ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - மல்யுத்தத்தில் சாதித்தார் அமன் செராவத்

அமன் செராவத்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற இவர் யார்?

பட மூலாதாரம், Getty Images

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், அவர் 13-5 என்ற கணக்கில் தன்னை எதிர்த்த போர்ட்டோ ரிகோவின் டேரியன் டோய் க்ரூஸை தோற்கடித்தார்.

பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது மல்யுத்த வீரர்களை நினைத்துப் பெருமை கொள்கிறோம். பாரிஸ் ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப் பிரிவில் ஆடவர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செராவத்துக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும் உறுதியும் தெளிவாகத் தெரிகிறது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை மொத்த நாடும் கொண்டாடுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 6வது பதக்கத்தை வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நமது ஒலிம்பிக் அணியின் செயல்திறனால் நாடு முழுவதும் பெருமை கொள்வதாக” அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காலிறுதி ஆட்டத்தில் அல்பேனியாவின் அபகரோவை 12-0 என்ற கணக்கில் தோற்கடித்து அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அமன் செராவத்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற இவர் யார்?

பட மூலாதாரம், Getty Images

அதைத்தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமன் செராவத் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. அரையிறுதியில் அவர் ஜப்பானின் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.

அமன் செராவத், முதல் சுற்றில் 10-0 என்ற கணக்கில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியன் விளாதிமிர் எகோரோவை தோற்கடித்தார்.

நாட்டின் மல்யுத்த வீரர் சுஷில் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு, போராட்டங்கள் காரணமாக அனைத்து மல்யுத்த நடவடிக்கைகளும் முடங்கின. இதற்கிடையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில், இந்திய மல்யுத்தம் கடினமான கட்டத்தில் இருந்த போது அமன் தனது முதல் முத்திரையைப் பதித்துள்ளார். ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் நம்பிக்கையாக அமன் செராவத் உருவெடுத்துள்ளார்.

தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர்

அமன் செராவத்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற இவர் யார்?

பட மூலாதாரம், Getty Images

ஹரியாணாவின் ஜஜ்ஜரின் பிரோஹர் கிராமத்தில் வசிக்கும் அமன் செராவத், டெல்லியின் பிரபல சத்ரசால் விஸ்வஸ்தாரி மல்யுத்த மைதானத்தில் தனது மல்யுத்தத்தை தொடங்கினார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், யோகேஷ்வர் தத், ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்கள் உருவாகி, முத்திரை பதித்த மல்யுத்த அரங்கம் இது.

கடந்த 2003ஆம் ஆண்டு பிறந்த அமன், 11 வயதில் பெற்றோரை இழந்தார். அவரது தாத்தாதான் அவரை வளர்த்தார்.

சிறு வயதிலேயே மல்யுத்தத்தில் அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து, சத்ரசால் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற சுஷில் குமாரிடம் இருந்து மல்யுத்தத்தில் ஈடுபடும் உத்வேகத்தை அமன் பெற்றார்.

நூர்-சுல்தானில் 2019 ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றபோது அமன் தனது திறமையை முதலில் வெளிப்படுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022இல், அமன் 23 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

கடந்த ஆண்டிலும் அவரது செயல்திறன் சிறப்பாக இருந்தது. அஸ்தானாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கமும், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலமும் வென்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)