தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் ஜமா திரைப்படம் எப்படி இருக்கிறது?

'ஜமா' ஊடக விமர்சனம் - அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்திருக்கிறதா?

பட மூலாதாரம், LEARN AND TEACH PRODUCTION

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் நடித்து இயக்கியுள்ள ‘ஜமா’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) திரையரங்குகளில் வெளியானது. இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ‘கூழாங்கல் விஷனரிஸ்’ தயாரித்துள்ளது. கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், அம்மு அபிராமி, வசந்த் மாரிமுத்து, மணிமேகலை உட்பட பலர் நடித்துள்ளனர்.

கூத்து வாத்தியார் தாண்டவம் (சேத்தன்) தலைமையிலான ‘அம்பலவாணன் நாடக சபை’யில் (ஜமா) பெண் வேடமிட்டு நடித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). எப்போதும் திரௌபதி வேடமே அவருக்குத் தரப்படுகிறது. பெண் வேடமிட்டு நடிப்பதால் தன் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என வேதனைப்படுகிறார் கல்யாணத்தின் தாய். இதனால், பெண் வேடம் அணியாமல் அர்ஜுனன் வேடத்தில் நடிக்குமாறு அவருடைய தாய் கூறுகிறார்.

கூத்து மீது தான் கொண்ட காதலுக்காகப் பல இடங்களில், குறிப்பாக வாத்தியார் தாண்டவத்திடம் அவமானப்படும் கல்யாணம், இறுதியில் அர்ஜுனன் வேடமிட்டாரா என்பதுதான் ‘ஜமா’. தெருக்கூத்து கலைஞரான தன் தந்தையின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க தானே ஒரு ‘ஜமா’ அமைக்க போராடுகிறார் கதாநாயகன். இடையே, தாண்டவத்தின் மகள் ஜெகாவுடனான (அம்மு அபிராமி) காதல் என்னவானது என்பதும் கதையில் பேசப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'ஜமா' ஊடக விமர்சனம் - அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்திருக்கிறதா?

பட மூலாதாரம், LEARN AND TEACH PRODUCTION

அறிமுக நடிகரின் தேர்ந்த நடிப்பு

“கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள பாரி இளவழகன் அற்புதமாக நடித்திருக்கிறார். பெண் வேடமிட்டே பழகிய ஒருவரின் உடல் நளினங்களிலும் பெண் குடியேறியிருப்பதை தன் நடிப்பின் மூலம் அபாரமாக வெளிப்படுத்துகிறார்,” என பாராட்டியிருக்கிறது ‘தினமணி’ நாளிதழ்.

“வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பெண்ணைப்போலவே மலை உச்சிக்கு செல்லும் காட்சியிலும் காதலி முத்தம் கொடுக்கும்போது பெண்ணைப்போன்றே தயங்குவதும் சிணுங்குவதுமாக தேர்ந்த நடிகனைப்போல் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்,” என பாராட்டியுள்ளது தினமணி.

விடுதலை திரைபடத்துக்குப் பின் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என நடிகர் சேத்தனையும் இவர்களையெல்லாம் ஏப்பம் விடும் நடிப்பைக் கொடுத்திருப்பதாக நடிகர் ஸ்ரீ கிருஷ்ண தயாளையும் பாராட்டியுள்ளது அந்நாளிதழ். குறிப்பாக, “ராஜபாட்டை வேஷமிடுவதிலும் குடித்துவிட்டு ஆத்திரமடைவதுமாக நடிப்பில் மிரட்டுகிறார்,” என சேத்தனின் நடிப்பு குறித்து புகழ்ந்துள்ளது.

“அன்பை வெளிப்படுத்துவதிலும் கோபத்தைக் காட்டுவதிலும் அவரது கண்கள்கூட தனித்துவமாக இருக்கிறது,” என அம்மு அபிராமியின் நடிப்பை குறிப்பிட்டு கூறியுள்ளது ‘தினமணி’.

தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை இயல்பாகப் பதிவு செய்திருப்பதாக இயக்குநரைப் பாராட்டியுள்ள அந்நாளிதழ், ஜமாவில் திரௌபதியாக வேடம்போடும் ஒரு ஆண் வழியாகக் கதையைக் கடத்தியிருப்பது நல்ல பார்வை என கூறியுள்ளது.

சில விமர்சனங்களையும் தினமணி முன்வைத்துள்ளது. “எழுத்தில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவ்வளவு எதார்த்தமான ஜமாவையும் கூத்துக்கலையையும் காட்டியவர்கள் படத்தில் பஃபூன் கதாபாத்திரத்திற்கு காட்சிகள் இல்லாமல் செய்திருப்பது சின்ன சறுக்கல்,” என குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது ‘தினமணி’.

