ராயன் விமர்சனம்: 50வது படத்தில் தனுஷ் இயக்குநராக வெற்றி பெற்றாரா?

பட மூலாதாரம், SUN PICTURES
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ராயன் திரைப்படம் இன்று (வெள்ளி ஜூலை 26) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ் தவிர துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
ப. பாண்டி திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்கள் என்ன? தனுஷின் 50-வது படமான ராயன் படம் எப்படி இருக்கிறது?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
ராயன் படத்தின் கதை என்ன?
சிறு வயதிலேயே அம்மா, அப்பா இறந்துவிட தனது தம்பிகளான முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ்) உடன் தங்கை துர்காவை (துஷாரா) அழைத்துக் கொண்டு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் அண்ணான காத்தவராயன் (தனுஷ்).
சென்னையில் குடும்பத்துடன் உணவகம் நடத்தி வந்த நிலையில், பிரபல தாதாவாக இருக்கும் சரவணன், எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருக்கும் இடையே தனுஷ் எப்படி மாட்டிக் கொண்டார்?
தம்பி, தங்கையை காக்க தனுஷ் எடுத்த அவதாரம் என்ன என்பதே ராயன் படத்தின் மீதிக் கதை.
ராயன் விமர்சனத்தை வீடியோ வடிவில் காண கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், SUN PICTURES
தனுஷ் நடிப்பு எப்படி?
'ராயன் கதாபாத்திரமாகவே தனுஷ் வாழ்ந்து இருக்கிறார்' என்கிறது மாலைமலர் இணையதளம். தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுவது என அலட்டல் இல்லாத நடிப்பு மூலம் தனுஷ் மாஸ் காட்டி இருப்பதாக தனது விமர்சனத்தில் மாலைமலர் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு தம்பிகள், ஒரு தங்கைக்கு அண்ணனாக மொட்டைத் தலையுடன் வரும் ராயன் (தனுஷ்) ஸ்டைலாக தெரிகிறார் என்கிறது தினமணி இணையதளம்.
எழுத்து, இயக்கம் என பல முகம் எடுத்திருந்தாலும் நடிகராக தனது பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளதாக அந்த விமர்சனத்தில் தினமணி குறிப்பிட்டுள்ளது.
பல இடங்களில் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடிந்தாலும், தனது நடிப்பின் மூலமாக அதை சரிசெய்து இருக்கிறார் என்கிறது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' விமர்சனம்.
தனுஷின் முந்தைய படங்களில் அவரது நடிப்பை பார்த்து அதிக எதிர்ப்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு ராயன் விருந்தாக இருக்காது. ஆனால் நிச்சயம் ஏமாற்றமளிக்காத ஒன்றாக இருக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியுள்ளது.

