அமெரிக்க அதிபர் தேர்தல்: மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றாலும் அமெரிக்க அதிபராக முடியும் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் நபர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதிக செல்வாக்கை கொண்டிருப்பார் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
தற்போது அமெரிக்க அரசியலில், இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. நவீன காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அதிபர்களும் இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயக கட்சியின் கொள்கை, சிவில் உரிமைகள், பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் இந்த கட்சியைச் சேர்ந்தவர். அவர் இந்த முறை போட்டியில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
குடியரசு கட்சி, பழமைவாத அரசியல் கட்சியாகும். பழம்பெரும் கட்சி எனவும் இது அறியப்படுகிறது. குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைப்பது, துப்பாக்கி உரிமை, குடியேறிகள் மற்றும் கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இக்கட்சி உள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிற்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எப்போது அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்?
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. வெற்றி பெறும் நபர் அடுத்த நான்கு ஆண்டுகள் அதிபராக இருப்பார். ஜனவரி 2025 முதல் அவரது பதவிக்காலம் தொடங்கும்.

வேட்பாளர்கள் யார்?
2024 அமெரிக்க அதிபர் தேர்தல் 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது. ஒன்பது குடியரசு கட்சி வேட்பாளர்கள், நான்கு ஜனநாயக கட்சி வேட்பாளர்கள், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் இருந்தனர். பெரும்பாலோனோர் போட்டியிலிருந்து விலகிவிட்டனர்.
இரண்டு பிரதான கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளரை, மாகாண அளவில் தொடர்ச்சியாக நடக்கும் ப்ரைமரிஸ் மற்றும் காகஸ் எனப்படும் நடைமுறை மூலம் தேர்ந்தெடுக்கின்றன.
வேட்பாளர் தேர்வு நடைமுறையைப் பொருத்தவரை, இரு கட்சிகளிலும் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு வேறுபாடுகள் உள்ளன.
அமெரிக்க அதிபர் பைடன் சில சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாக போதுமான ஆதரவைப் பெற்றார். ஆனால் அவர் பின்னர் போட்டியில் இருந்து விலகிவிட்டார். தனது ஆதரவை துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு வழங்கியிருப்பதால், அவரே வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.
குடியரசுக் கட்சியில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைசியாக எஞ்சியிருந்த போட்டியாளரான முன்னாள் ஐ.நா தூதர் நிக்கி ஹேலியை எதிர்கொண்டார். இறுதியாகக் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்குத் தேவையான ஆதரவை பெற்றார்.
முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் சகோதரரின் மகனான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?
அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட ஒரு குழுவினரின் (தனிப்பட்ட வாக்காளர்கள் அல்ல) வாக்குகளைப் பெறுவதற்கு இரு வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். இதனை எலக்டோரல் காலேஜ் வாக்குகள் என குறிப்பிடுகின்றனர்.
மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் (Electoral College) இருக்கும். உதாரணத்துக்கு கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்ஸாஸுக்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாநிலங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி.யை சேர்த்தால், மொத்தம் 538 வாக்குகள் உண்டு. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார்.
ஒருவகையில், வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.
இரண்டைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 'வெற்றி பெற்றவர் அனைத்துப் பிரதிநிதிகளின் வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்' என்ற விதி உள்ளது. அதாவது எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் (பிரதிநிதிகளின்) வாக்குகளும் வழங்கப்படும்.
அதனால்தான் 2016-இல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினர்.
பெரும்பாலான மாகாணங்கள் இரு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. ஆனால், இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் 'போர்க்கள' மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
வேறு யார் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்பது குறித்த கவனமே அனைவருக்கும் உள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வாக்காளர்கள் இப்போது தேர்ந்தெடுப்பார்கள்.
435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறும். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நிலையில், செனட் சபையில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையாக உள்ள கட்சி அதிபரின் திட்டங்களுக்கு முரண்பட்டால், அது அதிபருக்குத் தலைவலியாக இருக்கும்.
யார் வாக்களிக்கலாம்?
ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிபர் தேர்தலில், 18 வயதை நிரம்பிய அமெரிக்க குடிமக்கள் வாக்களிக்கலாம்.
தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்?
வழக்கமாக தேர்தல் நடந்த அன்றிரவே வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார். ஆனால், 2020-ல் அனைத்து ஓட்டுகளையும் எண்ண சில நாட்கள் ஆயின.
அதிபர் மாறும் நிலை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பிந்தைய காலம் 'மாறுதல் காலம்' என அழைக்கப்படும். புதிய நிர்வாகத்தினர், புதிய திட்டங்களை உருவாக்கும் நேரம் இதுவாகும்.
ஜனவரி மாதம் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அதிபர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












