இந்திய மாணவர்கள் உயர் கல்வி பயில வங்கதேசத்தை நோக்கி படையெடுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுவோஜித் பாக்சி
- பதவி, பிபிசிக்கு பங்களிப்பவர் , கொல்கத்தா
வங்கதேசத்தில் அரசாங்கத்துக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் அரசாங்கத்தையே மாற்றியுள்ள நிலையில், அங்கே பயிலும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் தொடர ஏதுவாக அங்கு வன்முறை விரைவில் குறையும் என காத்திருக்கிறார்கள்.
வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக, ஜூலை மூன்றாவது வாரம் வரையிலான நிலவரப்படி, அங்கு பயின்ற இந்திய மாணவர்களில், கிட்டத்தட்ட 7000 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில், மேற்கு வங்கம் முதல் காஷ்மீர் வரை இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலர் நாடு திரும்பி உள்ளனர். அவர்களில் சிலர் பிபிசியிடம் பேசிய போது, வங்கதேசத்தில் படிப்பதன் "பல நன்மைகளை" அடிக்கோடிட்டுக் காட்டினர்.
திரிபுரா எல்லையில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிழக்கு வங்கதேசத்தில் உள்ள அப்துல் ஹமீத் மருத்துவக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி சுதிப்தா மைதி கூறுகையில், "வங்கதேசத்தில் படிப்பதன் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால் `கட்டணம்’. அங்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுவதால் தான் பலர் கல்வியைத் தொடர வங்கதேசத்தை தேர்வு செய்கின்றனர்” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
"அங்கு பிரச்னை தொடங்கிய போது இந்தியாவுக்குள் நுழைவதற்காக நாங்கள் அகௌரா-அகர்தலா எல்லையைக் கடந்தோம், எதிர்ப்புகளையும் மீறி மிக வேகமாக எல்லையை அடைந்தோம்.” என்று விவரித்தார்.
கிழக்கில் உள்ள கிஷோர்கஞ்ச் (வங்கதேசம்) மருத்துவக் கல்லூரியில் இருந்து திரிபுரா தலைநகர் அகர்தலாவை அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். அங்கிருந்து கொல்கத்தாவிற்கு விமானத்தில் செல்ல மேலும் ஒரு மணி நேரம் ஆகும்.
இவ்வாறு பயணித்த மைதி, அடுத்த மூன்று மணி நேரத்தில், மேற்கு வங்கத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூரில் இருக்கும் தனது வீட்டை அடைந்தார்.
“வங்கதேசம் - இந்தியா இடையிலான போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் கொல்கத்தாவை அடைய முடியும்.”
இந்த காரணத்திற்காக தான் வங்கதேசத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை போலவே, அங்கு கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது” என்கிறார் மைதி.
2022 ஆம் ஆண்டில் பல நாடுகளுக்குச் சென்ற 10 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களில், கிட்டத்தட்ட 9,300 பேர் வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர் என்று இந்திய அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
"சிறந்த போக்குவரத்து வசதியே காரணம்"

பட மூலாதாரம், Getty Images
சிறந்த போக்குவரத்து வசதி, குறைந்த தூரம், ஒரே மாதிரியான கலாசாரம், இந்தியாவில் கல்விக்கான அதிக செலவு மற்றும் வரையறுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் ஆகியவை வங்கதேசத்தை நோக்கி இந்திய மாணவர்கள் படையெடுக்க முக்கிய காரணம் ஆகும்.
"இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான செலவு ரூ.1 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், வங்கதேசத்தில் அது 40-50 லட்சமாக உள்ளது," என்று காஷ்மீரை சேர்ந்த ஐந்தாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி காஸி குறிப்பிட்டார்.
"2019 ஆம் ஆண்டு நான் காஷ்மீரை விட்டு டாக்காவில் உள்ள அட்-டின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சமயத்தில், காஷ்மீரில் இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தனியார் கல்லூரிகள் இல்லை, அதே சமயம் வங்கதேசத்தில் மருத்துவப் படிப்பு செழித்து வளர்ந்திருந்தது” என்று அவர் விளக்கினார்.
