்கு முறைகேடாக இடம் ஒதுக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வெளியான உடனே, சித்தராமையா அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார்.
ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் உயர் மேலிடத்திடம் அவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, 'முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கட்சி, அமைச்சரவை மற்றும் முழு அரசாங்கமும் எனக்கு துணையாக உள்ளன. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்கள் அரசை சீர்குலைப்பதற்கான அரசியல் சதி' என்றார்.
சுரங்க வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பிறகு ஒன்றிய அமைச்சரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, பாஜக தலைவர்கள் சசிகலா ஜோல் மற்றும் ஜனார்தன் ரெட்டி ஆகியோர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி வழங்காததை சித்தராமையா சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார், "இதை காங்கிரஸ் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து போராடும். ஒட்டுமொத்த அமைச்சரவையும், கட்சியும் முதலமைச்சருக்கு துணையாக நிற்கின்றன. அவர் எனது முதல் அமைச்சர். அவரது ராஜினாமா பற்றிய கேள்வியே எழவில்லை. அவர் தான் எனது முதலமைச்சராக தொடர்வார். கர்நாடக மாநில மக்கள் விரும்பியபடி எங்கள் சேவையை தொடர்வோம்" என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
"பாஜக இந்த அரசை சீர்குலைக்க முயற்சிக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் என்று கூறுகின்றனர். இது அரசியல் சூழ்ச்சி. பாஜக ஆளுநரை தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என மேலும் அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத், பிபிசி இந்தியிடம் பேசிய போது, "இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஏழைகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்ததற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அவர்கள் துன்புறுத்துகின்றனர்" என கூறினார்.
பிரதீப்குமார், டி.ஜே.ஆபிரகாம் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகிய மூன்று புகார்தாரர்களுக்கும் ஆளுநரின் சிறப்புச் செயலர் எழுதியுள்ள கடிதத்தில், "பாரதிய நாகரிகா சுரக்ஷா சம்ஹிதா 2023ன் பிரிவு 17ன் கீழ், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரிய மனு மீதான முடிவின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.
"கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமாக கேசர் என்ற கிராமத்தில் இருந்த 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. அதற்கு ஈடாக, விஜயநகர லேஅவுட்டில் அதிக மதிப்புள்ள 14 இடங்களை பார்வதிக்கு அளித்துள்ளது." என்பதே புகார் ஆகும்.
"மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்திய நிலங்களின் உரிமையாளர்கள் பலரும் 50:50 திட்டத்தின் கீழ் இதேபோன்ற நிவாரணத்தைப் பெற்றுள்ளனர். 50:50 திட்டம் என்பது உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டது ஆகும். இதில் எந்த தவறும் நடக்கவில்லை" என்பது முதல்வரின் வாதம்.
முக்கிய புகார்தாரரான டி.ஜே. ஆபிரகாம், இந்த மோசடியால் அரசுக்கு ரூ.44 .64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். "முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வழி பிறந்துள்ளது(ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால்). இதற்கு சிபிஐ விசாரணை கேட்பதா, இல்லையா என்பதை இனிதான் முடிவெடுக்க வேண்டும்" என பிபிசி இந்தியிடம் கூறியுள்ளார்.
2010ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா மீதும் வழக்குத் தொடர ஆபிரகாம் இதேபோல் அனுமதி பெற்றிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆளுநர் ஒப்புதல் வழங்கியது ஏன்?
சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை (ShowCauseNotice) திரும்பப் பெறுமாறு ஆளுநரை வலியுறுத்தி கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஆளுநர் கெலாட்டிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
"சித்தராமையா ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட அவரது அமைச்சரவையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராகவே வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது. நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் என்ற அமைச்சரவையின் ஆலோசனை அதனை ஏற்றுச் செயல்படத்தக்க வகையில் நம்பிக்கை தருவதாக இல்லை" என்று ஆளுநரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தருணங்களில் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட வேண்டியதில்லை என்று ஆளுநர் கருதுகிறார். 2004-ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவல்துறை vs மத்திய பிரதேச அரசு வழக்கில், பிரத்யேக தருணங்களில் ஆளுநருக்குள்ள தனிப்பட்ட அதிகாரங்கள் குறித்து நன்கு விவாதிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் கருதுகிறார்.
ஒரே விஷயத்தில் முதல்வர் சித்தராமையாவின் பதிலும், சட்ட ஆலோசனையுடன் கூடிய அமைச்சரவையின் அறிவுறுத்தலும் வேறுபடுவதை ஆளுநர் கண்டறிந்துள்ளார். மேலும், இதுகுறித்து விசாரிக்க முதலில் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்த மாநில அரசு, பின்னர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்ததையும் அவர் கவனத்தில் கொண்டுள்ளார்.
"நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். குற்றச்சாட்டும், அதற்காக முன்வைக்கப்படும் ஆதாரங்களும் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக எண்ணுகிறேன்.'' என ஆளுநர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
"ஆகவே முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 218ன் கீழ் மனுக்களில் (ஆபிரகாம், பிரதீப் குமார் மற்றும் சினேமயி கிருஷ்ணா) குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தை விசாரிக்க ஒப்புதல் அளிக்கிறேன்,'' என்று ஆளுநர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்கொள்ள தயாராகும் காங்கிரஸ்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, அமைப்புச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சித்தராமையாவும், சிவக்குமாரும் கடந்த மாதம் சந்தித்துப் பேசினர். அப்போதே, இந்த விவகாரத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருவது தெரியவந்தது.
அந்த சந்திப்புக்குப் பிறகு பிபிசி இந்தியிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "பாஜகவின் சதிக்கு எதிராக தீவிரமாக போராட வேண்டும்" என்று கட்சி மேலிடம் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
இன்று சிவகுமார் பேசிய செய்தியாளர் சந்திப்பில், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளுநரின் இந்த ஒப்புதலை, "சட்டவிரோதமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ராஜ் பவனை ஆளுநர் பயன்படுத்திக் கொள்கிறார். கர்நாடகாவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து சித்தராமையா கேள்வி எழுப்பியதன் விளைவாகவே, ஆளுநரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வரி, எங்கள் உரிமை என்ற முழக்கத்தை சித்தராமையா முன்னெடுத்தார்" என்று கர்நாடக சட்ட அமைச்சர் எச்.கே . பாட்டில் கூறினார்.
ஆளுநரின் உத்தரவு எந்த வகையில் முறையற்றது என்பதற்கு அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா விளக்கம் அளித்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A வின் கீழ் புகார்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து 2021-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.
அதன்படி, ஒரு முதல்வர் அல்லது மத்திய அமைச்சர் மீது வழக்குத் தொடர டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு காவல் அதிகாரிதான் அனுமதி கோர வேண்டும் என்றார் அவர். ''இந்த வழக்கில் எந்த காவல் அதிகாரி அல்லது டிஜிபி வழக்குத் தொடர அனுமதி கோரினார்,'' என்று அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ்தான் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர்கள் சசிகலா ஜொல்லே, முருகேஷ் நிரன் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












