அமெரிக்கா - ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் - திரைக்குப் பின்னே ரகசியமாக நடந்தது என்ன?

அமெரிக்கா - ரஷ்யா ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கரேத் எவன்ஸ்
    • பதவி, பிபிசி வாஷிங்டன்

ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் பற்றிய ரகசிய பேச்சுவார்த்தைகள் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), ரஷ்யாவில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று அமெரிக்கக் கைதிகள் அமெரிக்கா திரும்பியுள்ளனர். அவர்களை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் வரவேற்றனர்.

அதேபோல் வெவ்வேறு நாடுகளின் சிறைகளில் இருந்த 10 ரஷ்யக் கைதிகள் ரஷ்யா திரும்பியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அவர்களை மாஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்றார்.

கடந்த வியாழன் அன்று (ஆகஸ்ட் 1) ஒரு ரஷ்யக் கொலையாளியும் ஒரு அமெரிக்க ஊடக நிருபரும் விடுதலை செய்யப்பட்டு துருக்கியில் தனித்தனி விமானங்களில் ஏற்றப்பட்டது ​​கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

22 கைதிகளை உள்ளடக்கிய இந்தச் செயல்முறைக்கான பேச்சுவார்த்தை 2022-இல் துவங்கப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான இந்தப் பேச்சுவார்த்தை திரைக்குப் பின்னால் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரம் காட்டியதையடுத்து, விவகாரம் வெளியே கசியத் துவங்கியது. சமீப வாரங்களில் இந்தச் செயல்முறைகள் தீவிரமடைந்து, ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் பார்வைக்கும் வந்தது.

பேச்சுவார்த்தைகள் சில சமயங்களில் சிக்கலான தருணங்களைக் கொண்டிருந்தன. யுக்ரேன் போரில் அமெரிக்கா-ரஷ்யா இடையே பதற்றங்கள் அதிகரித்தபோது சிக்கல்கள் எழுந்தன.

ரஷ்யா-அமெரிக்கா கைதிகள் பரிமாற்றம்

பட மூலாதாரம், US Government

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட இந்த படத்தில், இவான் கெர்ஷ்கோவிச் (இடது), அல்சு குர்மாஷேவா (வலது), மற்றும் பால் வீலன் (வலமிருந்து இரண்டாவது), மற்றும் மற்றவர்கள் ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் விமானத்தில் இருப்பதைக் காட்டுகிறது.
ரகசியப் பேச்சுவார்த்தை, தீவிர முயற்சி : ரஷ்யா - அமெரிக்கா கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் இறுதி நிமிடங்கள்!

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா-ரஷ்யா-ஜெர்மனி இடையே நடந்த பேச்சுவார்த்தை

"இது பல மாதங்களாகப் பல சுற்றுகளாக மேற்கொள்ளப்பட்ட சிக்கலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக நிகழ்ந்தது," என்று இந்த ஒப்பந்தத்தில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு கூறினார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் வியாழன் அன்று பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் உட்பட செய்தியாளர்களுடனான உரையாடலில் கைதிகள் பரிமாற்ற நிகழ்வுகளின் விரிவான காலவரிசையை விவரித்தனர்.

2022-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது ரஷ்யா, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை முன்னெடுத்ததாக முதல் குறிப்பு வந்தது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்கக் கூடைப்பந்து நட்சத்திரமான பிரிட்னி கிரைனர், 2022-இல் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தின.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், பிரபல ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் பௌட் என்பவரை அமெரிக்கா விடுவித்து, அதற்கு இணையான உயர்மட்ட பரிமாற்றத்தில் கிரைனர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அந்த உரையாடல்களின் போது, ​​ரஷ்யாவின் நேரடி உத்தரவின் பேரில் பிஸியான பெர்லின் பூங்காவில் ஒரு நபரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஜெர்மனியில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் வாடிம் கிராசிகோவ் என்ற கொலைக் குற்றவாளியை விடுவிக்க ரஷ்யா விரும்பியதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராசிகோவின் விடுதலைக்கு ரஷ்யா அழுத்தம் கொடுப்பதாக சல்லிவன் தனது ஜெர்மன் கூட்டாளரிடம் தெரிவித்தார். மேலும், அப்போது ரஷ்யாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவரும், புதினின் வெளிப்படையான விமர்சகருமான அலெக்ஸி நவல்னிக்கு (Alexei Navalny) பதில் ஜெர்மனி அவரை விடுவிப்பது பற்றி யோசிக்குமா என்பதையும் விசாரித்தார்.

