வங்கதேசத்தில் அரசியல் வெற்றிடம் - எதிர்காலம் என்ன ஆகும்? கூர்ந்து கவனிக்கும் இந்தியா

வங்கதேசம், ஷேக் ஹசீனா
படக்குறிப்பு, ஷேக் ஹசீனா, முன்னாள் பிரதமர், வங்கதேசம்
    • எழுதியவர், சுவோஜித் பாக்சி & வினீத் கரே
    • பதவி, பிபிசி ஹிந்தி

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற போராட்டத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் வங்கதேசத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் அந்த நாட்டின் குடியரசுத் தலைவர், புதிய ஆட்சி அமைக்க, நாடாளுமன்றத்தைக் கலைத்து அறிவித்துள்ளார்.

சுமார் 17 கோடி மக்கள் தொகையை கொண்ட வங்கதேசத்தை 2009ஆம் ஆண்டில் தனது ஆட்சியைத் தொடங்கிய ஷேக் ஹசீனா, இட ஒதுக்கீடு விவகாரம் போராட்டமாக மாறி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் வரை ஆட்சி செய்துள்ளார். ஆனால் அந்த முடிவு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை.

தெற்கு வங்கதேசத்தில் உள்ள நவோகாலி பகுதியில் இரண்டு காவல்துறையினர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காவல்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்று வரும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக்கை சேர்ந்த அதிகாரிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பலர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை, ஹசீனா எங்கே நிரந்தரமாகத் தங்குவார் என்பது தொடர்பான தகவல்கள் உறுதியாகவில்லை. எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக ஹசீனாவுக்கு ஆதரவு அளிப்பதாக இதுவரை தெரிவிக்கவில்லை.

வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவின்றி உள்ளது. எதிர்வரும் காலம் சவால்மிக்கதாக உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரசியல் வெற்றிடம்

"ஹசீனாவும் அவருடைய கட்சியினரும் இந்த நாட்டைக் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளனர். அவர் நாட்டைவிட்டு வெளியேறியது தற்போது அந்த நாட்டில் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதைச் சிக்கலான பல அரசியல் நகர்வுகள் நிரப்பும்," என்று பிபிசியிடம் கூறினார் மைக்கேல் குகெல்மென். அவர் வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வில்சன் மையத்தின் தெற்காசிய கல்வி நிலையத்தின் இயக்குநர்.

"வலுவிழந்த, தனித்தனியாகச் செயல்படும் வங்கதேச தேசிய கட்சி (BNP), சிறுசிறு கட்சிகளின் குழு மற்றும் ராணுவம் ஆரம்பக் காலங்களில் செயல்பட்டது போல் வங்கதேச அரசியலில் தங்களின் சிக்கலான பங்கை ஆற்றி வருகின்றன. மேலும், போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் இதை எப்படி அரசியல்ரீதியாக அணுகுவது என்பதைப் பற்றி ஆராய்ந்து வருவதாகவும்" அவர் கூறினார்.

வெளிப்புறத்தில் இருந்து வரும் எதிர்பார்ப்பு, அமைதியான அரசியல் மாற்றம் உருவாகி, மேலும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாக உள்ளது.

அரசுசாரா பிரதிநிதித்துவமும் தற்போது அமைய இருக்கும் இடைக்கால அரசில் இடம்பெற வேண்டும். இது தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைச் சமன் செய்யும் அறிவார்ந்த முடிவாகும் என்று குகெல்மென் தெரிவித்தார்.

அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் ஏற்கெனவே இடைக்கால அரசை அறிவித்துள்ளார். ஆனால் அதன் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் தெளிவாக இல்லை. போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

வங்கதேச ராணுவத்தின் எதிர்காலமும் தெளிவற்றதாக இருக்கிறது. 1971ஆம் ஆண்டு இந்த நாடு உருவானதில் இருந்து ராணுவம் அரசியலைக் கைப்பற்றிய நிகழ்வுகளால் நிறைந்தது வங்கதேசத்தின் வரலாறு.

