இந்தியா திரும்பிய வினேஷ் போகாட் - எதிர்கால திட்டம் பற்றி என்ன பேசினார்?

வினேஷ் போகாட்
படக்குறிப்பு, வினேஷ் போகாட் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பியுள்ளார். வினேஷ் போகாட், காலை 11 மணியளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில், ஹரியாணா காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான தீபேந்தர் ஹூடா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருடன் வினேஷ் போகாட்டை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வினேஷ் போகாட், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தார். தன்னை வரவேற்க வந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

வினேஷ் போகாட் கூறுகையில், “ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிக்க நன்றி. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” எனத் தெரிவித்தார்.

வினேஷை வரவேற்க வந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், “வினேஷ் நாட்டுக்காகச் செய்ததை வெகு சிலரே செய்ய முடியும். வினேஷ்க்கு அதிகபட்ச மரியாதை கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். இந்திய அரசு அவருக்கு முழு ஆதரவை வழங்கியது” என்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வினேஷ் போகாட்
படக்குறிப்பு, இந்தியா வந்தடைந்தார் வினேஷ் போகாட்

விமான நிலையத்தில் இருந்த வினேஷின் சகோதரர் ஹரிந்தர் புனியா, “வினேஷை வரவேற்க மக்கள் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். கிராமத்தினர் மற்றும் ஹரியாணா மக்கள் வினேஷை சந்திப்பதில் உற்சாகமாக உள்ளனர். கிராமத்தில் வினேஷை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன" எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, வினேஷ் அடைய நினைத்த மைல்கல்லை அவரால் அடைய முடியவில்லை. பதக்கம் கிடைக்காத வருத்தம் அவருக்கு எப்போதும் இருக்கும். வருத்தமாக இருந்தாலும் எங்களின் தைரியம் குறையவில்லை. என்றாவது ஒருநாள் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வோம் என நம்புகிறோம்" என்றார்.

முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 14) தள்ளுபடி செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து அவர், ஆகஸ்ட் 16 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். மூன்று-பக்கங்கள் உள்ள உணர்வுபூர்வமான அந்த அறிக்கையில், தனது குடும்பத்தார், மருத்துவர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அதில், “எனக்குப் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், அதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை. சரியான நேரத்தில் நான் மீண்டும் பேசுவேன் என நினைக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

வினேஷ் போகாட், ஒலிம்பிக், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

“ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு மற்றும் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை நானும் எனது அணியினரும் எங்களது முயற்சிகளைக் கைவிடவில்லை. நாங்கள் சாதிக்க நினைத்ததை எங்களால் சாதிக்க முடியவில்லை. அது எப்போதும் ஒரு குறையாகவே இருக்கும்.

வேறு வகையான சூழ்நிலைகளில், நான் 2032 வரை விளையாடியிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்குள் போராட்ட குணமும் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும்,” என்று அவ்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.

“எதிர்காலம் எனக்காக என்ன வைத்துள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், நான் எதை நம்புகிறேனோ அதற்காகவும் சரியான காரியத்துக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்,” என்றும் தெரிவித்திருந்தார்.

விளையாட்டுக்கான நடுவர் மன்றம் கூறியது என்ன?

ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி என்ற நிலையில், அன்றைய தினம் காலையில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்தார்.

இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவரால் இறுதிப்போட்டிக்கு பங்கேற்க முடியாமல் போயிற்று. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதன் மீதான தீர்ப்பை இருமுறை ஒத்திவைத்த நடுவர் மன்றம், கடைசியாக நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் வரும் 16-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், திடீரென இன்றைய தினம் விளையாட்டுக்கான நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

வினேஷ் போகாட்டின் மேல் முறையீட்டை நிராகரிப்பதாக நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், "ஆகஸ்ட் 7-ஆம் தேதி வினேஷ் போகாட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது," என்று கூறப்பட்டிருப்பதாக ஸ்போர்ட்ஸ்டார் இணையம் கூறுகிறது.

வினேஷ் போகாட், ஒலிம்பிக், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

வினேஷ் மேல் முறையீட்டில் நடந்தது என்ன?

தனது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம் வினேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வினேஷ் கூறியிருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, வினேஷின் சட்டக் குழுவில் பிரெஞ்சு வழக்கறிஞர்கள் ஜோயல் மோன்லூயிஸ், எஸ்டெல் இவனோவா, ஹபைன் எஸ்டெல் கிம் மற்றும் சார்லஸ் ஆம்சன் ஆகியோர் இருந்தனர். இது பாரிஸ் ஒலிம்பிக் குழுவால் வழங்கப்பட்ட சட்ட உதவிக் குழுவாகும்.

இந்த வழக்கில் அவருக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக நியமிக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

வினேஷின் 100 கிராம் கூடுதல் எடை என்பது அவர் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் கூடிய எடை தானே தவிர, அவர் மோசடி செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் வாதிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

வினேஷ் போகாட், ஒலிம்பிக்,இந்தியா

பட மூலாதாரம், Getty Images

பாரிஸ் ஒலிம்பிக்கில் நடந்தது என்ன?

வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது, அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், முதல் நாளில் அவர் பெற்ற அடுத்தடுத்த மூன்று வெற்றிகள்.

குறிப்பாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் மல்யுத்த வீராங்கனை யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்திருந்தார்.

சுசாகி நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருப்பவர். சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் அதுவரை தோல்வியையே சந்திக்காதவராக அவர் வலம் வந்தார்.

அவரது சாதனைகளை பார்க்கும் போது, ​​பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை உணர முடியும்.

அதைத் தொடர்ந்து காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோனையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிக எடையுடன் இருந்தார் என்ற காரணத்திற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகாட் செய்த மேல் முறையீட்டை விளையாட்டிற்கான நடுவர் மன்றம் நிராகரித்திருப்பதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)