வங்கதேசம்: இந்துக்களின் பாதுகாப்பு பற்றி முகமது யூனுஸ் பிரதமர் மோதியிடம் கூறியது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ்

பட மூலாதாரம், ANI/Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி (இடது) மற்றும் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் (வலது)

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் (தலைமை ஆலோசகர்) முகமது யூனுஸுக்கும் இடையே வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடல் நடந்தது.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த முதல் உரையாடல் இதுவாகும்.

இந்த உரையாடலுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், "எனக்கு முகமது யூனுஸிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது, ​​நாங்கள் இருவரும் வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையைப் பற்றி பேசினோம்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோதி, “ஜனநாயக ரீதியிலான, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவை நான் மீண்டும் வலியுறுத்தினேன். அவர் (முகமது யூனுஸ்) வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஐ.நா. அறிக்கை என்ன சொல்கிறது?

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகள் குறித்து முகமது யூனுஸ் இந்த உரையாடலில் என்ன சொன்னார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை அன்று தனது அறிக்கை ஒன்றில் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களையும் குறிப்பிட்டுள்ளது .

அதில், “வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா அறிக்கையில், வங்கதேசத்தின் 27 மாவட்டங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகள் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்

இந்த அறிக்கையில், வங்கதேசத்தின் குல்னாவில் இஸ்கான் கோவிலில் தீ வைப்புச் சம்பவம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறைகளின் போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது மற்றும் காவல் நிலையம் மீதான தாக்குதல் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆகஸ்ட் 5ம் தேதி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அந்நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஜூலை மாதம் தொடங்கிய இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, வங்கதேசத்தின் சிறுபான்மை இந்து சமூகம் மற்றும் அவர்களது கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த திங்களன்று, இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை ஆலோசகர் சகாவத் ஹுசைன் சிறுபான்மையினரிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டிருந்தார். செவ்வாயன்று, டாக்காவில் புகழ்பெற்ற தாகேஸ்வரி கோவிலுக்கு வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் சென்றார்.

இந்துக்களின் பாதுகாப்பு பற்றி இருவரும் என்ன பேசினர்?

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தில் உள்ள 8 ஆலோசகர்களின் இலாகாக்கள் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டன.

சகாவத் ஹுசைன் உள்துறை அமைச்சகத்திலிருந்து நீக்கப்பட்டதாக பிபிசி பங்களா சேவை தெரிவித்துள்ளது. தற்போது அவருக்கு ஜவுளி மற்றும் சணல் அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில், இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசத்திற்கு வந்து அங்குள்ள கள நிலவரத்தை அறிய வேண்டும் எனவும், இதன் மூலம் இந்த விஷயத்தின் முழு உண்மையும் வெளிவரும் எனவும் யூனுஸ் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த சில செய்திகள் பெரிதுபடுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள யூனுஸுக்கு இந்திய பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்ததாக வங்கதேச தலைமை ஆலோசகரின் செய்தியாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

முகமது யூனுஸ் மற்றும் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ‘இந்திய அறிவியல் காங்கிரஸ்’ நிகழ்ச்சியில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை பிரதமர் மோதி கவுரவித்தார்

பாதுகாப்புப் பிரச்னையை மோதி எழுப்பிய போது, ​​சிறுபான்மையினர் உட்பட நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிலும் தனது அரசு உறுதியாக இருப்பதாக தலைமை ஆலோசகர் கூறியதாக செய்தியாளர் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு முகமது யூனுஸ் நன்றி தெரிவித்தார். முன்னதாக, முகமது யூனுஸிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக இந்தியப் பிரதமர் மோதி ட்வீட் செய்திருந்தார்.

இந்த உரையாடலில், பேராசிரியர் யூனுஸ் இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியப் பொது மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பேராசிரியர் யூனுஸின் நீண்ட அனுபவமும், தலைமைத்துவமும் வங்கதேச மக்களுக்கு நல்ல பலனைத் தரும் என்று மோதி கூறியுள்ளார்.

இந்த உரையாடலின் போது, ​​வங்கதேசத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாகவும் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு வருமாறு மோதி அழைப்பு

ஆகஸ்ட் 17 ஆம் தேதி புது தில்லியில் மூன்றாவது உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவருக்கும் இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

யூனுஸின் செய்தியாளர் பிரிவின்படி, அவர் இந்த மாநாட்டில் டாக்காவிலிருந்து மெய்நிகர் வாயிலாக கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார்.

இந்த உச்சிமாநாட்டில், உலகின் பல்வேறு சிக்கலான சவால்கள் குறித்து முந்தைய மாநாடுகளில் நடத்தப்பட்ட விவாதங்கள் முன்னெடுக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சவால்களில் மோதல், உணவு மற்றும் எரிசக்தி, பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் அடங்கும்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைவதற்கு மாணவர் இயக்கமே காரணம் என யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் இயக்கத்தை வங்கதேசத்தின் இரண்டாவது புரட்சி என வர்ணித்த பேராசிரியர் யூனுஸ், மாணவர்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை தனது அரசு நிறைவேற்றும் என்றார்.

நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் மனித உரிமைகளை உறுதி செய்வது குறித்தும் அவர் பேசினார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் இந்தியா வந்தார்.

இப்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உள்ளது. யூனுஸ் நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் ஆவார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)