மாணவர்கள் ஏற்கனவே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் இடம் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாட்டில் வாழும் பெரும்பாலோனோர், நாட்டில் சட்ட ஒழுங்கு மற்றும் அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது தான். அவர்கள் நிர்வாகிகள் மற்றும் ராணுவத்தையே நம்பியுள்ளனர்.

வங்கதேச மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாணவர்கள் போராட்டத்தின் போது தாக்குதலுக்கு ஆளான ஜத்ராபாரி காவல் நிலையம்

யார் இந்த முகமது யூனுஸ்?

இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகச் செயல்பட ஒப்புக்கொண்டார்.

பல்வேறு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்புகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை மாணவர்கள் கூட்டமைப்பின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களான முகமது நஹித் இஸ்லாம், அபு பக்கர் மாசும்தார் தெரிவித்தனர்.

"எங்களின் இடைக்கால அரசை அறிவிக்க நாங்கள் 24 மணிநேரம் எடுத்துக் கொண்டோம். தற்போது உள்ள அவசர நிலையைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்களின் இடைக்கால அரசு பற்றி அறிவிக்கிறோம். எங்களின் இடைக்கால அரசு நோபல் பரிசு பெற்ற டாக்டர் முகமது யூனுஸை தலைமை ஆலோசகராகக் கொண்டிருக்கும். அவர் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட, சர்வதேச அரங்கில் நன்கு அறியப்பட்ட நபர்," என்று அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்களிடம் பேசிய யூனுஸ், நாட்டைப் பாதுகாக்க இந்த முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்," என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சர்வதேச அளவில் ஏழை மக்களின் வங்கிப் பணியாளர் என்று அறியப்பட்டிருக்கும் யூனுஸ், லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து வெளியேறும் வகையில் சிறு கடன்கள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியவர். 2006ஆம் ஆண்டு யூனுஸ் மற்றும் அவரின் வங்கியான க்ரமீனுக்கு, இந்தச் சிறு கடன் திட்டங்களுக்காக, நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவரின் வழக்கறிஞர்கள், தொழிலாளர் நல விதிமுறைகளை மீறியது, லஞ்சம் தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளை யூனுஸ் எதிர்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். அவரது ஆதரவாளர்கள், இந்த வழக்குகள், அரசியல் நோக்கத்திற்காகத் தொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஷேக் ஹசீனா ஒருமுறை யூனுஸை 'ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் நபர்' என்று கூறினார். மேலும் க்ரமீன் வங்கி அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிப்பதாகக் குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தியா

வங்கதேச மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னுடைய வழக்கறிஞர்களுடன் முகமது யூனுஸ்

வங்கதேசத்தின் நெருங்கிய பெரிய அண்டை நாடான இந்தியா, அந்த நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பேராசிரியர் யூனுஸின் கருத்துகளை இந்தியா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறலாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் யூனுஸ், வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா, 'உள்நாட்டு விவகாரம்' என அழைத்தது கவலை அளிப்பதாகக் கூறினார்.

இந்தியாவுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தார் ஹசீனா. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அவருடன் பல்வேறு நெருக்கமான அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு வந்தது.

"இந்தியா, இதை உள்நாட்டு விவகாரம் என்று குறிப்பிட்டது கவலை அளிக்கிறது. தன்னுடைய சகோதரரின் வீட்டில் தீப்பற்றி எரிந்தால் அதை எப்படி உள்நாட்டு விவகாரம் என்று கூறுவீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், ராஜ்ஜீய நடவடிக்கைகளுக்கான சொற்களஞ்சியத்தில் "உள்நாட்டு விவகாரம்" என்ற பதத்தைக் காட்டிலும் சிறந்த பதங்கள் இருப்பதாகவும் தனது பேட்டியில் தெரிவித்தார்.