ரகசியப் பேச்சுவார்த்தை, தீவிர முயற்சி : ரஷ்யா - அமெரிக்கா கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் இறுதி நிமிடங்கள்!

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்ய குற்றவாளி கிராசிகோவின் தேதியிடப்படாத படம்

அமெரிக்கப் பத்திரிகையாளரின் கைது

ஆனால், ஜெர்மனி தனது சொந்த மண்ணில் இவ்வளவு கொடூரமான கொலை செய்த ஒரு கொலைகாரரை விடுவிக்கத் தயங்கியது.

ஜெர்மனியிடம் இருந்து சல்லிவன் உறுதியான பதிலைப் பெறவில்லை. ஆனாலும், 2022-இல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆரம்ப உரையாடல்கள், சமீபத்திய வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரிய, மிகவும் சிக்கலான பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு வழி வகுக்க உதவியது.

இரு தரப்பும் தங்களின் விருப்பங்களை ஓரளவுக்கு சமிக்ஞை செய்து கொண்டன. ரஷ்யாவைப் பொறுத்தவரை, கிராசிகோவ் தேவை என்பதை அமெரிக்காவுக்குத் தெளிவுபடுத்தியது.

அதே சமயம், அமெரிக்கா நவல்னியின் விடுதலையை மட்டுமின்றி, 2018-இல் ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் பால் வீலனின் விடுதலையையும் விரும்பியது.

சாத்தியமான பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஆரம்பக் கட்ட முயற்சிகள் பின்னர் வடிவம் பெறத் தொடங்கின. ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது.

2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், நியூ ஜெர்சியைச் சேர்ந்த 31 வயதான 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நிருபர் ஒரு செய்தி சேகரிப்பு பயணத்தில் இருந்தபோது ரஷ்ய உளவுத்துறை முகவர்களால் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து கண்டன அலைகளை எழுப்பியது.

கைதுக்கு அடுத்த நாளே அதிபர் பைடன் சல்லிவனையும், வீலனையும் விடுதலை செய்து அழைத்து வரும் செயல்முறையை இணைத்து ஒரே ஒப்பந்தமாகச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

ரஷ்யாவை நேரடியாகத் தொடர்புகொண்ட அமெரிக்கா

அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவை தொடர்பு கொண்டது. பேச்சுவார்த்தைகள் இருதரப்பின் ஒப்புதலுடன் தொடங்கியது, வெள்ளை மாளிகை அதிகாரிகள், அந்தந்த வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடினர்.

ஆனால் உரையாடல்கள் இந்த உயர்மட்ட வெளியுறவுத் தூதர்களிடமிருந்து ரகசிய உளவுத்துறை சேவை அதிகாரிகள் வசம் நகர்ந்தது. கெர்ஷ்கோவிச் (Gershkovich) உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் அமெரிக்கா இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வு முகமையைச் சம்பந்தப்படுத்த தயங்கியது. புலனாய்வு அதிகாரிகளால் இந்த விவகாரம் வேறு கோணத்தை அடையும் என்று அஞ்சியது.

இந்த பதட்டமான பேச்சுவார்த்தைகள் 2023-இன் பிற்பகுதியில் தொடர்ந்த போது, அமெரிக்கா எதிர்பார்க்கும் எந்த ஒப்பந்தத்திற்கும் கிராசிகோவின் விடுதலை முக்கியமானது என்பதை அது புரிந்து கொண்டது என்று மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் விவரித்தனர்.

58 வயதான கொலையாளி கிராசிகோவின் விடுதலையைத் தவிர்த்துப் பிற சலுகைகள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், கிராசிகோவ் ஜெர்மனியில் சிறையில் இருந்தார். அமெரிக்காவில் அல்ல, அவரை ஒருதலைப்பட்சமாக விடுவிக்க அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என்பதே உண்மை.

கிராசிகோவை விடுதலை செய்வதற்கும், இந்த ஒப்பந்தத்திற்கான ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் ஜெர்மன் பிரதிநிதியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் சல்லிவன் 2023-இன் பிற்பகுதியிலும், ஜனவரி 2024-இன் தொடக்கத்திலும் கிட்டத்தட்ட வாரந்தோறும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் வெற்றி ஜெர்மனி கிராசிகோவை விடுவிப்பதைச் சார்ந்துள்ளது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கினர்.

ரஷ்யாவின் நிலைப்பாடும் அமெரிக்காவின் தீவிர முயற்சியும்

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கர்களுக்கு ஈடாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய உளவாளிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடாக இருந்தது.

