கமலா ஹாரிஸ்: ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணை அமெரிக்கர்கள் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்வார்களா?

- எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
- பதவி, வட அமெரிக்க நிருபர்
பெண்கள் உயர் பதவியை அடைவது மிகப்பெரிய சவாலாகக் கருதப்படும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில், மிச்சிகன் மாநிலம் மட்டும் தனித்து நிற்கிறது.
அந்த மாநிலத்தின் மூன்று மூத்த (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) அதிகாரிகள் அனைவரும் பெண்கள். அமெரிக்காவில் தேசிய அளவிலான முக்கிய அரசியல் பதவிகளில், நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் வசம் உள்ளது.
இதுவரை எந்தப் பெண்ணும் அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்காத நிலையில், பெண்களால் நடத்தப்படும் மிச்சிகன் மாநில அரசு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க அதிபர் ஆவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமா?
ஒரு பெண்ணுக்கு வாக்களிக்க மக்கள் விரும்பவில்லையா என்பதற்கு கருத்துக் கணிப்புகள் தெளிவான பதிலை அளிக்கவில்லை தான், ஆனால் அமெரிக்க மக்கள் இதுவரை குறைவான பெண்களையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெண்கள் ஆளும் மிச்சிகன் மாநிலம்
அமெரிக்க அரசியல் களத்தில், பெண்கள் இன்னும் அதிகமாகப் போராட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை.
ராபின் கெப்லிங்கர், மேற்கு மிச்சிகனில் உள்ள ஒரு பழமைவாத, துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிக்கும் மற்றும் கருக்கலைப்பை எதிர்க்கும் ஒரு சிறிய நகரத்தில் வசித்தாலும் கூட, ஜனநாயகக் கட்சியின் பெண் அதிபர் வேட்பாளருக்கு வாக்களிப்பது பற்றி மிகவும் உற்சாகமாக பேசுகிறார்.
"ஒரு சிறந்த திசையில் நாட்டை வழிநடத்த இவரை விட (கமலா ஹாரிஸ்) ஒரு சிறந்த வேட்பாளரை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை,” என்கிறார் 33 வயதான கெப்லிங்கர்.
ஜெனிசன் நகரில் வசிக்கும் கெப்லிங்கர், துணைத் அதிபர் ஹாரிஸுக்குப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் போட்டியிலிருந்து வெளியேற தற்போதைய அதிபர் ஜோ பைடன் எடுத்த முடிவைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 2) 59 வயதான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களம் காண்பதற்கு போதுமான பிரதிநிதி வாக்குகளைப் பெற்றார்.
ஆனால் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் சிலர் கூட, ஒரு பெண்ணாக இருப்பது அவருக்கும் அதிபர் பதவிக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக இருக்கலாம் என்று கவலைப்படுகிறார்கள்.
"முன்பு யாருமே செய்யாத ஒன்றை எவரும் செய்வது கடினம், அமெரிக்காவிற்கு ஒரு பெண் அதிபர் என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளுக்கு பின்னால் பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதாக நான் நினைக்கவில்லை." என்கிறார் கெப்லிங்கர்.
எவ்வாறாயினும், முக்கிய அரசியல் களமான மிச்சிகனில் இத்தகைய மாற்றம் சாத்தியமாகியுள்ளது, அங்கு ஜனநாயகக் கட்சியின் மூன்று பெண்கள் இப்போது உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
அவர்கள், வெளியுறவுச் செயலர் ஜோசலின் பென்சன், ஜனநாயகக் கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் அட்டர்னி ஜெனரல் டானா நெசெல். உண்மையில், மிச்சிகன் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில், ஜெனிபர் கிரான்ஹோல்ம், மற்றும் விட்மர் என இரண்டு பெண் ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில ஆளுநர்களில் கால் பகுதியினர் மட்டுமே பெண்கள். பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்பது 29% என சற்று அதிகமாக உள்ளது.
மிச்சிகனில் உள்ள தாராளவாத பெண்களுக்காக வாதிடும் குழுவான 'ஃபெம்ஸ் ஃபார் டெம்'ஸின் (Fems for Dems) தலைவரான மார்சி பால் கூறுகையில், "பெண்களை இன்றும் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள். மிச்சிகனில் மூன்று பெண்கள் போட்டியிட்டபோதும் கூட, அவர்கள் வெற்றிபெற முடியாது என்று தானே கூறினார்கள். எனவே ஹாரிஸுக்கும் அதே சூழ்நிலை தான் நிலவும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார்.
