வங்கதேசத்தில் இந்து, கிறித்தவ சிறுபான்மையினர் மீது தாக்குதலா? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர், வங்கதேசத்தில் இருந்து.
பி.ஏ படிக்கும் மாணவி அனு தாலுக்தார் கடந்த வாரம் வரை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
மற்ற மாணவர்களைவிட தான் வேறுபட்டவர் என்பதை அப்போது அனு உணரவில்லை. ஆனால் இன்று அதை உணர்வதாகக் கூறுகிறார்.
"நான் மிகுந்த பாதுகாப்பின்மையை உணர்கிறேன்," என்று தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தாகேஸ்வரி கோவிலில் பிபிசியிடம் பேசிய அனு தாலுக்தார் தெரிவித்தார்.
"நான் இதற்கு முன் இதுபோல் உணர்ந்ததில்லை. போராட்டங்களின் போதும் எனக்கு பய உணர்வு இருக்கவில்லை,” என்றார் அவர்.
"அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் பொதுமக்களின் கோபத்தின் வெளிப்பாட்டிலும் நான் தீவிரமாகப் பங்கேற்றேன். ஆனால் இப்போது திடீரென நானே இலக்காகிவிட்டேன்," என்கிறார் அவர்.
ஷேக் ஹசீனா ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு நடந்த வன்முறை பற்றி அனு பேசுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்று நாட்டில் அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தானும் தன்னைப் போன்றவர்களும் கலந்து கொண்டு நடத்திய போராட்டங்கள்தான் என்கிறார் அனு.
தன்னைப் போன்றவர்களைப் பாதுகாப்பது இடைக்கால அரசின் பொறுப்பு என்றும் அனு குறிப்பிட்டார்.
ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியதில் இருந்து நாட்டின் 52 மாவட்டங்களில் சிறுபான்மையினர் மீது 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாக சிறுபான்மையினர் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், செவ்வாயன்று தாகேஸ்வரி கோவிலுக்குச் சென்றார். நாட்டிலுள்ள அனைவருக்கும் உரிமைகள் சமம் என்று அப்போது அவர் கூறினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையின் அளவைப் புரிந்துகொள்ள நான் டாக்கா நகரத்தில் இருந்து கோமிலா எனும் சிறுநகரத்திற்கு பயணித்தேன்.
வடகிழக்கு இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் எல்லைக்கு அருகில் கோமிலா அமைந்துள்ளது. மதக்கலவரத்தின் வரலாறு உள்ள பகுதி இது.
கோமிலாவில் ஒரு பைக் ஷோரூமுக்கு நான் சென்றேன். அதன் உரிமையாளர் பிமல் சந்திர டே.
ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு முன்பிருந்தே சிகிச்சைக்காகத் தான் இந்தியாவில் இருப்பதாக பிமல் என்னிடம் கூறினார். ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய செய்தி கிடைத்தவுடன் ஷோ ரூமின் ஷட்டர்களை கீழே இழுக்கும்படி தனது ஊழியர்களிடம் அவர் கூறினார். வன்முறை சம்பவங்கள் நடக்கலாம் என்று அவர் அஞ்சினார்.
பிமல் சந்திர டேயின் இந்த அச்சம் முற்றிலும் சரியானது என்று பின்னர் நிரூபணமானது.
அன்று மதியம் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி வந்த ஒரு கும்பல் பிமலின் ஷோரூம் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சிலர் பைக்குகளை திருடிச் சென்றனர். பின்னர் ஷோரூமை தீ வைத்துக் கொளுத்தினர். பிமல் சந்திரா டேயின் ஷோரூம் அருகில் உள்ள வேறு எந்தக் கடையையும் அந்த மர்ம நபர்கள் தொடக்கூட இல்லை.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
வீடியோ காலில் பிபிசியிடம் பேசிய பிமல் சந்திர டே, "இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதால் நாங்கள் தாக்கப்பட்டோம். வங்கதேசத்தில் இந்துவாகப் பிறந்தது எனது மிகப்பெரிய தவறு" என்று அவர் கூறினார்.