பட மூலாதாரம், DHANUSH
ஏ.ஆர்.ரஹ்மான் இசை எப்படி?
ராயன் படத்தின் அடிதடி சண்டைக் காட்சிகள், குடும்பத்தில் நிகழும் உருக்கமான காட்சிகள் எனப் பல தருணங்களில் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வலுசேர்த்து இருக்கிறார் என்கிறது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையதளம்.
இப்படி ஒரு ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே இத்தனை நாளாகக் காத்திருந்தோம் என்கிறது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'. தனது இசையின் மூலம் காட்சியில் தெரியும் பதற்றத்தை ஏ.ஆர்.ரஹ்மான் அதிகரிக்கிறார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
படத்தின் முக்கிய பலமாக ஏ.ஆர்.ரஹ்மான் இருப்பதாக மாலைமலர் இணையதளம் கூறுகிறது. பல காட்சிகளுக்கு அவரின் பின்னணி இசை உயிர் கொடுத்து இருக்கிறது என்று தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
பின்னணி இசையிலும், பாடல்களிலும் பெரும் உழைப்பு கொடுத்து தான் ’இசை புயல்’ என்பதை நிரூபித்து இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் என்கிறது 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்'.
கடைக்குட்டித் தம்பியின் கல்லூரி வாழ்க்கை, நடு அண்ணனின் காதல் வாழ்க்கை, தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ராயன் படும் பாடு என சலிப்பை ஏற்படுத்தாமல் முதல்பாதி முடிந்தாலும், இரண்டாம் பாதி முழுதும் சண்டை, ரத்தம், மியூசிக்கோடு தனுஷ் நடப்பது மட்டும் அதிகம் காட்டப்பட்டுச் சலிப்பு தட்டுவதாக தினமணி விமர்சனம் வழங்கியுள்ளது.
படம் எப்படி இருக்கிறது?
எஸ்.ஜே.சூர்யா, சரவணன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரணி, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன் என பல்வேறு நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அனைவருக்குமான காட்சிகளை வழங்கி கதாபாத்திரங்களை முறையாக பயன்படுத்தியதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கூறுகிறது.
எஸ்.ஜே.சூர்யா அவரது வழக்கமான பாணியில் காமெடி கலந்த வில்லத்தனத்தை தந்து அசத்தி இருப்பதாக தினமணி எழுதியுள்ளது. போலீசாக வரும் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் அனைவரையும்விட குறைவான நேரமே திரையில் தோன்றுகிறார் என்கிறது தினமணி.
எஸ்.ஜே.சூர்யா கிடைத்த வாய்ப்பில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதிக்க முயன்றிருந்தாலும், அவருக்கான கதாபாத்திரம் வலுவாக அமைக்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. வழக்கமான பழிவாங்கும் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை இரண்டாம் பாதியில் உள்ள டுவிஸ்ட் மாற்றுகிறது. ஆனால் அது துரதிருஷ்டமாக வேலை செய்யவில்லை என்கிறது அந்த விமர்சனம்.
குடும்பம், பழிவாங்கல், துரோகம் என வழக்கமான சினிமா டிராமாவுக்கான அம்சங்கள் அனைத்தும் ராயனில் உள்ளது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. செல்வராகவன், பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் அளவாகவும், சரியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்களின் கச்சிதமான உழைப்பால் ராயன் ஒரு முழு படைப்பாக தெரிகிறது. ஆனால் இயக்குநர் தனுஷ் அவரது எழுத்தில் கூடுதல் லட்சியத்துடன் இருந்திருந்தால் ராயன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் என்று தனது விமர்சனத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

பட மூலாதாரம், SUN PICTURES
இயக்குநராக தனுஷ் வெற்றி பெற்றாரா?
நடிப்பில் 'அசுரனாக’ விளங்கிய தனுஷ், எழுத்தாளராக ஓகேவான கதையைக் கொடுத்து இருக்கிறார். இயக்குநராக அவரது உழைப்பைத் திரையில் பார்க்க முடிகிறது என்று தினமணி இணையதளம் விமர்சனம் வழங்கியிருக்கிறது.
கதையின் களம் கச்சிதமாக இருந்தாலும், தனுஷின் 50-ஆவது படம் எனச் சொல்லவோ, அதை அவரே இயக்கி நடித்தார் எனச் சொல்லி பெருமிதப்படும் அளவுக்கோ படம் இல்லை என்று தினமணி எழுதியுள்ளது.
ப.பாண்டி படத்தில் மனதை வருடும் கதை கொண்டு இயக்குநராக வெற்றி பெற்ற தனுஷ், முழு நீள ஆக்ஷன் படத்தில் இயக்குநராக தனது பங்கை சிறப்பாகச் செய்துள்ளார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு என பல துறைகளையும் தனுஷ் சிறப்பாக ஒன்றிணைத்து இருக்கிறார். நிறைய காட்சிகள் கணிக்க முடிவது போல இருப்பது படத்தின் மைனஸ் என்று விமர்சனம் வழங்கியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
நடிப்பில் அசுரன் என்று ஏற்கனவே நிரூபித்த தனுஷ், தற்போது இயக்கத்தில் அசுரன் என்று நிரூபித்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் தனுஷ் என்று மாலைமலர் விமர்சனம் எழுதியிருந்தது.
ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டு வெளியாகும் படங்களுக்கு குடும்பங்களை ஈர்க்க 'U' சான்றிதழ் பெறும் நிலையில், வன்முறைக் காட்சிகள் அதிகமுள்ள இந்தப் படத்திற்கு ‘A' சான்றிதழ் பெற்றதற்காக இயக்குநர் தனுஷிற்கு பாராட்டுகள் வழங்கியிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. அதே நேரம் தம்பி, தங்கையைக் காப்பாற்ற இந்தக் காட்சிகளை வடிவமைத்த விதத்தில் தனுஷ் இயக்குநராக வெற்றி பெற்றுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