எவ்வாறாயினும், மிச்சிகனில் போட்டியிட்ட மூன்று பெண்களை வெற்றிகரமான வேட்பாளர்களாக மாற்றிய சில பண்புகள் கமலா ஹாரிஸிடம் காணப்படுகின்றன என்கிறார் மிச்சிகனில் உள்ள கென்ட் கவுண்டியின் ஜனநாயகக் கட்சியின் தலைவரான கிம் கேட்ஸ்.
ஹாரிஸ், விட்மர், மற்றும் கிரான்ஹோல்ம் ஆகியோர், “வெளிப்படையாகப் பேசக்கூடிய, வலிமையான பெண்களாக இருக்கிறார்கள்," என அவர் கூறினார்.
"அவர்கள் சிறந்த பேச்சுத் திறன் கொண்டவர்கள். ஒரு சராசரி மனிதருடன் பேசுவதைப் போல மக்களோடு அவர்களால் பேச முடிகிறது. அவர்கள் இரக்க குணமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்," என்று கூறுகிறார் கேட்ஸ்.
இந்த வெளிப்படைப் பேச்சு, வலிமை மற்றும் இரக்க குணம் ஆகியவை ஒரு அரசியல்வாதிக்கு தேவை என எளிதாகச் சொல்லிவிடலாம் தான். ஆனால் களத்தில் அதைத் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த ஹாரிஸால் முடிந்தால், அது அவருக்குச் சாதகமாக இருக்கும்.

கருக்கலைப்பு உரிமை
நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் கருக்கலைப்பு உரிமைகளை மிக முக்கியமான தேர்தல் பிரச்னைகளில் ஒன்றாக குறிப்பிடுகின்றனர்.
கருக்கலைப்புக்கான உரிமை 2022-இல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் குடியரசுக் கட்சியின் மாநிலங்களில் நடந்த பல தேர்தல்களில் ‘கருக்கலைப்புக்கு எதிராக’ இருக்கும் வழக்கறிஞர்கள் தோல்வியடைந்ததால், அதிபர் தேர்தலில் இந்த பிரச்னை எதிரொலிக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், குடியரசுக் கட்சியின் கோட்டைகளான கன்சாஸ், கென்டக்கி மற்றும் ஓஹியோ போன்ற ஒரு சில மாநிலங்கள் கருக்கலைப்பு உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளன.
ஹாரிஸ் தனது பதவிக் காலத்தில், இனப்பெருக்க உரிமைகள் மீது அதிக கவனம் செலுத்தினார், சமீபத்தில் கருக்கலைப்பு செய்யும் ஒரு மருத்துவமனையைக் கூட அவர் பார்வையிட்டார்.
ஒரு பெண்ணாக இருப்பது என்பது கமலா ஹாரிஸுக்கு இந்த விஷயத்தில் சாதகமான ஒன்று தான் என்று மிச்சிகன் அரசியல் வல்லுநர் அட்ரியன் ஹெமண்ட் கூறினார்.
"ஜோ பைடனை விட துணை அதிபர் ஹாரிஸ் இந்த பிரச்னை குறித்து சிறப்பாக பேசக்கூடியவர்," என்று அவர் கூறினார்.

'கருப்பின மக்களை கவர்ந்துள்ளார்'
அதிபர் தேர்தலில், 81 வயதான பைடன் டிரம்பை தோற்கடிக்க முடியுமா என்ற கவலைகள் அதிகரித்ததால், மிச்சிகன் உள்ளிட்ட கடுமையான போட்டி நிலவும் அமெரிக்க மாநிலங்களில் அதிபருக்கான ஆதரவு சரிந்தபோது சில முக்கிய நன்கொடையாளர்கள் நிதி வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தினர்.
இதற்கிடையில், கடந்த மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் 78 வயதான டிரம்பை படுகொலை செய்ய முயன்றதை அடுத்து, அவருக்கான மக்கள் ஆதரவில் ஒரு முன்னேற்றம் தெரிந்தது.
