வீராங்கனைகளுக்கு சவால் தரும் மற்றொரு பரிசோதனை - பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை கூறுவது என்ன?

பாலின பரிசோதனை பெண் வீராங்கனைகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறதா?

பட மூலாதாரம், Facebook / Santhi Soundarajan

படக்குறிப்பு, ஆசிய விளையாட்டு போட்டியில் 2006ம் ஆண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்ற சாந்தி சௌந்தரராஜன்
    • எழுதியவர், நித்யா பாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ், சென்னை

2006ம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற சாந்தி சௌந்தரராஜன் வெள்ளி வென்றார். அதனை தமிழ்நாட்டில் திருச்சி அருகேயுள்ள அவரது சொந்த கிராமமான கத்தக்குறிச்சி ஆரவாரத்துடன் கொண்டாடியது.

இந்தியர்கள் அனைவரின் கொண்டாட்டமும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. அவரின் பதக்கம் திரும்பி பெறப்பட்டது. மேற்கொண்டு சர்வதேச அளவில் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காரணம்? அவருக்கு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை. பல ஆண்டுகளாக சர்வதேச விளையாட்டுகளில் பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் இது மிக முக்கிய ஒன்றாக அமைந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒலிம்பிக்கில் மீண்டும் பாலின சர்ச்சை

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஆகஸ்ட் 1ம் தேதி குத்துச்சண்டை போட்டியில் ஏற்பட்ட நிகழ்வுகள் பாலின சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளன.

66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியும் அல்ஜீரியாவின் இமானே கெலிஃபும் மோதினார்கள். அந்த போட்டி, வெறும் 46 நொடிகள் மட்டுமே நீடித்தது. ஏஞ்சலா கரினி திடீரென ஆட்டத்தில் இருந்து விலகிவிட்டார்.

"என் உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்தேன், அதனால் போட்டியில் இருந்து பின்வாங்கினேன்" என்றார் ஏஞ்சலா கரினி. உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகமாக இருக்கின்ற காரணத்தால், கடந்த ஆண்டு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் இமானே.

அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகம் இருந்ததால் மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் உடல் ரீதியாக அவர் கூடுதல் பலன் பெற்றுள்ளார் என்று கூறி அவரை தகுதி நீக்கம் செய்தது சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம். ஆனால் அவருக்கு எத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பான தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் இமானே கெலிஃப் தன்னுடைய தங்க பதக்கம் என்ற இலக்கை நோக்கி முன்னேறியுள்ளார். ஆகஸ்ட் 6ம் தேதி அன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டின் ஜன்ஜீம் ஸுவன்னபெங்க் என்ற வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் 2024: இமானே கெலிஃப் மற்றும் ஏஞ்சலா கரினி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் போட்டியிட்ட அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (இடது), இத்தாலியின் ஏஞ்சலா கரினி (வலது)

இதுபோன்ற பரிசோதனைகள் தேவையா?

பாலின சோதனை பல்வேறு விளையாட்டு வீராங்கனைகளின் சர்வதேச போட்டி கனவை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. விளையாட்டுப் பிரிவில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறு சவால்களையும், அவமானங்களையும், நிதிச்சுமைகளையும் சந்திக்கும் நிலைக்கு பெண் விளையாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற பரிசோதனைகள் நடத்துவது சரியா? பாலினம் குறித்த சரியான புரிதல்கள் மக்களிடம் இருக்கிறதா? இதுபோன்ற பரிசோதனைகள் எத்தகைய தாக்கத்தை விளையாட்டு வீராங்கனைகள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள சாந்தி சௌந்தரராஜனிடம் பேசியது பிபிசி தமிழ்.

தற்போது திருவாரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாணவர்களுக்கு தடகள பயிற்சிகளை வழங்கி வருகிறார் சாந்தி.

சர்ச்சைக்குரிய பாலின பரிசோதனை பற்றி கேள்வி எழுப்பிய போது, ஒருவர் ஆணா பெண்ணா என்பதை அவர் உடலில் இயற்கையாக சுரக்கும் டெஸ்டோஸ்டிரான் அளவைப் பொறுத்து முடிவு செய்வது மிகவும் மோசமான வழக்கம் என்றார். ஆண்களுக்கு ஏன் இது போன்ற சோதனைகள் ஏதும் நடத்துவதில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார் அவர்.

