வினேஷ் போகாட் தகுதி நீக்கம் பற்றி மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றவர் கூறியது என்ன?

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும்போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ''அம்மா, எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். என் தைரியம் எல்லாம் உடைந்துவிட்டது, எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024'' எனத் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

''நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்'' எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்கம் வென்ற வீராங்கனை கூறியது என்ன?

மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில், இறுதிப் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் மல்யுத்த வீராங்கனை சாரா ஹில்தெப்ராண்ட், க்யூபாவின் யுஸ்னெலிஸ் கஸ்மன் லோபஸை எதிர்த்துப் போட்டியிட்டுத் தங்கம் வென்றார்.

வினேஷ் விவகாரம் குறித்துப் பேசிய சாரா, அவரின் நிலையை நினைத்து வருந்துவதாகக் கூறினார். "ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று வினேஷ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு அது மிக அருமையான நாள்," என்றும் கூறினார்.

"அவரது ஒலிம்பிக் கனவு இப்படியாகும் என்று அவரும்கூட நினைத்திருக்க மாட்டார். அவர் ஒரு சிறந்த போட்டியாளர், சிறப்பான மல்யுத்த வீரர், நல்ல மனிதர்," என்று குறிப்பிட்டார் சாரா.

வினேஷ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் “வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கூடுதல் எடையுடன் இருந்தார்” எனத் தெரிவித்தது.

''வினேஷ் போகாட்டின் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது சோதனையின்போது கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது'' என்று வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று பேசினார்.

உலகப் பிரபலங்களின் ஆதரவு

உலகப் பிரபலங்களின் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “வினேஷ் நீங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீங்கள் எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர் தான். நீங்கள் இந்தியாவின் மகள் மற்றும் இந்தியாவின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி மாலிக் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ், நீ தோற்கவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்காகவும் தான் நீ போராடிக் கொண்டிருந்தாய், இன்று அவர்கள் தோற்றுவிட்டனர். இது ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வி. நாடு உன்னுடன் உள்ளது. ஒரு சக வீராங்கனையாக உனது போராட்டத்திற்கும் விடாமுயற்சிக்கும் சல்யூட்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கடந்த ஆண்டு அப்போதைய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் சரண் சிங் நிராகரித்து வருகிறார்.

அந்த நேரத்தில் வினேஷ் போகாட் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பெரிய முகமாகவும் இருந்தார். அவர்கள் பல மாதங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கூறுகையில், “இந்த பெண் (வினேஷ்) அரசு அதிகாரத்துடன் போராடி களைத்துவிட்டாள்” என்றார்.

உலகப் பிரபலங்களின் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பர்ரோஸும் வினேஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், ஒலிம்பிக் விதிகளை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

“போட்டியின் இரண்டு நாட்களிலும் எடை சோதனை செய்யப்படுகிறது அத்தகைய சூழ்நிலையில், இரண்டாவது நாளில் எடையில் ஒரு கிலோ வரை தளர்வு அளித்திருக்க வேண்டும்.” என்கிறார் ஜோர்டன்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை எடை சோதனை நடைபெறும்.

அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இரண்டாவது நாளில் எடை அளவை எட்டாவிட்டாலும் பதக்கங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள் இருந்த வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டாலும், வினேஷ் போகாட்டுக்கே வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜோர்டன் வலியுறுத்தினார்.

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)