'ஜமா' ஊடக விமர்சனம் - அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்திருக்கிறதா?

பட மூலாதாரம், LEARN AND TEACH PRODUCTION

நெகிழ வைத்த கிளைமாக்ஸ்

“நீண்ட கூந்தல், பெண்களுக்கே உரிய எளிய நடை மற்றும் பேச்சு மொழியுடன் பாரி இளவழகன் படத்தில் கல்யாணம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். உடல்மொழியைச் சிறப்பாக செய்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்,” என நடிகர் பாரி இளவழகனை பாராட்டியிருக்கிறது ‘மாலை மலர்’ நாளிதழ்.

பாரி இளவழகனைத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவதிலும், காதலனுக்காகத் தந்தை சேத்தனை எதிர்ப்பதிலும் அம்மு அபிராமி கவனிக்க வைத்து இருக்கிறார் என்றும், பூனை குமார் கதாபாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து மற்றும் நாடக அனுபவமுள்ள நடிகர்கள் தங்களது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் ‘மாலை மலர்’ நாளிதழ் இத்திரைப்படத்தை புகழ்ந்துள்ளது.

'ஜமா' ஊடக விமர்சனம் - அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்திருக்கிறதா?

பட மூலாதாரம், LEARN AND TEACH PRODUCTION

பிளாஷ்பேக் காட்சிகள் நீளம்

பாடல்கள், ஒப்பனை, கலையம்சம் என, அனைத்து தரப்பிலும் தெருக்கூத்து கலையின் நம்பகத்தன்மையை இப்படம் பிரதிபலிப்பதாக ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் வசனங்கள் பொத்தம்பொதுவாக இருப்பதாகவும் அதனால் அவை எந்த உணர்ச்சியையும் தூண்டவில்லை என்றும் விமர்சித்துள்ளது.

கல்யாணம் மற்றும் ஜெகா (அம்மு அபிராமி) ஆகியோரின் காதல் காட்சிகள் மனதை நெகிழச் செய்வதாகவும் பெண்கள் தங்கள் காதலை முன்வந்து கூற முயற்சிப்பதை திரையில் பார்ப்பது அழகானது என குறிப்பிட்டுள்ளது அந்த விமர்சனம்.

திரைப்படத்திலிருந்து பார்வையாளர்கள் விலகிவிடும் சமயத்தில் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த அந்த இடத்தில் யாராவது ஒருவர் இறக்க வேண்டும் என இயக்குநர்கள் நினைத்துக்கொள்வதாக விமர்சித்துள்ளது ‘சினிமா எக்ஸ்பிரஸ்’.

பிளாஷ்பேக் காட்சிகள் மிக நீளமாக இருப்பதாகவும் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

'ஜமா' ஊடக விமர்சனம் - அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு மரியாதை செய்திருக்கிறதா?

பட மூலாதாரம், LEARN AND TEACH PRODUCTION

இரண்டாம் பாதியில் வேகத்தடை

மிக விரைவாக கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி கதைக்குள் நகர்வதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

கல்யாணம் மற்றும் தாண்டவத்தின் குணாதிசயங்களை அவர்களின் உடல்மொழி வாயிலாக காட்டுவதை குறிப்பிட்டுள்ளது அந்நாளிதழ். முதல் பாதி வேகமாக நகர்வதாகவும் ஆனால் இரண்டாம் பாதியில் அது குறைந்துவிடுவதாகவும் விமர்சித்துள்ளது. கல்யாணத்தின் கதாபாத்திரத்தில் சில முரண்பாடுகள் ஏற்படுவதாக அந்நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. தன் காதலியை புறக்கணிப்பதும் தன் கதாபாத்திரத்திலிருந்து கல்யாணம் விலகிச் செல்வதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டவும் செய்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா. தெருக்கூத்தை விளக்கும் உடைகள், லைவ் சவுண்ட், நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டியிருக்கிறது. சேத்தன், பாரி இளவழகன், அம்மு அபிராமி, மணிமேகலை, ஸ்ரீ கிருஷ்ண தயாள் என நடிகர்களை தனித்தனியாக குறிப்பிட்டு அவர்களின் நடிப்பை பாராட்டியுள்ளது.

துணை நடிகர்கள் பலரும் உண்மையாகவே தெருக்கூத்து கலைஞர்கள் என்பதால் அவர்களின் சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. இளையராஜாவின் இசை படத்திற்கு வலு சேர்த்திருப்பதாகவும் சில குறைகளுக்கு மத்தியிலும் அழிந்துவரும் தெருக்கூத்து கலைக்கு சிறப்பான மரியாதையை இப்படம் செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)