ஆனால் பைடன் தேர்தலில் இருந்து விலகிய பிறகு, ஹாரிஸ் 24 மணி நேரத்திற்குள் 81 மில்லியன் டாலர்கள் நன்கொடைகள் பெற்றார். அதன்பிறகு, செவ்வாயன்று வெளியிடப்பட்ட மார்னிங் கன்சல்ட் கருத்துக்கணிப்பு ஹாரிஸின் மதிப்பீட்டை 50% ஆகக் காட்டியது, இது ஒரு வாரத்திற்கு முன்பு 43% ஆக இருந்தது.
மிச்சிகனில் உள்ள சில ஜனநாயக பிரச்சாரகர்கள், ஹாரிஸ் ஒரு கறுப்பினப் பெண் என்ற பின்னணி சில வாக்காளர்களிடம் அவரது பிராபல்யம் சென்றடைய உதவியதாகக் கூறுகிறார்கள்.
அவரது இந்திய பாரம்பரியம், பைடன் மற்றும் டிரம்ப் என இருவரையும் விட இளையவர் என்பதும் சில வாக்காளர்களை அவரது பக்கம் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.
க்ரோஸ் பாயின்ட் (Grosse Pointe) நகரத்தின் என்.ஏ.ஏ.சி.பி-இன் (NAACP) நிர்வாகக் குழுவின் உறுப்பினர் கிரேக் போவென்ஸ், “மிச்சிகனின் டெட்ராய்டில் மக்களிடையே புது உற்சாகம் தெரிகிறது,” என்றார். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அதிகம் வாழும் நகரமான டெட்ராய்டில், முதல் கறுப்பின அதிபரான ஒபாமாவிற்குப் பிறகு, ஹாரிஸுக்குத் தான் இத்தகைய ஆதரவு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
"கருப்பின மக்களை அவர் கவர்ந்துள்ளார்," என்று அவர் கூறினார்.
சில ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் மத்தியில் ஒரு வெளிப்படையான உற்சாக அலை காணப்படும் அதே வேளையில், ஹாரிஸ் தனது பாலினம் மற்றும் பின்னணியின் அடிப்படையில் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளார்.
பொதுவாக, பெண் வேட்பாளர்கள் ஆண் அரசியல்வாதிகளை விட மேலோட்டமான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், பேசுகிறார்கள், மற்றும் தோற்றம் குறித்து.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின், அரசியல் அறிவியல் பேராசிரியை நஜிதா லஜேவர்டி கூறுகையில், “பெண் அரசியல்வாதிகள் அவர்களது நிறத்திற்காக அதிகமாக குறிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் ஒரே நேரத்தில் பாலினம் மற்றும் இனம் சார்ந்த தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். அதிக ஆன்லைன் விமர்சனங்களையும் அவர்கள் எதிர்கொள்வகிறார்கள்,” என்கிறார்.

'கோபக்காரப் பெண்மணி பிம்பம்'
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அரசாங்க உதவிப் பேராசிரியர் ஜமில் ஸ்காட் கூறுகையில், “பெண்கள், குறிப்பாக கறுப்பின பெண் அரசியல்வாதிகளின் விஷயத்தில், அவர்களின் கடந்தகால காதல் உறவுகளை ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஹாரிஸின் கடந்தகால உறவுகள் மீதான விமர்சனங்களுடன் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இந்த படங்களை பரப்புவதற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், அமெரிக்க வழக்கறிஞர் டக் எம்ஹாஃப் என்பவரை திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது,” என்கிறார்.
“ஒரு பெண் அரசியல்வாதியாக, ஹாரிஸ் தனது குடியரசுக் கட்சியின் போட்டியாளரைக் கடுமையாக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார், ஆனால் ஒரு கோபக்காரப் பெண்மணியாக பார்க்கப்பட அவர் விரும்ப மாட்டார்,” என்கிறார் ஸ்காட்.
"பெண்கள் அரசியலில் வலிமையானவர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அதே சமயத்தில் அவர்கள் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதை மக்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
அவர் ஹிலாரி கிளிண்டனை சுட்டிக்காட்டினார்.
ஒரு முக்கிய அமெரிக்கக் கட்சியின், முதல் பெண் அதிபர் வேட்பாளரான ஹிலாரி, 2016-ஆம் ஆண்டு டிரம்பிற்கு எதிரான அவரது கடுமையான பிரசாரங்கள் மற்றும் விமர்சனங்களால் மிகவும் ஆக்ரோஷமானவர் என்று சிலரால் கருதப்பட்டார்.
