எல்லை தாண்டி இதயங்களை வென்ற தாயுள்ளம் - இது நீரஜ் சோப்ரா, அர்ஷத்தின் நெகிழ்ச்சி கதை

நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி (இடது), அர்ஷத்தின் தாய் ரஸியா பர்வீன் (வலது)
படக்குறிப்பு, நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தேவி (இடது), அர்ஷத்தின் தாய் ரஸியா பர்வீன் (வலது)
    • எழுதியவர், விகாஸ் திரிவேதி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வீர் சாரா திரைப்படத்தில் பாகிஸ்தானின் ‘மர்யம் ஹயாத் கான்’ இந்தியாவின் ‘வீர் பிரதாப் சிங்’கிடம் “உங்கள் நாட்டின் எல்லா மகன்களும் உன்னை போலவே இருப்பார்களா?” என கேட்பார்.

“எனக்கு தெரியாது. ஆனால், என் நாட்டில் எல்லா அம்மாக்களும் நிச்சயமாக உங்களை போலவே இருப்பார்கள்.”

நினைத்துக் கூட பார்க்க முடியாத அந்த காட்சி நிஜத்தில் நடக்கும்போது அக்காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது.

வெறும் 550 கி.மீ. இடைவெளியில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அம்மாக்கள் ஒன்றுபோல்தான் இருப்பார்கள் என்பதை இரண்டு அம்மாக்கள் நிரூபித்துள்ளனர். அது, பாகிஸ்தானின் மியான் சன்னு பகுதியாக இருந்தாலும் சரி, இந்தியாவின் பானிபட் பகுதியாக இருந்தாலும் சரி.

இது, சரோஜ் தேவியின் மகன் நீரஜ் சோப்ரா மற்றும் ரஸியா பர்வீனின் மகன் அர்ஷத் நதீமின் கதை மட்டுமல்ல. நெருக்கத்தைக் குறைக்க முடியாத அளவுக்கான சில தூரங்கள் இருக்கின்றன. இக்கதை, அத்தகையை தூரத்தைப் பற்றியது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அன்பை பகிர்ந்த அம்மாக்கள்

ஆகஸ்ட் 8, 2024 இரவு நேரம்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டியை எறிவதற்கு முன்பு ஒருவர் 30 முதல் 36 மீட்டர்கள் ஓட வேண்டும்.

அந்த ஓட்டத்தின் போது, லட்சக்கணக்கான மக்களின் இதயத்துடிப்பும் எகிறியது. இந்த இரு குடும்பத்தினரின் இதயத்துடிப்பு இன்னும் சத்தமாக துடித்தது.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.57 மீட்டர் தொலைவுக்கும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டருக்கும் ஈட்டியை எறிந்த போது, அந்த இதயத்துடிப்பு சற்று அமைதியானது.

அர்ஷத் தங்கப் பதக்கத்தையும் நீரஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இந்த வெற்றியால் இந்தியாவுக்கு ரஸியா பர்வீனும் பாகிஸ்தானுக்கு சரோஜ் தேவியும் கிடைத்தனர்.

“வெள்ளியும் எங்களுக்கு தங்கம் போன்றதே. தங்கம் வென்றவரும் எங்களுக்கு மகன் போன்றவர்தான். அவரும் கடுமையாக உழைத்துள்ளார்.” என்கிறார் சரோஜ் தேவி.

“நீரஜும் எங்களுக்கு மகன் போன்றவர்தான். அவர் நதீமின் நண்பர், சகோதரர் போன்றவர். வெற்றியும் தோல்வியும் விதிவசம் உள்ளது. நீரஜும் என் மகன் தான், அவரையும் அல்லா வெற்றியாளராக்கட்டும். அவருக்கும் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கட்டும்.” என ரஸியா தெரிவித்தார்.