"நாங்கள் பதிலடி கொடுக்க மாட்டோம் என்று தாக்குபவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஷேக் ஹசீனா அரசின் ஆதரவாளராக இருந்ததால் அவர் குறிவைக்கப்பட்டாரா என்று பிமலிடம் நான் கேட்டேன்.
"நடைமுறையில் வங்கதேசத்தில் நாங்கள் (இந்துக்கள்) அவாமி லீக்கை ஆதரிக்கவில்லை, வேறு கட்சிகளை ஆதரிக்கிறோம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்," என்று அவர் பதில் அளித்தார்.
"எனது வியாபாரத்தின் காரணமாக நான் அவாமி லீக் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வந்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது,” என்று அவர் வினவினார்.
இப்போது சொந்த நாட்டிற்குத் திரும்புவதே தனது முன்னுரிமை என்றும் இடைக்கால அரசிடம் தனக்கு ஒரேயொரு கோரிக்கை மட்டுமே இருப்பதாகவும் பிமல் டே கூறினார்.
"எனக்கு நீதி வேண்டும். எனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
தேவாலயங்கள் மீது தாக்குதல்கள்
டாக்காவிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மதன்பூர்.
மதன்பூரின் குறுகிய தெருக்களைக் கடந்து, ஒரு பெரிய இரும்பு கேட்டை நான் அடைந்தேன். கதவு திறக்கப்பட்டபோது எனக்கு முன்னால் ஓர் அலுவலகத்தின் பயங்கரமான காட்சி இருந்தது.
எரிந்த ஆவணங்கள் மற்றும் மேசை நாற்காலிகள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. ஜன்னல்கள் உடைந்திருந்தன.
இது கிறித்தவ கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகமாக இருந்தது. இது சிறிய கடன்களை வழங்கும் ஒரு நிறுவனம். சில நேரங்களில் பிரார்த்தனை கூட்டங்களும் இங்கு நடக்கும்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
நான் அந்த அலுவலகத்தைப் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது பதற்றத்துடன் ஓடிவந்த காவலாளி, "இங்கே அதிக நேரம் நிற்காதீர்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் திரும்பி வரலாம்," என்று எச்சரித்தார்.
சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தை எரித்தவர்களைப் பற்றியே அந்தக் காவலாளி சூசகமாகக் குறிப்பிட்டார். அவர்கள் இப்போதும் சுதந்திரமாக வெளியில் இருப்பதாக அவர் கூறினார்.
அந்தத் தாக்குதல்காரர்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து கையில் கிடைக்கும் பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.
"நீங்கள் இங்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர்கள் இங்கிருந்து சென்றனர்," என்று காவலாளி மெல்லிய குரலில் பேசினார்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக சிறுபான்மை சமூக மக்கள் இந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டனர். ஆனால் இந்த அலுவலகத்தின் மேலாளர் நெடுஞ்சாலை அருகே என்னைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
"ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10:40 மணியளவில் காவலாளி என்னை தொலைபேசியில் அழைத்து தகவல் கொடுத்தார். நான் உடனடியாக அங்கு சென்றேன். பணம், ஆவணங்கள், பைபிள் புத்தகங்கள் எல்லாமே எரிந்து சாம்பலாகி இருப்பதைப் பார்த்தேன்,” என்று அந்தச் சம்பவம் குறித்து அவர் விவரித்தார்.
"இது நடந்த மூன்றாவது நாள் காலை 9 மணியளவில் நான் அலுவலகத்தை அடைந்தபோது சிலர் வலுக்கட்டாயமாக என் அலுவலகத்தில் நுழைந்து இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இது என் அலுவலகம் என்று நான் சொன்னேன்."
"கடந்த 2020ஆம் ஆண்டில் இதே கட்டடத்தில் இருந்துதான் தேவாலயம் மற்றும் சமூக சேவையை நாங்கள் தொடங்கினோம். ஆனால் இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதலை நாங்கள் எதிர்கொண்டதில்லை. ஆனால் பலமுறை மிரட்டல்கள் வந்துள்ளன," என்று அவர் கூறினார்.
