ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் - வங்கதேச நெருக்கடியைத் தீர்க்க இந்தியாவால் என்ன செய்ய முடியும்?

வங்கதேசம், இந்தியா, ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்திருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய உறவைக் காட்டுகிறது.

பதினேழு கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தார் ஹசீனா. அங்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியது. காவல்துறை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு இரு முறை ஹசீனா இந்தியா வந்துள்ளார். முதல் முறை இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார். பின்னர், இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

நரேந்திர மோதி தலைமையில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு அரசியல் தலைவர் ஹசீனா ஆவார்.

பிபிசி தமிழ்வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்தது ஏன்?

வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் வணிக நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் குறி வைக்கப்படுவது மிகப்பெரிய கவலையாக உள்ளது என இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

வங்கதேச பிரச்னை குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

''வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து கவனத்தில் கொண்டுள்ளோம். எல்லையில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் 19 ஆயிரம் இந்தியர்கள் வசித்தனர். அவர்களில் ஜூலை மாதமே 10 ஆயிரம் இந்தியர்கள் அங்கிருந்து வந்துவிட்டனர். அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்பிவிட்டனர்'' என்றார் ஜெய்சங்கர்

''ஆகஸ்ட் 5-ம் தேதி ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் பயணம் செய்த விமானம் இந்தியாவிற்கு வர மிகக் குறுகிய அவகாசத்தில் அனுமதி கோரப்பட்டது. நேற்று மாலை அவர் இந்தியா வந்தார்'' எனவும் ஜெய்சங்கர் கூறினார்.

இதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில், வங்கதேச விவகாரம் குறித்து ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

வங்கதேசம், இந்தியா, ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், SAMSAD TV

இருநாட்டு உறவு குறித்து தலைவர்கள் கூறியது என்ன?

''நாம் கடந்த ஓராண்டில் 10 முறை சந்தித்திருப்போம். எனினும், இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானது, ஏனெனில் நாங்கள் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு வருகை தரும் முதல் வெளிநாட்டு அரசியல் தலைவர் நீங்கள்'’ என ஹசீனா சுற்றுப்பயணத்தின் போது கூட்டு செய்தியாளர் சந்திப்பில் நரேந்திர மோதி கூறினார்.

''இந்தியாவுடனான உறவை வங்கதேசம் பெரிதும் மதிக்கிறது'' என்று கூறிய ஹசீனா, ''நாங்கள் என்ன செய்திருக்கிறோம், எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதைக் காண வங்கதேசம் வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்தார்.

வங்கதேசத்துடன் இந்தியா சிறப்பான ஒரு உறவைக் கொண்டிருக்கிறது. இந்த அண்டை நாட்டுடன், 4,096 கி.மீ எல்லை மற்றும் மொழி, பொருளாதாரம், கலாசாரம் ரீதியிலான உறவுகளை பகிர்ந்து வருகிறது இந்தியா.

முன்பு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், 1971இல் மேற்கு பாகிஸ்தான் (இப்போதைய பாகிஸ்தான்) உடனான போருக்கு பிறகு தனி நாடாக உருவானது. அப்போதிருந்து இந்தியா தொடர்ந்து அதற்கு ஆதரவளித்து வருகிறது.

ஆசியாவிலேயே வங்கதேசத்துடன் அதிகளவு வர்த்தகம் செய்யும் நாடாகவும் திகழ்கிறது இந்தியா.

ஆயினும், இருநாடுகளுக்கு இடையிலான உறவு கச்சிதமானதாக இல்லை. சீன உடனான நெருக்கமான உறவு, எல்லை பாதுகாப்பு, இடப்பெயர்வு பிரச்னைகள், மற்றும் சில வங்கதேச அரசியல் தலைவர்கள் மோதியின் இந்து தேச அரசியலை விரும்பாதது போன்ற வேறுபாடுகள் இருந்தன.

வங்கதேசத்தின் நீண்ட நாள் பிரதமர் ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

ஹசீனா பதவி விலகிய பிறகு, வங்கதேச ராணுவத் தலைவர் வக்கர் உஸ் ஜமான், இடைக்கால அரசு அமைப்பது குறித்த திட்டங்களை அறிவித்துள்ளார்.

இவர், அதிபர் முகமது ஷஹாபுதீனை சந்திக்கவுள்ளார் என்றும், வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைமையிலான எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, விரைவில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இடைக்கால அரசுக்கு யார் தலைமைத் தாங்கவிருக்கிறார் என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இதுவரை, வங்கதேசத்தின் வன்முறைப் போராட்டங்களை ‘அந்நாட்டு உள்விவகாரம்’ என்று மட்டுமே இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுக் கொள்கை நிபுணரான ஹேப்பிமான் ஜேக்கப், தனது எக்ஸ் தளப் பதிவில், “இந்த விஷயத்தில் இந்தியா இப்போதைக்கு ஒன்றும் செய்யாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தப் பிரச்னை இன்னும் முழுதாக முடியவில்லை. இது இந்தியாவைப் பற்றியது அல்ல, வங்கதேசத்தின் அரசியலைப் பற்றியது. எனவே அவர்களே அதற்கான தீர்வை கண்டறிய வேண்டும்." எனப் பதிவிட்டுள்ளார்.