"எதிர்காலத்தில் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் வங்கதேசத்தின் மாற்றத்திற்கான பங்களிப்பைத் தருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர், இடைக்கால அரசிற்குத் தலைமை ஆலோசகராக வரும் ஒருவர், அவரின் பதவியை ஆரம்பிக்கும் போதே இந்தியாவுக்கு எதிரான அறிக்கையுடன் ஆரம்பிப்பது நல்லதாக இல்லை," என்று தன்னுடைய அடையாளத்தை வெளியிட விரும்பாத, வங்கதேசத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்குள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், ராணுவம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி யூனுஸ் இடைக்கால அரசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால அரசு அமைக்கப்பட்டவுடன், போராட்டம் தணியத் துவங்கும் என்று அரசியல் கருத்தாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தெற்காசியாவில் உள்ள அதன் அரசியல் தாக்கம் போன்றவற்றை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு, வங்கதேசம் அண்டை நாடு மட்டுமல்ல. ராஜ்ஜீயரீதியாகக் கூட்டணி நாடும்கூட. அந்த நாட்டில் ஏற்படும் அரசியல் முன்னேற்றங்களை இந்தியா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.

பொருளாதார மந்தநிலை

வங்கதேச மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஷேக் ஹசீனா (கோப்புப் படம்)

வங்கதேசத்தின் நலன் விரும்பிகள் பலரும், அங்கே நிலவி வரும் வன்முறையானது குறையும் என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் சர்வஜித் சக்கரவர்த்தி, அங்கே நடைபெற்ற தொடர் வன்முறை பயமுறுத்துவதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"கொரோனா ஊரடங்குக்குப் பிறகு வங்க மக்கள் பொருளாதார மந்தநிலையால் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வங்கதேச பொருளாதாரத்தை விரிவடையச் செய்த ஐரோப்பிய, அமெரிக்க ஏற்றுமதி சந்தைகள் வீழ்ச்சியடையத் துவங்கின. இதன் விளைவாக இங்குள்ள மக்களின் வருமானம் குறைந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை இதனுடன் இணையவே அது கோபமாக மாறியது," என்கிறார் சர்வஜித்.

ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் வங்கதேசம் பொருளாதார பலத்தை அடைந்தது. வருமானம் அதிகரித்தது. ஆனால் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்த அது பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையின்மைக்கு வழிவகை செய்தது.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் வன்முறை குறையும் என்று நம்புகிறேன். வங்கதேச தேசிய கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, சிவில் சொசைட்டி, மாணவர்கள் மற்றும் ராணுவ பிரதிநிதிகளுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு தற்போது உள்ள நிலைமை சீர்படுத்தப்பட்டு அரசு நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றும் அவர் கூறினார்.

வங்கதேச தேசிய கட்சியை கலீதா ஜியா வழி நடத்துகிறார். அவர் ஹசீனாவின் அரசியல் போட்டியாளர். டெல்லி ஒ.பி. ஜிண்டால் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு பேராசிரியர் ஶ்ரீராதா தத்தா, "மக்களிடம் உள்ள கோபம் தணிந்தால், ஒரு வாரத்துக்குள் இயல்பு நிலை திரும்பிவிடும்," என்றார்.

வங்கதேசத்தில் உள்ள முஜ்பூர் ரஹ்மானின் சிலை சேதப்படுத்தப்படும் வீடியோக்கள் உட்பட அங்கிருந்து வரும் வன்முறை தொடர்பான வீடியோக்களை வைத்து ஒருவர் அந்த நாட்டை மதிப்பிடக் கூடாது, என்றும் அவர் கூறினார்.

கடந்த 1975ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய சூழலில், ஷேக் ஹசீனாவின் தந்தையும் அந்த நாட்டின் அந்நாள் பிரதமருமான முஜ்பூர் ரஹ்மான் கொல்லப்பட்டார். அவரின் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

"வங்கதேசத்தில் இன்னும் அவரை தேசத்தின் தலைவராகத்தான் பார்க்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹசீனா மாணவர்கள் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிட்டது கோபத்தைத் தூண்டியது. 1971ஆம் ஆண்டு போரின் காட்சிகள் மீண்டும் அரங்கேற்றப்பட்டன. விடுதலைக்கான அந்தப் பாடல்கள் பாடப்பட்டன. இந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும்போது, அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்," என்கிறார் பேராசிரியர் தத்தா.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)