அமெரிக்கா இதைக் கருத்தில் கொண்டு, கணிசமான தீர்வைப் பெறும் நம்பிக்கையில் அதன் நட்பு நாடுகளால் சிறைபிடிக்கப்பட்ட முக்கிய ரஷ்ய உளவாளிகளைக் கண்டறிய முயன்றது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகையின் கூற்றுபடி, அமெரிக்க அதிகாரிகள், வெளியுறவு தூதர்கள் மற்றும் புலனாய்வு ஊழியர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். நட்பு நாடுகள் ரஷ்ய உளவாளிகளை சிறையில் வைத்துள்ளனவா என்பதை அறிய முயன்றனர்.

அமெரிக்காவின் இந்தத் தீவிர முயற்சியின் விளைவாக தான் தற்போது அதன் நட்பு நாடுகள் ரஷ்ய உளவாளிகளை விடுதலை செய்துள்ளனர்.

வியாழன் அன்று (ஆகஸ்ட் 1) போலந்து, ஸ்லோவேனியா மற்றும் நார்வே சிறைகளில் இருந்து ரஷ்யர்கள் விடுவிக்கப்பட்டது அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் வெற்றியின் அடையாளம்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ், வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனைச் சந்தித்தார்.

பிப்ரவரியில் நடந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் அதிபர்கள் ரகசிய பரிமாற்ற ஒப்பந்தம் பற்றி விவாதித்தனர்
படக்குறிப்பு, முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் ஒரு நேர்காணலில், விளாடிமிர் புதின்

தோல்வி அடைந்த ஒப்பந்தம்

வியாழன் அன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் வழங்கிய பட்டியலின்படி, கிராசிகோவ், நவல்னி, வீலன், கெர்ஷ்கோவிச் ஆகிய அனைத்து முக்கிய நபர்களையும் உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்திற்கான கோரிக்கைகளைப் பற்றி அவர்கள் விவாதித்தனர்.

ரஷ்யாவிடமிருந்தும் நேர்மறையான சமிக்ஞைகள் வந்தன. பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் ஒரு நேர்காணலில், விளாடிமிர் புதின் சிறையில் இருந்த கெர்ஷ்கோவிச்சைப் பற்றி பேசினார்.

"கெர்ஷ்கோவிச் தனது தாய்நாட்டிற்கு திரும்பலாம். நான் அதை எதிர்க்க மாட்டேன்," என்று கூறினார்.

பிபிசி-யின் ரஷ்ய சேவை ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் குறிப்பிட்டது போல், இது மிகவும் வெளிப்படையான குறிப்பு: "ரஷ்யா ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது,” என்றார்.

புதினின் அந்த நேர்காணலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஆகியோருக்கு இடையிலான வெள்ளை மாளிகை சந்திப்பு நிகழ்ந்தது.

அதன் பிறகு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி, அன்று தோல்வி அடைந்தது.

ரகசியப் பேச்சுவார்த்தை, தீவிர முயற்சி : ரஷ்யா - அமெரிக்கா கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் இறுதி நிமிடங்கள்!

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிப்ரவரியில் நடந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அமெரிக்க மற்றும் ஜெர்மன் அதிபர்கள் ரகசிய பரிமாற்ற ஒப்பந்தம் பற்றி விவாதித்தனர்

நவல்னியின் மரணம்

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய கைதி, அலெக்ஸி நவல்னி, 47 வயதில் சைபீரிய சிறைச்சாலையில் இறந்தார்.

அவரது மரணத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் பல வெளிநாட்டு தலைவர்கள் புதின் மீது குற்றம் சாட்டினர். அவர் இயற்கை எய்தினார் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது மரணத்தின் போது ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் பற்றி எந்தத் தகவலும் வெளிவரவில்லை என்றாலும், நவல்னியின் சக ஊழியர் மரியா பெவ்சிக், கிராசிகோவுக்கு ஈடாக அவரை விடுவிக்க அதிகாரிகள் தயாராக இருந்தனர் என்று பகிரங்கமாகக் கூறினார்.

அந்த நேரத்தில் அவரது கூற்றுக்களை பிபிசி-யால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதற்கிடையில், ரஷ்யா சாத்தியமான உடன்பாடு எட்டப்படவில்லை என்று அதனை பகிரங்கமாக மறுத்தது.

