ஹிண்டன்பர்க் vs செபி தலைவர்: இந்த மிகப்பெரிய கேள்விக்கு பதில் எங்கே?

ஹிண்டன்பர்க் - அதானி: செபி தலைவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச்
    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோருக்கு எதிராக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

அதானி குழுமத்தின் பங்குசந்தை முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டு தெரிவித்தது.

ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 2023 இல், அதானி குழுமம் 'கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி' செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வரி புகலிட நாடுகளில் (முதலீட்டிற்கு வரி செலுத்த வேண்டியதில்லை அல்லது மிகக் குறைந்த வரி செலுத்த வேண்டிய நாடுகள்) உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அதானியின் பங்குகளின் விலை முறைகேடாக உயர்த்தப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹிண்டன்பர்க் இவ்வாறு அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகு, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன, மேலும் அதானி குழுமமும் பெரிய இழப்பைச் சந்தித்தது.

அதன் பின்னர் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஒரு அறிக்கையை வெளியிட்டார், அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தை "தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன்" குறிவைக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்ற குழுவுக்கு 'செபி’ ஆணையம் அளித்த பதில்

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி : செபி தலைமையை நோக்கி வீசப்படும் கேள்வி கணைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு மே மாதம், 6 பேர் கொண்ட குழு நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அதானி வழக்கில் எந்த முறைகேடுகளையும் செபியால் கண்டறிய முடியவில்லை என்று கூறியது.

ஜனவரி மாதம் அறிக்கை வெளியான பிறகு இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஆண்டு மே மாதம், இந்த குழு நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், அதானி வழக்கில் எந்த முறைகேடுகளையும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (செபி) கண்டறிய முடியவில்லை என்று கூறியது.

அந்த 173 பக்க அறிக்கையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்களில் சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் இருப்பதாக செபி ஆணையம் நம்புவதாகக் கூறியது, ஆனால் எப்படி விதிமீறல்கள் நிகழ்ந்தன என்பதைக் கண்டறிய முடியவில்லை.

இப்போது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று, செபி தலைவருக்கும் அவரது கணவருக்கும், அதானி குழுமத்துடன் தொடர்புடைய ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குகள் இருப்பதாகக் ஹிண்டன்பர்க் கூறுகிறது. செபி தலைவர் மாதபி புச், அதானி மீதான வழக்கை விசாரிக்கும் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாதபி பூரி வைத்துள்ள பங்குகள் காரணமாக இருக்கலாம்” என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், தேவையான அனைத்துத் தகவல்களும் செபியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

பதில் கிடைக்காத கேள்விகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி : செபி தலைமையை நோக்கி வீசப்படும் கேள்வி கணைகள்

பட மூலாதாரம், @AdaniOnline

படக்குறிப்பு, ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் இந்த பதிலை அளித்துள்ளது.

சமீபத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, மாதபி புச்சிடம் எழுப்பப்படும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அதானி குழும வழக்கை விசாரிக்கும் செபி குழுவில் அவர் அங்கம் வகித்தாரா இல்லையா?

இந்தக் கேள்விக்கான பதிலை செபி ஆணையமோ அல்லது மாதபி தரப்போ இன்னும் தெளிவாகக் கூறவில்லை.

இருப்பினும், ஊடக செய்திகளின்படி , அதானி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவிற்கு செபி தலைவர் மதாபி புச் விளக்கம் அளித்ததாக கூறுகின்றன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மாதபி புச் செபி ஆணையத்தின் தலைவராக விசாரணையின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த பத்திரிகையாளர், "இந்த முழு விஷயத்திலும் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன - முதலாவதாக, மாதபி மற்றும் தவல் புச் தங்களுக்குச் சொந்தமானதாகக் கூறும் நிறுவனத்தில் தனிப்பட்ட முதலீடுகளைச் செய்துள்ளனர். அதானி வழக்கு விசாரணையில் மாதபி புச் பங்கேற்றாரா இல்லையா என்பது தீர்க்கப்படாத இரண்டாவது கேள்வி.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனத்துடன் கடந்த காலத்தில் முதலீடு செய்திருந்தால், சம்பந்தப்பட்டிருந்தால், விசாரணையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த கேள்விக்கான தெளிவான பதில் இன்னும் வெளிவரவில்லை.

ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை சொல்வது என்ன?

வரி புகலிட நாடான பெர்முடாவை தளமாகக் கொண்ட குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் நிறுவனம், கெளதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று என்று லாப நோக்கற்ற 'அதானி வாட்ச்' என்ற அமைப்பு 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறிவதாக ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது.

''இந்த நிறுவனம் பங்குச் சந்தையை செயற்கையாக உயர்த்தவும், அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் மொரிஷியஸ் நிறுவனமான ஐபிஇ பிளஸில் முதலீடு செய்து, இதன் வழியாக இந்திய பங்குச் சந்தைக்குள் பணம் முதலீடு செய்யப்பட்டது.

மொரிஷியஸ் மற்றும் பெர்முடாவில் உள்ள அதானி குழுமத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனங்களை விசாரிப்பதில் `செபி’ அதிக ஆர்வம் காட்டவில்லை'' என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.