பலமுறை முயன்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் பதிவு செய்யக்கூடிய எந்தவொரு போலீஸ்காரரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சிறுபான்மையினர் மத்தியில் அச்ச சூழல்
தங்களுக்கு எதிராக எந்த வன்முறைச் சம்பவமும் நடக்கவில்லை, ஆனால் தாங்கள் அச்சத்தில் இருப்பதாக, கோமிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
"வங்கதேசத்தில் இந்துக்கள் வசிக்கும் இடங்களில் ஏராளமான கொள்ளை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்," என்று கிராமத்தில் வசிக்கும் இந்து ஒருவர் கூறினார்.
அவரது கவலையின் வேர்கள் வரலாற்றின் பயங்கரமான நினைவுகளுடன் இணைந்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டில் கோமிலாவில் இருந்து தொடங்கிய இந்துக்களுக்கு எதிரான வன்முறை, நாடு முழுவதும் பரவியது. இதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் கும்பல்களால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் பல தலைமுறைகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்தாலும். நாட்டின் சுதந்திரத்திற்காக தோளோடு தோள் நின்று போராடியிருந்தாலும் அங்கு வகுப்புவாத வன்முறையின் வரலாறு மிகவும் பழமையானது.
கோமிலாவுக்கு அருகில் உள்ள நோஆக்லி பகுதி, வகுப்புவாத வன்முறைக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறது. அங்கு நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாயினர்.
நோஆக்லியின் பெயர் வரலாற்றில் பதிந்துள்ளது. அந்த வகுப்புவாத வன்முறை வெறியாட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தி பல நாட்கள் உண்ணாநோன்பு இருந்தார். அவர் 1946 நவம்பர் முதல் 1947 மார்ச் வரை இங்கு தங்கியிருந்தார்.
சிறுபான்மையினர் மீதான அணுகுமுறை எப்படி இருக்கிறது?
வங்கதேசம் ஓர் இஸ்லாமிய நாடா அல்லது மதச்சார்பற்ற ஜனநாயகமா என்ற அடிப்படைக் கேள்வி தொடர்பாக நிறைய குழப்பங்கள் உள்ளன.
வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாக நிறுவப்பட்டது. ஆனால் 1980இல் அது இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது என்பது சுவாரஸ்யமான விஷயம்.
அதன் பிறகு 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் நாட்டின் உச்சநீதிமன்றம், 1972ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் எழுதப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கை தற்போதும் பொருந்தும் என்று கூறியது.
இந்த இரண்டு விஷயங்களும் இன்றைய வங்கதேசத்தின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மதச்சார்பின்மைக்கான அரசின் அர்ப்பணிப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன.
சர்வதேச அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ், ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசத்தை 'ஓரளவு சுதந்திரமான' நாடாக, கடந்த ஆண்டு வகைப்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
"இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், ஷியா, அஹ்மதியா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மக்கள் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர்" என்று ஃப்ரீடம் ஹவுஸ் கடந்த ஆண்டு தனது அறிக்கையில் கூறியது.
"பல நேரங்களில் கும்பல்கள் அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகின்றன. அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்படுகின்றன. சமய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே தூண்டப்படுகிறது."
"சமீபத்திய ஆண்டுகளில் இந்துக்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, தீ வைத்து அழிக்கப்படுகின்றன. மேலும் இதுபோன்ற தாக்குதல்கள் 2023இலும் தொடர்ந்து நடந்துள்ளன," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள்
தலைநகரில் உள்ள தாகேஸ்வரி கோவிலில் பல இந்து சமுதாய தலைவர்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் கோபால் சந்திர தேப்நாத்.
