ரஷ்யாவில் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவலை யுக்ரேன் செய்தது எப்படி?

குரஸ்க் பகுதி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, குர்ஸ்க் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
    • எழுதியவர், ஜியான்லூகா அவாக்னினா மற்றும் ஃபிராங்க் கார்ட்னர், பாதுகாப்பு துறை நிருபர்
    • பதவி, பிபிசி செய்திகள்

1000 சதுர கிலோ மீட்டர் ரஷ்ய பகுதியை யுக்ரேன் படைகள் கைபற்றி உள்ளதாக யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி கூறியுள்ளார். ரஷ்யா யுக்ரேன் இடையில் முழு கட்ட போர் தொடங்கிய இரண்டரை வருடத்தில் இதுவே யுக்ரேனின் மிகப்பெரிய எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகும்.

இந்த தாக்குதல் தொடங்கிய ஏழு நாட்களுக்கு பிறகு யுக்ரேன் படைகள் ''குர்ஸ்க் பகுதியில் தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை'' மேற்கொண்டுள்ளதாக ராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது. இப்போது ரஷ்யா மீதே போர் திரும்பியிருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

யுக்ரேனின் இந்த தாக்குதலை ஒரு ''ஆத்திரமூட்டும் செயல்'' என கூறிய ரஷ்ய அதிபர் புதின், ''எதிரி படைகளை ரஷ்ய எல்லையை விட்டு வெளியேற்ற'' ரஷ்ய படைகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெளியேற்றப்படும் மக்கள்

பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் மேற்கு ரஷ்யா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 59,000 மக்களும் வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள 28 கிராமங்கள் யுக்ரேன் படைகளால் கைபற்றப்பட்டுள்ளதாகவும், 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு ''மிகவும் கடினமான சூழல்'' நிலவுவதாகவும் உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீர் தாக்குதலைத் தொடங்கி யுக்ரேன் படைகள், ரஷ்ய எல்லைக்குள் 18 மைல்கள் (30கிமீ) வரை ஊடுருவி உள்ளன.

இந்த தாக்குதல் யுக்ரேன் நாட்டுக்கு மனரீதியில் வலிமை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தி யுக்ரேனுக்கு புதிய ஆபத்துகளை கொண்டுவரும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஊடுருவலால் ரஷ்யா மிகவும் கோபமடைந்து யுக்ரேனின் குடிமக்கள் மற்றும் கட்டமைப்பின் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்கக்கூடும் என பெயர் கூற விரும்பாத பிரிட்டனின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

"முரண்பாடுகளை விதைப்பது, சச்சரவு ஏற்படுத்துவது, மக்களை அச்சுறுத்துவது, ரஷ்ய சமுதாயத்தின் ஒற்றுமையை குலைப்பது இதுவே எதிரிகளின் வெளிப்படையான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது" திங்கட்கிழமை அன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட உரையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

"நமது நாட்டில் இருந்து எதிரி படைகளை விரட்டுவதே பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய பணியாகும்", என்று அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா அனுப்பிய படைகளின் படம்

பட மூலாதாரம், RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE

படக்குறிப்பு, இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா அனுப்பிய படைகளின் படம்

1 லட்சத்து 21 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அப்பகுதியின் ஆளுநர் கூறினார். யுக்ரேன் படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய குடிமக்கள் தங்கியிருப்பதாக அவர் புதினிடம் தெரிவித்துள்ளார்.

"அவர்களின் நிலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது", என்று அவர் கூறினார்.

ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க ஜன்னல்கள் இல்லாத,உறுதியான சுவர்கள் கொண்ட வீடுகளில் தஞ்சம் அடையுமாறு அவர் மக்களை எச்சரித்துள்ளார்.

குர்ஸ்கிற்கு அருகிலுள்ள பெல்கோரோடில், சுமார் 11,000 மக்கள் வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

கிராஸ்னயா யருகா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடம் "எல்லையில் எதிரிகளின் செயல்பாடு" காரணமாக அவர்கள் வெளியேற்றப்படுவதாக ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார்.