'இந்தியாவுடன் பாகிஸ்தானாக' மாறிய இந்தியா vs பாகிஸ்தான்

தங்கம் வென்ற பின் பேசிய அர்ஷத் நதீம், “2016-ல் குவாஹாத்தியில் நீரஜுடன் என் முதல் போட்டியை விளையாடினேன். அப்போதிலிருந்து நீரஜ் வென்று வருவதாக நான் அறிந்தேன். அந்த போட்டியில் நான் பாகிஸ்தானின் சாதனையை முதன்முறையாக முறியடித்தேன். அப்போதிலிருந்து நான் கடுமையாக உழைத்தால் முன்னேற முடியும் என அறிந்தேன்.” என்றார்.

ஒருபுறம் நீரஜை அர்ஷத் புகழ்கிறார், மறுபுறம் அர்ஷத்தின் கடின உழைப்பை நீரஜ் மதிக்கிறார்.

“ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாள் அமையும். இன்று அர்ஷத்தின் நாள்” என தெரிவித்தார்.

அதேபோன்று இருவரின் தந்தைகளும் மாறிமாறி வீரர்களை புகழ்ந்துகொண்டனர்.

நீரஜின் தந்தை சதீஷ் சோப்ரா கூறுகையில், “இந்த முறை பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கம் வென்றுள்ளார். அவர் கடினமாக உழைத்து, எந்த விளையாட்டு வீரரும் எட்டாத உயரத்தை அடைந்தார்.” என்றார்.

நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற பின் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

பிரதமர் மோதி நீரஜிடம், “உங்களின் தாய் விளையாட்டு துறையில் இருக்கிறாரா? பேட்டியில் உங்கள் அம்மா கூறியது ஒரு விளையாட்டு வீரரின் உறுதிப்பாட்டை கொண்டிருந்தது. அவர் அதை நன்றாக கூறினார். நான் அவரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

இந்த செய்தி அர்ஷத்தை அடைந்தபோது அவர், “எல்லோருடைய அம்மாவும் ஒரேமாதிரி உள்ளனர். அப்படிப்பட்ட அம்மாக்களை பெற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.” என்றார்.

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பான வாக்குவாதங்கள் நடைபெறும் போதெல்லாம் சோயிப் அக்தர் தான் நினைவுக்கு வருவார். ஆனால், ஒரு தாயால் தான் இத்தகைய வார்த்தைகளை கூற முடியும் என சோயிப் கூட கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அடிக்கடி பரப்பப்படும் வெறுப்பு உணர்வை நிறுத்துவது அவ்வளவு கடினமானதல்ல என தோன்றுகிறது.

இருநாட்டவர்களும் மாறிமாறி அன்பை பகிர்ந்துகொள்ளும் பதிவுகளை நான் சமூக ஊடகங்களில் கண்டேன். முன்பு கோபமான இமோஜிக்களுடன் பதிவுகளை இட்டவர்கள் இப்போது, இதய இமோஜிக்களை பகிர்கின்றனர்.

ஆனால், இது முதன்முறையாக நடக்கவில்லை.

அர்ஷத் நதீம் - நீரஜ் சோப்ராவின் நட்பு

போட்டியாளர்களாக இருந்த போதிலும் நீரஜும் அர்ஷத்தும் நண்பர்களாகவே வலம் வந்த பல தருணங்கள் உள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இருவரும் கைகளை குலுக்கியும் ஆரத் தழுவியும் கொண்டனர்.

கடந்தாண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் தங்கப்பதக்கம் வென்றார். அப்போட்டியில் அர்ஷத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இருவருடைய விளையாட்டு வாழ்க்கையையும் எடுத்துக் கொண்டால் பல போட்டிகளில் ஒருவர் தங்கப் பதக்கத்தையும் மற்றொருவர் வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்றதை பார்க்கலாம்.

கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 90 மீட்டரை தாண்டி ஈட்டி எறிந்து அர்ஷத் தங்கப் பதக்கம் வென்றார். காயம் காரணமாக நீரஜ் அப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

ஆனால், அர்ஷத்தை வாழ்த்துவதற்கு நீரஜ் தவறவில்லை.