"உசேன் போல்ட் மற்ற ஆண் வீரர்களைக் காட்டிலும் வேகமாக ஓடுகிறார். ஒரே மாதிரியான டெஸ்டோஸ்டிரான் அளவுகளைக் கொண்டுள்ள வீரர்களுக்கு மட்டும் அப்படியாக போட்டிகளை நடத்த இயலுமா?" என்ற கேள்வியை எழுப்புகிறார் சாந்தி.

தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன்

பட மூலாதாரம், Facebook / Santhi Soundarajan

படக்குறிப்பு, தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன்

"வேறுபட்ட பால் வளர்ச்சி கூடுதல் நன்மைகளை தருவதில்லை"

தோஹா போட்டியின் போது சாந்திக்கு 25 வயது. ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனை முடிவுகள் எதிரொலியாக, மூன்றாவது இடம் பெற்ற கசகஸ்தானின் விக்டோரியா யாலோவ்த்சேவா இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஜமீரா அமிரோவா நான்காவது இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.

"என்னுடன் போட்டியிட்டு தங்கம் வென்ற பெஹ்ரனைச் சேர்ந்த மரியம் ஜமாலை என்னால் நெருங்கக் கூட இயலவில்லை. அவர் அப்படி ஒரு அசுர வேகத்தில் ஓடினார். டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகமாக கொண்டிருக்கும் வீராங்கனைகளுக்கு மற்ற வீராங்கனைகளைக் காட்டிலும் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் நான் அந்த போட்டியில் முதல் இடம் பிடித்திருக்க வேண்டும் இல்லையா? ஏன் என்னால் முடியவில்லை?" என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.

சாந்திக்கு மிகவும் அரிய வகையான மரபணு நிலை உள்ளது. ஆங்கிலத்தில் ஆண்ட்ரோஜன் இன்சென்சிட்டிவிட்டி சின்ட்ரோம் (Androgen Insensitivity Syndrome) அழைக்கப்படும் மரபணு நிலை இதுவாகும். பொதுவாக இந்த மரபணு நிலையைக் கொண்டிருக்கும் பெண்களிடம், ஆண்களிடம் காணப்படும் XY குரோமோசோம்களைக் கொண்டிருப்பார்கள்.

இது போன்ற அரிய மரபணு நிலைகளைக் கொண்டிருக்கும் நபர்களை வேறுபட்ட பால் வளர்ச்சியைக் ((Differences of Sex Development (DSD)) கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். விளையாட்டு உலகில் இதற்கு முன்பு, இன்டர்செக்ஸ் நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும், நாளமில்லாச் சுரப்பியியல் (Endocrinologist) மருத்துவர் கார்த்திக் பாலச்சந்திரன், இமானே விவகாரம் தொடர்பாக எழுதிய நீண்ட எக்ஸ் தள பதிவில், "இமானே டி.எஸ்.டி எனப்படும் வேறுபட்ட பால் வளர்ச்சியை கொண்டிருக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் மற்ற வீராங்கனைகளைக் காட்டிலும் கூடுதல் நன்மைகளை அவர் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று குறிப்பிடுகிறார்.

DSD பற்றி விளக்கி எழுதிய அவரின் பதிவில் "ஒய் குரோமோசோம் அல்லது ஒய் குரோமோசோமின் ஒரு பகுதியை கொண்டிருப்பதால் யாராலும் வீழ்த்த முடியாத அளவிலான போட்டி திறனை இமானே கொண்டிருப்பார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவர் கார்த்திக் பாலச்சந்திரனின் பதிவு

பட மூலாதாரம், Twitter/karthik2k2

படக்குறிப்பு, மருத்துவர் கார்த்திக் பாலச்சந்திரனின் பதிவு

"பாலினம் சார்ந்த புரிதல் மக்களிடம் இல்லை"

சர்வதேச விளையாட்டுகளில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, மனஉளைச்சலுக்கு ஆளான சாந்தி தற்கொலைக்கு முயன்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தனிப்பட்ட அளவில் முன்வைக்கப்பட்டும் விமர்சனங்களை கையாளுவது குறித்து பேசிய அவர், இங்கு பெரும்பாலான நபர்களுக்கு பாலினம் குறித்த போதுமான அறிவு கிடையாது என்று கூறுகிறார்.

"ஒருவரின் உடல் அமைப்பு, உருவ அமைப்பை வைத்து உடனே விமர்சனங்களை முன்வைத்துவிடுகின்றனர். பொதுவாக ஆண்கள், பெண்கள், திருநர்களை கடந்து இங்கே இருக்கும் பாலினம், பாலின சிறுபான்மையினர் குறித்த எந்த ஒரு பிரக்ஞையும் இன்றி இவர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடுவது வேதனை அளிக்கிறது," என்று கூறினார்.