''ஒரு 'விசில்ப்ளோயர்’ (சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் பற்றித் தகவல் அளிப்பவர்) கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்தனர் என்பதை உறுதியானது. இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கவும் அதன் மூலம் சந்தை நிலையை மாற்றியமைக்கவும் பயன்படுத்தப்பட்டது'' என ஹிண்டன்பர்க் கூறுகிறது.

"மாதபி மற்றும் தவல் புச் ஜூன் 2015 இல் `ஐபிஇ பிளஸ்’ நிறுவனத்தில் தங்கள் முதல் முதலீட்டைச் செய்தனர். இது 2017 இல் மாதபி புச் செபியின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நடந்துள்ளது.

ஆனால் செபியில் அவரது மனைவி மாதபி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தவல் புச் மொரிஷியஸ் நிறுவனத்தின் பங்குகளை தனது பெயருக்கு மாற்றி கொண்டார்.'' என ஹிண்டன்பர்க் கூறுகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் இந்த பதிலை அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மாதபி புச் தரப்பு விளக்கம்

ஹிண்டன்பர்க்கின் அறிக்கையின்படி, பிப்ரவரி 2018 இல், மாதபி புச் தனது தனிப்பட்ட ஜிமெயில் கணக்கிலிருந்து தனது கணவருக்கு குளோபல் டைனமிக்ஸ் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் (GDOF) நிறுவனத்தில் உள்ள பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் அல்லது விற்க வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியதாக கூறியுள்ளது.

ஆனால், மாதபி புச் தம்பதி வெளியிட்ட பதில் அறிக்கையில், “ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015-இல் அவர்கள் [மாதபி மற்றும் தவல் புச்] இருவரும் சிங்கப்பூர் குடிமக்களாக இருந்தபோது செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.

“தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லி காலத்திலிருந்தே தவலின் நண்பர் என்பதாலும், சிட்டி பேங்க், ஜேபி மோர்கன், மற்றும் 3ஐ குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதாலும், பல தசாப்தங்களாக வலுவான முதலீட்டுத் தொழிலைக் கொண்டிருந்ததாலும் இந்த நிதியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது,” என்கிறது.

மாதபி குறிப்பிட்ட அந்த `அனில் அஹுஜா’ என்னும் நபர் தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கையில், அவர் 2017 வரை அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநராக இருந்ததாகக் கூறுகிறது. அதானி பவர் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் மாதபி புட்ச் தனது அறிக்கையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை.

செபி ஆணையத்தின் அறிக்கை

ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையின் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டு செபி தனது எதிர்வினையை பதிவு செய்துள்ளது.

அதில், ஹிண்டன்பர்க் அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், செபியால் முறையாக விசாரிக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

அதானி குழும விவகாரத்தில், 24 விசாரணைகளில் 23 விசாரணைகளை செபி முடித்துள்ளதாகவும், கடைசி விசாரணையும் முடிவடைய உள்ளதாகவும் செபி தெரிவித்துள்ளது.

செபியின் கூற்றுப்படி, அதானி குழுமத்திற்கு 100 க்கும் மேற்பட்ட சம்மன்கள் மற்றும் சுமார் 1,100 கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. இது தவிர, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுப்பாட்டு ஆணையங்களுடன் செபி 300க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தவிர, 12,000 பக்க ஆவணங்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டது.

மேலும், “சுய பிரதிபலன்கள் சார்ந்து செய்யப்படும் செயல்களை விசாரிக்க செபியிடம் முறையான வழிமுறைகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கூறுகையில், சமீப காலமாக இந்தியப் பங்குச் சந்தையில் அதிகளவானோர் தங்களது வருமானத்தை முதலீடு செய்து வருகின்றனர். அவர்களின் முதலீடுகள் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வது ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

"பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் இந்தியாவின் ஆணையமான செபி மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் சேமிப்பு ஆபத்தில் உள்ளது, எனவே இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

"இது மூன்று பெரிய கேள்விகளை எழுப்புகிறது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் மாதபி ஏன் ராஜினாமா செய்யவில்லை?

"இரண்டாவது,பங்கு சந்தையில் ஏதேனும் தவறு நடந்தால், முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள், செபி தலைவரா, பிரதமர் நரேந்திர மோதியா அல்லது அதானியா?"

"மூன்றாவது, இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, இந்த விஷயத்தையும் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா?"

``இந்த விவகாரம் முழுவதையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்று கொள்ள பிரதமர் மோதி ஏன் பயப்படுகிறார் என்பது இப்போது தெளிவாகிறது.” என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், "செபி தலைவர், அதானி குழுமத்தில் முதலீட்டாளராக இருப்பது செபி ஆணையத்துக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள கலங்கம் ஆகும்”

எனவே அதானி தொடர்பாக செபிக்கு அனுப்பப்பட்ட புகார்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படாமல் போனதில் ஆச்சரியமில்லை.

மஹுவா மொய்த்ரா மற்றொரு ட்வீட் பதிவில், “மாதபியின் தலைமையில் அதானி மீது செபி நடத்தும் எந்த விசாரணையையும் நம்ப முடியாது. இந்த தகவல் பகிரங்கமான பிறகு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)