ருமேனிய வீராங்கனை மேல் முறையீட்டில் வெற்றி - வினேஷ் போகாட் வெள்ளி வெல்ல வாய்ப்பு அதிகரிப்பா?

பட மூலாதாரம், Getty Images
பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகாட்டின் மேல் முறையீடு மீது வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு செய்த மேல்முறையீட்டில் சிலிஸின் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டு பார்போசுக்கு வழங்கப்பட வேண்டுமென சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பின் தாக்கம் வினேஷ் போகாட் வழக்கிலும் எதிரொலிக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிலிஸ் தொடர்பான வழக்கின் முழு விவரம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வெண்கலப் பதக்கத்தை இழந்த ஜோர்டான் சிலிஸ்

பட மூலாதாரம், Getty Images
பாரிஸில் கடந்த வாரம் திங்கட்கிழமை (05-08-2024) அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸ் தொடக்கத்தில் 13.666 புள்ளிகள் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.
அப்போது 13.7 புள்ளிகள் பெற்றிருந்த ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா பார்போசு மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அரங்கில் இருந்த டிஜிட்டல் திரையிலும் அனா பார்போசு பெயர் மூன்றாம் இடத்தில் தோன்றியது.
இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் கொண்டாடத் துவங்கினார் அனா பார்போசு. ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் சிசிலி லாண்டி, ஜோர்டான் சிலிஸ் பெற்ற புள்ளிகள் தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது என நடுவர்களிடம் முறையிட்டார். இதை பரிசீலித்த நடுவர்கள் சிலிஸ் பெற்ற புள்ளிகளை13.766 ஆக உயர்த்தினார்கள்.
இதையடுத்து ஜோர்டான் சிலிஸின் பெயர் திரையில் மூன்றாம் இடத்திற்கும், அனா பார்போசுவின் பெயர் நான்காம் இடத்திற்கும் நகர்ந்தது. இதைக் கண்டு, கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார் அனா பார்போசு.
இந்த மாற்றத்திற்கு ருமேனியாவின் ஒலிம்பிக் குழு கடுமையான எதிர்ப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் பதிவு செய்தது.
“இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று கூறிய ருமேனியாவின் பிரதமர் மார்செல் சியோலாகு, ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்.
ஒலிம்பிக்கில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் நான்கு நொடிகள் தாமதமாக மேல்முறையீடு செய்தார் என்பதை விளையாட்டுக்கான நடுவர் மன்றத்திடம் சுட்டிக்காட்டிய ருமேனிய ஒலிம்பிக் கமிட்டி, சிலிஸின் புள்ளிகள் மாற்றப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்தது.

பட மூலாதாரம், Getty Images
இதை ஏற்றுக்கொண்ட நடுவர் மன்றம், ஜோர்டான் சிலிஸுக்கு 13.666 என்ற புள்ளிகளே இறுதியானது என அறிவித்தது. சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பும் (FIG) இதை உறுதிசெய்தது. வெண்கலப் பதக்கத்தை பார்போசுக்கு மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
பதக்கத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியுடனும், மீண்டும் பதக்கம் வழங்குவதற்கான விழா நடத்துவது குறித்து ருமேனிய ஒலிம்பிக் கமிட்டியுடனும் ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியது.
கடந்த வாரம், அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்ட போது, அது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ருமேனியாவின் அனா பார்போசுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலிஸை தாக்கியும் பதிவுகள் வெளியாகின.
சிலிஸ் மீதான இணைய விமர்சனங்கள் குறித்து பேசிய அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி, “எந்தவொரு விளையாட்டு வீரரும் இத்தகைய மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடாது. இழிவான இணையத் தாக்குதல்களையும், அதை ஆதரிப்பவர்களை அல்லது தூண்டுபவர்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேர்மையுடன் நடந்துகொண்டதற்காக சிலிஸை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்போம்." எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பிரேசிலின் ரெபேகா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை சிமோனா பைல்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
வினேஷ் போகாட் மேல்முறையீடு

பட மூலாதாரம், Getty Images
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது, அவருக்கான வெள்ளிப் பதக்கம் உறுதியானது.
அதுவும் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தியிருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை யுய் சுசாகி உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து, அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இறுதிப்போட்டிக்கு முன் மல்யுத்த வீராங்கனைகளின் எடை சோதனை செய்யப்படுவது வழக்கம். அவர்கள் எந்த எடைப் பிரிவில் போட்டியிடுகிறார்களோ, அதற்கான எடையுடன் இருப்பது அவசியம்.
பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் இறுதிப்போட்டி நடக்கவிருந்த நாளன்று காலையில் காலை எடையை அளவிடும்போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்திய குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.
அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ் (Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் தோற்கடித்திருந்தார். வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது வெள்ளிப் பதக்கம் குஸ்மோனுக்கு வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் குஸ்மோனுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நடுவர் மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கில் சனிக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அது ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தீர்ப்பை நடுவர் மன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
வினேஷ் போகாட்டின் மேல் முறையீடு மீது வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு (பாரிஸ் நேரப்படி மாலை 6 மணி) தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.
சிலிஸ் வழக்கின் தீர்ப்பு வினேஷ் வழக்கிலும் எதிரொலிக்குமா?
ஜோர்டான் சிலிஸ் வழக்கின் தீர்ப்பு, வினேஷ் போகாட் வழக்கிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆனால் இந்த இரு வழக்குகளிலும், சூழ்நிலைகள் வேறுபடுகின்றன. சிலிஸ் வழக்கில், மேல்முறையீடு நேரம் தொடர்பான சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் (FIG) விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டதால், வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக நடுவர் மன்றம் அறிவித்தது.
இதற்கு நேர்மாறாக, வினேஷ் வழக்கில் மல்யுத்தத்தை மேற்பார்வையிடும் சர்வதேச அமைப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்தது. அதாவது வினேஷின் எடை குறித்த விவகாரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள் எதிர்பார்க்கும் இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு வினேஷுக்கு சாதகமாக வெளிவந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7ஆக உயரும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












