கன்னியாகுமரியில் மோதி தியானம் செய்த 3 நாட்களும் அவருக்கு விடுப்பா? வேலை நாளா?

பட மூலாதாரம், www.narendramodi.in/
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி நிருபர், புது டெல்லி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார்.
அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி கட்டத்தில் இருந்த நாட்கள்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோதி செலவிட்ட 45 மணி நேரம் அரசுப் பதிவேடுகளில் எப்படிப் பதிவாகியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோதி விடுப்பு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பிரதமர் எப்போதும் பணியில் இருக்கிறார்,” என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோதி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என அவரது அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோதிக்கு முன் இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் சிலர் தங்கள் பதவிக்காலத்தில் விடுப்பு எடுத்திருந்த தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் அடங்குவர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் படி, முன்னாள் பிரதமர்களின் விடுமுறைகள் குறித்த தகவல்கள் பிரதமர் அலுவலகத்திடம் இல்லை.

பட மூலாதாரம், X/BJP4India

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த காலங்களில் நடந்தது என்ன?
கடந்த காலங்களில் பல தடவைகள் பிரதமர் இல்லாத நிலையில், பணிகளில் இடையூறு ஏற்படாத வகையில் மூத்த அமைச்சர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கே.எம்.சந்திரசேகர் இந்திய அரசின் கேபினட் செயலாளராக இருந்துள்ளார். கேபினட் செயலாளர் என்பது அதிகாரத்துவத்தின் உயர் பதவி.
பிபிசியிடம் பேசிய முன்னாள் கேபினட் செயலாளர் சந்திரசேகர், “முந்தைய காலங்களில் பிரதமர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அல்லது விடுப்பு கேட்கும் முறை இந்தியாவில் இல்லை. அவர்கள் இதைப் பற்றி ஜனாதிபதிக்கு தெரிவிப்பதோடு, அமைச்சரவை செயலாளருக்கும் தெரியப்படுத்துவார்கள்," என்றார்.
பிரதமர் மோதி கன்னியாகுமரிக்குச் செல்வதற்கு முன் எந்த அமைச்சரிடமும் பொறுப்பை ஒப்படைத்தாரா அல்லது குடியரசுத் தலைவரிடம் ஏதாவது தகவல் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

பட மூலாதாரம், X/BJP4INDIA
ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்ட மோதியின் தியானம்
கன்னியாகுமரியில் மோதியின் தியானம் குறித்து அரசாங்கச் செய்திக்குறிப்பு எதுவும் இல்லை. ஆனால், பிரதமர் மோதியின் தியானத்தின் பல வீடியோக்கள் அவரது சொந்த யூடியூப் சேனல் மற்றும் ஏ.என்.ஐ செய்தி முகமையில் கிடைக்கின்றன. அவை பல தொலைக்காட்சி சேனல்களால் ஒளிபரப்பப்பட்டன.
மே மாதம் 30-ஆம் தேதி, டிடி நியூஸ் தனது செய்தியில், பிரதமர் மோதி மே 30 மாலை முதல் ஜூன் 1 மாலை வரை கன்னியாகுமரியில் தியானம் செய்கிறார் என்று செய்தி வெளியிட்டது.
மே 31 அன்று, ஏ.என்.ஐ தனது செய்தியில், பிரதமர் மோதி இரவும் பகலும் தியானத்தில் ‘பிஸியாக’ இருப்பார் என்றும், தியான மண்டபத்தில் தியானம் செய்வார் என்றும் குறிப்பிட்டது.
பல பா.ஜ.க தலைவர்கள் மோதியின் திட்டத்தைப் பாராட்டினர். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பிரதமர் மோதி தியானம் செய்யும் வீடியோவை பதிவேற்றியிருந்தார். அதில் அவர் 'தியானத்தின் மூலம் பெற்ற தெய்வீக ஆற்றல் மோதிஜி' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவர்கள் இது ஒரு அரசியல் திட்டம் என்றும், வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

