பிரிட்டனில் அதிகரிக்கும் வன்முறை, அவசர கால கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்- என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், தாமஸ் மெக்கிண்டோஷ், லூசி கிளார்க்-பில்லிங்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
கடந்த இரு நாட்களாக பிரிட்டனின் பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (5-08-2024) அவசர கால கூட்டம் நடைபெறுமென பிரிட்டன் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 29ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தாக்குதல் நடத்தியவர் 2023இல் படகு மூலம் பிரிட்டனுக்கு வந்த அகதி என்றும், அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் ஆதாரமற்ற ஊகங்கள் கூறப்பட்டன. இது குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதும் பதற்ற நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின.
பிரிட்டனின் ரோதர்ஹாம் நகரத்தில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் வசித்த விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, “இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முழு சக்தியையும் விரைவில் உணர்வார்கள்” என்று பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர், "கலவரத்தில் ஈடுபட்டுள்ள இந்தக் குண்டர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்று உறுதியளித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவசர கால கூட்டம்

பட மூலாதாரம், Reuters
இந்த அவசர கால கூட்டங்கள் ‘கோப்ரா சந்திப்புகள்’ (COBRA Meetings) என்று அழைக்கப்படும். பிரிட்டனில் நிலவும் பிரச்னைக்கு ஏற்றாற்போல இந்த அவசர கால கூட்டங்கள் நடைபெறும். இதில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவாதித்து முடிவெடுப்பார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக பிரிட்டனில் நடந்த வன்முறைகள் குறித்தும், வரவிருக்கும் நாட்களில் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அரசிற்கு ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் இந்த அவசர குழு கூட்டம் நடத்தப்படுகிறது.
பிரதமர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகள் இடையே கடந்த வியாழன் அன்று நடந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சனிக்கிழமை அன்று நடந்த மூத்த அமைச்சர்களின் சந்திப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்தக் அவசர கால கூட்டம் நடத்தப்படுகிறது.
‘தீவிர வலதுசாரி வன்முறை’

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரிட்டன் பிரதமர், ”கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் அதற்காக வருந்துவார்கள்" என்று எச்சரித்தார்.
"இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு பாதுகாப்பாக வாழ உரிமை உள்ளது. ஆனாலும் முஸ்லிம் சமூகங்கள் குறிவைக்கப்பட்டு, மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நம்மால் காண முடிகிறது" என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறினார்.
"மற்ற சிறுபான்மை சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, தெருவில் நாஜி வணக்கங்கள் பகிரங்கமாகக் காட்டப்பட்டன, காவல்துறை மீதான தாக்குதல்கள், இனவெறியுடன் இணைந்த சீரற்ற வன்முறை, இதையெல்லாம் காணும்போது, ‘தீவிர வலதுசாரி வன்முறை’ என துல்லியமாகக் கூறலாம்” என்று அவர் கூறினார்
கடந்த திங்கட்கிழமை சவுத்போர்ட்டில் மூன்று இளம்பெண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு கோப்ரா கூட்டம் நடத்தப்படுகிறது.
பிரிட்டனில் சனிக்கிழமை முதல், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் அதிகரிக்கும் வன்முறை

பட மூலாதாரம், Getty Images
ரோதர்ஹாம் நகரில், ‘குடியேற்ற எதிர்ப்பு’ ஆர்ப்பாட்டக்காரர்கள், மரப்பலகைகளுக்கு தீவைத்து அதை காவல்துறை அதிகாரிகள் மீது வீசியதில் குறைந்தது பத்து அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் ஒரு அதிகாரி மயக்கமடைந்தார் என்றும் தெற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ விடுதிக்குள் நுழைய ஆர்ப்பாட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு அதிகாரி மயக்கமடைந்ததாகவும், குறைந்தது இரண்டு அதிகாரிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியது.
“விடுதியின் ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கியிருந்தவர்கள் மிகவும் பயந்துவிட்டனர். அவர்களில் சிலர் புலம்பெயர்ந்தவர்கள். ஆனால் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை” என்று காவல்துறை கூறியது.
பிரிட்டன் வீதியில் காணப்படும் காட்சிகள் முற்றிலும் பயங்கரமானவை என்றும், அதே சமயத்தில் வலுவான நடவடிக்கையை எடுக்க காவல்துறைக்கு அரசின் ஆதரவு உள்ளது என்றும் உள்துறை செயலர் யவெட் கூப்பர் கூறினார்.
ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில் உள்ள மற்றொரு ஹோட்டலில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் மோசமான வன்முறையை காவல்துறை சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜன்னல்களை அடித்து நொறுக்கி, தீ வைத்ததால், அந்த இடத்தில் ஒரு அதிகாரி காயமடைந்தார் என்றும் ஸ்டாஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்தனர்.
இதற்கிடையில், மிடில்ஸ்பரோவில் உள்ள வீடுகளின் ஜன்னல்களை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கும்பல், அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியது. அது மட்டுமல்லாது, சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியது.
‘மக்கள் முகமூடிகள் அணியத் தடை’

பட மூலாதாரம், Getty Images
போல்டன் நகரில், ‘அல்லாஹு அக்பர்’ அல்லது ‘கடவுள் மிகப் பெரியவன்’ என்று கூச்சலிட்டவாறே முகமூடி அணிந்த 300 பேர் கொண்ட குழு, 'குடியேற்ற எதிர்ப்பு' ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டது.
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை, நகரத்தில் 60AA பிரிவை அமல்படுத்தியது. இந்த உத்தரவின் மூலம், மக்கள் தங்கள் தோற்றத்தை மறைக்கப் பயன்படுத்தப்படும் முகமூடிகளை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சவுத்போர்ட், பெல்ஃபாஸ்ட், ஹார்டில்பூல், ஹல், லிவர்பூல், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், நாட்டிங்ஹாம், சுந்தர்லேண்ட் மற்றும் பிரிட்டனின் பிற இடங்களில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு பின்பற்றப்படும் உக்திகள், பிரிட்டனில் 2011இல் நடந்த கலவரங்கள் கையாளப்பட்ட விதத்தைப் பிரதிபலிக்கலாம் என்று பிரதமர் பிரதமர் கியர் ஸ்டாமர் சுட்டிக்காட்டினார். 2011இல் பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தபோது பொது வழக்குகள் பிரிவின் இயக்குநராக கியர் ஸ்டாமர் இருந்தார்.
"சட்ட அமலாக்கத்திற்கான உறுதியான தீர்வுகள் எங்களிடம் உள்ளன. இதனால் நாங்கள் கைதுகளையும், குற்றவாளிகளுக்கான தண்டனைகளையும் மிக விரைவாக நிறைவேற்ற முடியும்," என்று அவர் கூறினார்.
"2011இல் பொது வழக்குகளின் இயக்குநராக இருந்தபோது நானே அந்தச் செயல்பாடுகளின் ஒரு அங்கமாக இருந்தேன். மேலும் இந்த குண்டர்களை விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றார் பிரதமர் கியர் ஸ்டாமர்.
2011ஆம் ஆண்டில் செய்தது போலவே, பிரிட்டன் நீதிமன்றங்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும், இதனால் வழக்குகளை விரைவாக முடிக்கலாம் என்றும் அமைச்சர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே சமயம், பதற்ற நிலையைச் சமாளிக்க கூடுதல் அதிகாரிகளை நியமிக்கவும் காவல்துறை சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