அப்போது பேசிய நீரஜ், “90 மீட்டர் தாண்டி ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றதற்கும் புதிய சாதனையை படைத்ததற்கும் அர்ஷத்திற்கு வாழ்த்துகள். எதிர்கால போட்டிகளுக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 2023-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் மற்றும் அர்ஷத். இந்த புகைப்படம் நீரஜின் வீட்டிலும் தொங்கவிடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் கிரிக்கெட் போட்டிகளில் இருநாட்டு ரசிகர்களும் கோப நெருப்பில் எரிந்து விழுகின்றனர்.

மறுபுறம், அர்ஷத்தும் நீரஜும் கூர்மையான ஈட்டிகளின் முனைகளிலிருந்து அன்பை எடுத்துச் செல்கின்றனர்.

இதே அன்பை டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றபோதும் அர்ஷத் ஐந்தாம் இடம் பிடித்த போதும் பார்க்க முடிந்தது.

அர்ஷத்திற்கு அறிவுரை

அர்ஷத் மற்றும் நீரஜ் இதுவரை 10 போட்டிகளில் மோதியுள்ளனர்.

இதில் ஏழு போட்டிகளில் நீரஜ் முதலிடத்தையும் மூன்று போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார். அர்ஷத் நான்கு போட்டிகளில் மூன்றாவது இடத்தையும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் முதன்முறையாக முதலிடத்தையும் பிடித்தார். அந்தவகையில், இது அர்ஷத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகவும் நீரஜுக்கு தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், இது அவர்களுடைய நட்பிலோ அல்லது அவர்களின் விளையாட்டு உறுதிப்பாட்டிலோ எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

நீரஜ் ஒரு நேர்காணலில், பாகிஸ்தானின் தடகள வீரர் புதிய ஈட்டியை பெறுவதற்கு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது என தெரிவித்தார்.

தான் பழைய ஈட்டியை கொண்டே பயிற்சி எடுப்பதாக அர்ஷத் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

“தங்கள் நாட்டு அரசாங்கம் தனக்கு உதவுவது போல, அர்ஷத்துக்கு அந்நாட்டு அரசாங்கம் உதவ வேண்டும். அல்லது, புதிய ஈட்டியை பெறுவதற்கு நிறுவனங்களிடம் அவர் பேச வேண்டும் என நான் அறிவுறுத்துகிறேன்” என நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.

அர்ஷத் மீதான விமர்சனத்தை கலைத்த நீரஜ்

2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் மற்றும் நதீம் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது, சரோஜ் தேவி கூறியது விவாதங்களை எழுப்பியது.

அப்போது, “எல்லோரும் மைதானங்களில் விளையாடுகின்றனர். எல்லோரும் விளையாட்டு வீரர்களே. யாராவது ஒருவர் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். பாகிஸ்தானுக்கோ ஹரியாணாவுக்கோ இதில் எந்த பிரச்னையும் இல்லை.

விளையாட்டு பெருமகிழ்ச்சிக்கான விஷயம். பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் மிகவும் மகிழ்ச்சியே. நீரஜ் வெற்றி பெறுவதும் மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்” என்றார் சரோஜ் தேவி.

நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2018 ஆசிய போட்டிகளில் நீரஜ் மற்றும் அர்ஷத். இதில் நீரஜ் தங்கத்தையும் அர்ஷத் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு, நீரஜை புகைப்படம் எடுத்தபோது அவர் அர்ஷத்தை அழைத்தார். அர்ஷத் பாகிஸ்தான் கொடி இல்லாமல் வந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அப்போது, “தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சென்றதில் மகிழ்ச்சி” என அர்ஷத் கூறினார்.

