ஷேக் ஹசீனா: வங்கதேசத்தின் புதிய சூழ்நிலை இந்தியாவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமல்லாமல், தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை ஆக்கிரமித்தனர். அதைக் கொண்டாடும் படங்கள் சமூக ஊடகங்களில் பெருமளவில் காணப்படுகின்றன.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ராணுவ தளபதி ஜெனரல் வக்கார் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். இதற்காக பல்வேறு தரப்பினரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அரசு பதவிகளில் இடஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த மாதம் முதல் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாட்டின் எதிர்காலத்தை இருண்ட கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு வங்கதேசத்தில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி. வங்கதேச நிகழ்வுகள் இந்தியா மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய அடி?
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கடந்த 53 ஆண்டுகளாக இருதரப்பு உறவு உள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வங்கதேசத்தை இந்தியா அழைத்திருந்தது.
G-20 இல் இந்தியா இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஒரே அண்டை நாடு வங்கதேசம். ஆனால் இப்போது ஷேக் ஹசீனா பிரதமராக இல்லாதது இந்தியாவிற்கு பல பிரச்னைகளை உருவாக்கலாம்.
வங்கதேச அரசியலில் இரண்டு பெரிய மற்றும் முக்கிய முகங்கள் உள்ளன. பங்களாதேஷ் அவாமி லீக்கின் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (BNP) காலீதா ஜியா.
வங்கதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருந்தது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசை இந்தியா பார்க்க விரும்புவதாக வெளியுறவுத்துறை நிபுணர் கமர் ஆகா கூறுகிறார்.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் பக்கசார்பை கொண்டுள்ளது. அக்கட்சி எப்போதுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகிறது. சீனாவும் பாகிஸ்தானும் நண்பர்கள் என்பதால் சீனாவுக்கு இதன் நன்மை கிடைக்கிறது.
மறுபுறம், அவாமி லீக் தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பை நம்புகிறது. இந்தியா அதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இதுவே காரணம்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா நிலையான ஒரு அண்டை நாட்டை விரும்புகிறது என்று பிபிசி இந்தி ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவாவுடம் உரையாடிய வங்கதேசத்துக்கான முன்னாள் இந்திய தூதர் வீணா சிக்ரி கூறினார்.
”வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றும் அங்கே ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் விரும்புகிறது. இந்தியாவுக்கு இன்னும் இந்த ஆசை இருக்கிறது. இந்தியா ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முயற்சிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“பிஎன்பி கட்சி பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாமல் சீனாவுக்கும் ஆதரவு அளிக்கிறது. அது இஸ்லாமிய அரசியலைப் பற்றி பேசுகிறது. ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அது இந்தியாவிற்கு பதிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி நகர்வதை பார்க்கமுடியும்,” என்று வெளியுறவு விவகாரங்களுக்கான நிபுணர் கமர் ஆகா கூறினார்.
"ஷேக் ஹசீனா சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு சமநிலையை பேணி வந்தார். ஆனால் இப்போது இந்த சமநிலை பற்றி கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
வர்த்தகத்தில் எவ்வளவு பாதிப்பு?
தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. கோவிட்-19 இருந்தபோதிலும், 2020-21 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 10.78 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் நடைபெற்றது. 2021-22 ஆம் ஆண்டில் இந்த வர்த்தகம் 44 சதவிகிதம் அதிகரித்து 18.14 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
2022-23 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த வர்த்தகம் 15.93 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் பல பெரிய திட்டங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. வங்கதேசம் தற்போது இந்தியாவில் இருந்து 1160 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்து வருகிறது.
இதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே அதிவிரைவாக டீசல் கொண்டு செல்வதற்கு இந்தியா-வங்கதேச நட்புறவு பைப்லைன் மிகவும் முக்கியமானது.
கடந்த பத்தாண்டுகளில் சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் துறைமுகங்கள் அமைப்பதற்காக இந்தியா ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வங்கதேசத்துக்கு வழங்கியுள்ளது.