இதே போல அவர் இங்கு ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார், மேலும் மக்களை அவர்கள் வீடுகளின் அடித்தளங்களில் தங்குமாறு கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற யுக்ரேன் அதிபர்"புதின் மிகவும் மோசமாக போரிட விரும்பினால், இது போன்ற நிலைக்கு ரஷ்யா பழகிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

'ரஷ்யா மீதே போர் திரும்பியுள்ளது'

"மற்ற நாடுகள் மீது ரஷ்யா போர் புரிந்துள்ளது, இப்போது ரஷ்யா மீது போர் திரும்பியுள்ளது. யுக்ரேன் எப்போதும் அமைதியை மட்டுமே விரும்புகிறது, நாங்கள் நிச்சயமாக அமைதியை உறுதி செய்வோம்" என்றும் யுக்ரேன் அதிபர் கூறினார்.

சிறிய ஊடுருவல் நடைபெறுவதாக தொடக்கத்தில் ரஷ்ய எல்லைக் காவலர்களால் கூறப்பட்டதைவிட , ஆயிரக்கணக்கான யுக்ரேன் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ரஷ்யாவில் அதிகபட்ச இழப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அந்நாட்டின் நிலைமையை சீர்குலைப்பதே' யுக்ரேன் படையின் நோக்கமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகைமையிடம் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு உள்நாட்டில் அரசியலில் செல்வாக்கு குறையக்கூடும் என்று நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் பேசியகர்ட் வோல்கர் பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார்.

அதிபர் புதின் மற்றும் அவர் இந்த போரை நடத்திய விதத்தின் காரணத்தால் மட்டுமே ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் படைகளின் ஊடுருவல் நடைபெற்றது என்று அவர் கூறினார்.

"இதனால் ரஷ்யாவில் பொது மக்களுக்கு மட்டுமே பாதிப்பு, பணக்காரர்களுக்கு அல்ல. ரஷ்ய நாட்டின் மீதான தாக்குதலை புதினே தூண்டிவிட்டு,தற்போது மக்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்'' என அவர் கூறினார்.

அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து

பட மூலாதாரம், UKRAINIAN PRESIDENCY/HANDOUT

படக்குறிப்பு, யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது

திங்கட்கிழமையன்று கீவ் நகரில் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான சந்திப்பின் போது, யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய போர்த் தாக்குதலை "புத்திசாலித்தனமானது" மற்றும் "தைரியமானது" என்று குறிப்பிட்ட அமெரிக்க செனடர் லிண்ட்சே க்ராஹம், யுக்ரேனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறு அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தை வலியுறுத்தினார்.

குர்ஸ்க் பகுதிக்குள் யுக்ரேன் எவ்வாறு நுழைய முடிந்தது என்று ரஷ்யாவில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஷ்ய சார்புடைய போர் குறித்த வலைதள எழுத்தளரான பொடோல்யாகா இந்த நிலைமையை "ஆபத்தானது" என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்த நிலைக்கு ரஷ்யாவின் ஆயுதப் படைகள் கடுமையான பதிலடி கொடுக்க "நீண்ட காலம் எடுக்காது" என்றார்.

ரஷ்ய நட்பு நாடான பெலாரஸ், யுக்ரேன் தனது வான்வெளிக்குள் டிரோன் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அந்நாட்டின் எல்லையில் தனது சொந்த படைகளை வலுப்படுத்தவிருப்பதாக கூறியுள்ளது.

இதற்கிடையில், திங்கள்கிழமை அன்று யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ஆனால் உடனடியாக தீக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

யுக்ரேனை அச்சுறுத்தவே ரஷ்யா வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். மறுபுறம் யுக்ரேனின் தாக்குதலாலே இது ஏற்பட்டது என்று ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட அப்பகுதி உள்ளூர் ஆளுநர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)