அங்குள்ள சிறிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் இந்திய ரூபாய் மதிப்பில் கட்டணம் "30-35 லட்சம்" வரை வசூலிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
கூடுதல் நன்மைகள்

பட மூலாதாரம், Getty Images
மேற்கு வங்கத்தில் இருக்கும் பர்கானாஸில் உள்ள ஜாய்நகரை சேர்ந்த ஒரு தலைமை ஆசிரியரின் மகன் பாசித் அன்வர், வங்கதேசத்துக்கு முன்பை விட அதிகளவில் இந்திய மாணவர்கள் செல்வதற்கு வேறு பல காரணங்களை கூறினார்.
இந்தியர்கள், மருத்துவப் படிப்பை மேற்கொள்ள ரஷ்யா அல்லது யுக்ரேனை தேர்வு செய்கிறார்கள். மருத்துவ படிப்பு கட்டணத்தை பொருத்தவரை அவை வங்கதேசத்தை விட "ஓரளவு மலிவானது" என்று கூறுகிறார்கள்.
"ஆனால் வங்கதேசத்தில் படிக்க வேறு ஒரு முக்கிய காரணம் உள்ளது," என்று அவர் கூறினார்
அது மேற்கில் உள்ள குறிப்பிட்ட நாடுகளை தவிர, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த இந்திய மாணவர் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் வங்கதேசத்தில் படித்த மருத்துவ பட்டதாரிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.
"இதற்கு முக்கிய காரணம், இரு நாட்டு மருத்துப் படிப்புகளின் பாடத்திட்டம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. பெரும்பாலும் நாங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ள அதே புத்தகங்களை தான் படிக்கிறோம்" என்று பாசித் கூறினார்.
“வங்கதேச மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்கள் கூட கொல்கத்தாவில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பாடத்திட்டம் முதல் எஃப்எம்ஜிஇ தேர்வு வரை எங்களின் தேவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அங்கு நாம் 19 பாடங்களில் 300க்கு 150 மதிப்பெண் பெற வேண்டும். அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் அதிக மருத்துவர்கள் தேவைப்படுவதால் கட்-ஆஃப் இல்லை, ஆனால் நாங்கள் அந்த தேர்வில் 50% மதிப்பெண் பெற வேண்டும்”என்று பாசித் கூறினார்.
மாணவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
வங்கதேசத்தில் மருத்துவம் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ்-க்கு பிந்தைய தகுதித் தேர்வில் "அதிகம்" தேர்ச்சி பெறுகிறார்கள் என்று பாசித்தின் நண்பர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்
அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச ஜனநாயகத் தர அளவீட்டில் சரிவு இருந்தபோதிலும், வங்கதேசம் வறுமையைக் குறைப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.
ஆனாலும், கொரோனா சூழலுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கையில் வங்கதேசம் மேலும் சிரமங்களை எதிர் கொள்கிறது.
உண்மையான ஜிடிபி வளர்ச்சி 2022 இல் 7.1% ஆக இருந்தது 2023 இல் 5.8% ஆக குறைந்துள்ளது என்று முந்தைய ஆண்டு உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
பொருளாதார சவால்கள், பணவீக்க உயர்வு, வேலையின்மை ஆகியவை முக்கிய பிரச்னைகள். வங்கதேசத்தின் 17 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3.2 கோடி இளைஞர்கள் வேலை அல்லது கல்வி இல்லாமல் உள்ளனர். டாலர் கையிருப்பு குறைவது தற்போதைய அமைதியின்மையை தூண்டும் காரணிகளில் ஒன்றாக கூறப்படுகிறது.
வங்கதேசம் பல ஆண்டுகளாக தனியார் மருத்துவக் கல்வியில் முதலீடு செய்து வருகிறது மற்றும் பொது சுகாதார துறையை மேம்படுத்துகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது.