இந்த பிம்பத்தை பயன்படுத்த முயன்ற டிரம்ப் ‘மோசமான பெண்’ என்று ஹிலாரியை வர்ணித்தார்.
ஹாரிஸின் பின்னணி மற்றும் கருக்கலைப்பு பற்றிய அவரது நிலைப்பாடு சிலரை ஈர்க்கும் அதேவேளையில், இடதுசாரி சார்பு வாக்காளர்கள் மத்தியில் ஆதரவுக்கு உத்தரவாதம் இல்லை.
கிராண்ட் ரேபிட்ஸைச் சேர்ந்த 31 வயதான டிரெஸ்ஸா ஜான்சன், “ஹாரிஸின் கொள்கைகள் தான் அவரை விரும்பத்தகாத வேட்பாளராக ஆக்குகின்றன. அவருடைய இனம் அல்லது பாலினம் அல்ல,” என்று நம்புகிறார்.
ஒரு குற்றவியல் வழக்கறிஞராக, கமலா ஹாரிஸின் கடந்த காலம் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த பைடன் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஆகியவை அவரை ஒரு மோசமான வேட்பாளராக ஆக்குகிறது என்று அவர் கூறுகிறார்.
பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டெயினுக்கு வாக்களிக்க விரும்பும் ஜான்சன், "என்னைப் பொறுத்தவரை, இந்த நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்க மக்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒரு திறமையான நபர் மட்டுமே தேவை," என்கிறார்.

‘டிரம்ப் ஒரு சக்திவாய்ந்த போட்டியாளர்’
விட்மரின் மிச்சிகன் வெற்றியானது ஹாரிஸ் பிரசாரத்திற்கு உதவ முடியாது, காரணம் டிரம்ப் போன்ற ஒரு சக்திவாய்ந்த வேட்பாளரைத் தோற்கடிப்பது.
அரசியல் வல்லுநர் ஹேமண்ட், “விட்மர் இரண்டு பலவீனமான குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்களைத் தோற்கடித்தார், ஆனால் ஹாரிஸ் முன் ஒரு வலிமையான வேட்பாளர் (டிரம்ப்) நிற்கிறார்,” என்கிறார்.
முன்னாள் அதிபர் டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே ஹாரிஸை அவரது பாலினம் மற்றும் இனத்தின் அடிப்படையில் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் விட்மர் செய்ததைப் போல, ஹாரிஸும் இத்தகைய தாக்குதல்களை புறக்கணிப்பது சிறந்தது என ஹேமண்ட் கூறினார்.
விட்மர் கவர்னர் பதவிக்கு போட்டியிட்டபோதும், பதவியில் இருந்த போதும், பல பாலின ரீதியிலான விமர்சனங்களுக்கு ஆளானார்.
“விட்மர், தன்னைப் பற்றிக் கூறப்பட்ட பாலினம் சார்ந்த கருத்துகளுக்கு மற்றவர்களை வழக்காட அனுமதித்தார், அது புத்திசாலித்தனமான முடிவாக இருந்தது,” என்று ஹேமண்ட் கூறினார்.
"இந்த வகையான கருத்துகளை நேரடியாக எதிர்கொள்வதில் பெண் வேட்பாளர்களுக்கு ஒரு அச்ச உணர்வு இருப்பதாகத் தெரிகிறது," என்கிறார் ஹேமண்ட்.
“அதே சமயத்தில் பெரும்பாலான வாக்காளர்கள் பெண்களாக இருப்பதால், இந்த வகையான கருத்துகளைப் புறக்கணிப்பது பயனுள்ள உத்தியாக இருக்கிறது. பலர் பாலின ரீதியிலான விமர்சனங்களை நிதானமாக கையாளும் வேட்பாளர்களை விரும்புகிறார்கள்,” என்று ஹேமண்ட் கூறினார்.
மிச்சிகனில் உள்ள சில தாராளவாத ஆதரவாளர்கள், ஹாரிஸுக்கு எதிரான இந்த இனம் மற்றும் பாலியல் சார்ந்த தாக்குதல்களைத் கடந்து வாக்காளர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
தென்கிழக்கு மிச்சிகனில் உள்ள வாக்காளர் பிராண்டி கூறுகையில், "அவர் (ஹாரிஸ்) புத்திசாலி, அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்,” என்கிறார்.