''நீங்கள் மட்டுமல்ல, உங்கள் சமூகத்தைச் சேர்ந்த எவரும் எந்த நேரத்திலும் என்னை உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று நேற்று உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்'' என்று கோபால் தேப்நாத் கூறினார்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
"இங்குள்ள இந்து சமூதாய மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். நாங்கள் இங்கிருந்து வெளியேறினால் எங்கள் நிலங்களையும், சொத்துகளையும் கைப்பற்றிவிடலாம் என்று நினைக்கும் ஒரு சிலர் இங்குள்ளனர். அரசியல் காரணங்களுக்காகவும் நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம்,” என்றார் அவர்.
இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சம் குறித்து அவரிடம் கேட்டபோது, மற்றவர்களைப் போலவே தானும் வங்கதேசத்தில் வாழ விரும்புவதாக கோபால் தேப்நாத் கூறினார்.
கோவிலை பாதுகாக்கும் முஸ்லிம் சமூகத்தினர்
கோமிலாவின் பிரதான கோவிலில் அனிபோர்ன் சென்குப்தாவை நான் சந்தித்தேன். இந்தக் கோவிலுக்குத் தான் தினமும் வழிபட வருவதாக அவர் கூறினார்.
"மாணவர்களின் புரட்சிக்குப் பிறகு, காவல்துறையைக் காணவில்லை. ஆனால் பொது மக்கள் சமூகத்தில் மத நல்லிணக்கத்தைப் பேண முயல்கிறார்கள். உண்மை என்னவென்றால், எங்கள் கோவிலைப் பாதுகாக்க ஒவ்வோர் இரவும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து முதல் பத்து பேர் வருகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
தலைநகரில் உள்ள தாகேஸ்வரி கோவிலைவிட்டு வெளியே வரும்போது கோவிலின் வாயிலுக்கு வெளியே இரண்டு பேர் கைகளில் கம்புகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
அவர்களில் வயதில் சிறியவரின் பெயர் முகமது சைபுஸ்ஸாமான். அவர் ஒரு மௌலவி. கோவிலுக்கு வெளியே என்ன செய்கிறார் என்று அவரிடம் கேட்டேன்.
"போலீசார் காணாமல் போனதில் இருந்து இங்குள்ள மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். இது எனக்குத் தெரியும். எனவே அவர்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்கக்கூடாது என்பதற்காக இங்கு வருகிறேன்" என்றார் சைஃபுஸ்ஸாமான்.
"மதத்தின் அடிப்படையில் வங்கதேசம் பிளவுபடவில்லை என்பதை நான் முழு உலகிற்கும் சொல்ல விரும்புகிறேன். இது எனது கருத்து மட்டுமல்ல. பல முஸ்லிம் அமைப்புகள் இந்தக் கோவிலின் பாதுகாப்பை மாறி மாறி கவனித்து வருகின்றன," என்று அவர் சொன்னார்.
வைரல் வீடியோ, சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல்
அச்சம் நிறைந்த இந்தச் சூழலில், தவறான தகவல்களும் வதந்திகளும் எரியும் தீயில் மேலும் எண்ணையை ஊற்றின.
குறிப்பிட்ட ஹாஷ்டாக்கை பயன்படுத்தி தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டதாகவும், இதுபோன்ற தவறான தகவல்கள் கொண்ட பதிவுகளின் எண்ணிக்கை சுமார் ஏழு லட்சம் என்றும் அவற்றில் பல இந்தியாவில் இருந்து பதிவிடப்பட்டன என்றும் சமூக ஊடக கண்காணிப்பு அமைப்பான ’ப்ராண்ட்வாட்ச்’ (Brandwatch) தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள இந்து கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாக ஒரு பொய்யான பதிவு வைரலானது. அவரது வீட்டிற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தீ வைத்ததாக மற்றொரு சமூக ஊடகக் கணக்கில் கூறப்பட்டது.