பட மூலாதாரம், ANI
‘தியானம் எப்படி அலுவலகப் பணி ஆகும்?’
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர், மேக்கிங் அன் மேக்கிங் ஆஃப் டாக்டர் மன்மோகன் சிங்' என்ற புத்தகம் அது.
பிபிசியிடம் பேசிய சஞ்சய் பாரு, “பிரதமர் மோதி கன்னியாகுமரியில் செய்த தியானத்தை அவரது முறையான கடமையின் ஒரு பகுதி என்று கூறுவது நகைப்புக்குரியது. மக்கள் தியானம் செய்யும் போது, அவர்கள் அதைத் தங்கள் அலுவல்பூர்வ வேலை, அல்லது கடமையாகவா செய்கிறார்கள்? எந்த நிறுவனமும் தியானத்தைத் தனது ஊழியர்களின் கடமையாகக் கருதுமா? மற்றொரு விஷயம், பிரதமர் அலுவலகத்தில் இல்லாதபோது, அரசாங்கத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பை மற்றொரு அமைச்சருக்கு வழங்குவது பிரதமரின் பொறுப்பு,” என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி சமீபத்தில் தனது ‘பிரதமர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்’ என்ற புத்தகத்தில் பிரதமர்கள் பணிசெய்யும் பாணி குறித்து கூர்ந்து ஆய்வு செய்திருந்தார்.
“பூஜை செய்ய பிரதமருக்கு உரிமை உண்டு, ஆனால் அதை ஒரு அலுவல்பூர்வ கடமை என்று அழைப்பது எப்படி என எனக்குப் புரியவில்லை. அவரது தியான நேரத்தை உத்தியோகக் கடமை என்று அழைப்பதில் எந்த தர்க்கமும் எனக்குத் தெரியவில்லை,” என்கிறார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆலோசகராக இருந்தவர் சுதீந்திர குல்கர்னி. பிரதமர் மோதியின் தியானம் என்பது உத்தியோகப்பூர்வ கடமை என வர்ணிக்கப்படுவதில் அவர் தவறு எதையும் காணவில்லை. பிரதமர் எப்போதும் கடமையில் இருக்கிறார் என்று அவர் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எடுத்த விடுமுறைகளை நினைவு கூர்ந்த குல்கர்னி, “2000-ஆம் ஆண்டு அவர் கேரளாவில் விடுப்பு எடுத்தபோது, வேலையில் பிஸியாக இல்லாத நேரமே இல்லை. எப்பொழுதும் அவருக்கு முன்னால் ஏதோ ஒன்று வந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அங்குள்ள முதல்வர் அவரைச் சந்திக்க வந்ததாகவும், நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் வந்ததாகவும் எனக்கு நினைவிருக்கிறது. பிரதமர் விடுமுறையில் இருந்தார். ஆனால் விடுமுறை கொண்டாடுகிறார் என்பதல்ல அர்த்தம்''
''இன்னொரு விஷயம், நீங்களும் நானும் விடுப்பு எடுக்கும்போது, நமது வேலையை அலுவலகத்தில் வேறொருவரிடம் ஒப்படைக்கிறோம். ஆனால் இது பிரதமர் மட்டத்தில் பொருந்தாது,” என்கிறார்.
மேலும், “தேவை ஏற்படும் போதெல்லாம், அவர் அழைக்கப்படுகிறார். பிரதமர் அலுவலக ஊழியர்கள், சிறப்புப் பாதுகாப்புக் குழு, மற்றும் அணுசக்தி கருப்பு பெட்டி எப்போதும் அவருடன் வருவதால் அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். பிரதமர் மோதி கன்னியாகுமரி சென்றபோது கூட இந்த ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,” என்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அறுவை சிகிச்சை செய்ய இருந்தபோது, அவர் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பொறுப்பை மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்தார்.
அப்போது டி.கே.ஏ நாயர் பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருந்தார். இருப்பினும், மன்மோகன் சிங்கிற்கு விடுப்புக்கு விண்ணப்பித்ததாகத் தனக்கு நினைவில்லை என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டுத் தலைவர்கள் விடுமுறை எடுக்கிறார்களா?
வெளிநாடுகளில், பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகள் தங்கள் விடுமுறை நாட்களை பகிரங்கமாக விவாதிக்கிறார்கள்.
அமெரிக்காவில், அதிபர்கள் தங்கள் விடுமுறையை வெவ்வேறு இடங்களில் கழித்துள்ளனர், இந்த போக்கு பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது.
வரலாற்றாசிரியர் லாரன்ஸ் நட்சன் தனது கட்டுரையில், "இன்று, ஒரு அமெரிக்க அதிபர் விடுமுறைக்குச் செல்லும்போது, அவர் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செல்கிறார். அவரது தகவல் தொடர்பு ஊழியர்கள், ரகசிய சேவை, போலீஸ் மற்றும் ஊடகவியலாளர்களும் அவர் அருகிலேயே இருப்பர். மேலும், அவரது ஒவ்வொரு அசைவையும் பற்றிய செய்திகளை கொடுக்கிறார்கள்,” என்கிறார்.
மேலும் "அதிபர் கோல்ஃப் வண்டியில் இருந்தாலும், படகில் இருந்தாலும், மலையில் இருந்தாலும், அவரது ஓவல் அலுவலகத்தைப் போலவே அவருக்கு தகவல் மற்றும் தகவல்தொடர்புகளை எளிதாக அணுக முடியும்," என்கிறார்.
நட்சன் மேலும் கூறுகையில், “இந்த விடுமுறைகள் குறித்துப் பல ஆண்டுகளாகச் சர்ச்சை உள்ளது. விடுமுறை நாட்களில் ஏற்படும் செலவுகள், எடுக்கப்பட்ட விடுமுறைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் நீளம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன," என்கிறார்.
பிரிட்டன் பற்றி பேசினால், அங்கும் பிரதமர் தனது விடுமுறை நாட்களைப் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
விடுமுறை நாட்களில் முக்கியமான விஷயங்களைப் பற்றி பிரதமர் அறிந்திருந்தாலும், வெளியில் செல்வதற்கு முன், அவர் இல்லாத நேரத்தில் அன்றாடப் பணிகளைக் கையாளும் ஒரு அமைச்சரை நியமிப்பார். சமீபத்தில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனது பதவிக் காலத்தில் முதல் முறையாக தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்றபோது, இதேபோன்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
விடுமுறைகள் குறித்து தலைவர்கள் முன்வைக்கும் தர்க்கம், விடுமுறை விவகாரத்தை அவர்களது ஆதரவாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்கிறார் நீரஜா சவுத்ரி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