தற்போது அந்த நாட்டில் உருவாகி வரும் சூழ்நிலை இந்தியாவுடனான வர்த்தகத்தையும் பாதிக்கும் என்றும் அத்தகைய சூழ்நிலையில் சிட்டகாங் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான தனது கோரிக்கையை முன்வைக்கும் பணியில் சீனா இறங்கும் என்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான நிபுணர் கமர் ஆகா கூறுகிறார்.
இந்தியா தனது 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கைக்கு வங்கதேசத்தை மிகவும் முக்கியமானதாக கருதுகிறது. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களும் வங்கதேசமும் ஒன்றையொன்று சூழ்ந்துள்ளன. அங்கு மேம்பாடு மற்றும் இணைப்புக்கு வங்கதேசத்தின் ஆதரவு அவசியம். இது வங்கதேசத்திற்கும் பொருந்தும்.
ஷேக் ஹசீனா பதவிக்கு வருவதற்கு முன்பு சிட்டகாங் துறைமுகத்தை இணைப்பிற்காக பயன்படுத்துவதற்கான கோரிக்கையை இந்தியா விடுத்தபோது அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
முன்பு அகர்தலாவில் இருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு பொருட்களை கொண்டு வர இந்தியா 1500 கிலோமீட்டர்களுக்கும் மேல் பயணிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று இந்த தூரம் 200 கிலோமீட்டருக்கும் குறைவாக உள்ளது.
சிட்டகாங் துறைமுகத்திற்கு பொருட்களை கொண்டு வருவதன் மூலம் அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் எளிதாக அனுப்ப முடியும்.
பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு இழப்பு?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா வங்கதேசத்துடன் சுமார் நாலாயிரம் கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. எனவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சவால்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அந்தப்பகுதியில் இந்தியாவுக்கு நண்பனாக இருக்கும் ஓர் அரசு தேவை.
வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததில், ஷேக் ஹசீனாவுக்கு முந்தைய அரசு முக்கியப் பங்காற்றியதாக கமர் ஆகா கூறுகிறார்.
வங்கதேச முகாம்களில் இருந்து வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத இயக்கத்திற்கு கிடைத்து வந்த ஆதரவை நசுக்குவதில் ஷேக் ஹசீனா அரசும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
உல்ஃபா தலைவர் அரவிந்த் ராஜ்கோவா மற்றும் பல பிரிவினைவாத தலைவர்கள் உட்பட பிரிவினைவாத இயக்கத்தின் பெரிய தலைவர்களை வங்கதேச அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. இப்போது அவர்கள் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இல்லையென்றால் அது இந்தியாவுக்கு உகந்த சூழ்நிலையாக இருக்காது.
வங்கதேசத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். எனினும் இந்த அரசின் வடிவம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது ஒற்றுமை அரசாக இருக்குமா? ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் அதில் பங்கு இருக்குமா?
“அவாமி லீக் கட்சியிடம் முப்பது முதல் நாற்பது சதவிகித வாக்குகள் உள்ளன. வங்கதேச மக்களின் விருப்பப்படியான ஒரு ஒற்றுமை அரசு அங்கு அமைக்கப்பட வேண்டும்,” என்று வீணா சிக்ரி கூறினார்.
“வங்கதேசத்தில் ராணுவம், ’அரசியல் அதிகாரத்தை’ தன் கையில் எடுக்க விரும்பவில்லை. 2007-08 இல் ராணுவ ஆதரவு அரசு உருவாக்கப்பட்டது. அது இரண்டு ஆண்டுகள் நீடித்தது. ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாது என்பதும் அப்போது தெரிந்தது. இதையடுத்து ராணுவம் கவனமாக இருந்து வருகிறது. தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவத்தால் மட்டுமே முடியும் என்பதால் அது முன்னே வந்துள்ளது,” என்று வீணா சிக்ரி குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