‘மார்னிங் கன்சல்ட்’ கருத்துக் கணிப்பின்படி, கடுமையான போட்டி நிலவும் மிச்சிகன் போன்ற மாநிலங்களில் பைடனுக்கு இருந்ததை விட கமலா ஹாரிஸுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது.
ஆனால் டிரம்பிற்கும் மிச்சிகனில் வலுவான ஆதரவு உள்ளது. துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கிராண்ட் ரேபிட்ஸில் 12,000 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினார் டிரம்ப்.
மிச்சிகன் மாநிலத்தில் 2016-இல் ஹிலாரி கிளிண்டனை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் டிரம்ப். ஆனால் 2020-இல் இங்கு பைடன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
'85 நிமிடங்கள் அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்'

பட மூலாதாரம், Getty Images
சில விஷயங்களில், 2016-இல் இருந்த அரசியல் சூழல் மாறிவிட்டது என்று ஸ்காட் கூறினார்.
"வாக்காளர்கள் அப்போது ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக இல்லை. ஒரு பெண் அதிபராகப் போட்டியிடுவதை அவர்கள் புரட்சிகர மாற்றமாகப் பார்க்கவில்லை," என்று அவர் கூறினார்.
ஆனால் பெண்களின் மற்றொரு தரப்பு, கிளிண்டனின் தோல்வி மற்றும் டிரம்பின் வெற்றியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஸ்காட் கூறினார். டிரம்பின் பதவியேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் நடந்த அணிவகுப்புகளில் மில்லியன் கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் தேசிய கருத்து ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின்படி, பெண்களை விட ஆண்கள் அரசியலுக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று நம்பும் அமெரிக்கர்களின் சதவீதம் 2014-இல் 19% என்பதிலிருந்து 2018-இல் 14% ஆக குறைந்துள்ளது. 1975-ஆம் ஆண்டில், 47% அமெரிக்கர்கள் பெண்களை விட ஆண்கள் சிறந்த அரசியல்வாதிகளாக திகழ்வார்கள் என்று நம்பினர்.
தனக்கான ஆதரவு பெருகி வருவதைக் கவனிக்கிறார் ஹாரிஸ். குறிப்பாக கறுப்பினப் பெண்கள் மத்தியில் மற்றும் சமூக ஊடகங்களில்.
டிரம்பின் மீதான 34 குற்றங்களைச் சுட்டிக்காட்டி, நவம்பர் மாத அதிபர் தேர்தலை, ‘சுதந்திர உணர்வு’ மற்றும் ‘குழப்பநிலை’ ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியாக இதை மாற்றுகிறார் ஹாரிஸ்.
ஹாரிஸின் மாறுபட்ட பின்னணி மற்றும் அனுபவமே அதிக வாக்காளர்களை அவர் பக்கம் இழுக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
மிச்சிகன் மாநிலப் பேராசிரியரான லஜேவர்டி கூறுகையில், "அநேகமான மக்கள், ஹாரிஸ் தங்களைப் பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள். குறிப்பாக மிச்சிகன் போன்ற ஒரு மாநிலத்தில், அங்கு பலர் புலம்பெயர்ந்த பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்லது கறுப்பின அல்லது தெற்காசியராக இருப்பார்கள்,” என்கிறார்.
"யாராவது ஒருவர் தங்கள் சமூகத்தின் நலன்களை அறிந்து தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முற்படுவது அவசியம் என அவர்கள் நினைப்பார்கள் அல்லவா," என்று கூறினார் பேராசிரியரான லஜேவர்டி.
உண்மை என்னவென்றால், ஹாரிஸ் 2021-ஆம் ஆண்டிலே அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இருந்தவர் ஹாரிஸ். பைடன் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, 85 நிமிடங்களுக்கு மட்டும் அதிபருக்கான அதிகாரம் ஹாரிஸுக்கு வழங்கப்பட்டது.
இப்போது சவால் என்னவென்றால், அதே அதிகாரத்தை நான்கு ஆண்டுகளுக்கு அவரால் நீட்டிக்க முடியுமா என்பது தான். அதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியலில் பெண்கள் எவ்வாறு தலைமைப் பதவிகளைக் கைப்பற்றி முன்னேறலாம் என்பதற்கான வழிகாட்டுதலை மிச்சிகன் மாநிலம் வழங்குகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