இந்தக் கூற்றை உள்ளூர் செய்திகளுடன் பிபிசி ஒப்பிட்டுப் பார்த்தது. சமூக ஊடகப் பதிவில் உள்ள படங்களில் லிட்டன் தாஸின் வீடு என்று காட்டப்பட்ட வீடு உண்மையில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசாவின் வீடு என்பது கண்டறியப்பட்டது. அவர் ஆளும் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடையவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
"இஸ்லாமிய தீவிரவாதிகளின் கும்பல் வங்கதேசத்தில் உள்ள ஒரு கோவிலைத் தாக்கியது" என்று வைரலான மற்றொரு பதிவு கூறியது. உண்மையில் சிட்டகாங்கில் உள்ள நவக்கிரக கோவில் அருகே தீப்பிடித்தது. ஆனால் கோவிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
கொந்தளிப்பான அரசியல் சூழல்
தங்கள் நாடு தொடர்பான திசைதிருப்பும் தகவல்களின் பின்னணியில் இந்திய சமூக ஊடகப் பயனர்கள் இருப்பதாக வங்கதேசத்தில் உள்ள உள்ளூர் உண்மை சரிபார்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆகவே இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், DEBALIN ROY/BBC
டாக்காவின் குல்ஷான் பகுதியில் அரசியல் ஆய்வாளரான அஷ்ரஃப் கைசரை நான் சந்தித்தேன்.
"சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதற்கு வேறு ஒரு கோணமும் உள்ளது. இது அதிகாரத்தில் இருந்த கட்சியின் விரிவான செயல் உத்தியின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். வங்கதேச விவகாரங்களுக்குள் அண்டை நாடான இந்தியாவை கொண்டு வருவதே இதன் நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
"இத்தகைய விஷயங்கள் உலகம் முழுவதும் பரவி, வங்கதேசம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை என்ற எண்ணத்தையும் உருவாக்க உதவுகிறது." என்றார் அவர்
இந்துக்கள் மத்தியில் உள்ள பாதுகாப்பின்மை உணர்வு பாஜகவையும் அவாமி லீக்கையும் ஒன்றுக்கொன்று இணைப்பதாக அஷ்ரஃப் கைசர் கூறினார்.
"வங்கதேசத்தின் இந்துக்களை பாதுகாப்பது பா.ஜ.கவின் அரசியலின் முக்கிய அம்சம். ஒருவகையில் அவாமி லீக்கிற்கு அரசியல் உதவி வழங்குவதாகவும் இது இருக்கும். ஏனெனில் எட்டு அல்லது ஒன்பது சதவீத இந்து மக்கள்தொகை, அவாமி லீக்கின் பெரிய வாக்கு வங்கி,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மெதுவாகத் திரும்பிக்கொண்டிருக்கும் இயல்பு நிலை
நாட்கள் செல்லச் செல்ல வங்கதேச நகரங்களில் இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது சுவர்களில் புதிய பெயின்ட் அடித்து வருகின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் தங்களுக்கு நிதி திரட்ட முயல்கின்றனர்.
அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் திறக்கத் தொடங்கியுள்ளன, அவற்றில் வாடிக்கையாளர்களின் கூட்டம் காணப்படுகிறது.
முன்பு முழுக்க முழுக்க மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை நம்பியிருந்த சாலைகளின் போக்குவரத்து மேலாண்மை தற்போது படிப்படியாக மீண்டும் போக்குவரத்துக் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அத்தியாவசியப் பொருட்களின் வரத்தும் விலையும் சீராக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறும் வரை நிகழ்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் மரணத்திற்குக் காவல்துறையினரே பொறுப்பு என்று கூறப்பட்டு வந்தது. அவர்களுக்கு எதிராகக் கோபச் சூழல் இருந்தது. அவர்களும் இப்போது காவல் நிலையங்களில் பணிக்குத் திரும்புகின்றனர்.
நகரங்களில் காவல் துறையினர் இப்போதும் குறைவாகவே தென்படுகின்றனர். அதே நேரத்தில் நகரங்களைவிட கிராமப்புறங்களில் பாதுகாப்பின்மை சூழல் அதிகமாக உள்ளது.
ஆனால் வங்கதேச இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுக்க இடைக்கால அரசு அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும்.
(கூடுதல் தகவல்கள்- பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் டீம் மற்றும் பிபிசி வெரிஃபை)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