தன் மகன் நீரஜ் அமைதியான குணம் கொண்டவர் என்றும் சிறுவயதில் சில சமயங்களில் சண்டை போட்ட நிகழ்வுகள் உண்டு என்றாலும் மற்றபடி அவர் கோபமடைவதில்லை எனவும் சரோஜ் தேவி தெரிவித்தார்.

நீரஜ் சோப்ரா
படக்குறிப்பு, அர்ஷத் நதீம் உடனான புகைப்படம் நீரஜின் வீட்டில் உள்ளது.

நீரஜின் இந்த குணம் 2021-ம் ஆண்டில் வெளிப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர், நீரஜின் ஈட்டியை அர்ஷத் நதீம் வைத்திருந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் கூறப்பட்டது. அவருடைய ஈட்டியில் அர்ஷத் குளறுபடி செய்ததாக கூட சிலர் தவறாக கூறினர்.

பின்னர், நீரஜ் சமூக ஊடகங்களில், “நான் எறிந்த ஈட்டியை எறிவதற்கு முன்பு அந்த ஈட்டி அர்ஷத்திடம் இருந்ததாக ஒரு பிரச்னை எழுப்பப்படுகிறது. யார் வேண்டுமானாலும் யாருடைய ஈட்டியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று விதிமுறைகளிலேயே உள்ளது” என பதிவிட்டார்.

“என்னுடைய இந்த கருத்தை உங்களின் இழிவான நோக்கத்திற்கு மேலும் பயன்படுத்தாதீர்கள். ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதைத்தான் விளையாட்டு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ஈட்டி எறிதலில் ஈடுபடும் வீரர்கள் ஒவ்வொருவருக்கொருவர் அன்புடன் இருக்கிறோம். எங்களை காயப்படுத்தும் எதையும் கூறாதீர்கள்” என தெரிவித்தார்.

சோகத்தை வெளிப்படுத்திய வீரர்கள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற பின் நீரஜ் சோகமாக காட்சியளித்தார். சில வீடியோ பேட்டிகளில் கூட அவரால் அந்த சோகத்தை மறைக்க முடியவில்லை.

பதக்கத்தை அணிவதற்கு முன்பிருந்த சிரிப்பு அவருடைய முகத்தில் இல்லை.

தங்கப் பதக்கம் வென்றவுடன் அர்ஷத் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

எல்லோர் முன்பும் தங்கள் அழுகையையோ அல்லது வருத்தத்தையோ மறைக்காமல் வலுவாக தங்கள் மகன்களை சரோஜ் மற்றும் ரஸியா வளர்த்துள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவும் பாகிஸ்தானும் புள்ளிப்பட்டியலில் வேண்டுமானால் கடைநிலையில் இருக்கலாம்.

ஆனால், இந்த இரு நண்பர்களும் நம் எண்ணங்களில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருவரும் தாங்கள் வென்ற பதக்கங்களை காட்டுகின்றனர்.

விவசாயி மகனான நீரஜும் கொத்தனார் மகனான அர்ஷத்தும் இருநாடுகளும் கோபத்தை விடுத்து அன்பை வளர்த்துக் கொள்வதற்கு அடித்தளமிட்டுள்ளனர்.

இது ஏன் முக்கியம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் கொடியைக் காட்டியதற்காகச் சிறையில் அடைக்கப்படலாம், இந்த உண்மைக்கு நடுவே சரோஜ் தேவியின் வீடு உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு பின் வெளியான பல படங்களில் அர்ஷத் நதீம் தன் நாட்டு கொடியை உயர்த்திக் காட்டுகிறார். அவருக்கு பக்கத்தில் நீரஜ் மூவர்ண கொடியுடன் உள்ளார்.

சிரித்த முகங்களுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகளை பார்ப்பது கடினம். பிரிவினைக்குப் பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இருநாடுகளின் கொடிகளும் இதற்கு சாட்சியமாக உள்ளன.

இந்த உரையாடல்களை சரோஜ் மற்றும் ரஸியாவின் வளர்ப்பு மற்றும் எண்ணங்களிலிருந்து உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)