ஆனால் வியாழன் அன்று (ஆகஸ்ட் 1), வெள்ளை மாளிகை நவல்னியை ஒப்பந்தத்தில் சேர்ப்பதற்காக நிகழ்ந்த முயற்சியை உறுதிப்படுத்தியது, இறுதியில் எதிர்க்கட்சி நபருடன் பணியாற்றிய மூன்று பேர் ரஷ்ய காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

"எங்களுடன் இருந்த தன்னம்பிக்கை எங்களை விட்டு போனது போல உணர்ந்தோம்," என்று நவல்னியின் மரணத்தின் தாக்கத்தை விவரிக்கும் போது சல்லிவன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

நவல்னியின் மரணம் அறிவிக்கப்பட்ட நாளில் கெர்ஷ்கோவிச்சின் தாயும் தந்தையும் வெள்ளை மாளிகையில் சல்லிவனை சந்தித்தனர்.

இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தையும், இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் ஆபத்தையும் உணர்ந்து, இது "இந்த செயல்முறை மேலும் கடினமானதாக இருக்கும்" என்று அவர்களிடம் கூறினார்.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மறுகட்டமைக்கப்பட வேண்டும் மற்றும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி மீண்டும் ஒருங்கிணைந்தது.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பின்னர் இரண்டு முக்கியமான சந்திப்புகளை நடத்தினார்.

பிப்ரவரி நடுப்பகுதியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டார், அங்கு அவர் கிராசிகோவை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை அதிபர் ஸ்கோல்ஸுக்கு விளக்கினார்.

அவர் ஸ்லோவேனியாவின் பிரதமரையும் சந்தித்தார், அங்கு இரண்டு ரஷ்யக் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரின் விடுதலைக்கு ரஷ்யா அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. இதனையறிந்த அமெரிக்கா ஸ்லோவேனியாவிடம் பேசியது. அதன் விளைவாக அவர்கள் இருவரும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா திரும்பி தனது தாயைக் கட்டித்தழுவும் இவான் கெர்ஷ்கோவிச்

'உங்களுக்காக இதைச் செய்கிறேன்'

பின்னர் வந்த வசந்த காலத்தில், நவல்னியின் பெயர் நீக்கப்பட்டப் புதிய ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் புதுவடிவம் பெற்றது. ஜூன் மாதத்தில், கிராசிகோவை விடுவிக்க ஜெர்மனி ஒப்புக்கொண்டது.

"உங்களுக்காக, நான் இதைச் செய்கிறேன்," என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸ் அமெரிக்க அதிபர் பைடனிடம் கூறினார்.

இறுதியில் ஒப்பந்தம் ரஷ்யாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ரஷ்யா பல வாரங்களுக்கு முன்பு, ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ரஷ்ய சிறைகளில் உள்ள பட்டியலில் உள்ளவர்களின் விடுதலையை ஏற்றுக்கொண்டது.

ஆனால் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, ​​உள்நாட்டு அரசியல் ஊடுருவியது, மோசமான விவாதத்திற்குப் பிறகு நவம்பரில் தேர்தலில் போட்டியிடும் தனது முயற்சியில் பைடன் தனது சொந்த ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே பெரும் அழுத்தத்திற்கு ஆளானார்.

சல்லிவனின் கூற்றுப்படி, ஜூலை 21 அன்று பைடன் மீண்டும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அவர் தனது ஸ்லோவேனிய கூட்டாளியுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை உறுதி செய்தார்.

எந்தவொரு உயர்மட்டக் கைதி பரிமாற்ற நடவடிக்கையையும் போலவே, விமானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, கைதிகளின் வீட்டிற்குச் செல்லும் பாதைகள் இறுதி செய்யப்பட்ட போதிலும், ஒப்பந்தம் தொடர்பாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

"சில மணிநேரங்களுக்கு முன்பு வரை நாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கடவுளை வேண்டி கொண்டிருந்தோம்," என்று சல்லிவன் வியாழக்கிழமை பிற்பகல் விவரித்தார்.

பின்னர், அதிபர் பைடன் அமெரிக்க மண்ணுக்குச் செல்லும் விமானத்தில் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்கர்கள் இருக்கும் புகைப்படத்தை ஒரு சிறிய தலைப்புடன் வெளியிட்டார்.

"அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உள்ளனர், மேலும் அவர்களது குடும்பங்களின் கரங்களைப் பற்றி மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச் உட்பட ரஷ்யாவுடானான இருந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் விடுவிக்கப்பட்ட மூன்று அமெரிக்கர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்பியுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)