“வங்கதேசத்தில் ஹசீனா மற்றும் அவரது கட்சிக்கு மாற்றாக யார் வந்தாலும், அது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என நீண்ட காலமாகவே இந்தியா கருதுகிறது. எனவே ஹசீனாவின் ராஜினாமா என்பது ‘இந்தியாவை ஒரு மோசமான சூழலுக்கு அருகே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது’, என்கிறார் அமெரிக்க ஆய்வுக் கழகமான ‘வில்சன் மையத்தின்’ உறுப்பினர் மைக்கேல் குகல்மேன்

இந்திய அரசு வங்கதேச இராணுவத்தைத் தொடர்பு கொண்டு இந்த சிக்கல்கள் குறித்தும், இடைக்கால அரசு அமையும் பட்சத்தில் இந்தியாவின் நலன்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது குறித்தும் பேச வாய்ப்புள்ளது என்றும் குகல்மேன் பிபிசியிடம் கூறினார்.

இந்திய வங்கதேச உறவு

பட மூலாதாரம், EPA

ஹசீனாவின் இந்த திடீர் வீழ்ச்சியை, அவரது கூட்டணி கட்சிகளும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வங்கதேசத்தின் முதல் அதிபரின் மகளும், உலகின் அதிககாலம் ஆட்சி செய்த பெண் தலைவருமான ஹசீனா அவரது நாட்டை 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுவந்தார். இவர், வங்கதேசத்தை உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாற்றினார் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தினார்.

ஆயினும் இவரது ஆட்சியின் மீது, சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், எதிர்க்கட்சி மீதான அடக்குமுறைகள் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவரும் இவரது அவாமி லீக் கட்சியும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தனர். மேலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை ஊக்குவிக்கின்றன என கூறிவந்தார்கள்.

ஜனவரியில், சர்ச்சைக்குள்ளான தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் நான்காவது முறையாக வங்கதேச பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஹசீனா. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலை புறக்கணித்தது.

ஹசீனாவின் அரசு இந்தியாவுக்கு அளித்த ஆதரவிலிருந்து, வங்கதேசத்தில் சில இந்திய எதிர்ப்பு உணர்வுகள் எழுந்தன. இதனால் இந்தியா அந்நாட்டின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இலினாய் மாகாண பல்கலைக்கழகத்தின் வங்கதேச-அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியாளர் அலி ரியாஸ் பிபிசியிடம் பேசியபோது, ''இந்தியாவின் மௌனம் ஒன்றும் ஆச்சரியமானது அல்ல. கடந்த 14 ஆண்டுகளாக ஹசீனா ஆட்சிக்கு முக்கிய ஆதரவாளராக இருந்து வங்கதேசத்தின் ஜனநாயகம் சிதைவதற்கு இந்தியா பங்களித்தது’ என கூறினார்.

‘'ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா பெரும் ஆதரவு அளித்தது. மனித உரிமை மீறல்களுக்காக அவர் மீதான அழுத்தத்திற்கும் எதிராக ஒரு அரணாக இந்தியா செயல்பட்டது. இதன் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக பலனடைந்துள்ளது. இந்தியா தனது செல்வாக்கை அண்டை நாட்டில் வைத்திருப்பதற்கான ஒரே வழியாக ஹசீனாவைப் பார்த்தது.’' என்கிறார் அலி ரியாஸ்.

இந்திய வங்கதேச எல்லை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இரு நாடுகளும் 4,096 கிமீ நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன

இந்தியா, தற்போதைய வங்கதேச எதிர்க்கட்சியை மற்றும் அதன் கூட்டணியை ‘ஆபத்தான இஸ்லாமிய சக்திகளாகப்’ பார்க்கிறது.

ஹசீனா தனது மண்ணில் இந்திய எதிர்ப்பு போராளிகளை ஒடுக்கினார், மற்றும் வங்கதேச எல்லையில் உள்ள இந்திய மாநிலங்களுக்கு வர்த்தக வழிகளைப் பாதுகாக்க போக்குவரத்து உரிமைகளை வழங்கினார்.

''ஒரு அமைதியான, நிலையான மற்றும் வளமான வங்கதேசம் இந்தியாவின் கைகளில் உள்ளது. இதை உறுதிபடுத்த இந்தியா அனைத்தையும் செய்ய வேண்டும். குறிப்பாக அமைதியை நிலைநாட்ட வேண்டும்'' என்று ஹசீனா பதவி விலகுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளரும், வங்கதேசத்துக்கான முன்னாள் தூதருமான ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பிபிசியிடம் கூறினார்.

இப்போதைக்கு, நிலைமை நிச்சயமற்றதாக இருக்கிறது. ‘'இந்த சமயத்தில் இந்தியாவின் முன் அதிக வழிகள் இல்லை. எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதைத்தவிர வேறு என்ன செய்தாலும் அது ஒரு குறுக்கீடாகவே கருதப்படும்" என்று மூத்த தூதரக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)