கோலாகலமாக நிறைவடைந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

பட மூலாதாரம், Reuters
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது.
ஒலிம்பிக் 2024இன் நிறைவு விழா பாரிஸ் நகர மைதானத்தில் நள்ளிரவு 12.30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் (Billie Eilish), ஸ்னூப் டாக் (Snoop Dogg) மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (Red Hot Chili Peppers) கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு, தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.
இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

பட மூலாதாரம், Getty Images
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.
20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.
இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.
- பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் பெற்ற 2 வெண்கலங்கள்
- ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசாலே பெற்ற 1 வெண்கலம்
- ஆண்கள் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெண்கலம்
- ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பெற்ற வெள்ளிப் பதக்கம்
- ஆண்களுக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் பெற்ற வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020இல், இந்தியா ஏழு பதக்கங்களுடன் (அதில் ஒன்று தங்கம்) பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டுக்கு, இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 100 கிராம் எடை அதிகரித்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அவரது மேல்முறையீட்டு மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை முடிவு வினேஷுக்கு சாதகமாக வந்தால் இந்தியாவுக்கு ஏழு பதக்கங்கள் கிடைக்கும்.
வினேஷ் போகாட் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் ஒரு தங்கப் பதக்கத்துடன் அணி 62வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இந்த பதக்கத்தை வென்றிருந்தார்.

பட மூலாதாரம், Reuters
பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் 2024இல் எழுந்த சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டின் தகுதி நீக்கம், குத்துச்சண்டை வீராங்கனைகள் இமானே கெலிஃப் மற்றும் லின் யூ டிங் தொடர்பான பாலினச் சர்ச்சை மற்றும் ஆர்மேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது போன்ற சில சர்ச்சைகள் தலைப்புச் செய்திகளாக மாறின.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் போட்டியிட்டார். ஆனால் இறுதிபோட்டி தொடங்குவதற்கு முன் அவரது எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக எடை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு வந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது 50 கிலோவுக்கு மேல் இருந்ததால் வெள்ளி பதக்கம் கூட கிடைக்கவில்லை.
பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை எதிர்த்து களம் இறங்கிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் ஆட்டத்தை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலின தகுதிச் சோதனையில் தோல்வியுற்றதால், கடந்த ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்ட இரு வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் இமானே கெலிஃப்பும் ஒருவர்.
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையைக் கடந்து இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

மற்றொருவரான, தைவான் குத்துச்சண்டை வீராங்கனை லின் யூ-டிங்கும்,போலந்து நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்..
இந்த பாலின சர்ச்சை அடுத்த நடக்கவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கையும் பாதிக்கலாம், ஏனெனில் இரண்டு வீராங்கனைகளும் அதிலும் கலந்துகொள்வார்கள்.
மூன்றாவது பெரிய சர்ச்சை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், அவர் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்ட் அணியின் அறிவுறுத்தலின்படி, சிலிஸின் ஸ்கோர் 13.666 லிருந்து 13.766 ஆக மாற்றப்பட்டது, இதனால் அவர் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
ஆனால் அதற்கு முன்னரே, ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பார்போசுவின் ஸ்கோர் 13.7 ஆக இருந்தது. இதனால் ருமேனியாவின் ஒலிம்பிக் கமிட்டி சிலிஸின் ஸ்கோரில் செய்யப்பட்ட மாற்றத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இது பின்னர் நடுவர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனால் ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது.
கடைசி நாளில் ஏற்பட்ட பரபரப்பு

பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியது பாதுகாப்பு முகமைகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
"ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்" என்று பாரிஸ் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகலில் (12-08-2024) சட்டை அணியாமல் ஒருவர் ஈபிள் கோபுரத்தில் ஏறியதைக் காண முடிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், அந்த நபர் குறித்து காவல்துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில், சட்டை அணியாத நபர் ஒருவர் ஒலிம்பிக் வளையங்களுக்கு சற்று மேலே உள்ள கோபுரத்தில் ஏறுவதைக் காணலாம். மற்றொரு காணொளியில், கைகளை பின்னால் கட்டிய நிலையில் அந்த நபரை போலீசார் அழைத்துச் செல்வதையும் காணலாம்.
நிறைவு விழாவில் பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ ஒலிம்பிக் கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸிடம் ஒப்படைத்தார். விழாவின் கடைசி நிகழ்வாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