வங்கதேச தனியார் கல்லூரிகளின் எழுச்சி
வங்கதேசத்தில் மிகக் குறுகிய காலத்தில் சுமார் 70 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டன நிறுவியது என்று காஸி முகமது ஹபீப் கூறுகிறார். இவர் கொல்கத்தாவை தளமாகக் கொண்ட வெளிநாட்டு மருத்துவப் படிப்புக்கான ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர்க்கையை உறுதி செய்தல் மற்றும் வங்கதேசத்தில் படிப்பதற்கான ஆவணங்களை செயலாக்குவது முதல் மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பது வரை, ஹபீப்பும் அவரது நிறுவனமும் வெளிநாட்டில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
வங்கதேசத்தில் உள்ள 70 தனியார் கல்லூரிகளில் சுமார் 3100 இடங்கள் உள்ளதாகவும், அதிகபட்சமாக 45% வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
2023-24 ஆம் ஆண்டில், மொத்தம் 1067 இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று வங்கதேசத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் ஏப்ரல் அறிக்கை தெரிவிக்கிறது.
அரசுக் கல்லூரிகளில் சார்க் (SAARC) நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 220 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 220 மாணவர்களில் இந்தியா 22 மாணவர்கள் வரை அனுப்பலாம்.
ஹபீப் கூற்றுப்படி, இங்கு தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி அனைத்து சார்க் நாடுகளுக்கும் பயனளிக்கிறது.
“சராசரியாக எம்பிபிஎஸ் படிப்பதற்கான செலவு சுமார் 30 முதல் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, வங்கதேசமும் இந்திய மாணவர்களிடமிருந்து கணிசமான தொகை சம்பாதித்து வருகிறது,” என்றார்.
ஆனாலும், ஏராளமான வங்கதேச நோயாளிகள் இந்தியாவிற்கு - குறிப்பாக மேற்கு வங்காளத்திற்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிக சிகிச்சைச் செலவு மற்றும் மருத்துவப் பயண ஏஜென்சிகளின் அதிகரிப்பு ஆகியவை இதற்கு காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, வங்கதேசத்தில் இருந்து "30-40 சதவிகிதம்" உள்நோயாளிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
“ஒன்று மருத்துவ படிப்பு மற்றொன்று மருத்துவ சேவைகள். வங்கதேச கல்வி நிறுவனங்களை பெருமளவில் அபிவிருத்தி செய்திருந்தாலும், அது இன்னும் மருத்துவ சேவையை மேம்படுத்தவில்லை” என்று ஹபீப் கூறினார்.
மீடியா படிப்பும் பிரபலம்

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், தெற்காசிய மாணவர்களிடையே வங்கதேச மருத்துவ நிறுவனங்கள் மட்டும் பிரபலமானது அல்ல. விஷுவல் அல்லது சமூக அறிவியல் கல்வி நிறுவனங்களில் கூட இந்தியாவில் மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். பண்டைய கல்வி நிறுவனமான பாத்ஷாலா ( Pathshala ), புகைப்படம் எடுத்தல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது தெற்காசியாவிலேயே சிறந்த நிறுவனம் என்று முன்னாள் மாணவர் சுபர்ணா நாத் கூறினார்.
“வேலையைப் பெறுவது அல்லது ஒரு தொழிலைத் தொடங்குவது போன்றவற்றை அடிப்படையாக வைத்து மட்டுமே மற்ற கல்வி நிறுவனங்கள் ஒரு மாணவருக்குக் கல்வி கற்பிக்கின்றன. ஆனால் பாத்ஷாலா அப்படி இல்லை. இது ஒருவரை கல்வி ரீதியாக சுயபரிசோதனை செய்யவும், காட்சி ஊடகம் சார்ந்த அனைத்தையும் படிக்கவும், குறிப்பாக புகைப்படம் எடுக்கவும் பயிற்றுவிக்கிறது" என்று நாத் கூறினார்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வங்கதேசம் ஒரு முக்கியமான கல்வி மையமாக உருவெடுத்துள்ள நிலையில், சமீபத்திய அமைதியின்மை மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
வங்கதேசத்தில் நீடித்த வன்முறையால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று வங்கதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கல்வியை பாதித்த வன்முறை சூழலை வங்கதேசம் சமாளிக்கும் என்று மாணவர்கள் இப்போதைக்கு நம்புகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