"இங்கு பலருக்கும் இன்டெர்செக்ஸ் நிலை என்றால் என்ன என்றே பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு வருவதில்லை," என்று விவரித்தார் சாந்தி.

"கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று நிலைமை சற்று வேறாக உள்ளது. ஒரு சிலராவது இது குறித்த போதுமான புரிதலை பெற்றிருக்கின்றனர். என்னுடைய பதக்கம் பறிபோன காலத்தில் இதுபோன்ற புரிதல்கள் மக்கள் மத்தியில் இருந்திருந்தால், எனக்கான நியாயம் கிடைத்திருக்கலாம்" என்றும் வேதனை தெரிவிக்கிறார் சாந்தி.

இந்திய தடகள வீரர் டூட்டி சந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்

இந்தியாவின் மற்றொரு தடகள வீராங்கனையான டூட்டி சந்த், டெஸ்டோஸ்டிரான் மற்றும் ஆண்ட்ரோஜென் அளவு இயற்கையாகவே அதிகமாக இருக்கும் ஹைபர் ஆண்ட்ரோஜெனிஸம் என்ற மருத்துவ நிலையை கொண்டிருந்தார்.

உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவு அதிகமாக இருப்பதை காரணம் காட்டி 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதித்தது இந்திய தடகள கூட்டமைப்பு (AFI).

ஆனால், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து அதில் வெற்றியும் பெற்றார் டூட்டி சந்த்.

டெஸ்டோஸ்டிரான் அளவை குறைக்க சிகிச்சை எடுப்பது சரியா?

உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவை குறைத்துக் கொண்டால் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற விதிமுறையை எப்படி பார்க்கின்றீர்கள் என்று கேட்ட போது, இது மிகவும் தவறான அணுகுமுறை என்கிறார் சாந்தி.

"உடலில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பது இயற்கையானது எனும் பட்சத்தில் அதை ஏன் குறைக்க வேண்டும். நீச்சல் போட்டிகளில் உயரம் அதிகமாக இருக்கும் ஒருவர், உயரம் குறைவான நபரைக் காட்டிலும் அதிக நன்மைகளைப் பெற்றிருக்கிறார் என்றால் அவரின் உயரத்தை குறைக்க வேண்டும் என்று வாதிட்டால் அது சரியாக இருக்குமா? நடைமுறையில் சாத்தியமாகுமா,?" என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

இதுபோன்ற விவகாரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் அவர்.

உலக தடகளம் (World Athletics), உலக அளவில் ஓட்டப்பந்தய விளையாட்டுகளை நிர்வகிக்கும் அமைப்பாகும். கடந்த 2023ம் ஆண்டு உலக தடகள போட்டிகளில், வேறுபட்ட பால் வளர்ச்சியை கொண்ட போட்டியாளர்கள் பெண்கள் பிரிவில் பங்கேற்க எத்தகைய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

அதன்படி அவர்களில் டெஸ்டோஸ்டிரான் அளவானது ஒரு லிட்டருக்கு 2.5 நானோமோல்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு 24 மாதங்களுக்கு முன்பில் இருந்தே இந்த அளவை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிவித்திருந்தது.

பி.டி. உஷா.

பட மூலாதாரம், Twitter / PT Usha

படக்குறிப்பு, வேறுபட்ட பால்சார் வளர்ச்சிகளை கொண்டிருக்கும் நபர்களுக்கு தனியாக போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் பி.டி. உஷா.

தனியாக போட்டிகளை நடத்த பி.டி.உஷா யோசனை

இந்த விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதில் ஒரு தெளிவு இல்லை. அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வேறுபட்ட பால் வளர்ச்சியைக் கொண்ட போட்டியாளர்களின் தகுதிகள் குறித்து எந்தவிதமான தகவல்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருக்கும் தடகள வீராங்கனை பி.டி.உஷா, 2021ம் ஆண்டில், வேறுபட்ட பால் வளர்ச்சிகளை கொண்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகள் தனியாக நடத்தப்பட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

"வேறுபட்ட பால் வளர்ச்சிகளை கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு தனியாக போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், அது அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும். வீராங்கனைகளும் தங்களுக்கு சமமான போட்டியாளர்களுடன் களத்தில் மோத முடியும். இதன் மூலம் அனைவருக்கும் வாய்ப்புகள் சரிசமமாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று பதிவிட்டிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)