தங்கம் வென்றவரை விட வெள்ளி வென்ற இந்த துருக்கி வீரரை உலகமே வியந்து பார்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 30 ஆம் தேதி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்ற அந்தப் போட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகின் பல நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்து சிலர் ஆச்சரியம் வெளியிட்டனர். மற்ற சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
51 வயதான துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் படம் அது. பாரிஸ் ஒலிம்பிக்கில் அவரது பாணி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
மனுவும் சரப்ஜோத் சிங்கும் வெண்கலப் பதக்கத்தை வென்ற அதே போட்டியில், துருக்கியின் யூசுஃப் மற்றும் செவ்வால் இல்யாடா தர்ஹான் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஒரு சாதாரண கண் கண்ணாடி அணிந்து காணப்பட்ட யூசுஃப் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
ஆனால் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் யூசுஃப் இலக்கை பார்த்து சுட்ட விதம் மற்றவர்களை விட வித்தியாசமானதாக இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
யூசுஃப் இப்படி விளையாடுவதில் உள்ள சிறப்பம்சம் என்ன?
துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்கள் பொதுவாக தங்கள் காதுகளில் பெரிய ஹெட்ஃபோன்கள் மற்றும் இலக்கை துல்லியமாக பார்க்க உதவும் ஒரு வகையான கண்ணாடி அணிந்து காணப்படுவார்கள்.
கண்ணாடி லென்ஸ்கள், சுற்றுப்புறத்தை மறைத்து இலக்கை சரியாக பார்க்க உதவும் பிளைண்டர்கள் மற்றும் இயர் ப்ரொடெக்டர் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இவை எல்லாமே துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
பொதுவாக துப்பாக்கி சுடும் வீரர்கள் கண்களில் விழும் ஒளியைக் குறைக்க வைசர் எனப்படும் மறைப்பையும், சிறந்த முறையில் குறி வைக்க உதவும் ஒரு பிளைண்டரையும் அணிவார்கள்.
ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக் இவை எதுவும் இல்லாமல் குறிவைத்து சுட்டுள்ளார்.
இருப்பினும் சத்தத்தால் கவனம் சிதறாமல் இருக்க மிகவும் சிறிய காது செருகிகளை (ear plug) யூசுஃப் அணிந்திருந்தார்.
இந்தப்போட்டி நடந்து பல நாட்கள் ஆன பிறகும் கூட சாதாரண மக்கள் முதல் பணக்கார தொழிலதிபர் எலோன் மஸ்க் வரை பலரும் யூசுஃப்பின் படங்களுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சமூக வலைதளங்களில் வைரலாகும் டிகேக்கின் ஸ்டைல்
யூசுஃப்பைப் போலல்லாமல் அவரது இணை தர்ஹான், ஒளியைக் குறைக்க உதவும் வைசர், ஹெட்போன் அணிந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
"துருக்கி 51 வயதான ஒருவரை சிறப்பு லென்ஸ்கள், ஐ கவர் மற்றும் இயர் ப்ரொடெக்ஷன் இல்லாமல் அனுப்பியது. அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுவிட்டார்," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் ஒரு பயனர் எழுதினார்.
"காபி குடிக்கச் சென்றுகொண்டிருந்தார், ஷூட்டிங்கிற்காக நின்றுவிட்டார்,” என்று மற்றொரு பயனர் பதிவிட்டார்.
"மிகவும் கூல் மற்றும் ரிலாக்ஸ்ட்” என்று மற்றொருவர் எழுதினார்.
சமூக ஊடக தளம் எக்ஸின் உரிமையாளர் எலோன் மஸ்க் ஒரு இடுகையை மறு பகிர்வு செய்துள்ளார்.
அவரது போட்டியாளர்களான ஃபேஸ்புக், மெட்டா மற்றும் லிங்டின்னை ஒப்பிடும்போது யூசுஃப் ஒரு ‘எக்ஸ்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மறு இடுகையில், யூசுஃப் சிறப்பு லென்ஸ்கள் இல்லாமல் விளையாடும் ’எக்ஸாக’ காட்டப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
"இந்த துருக்கி வீரர் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் நான் அவருடைய பாணியையும் ஸ்டைலையும் கடுமையாக எதிர்க்கிறேன்,” என்று தீபேந்திரா ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
“இவ்வளவு பெரிய நிகழ்வில் ஷூட்டிங் செய்யும்போது சில விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். உதாரணத்துக்கு கண்ணில் ஸ்பெஷல் லென்ஸ்கள், காதில் ஹெட்போன் என எதையுமே அவர் அணியவில்லை. இருப்பினும், இதையெல்லாம் அணியவேண்டும் என்று கட்டாயமில்லை. மாறுதலாக ஏதோ செய்து வெள்ளியும் வென்றார்.”
"என் மதிப்பீட்டின்படி அவர் தனது ஒரு கையை பாக்கெட்டில் வைக்காமல் குறிவைத்திருந்தால் தங்கம் வென்றிருப்பார். அடுத்த முறை இதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், EPA
யூசுஃப் டிகேக் யார்?
51 வயதான யூசுஃப்பிற்கு இது முதல் ஒலிம்பிக் அல்ல. அவர் 2008 முதல் ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக்கிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த ஒலிம்பிக்கில் தனிநபர் தனி நபர் துப்பாக்கிசுடுதல் போட்டியில் யூசுஃப் 13வது இடத்தில் இருந்தார்.
ஆனால் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
2028 இல் மற்றொரு பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.
2028 இல் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என நம்புகிறேன் என்று யூசுஃப் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
"துருக்கிக்காக முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான துருக்கி மக்களுக்கு இந்தப்பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்,” என்று யூசுஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்களையும் யூசுஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக இணைத்துள்ளார்.
இதில் துருக்கிய மொழி மீம்களும் அடங்கும்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

பட மூலாதாரம், Getty Images
விதிகள் என்ன?
ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு என்ன வேண்டுமானாலும் அணிந்து கொண்டு போட்டிக்கு வர சுதந்திரம் உள்ளது.
போட்டி நடைபெறும் இடத்தில் பல துப்பாக்கி சுடும் வீரர்கள் தங்கள் கண்களை ஒளியில் இருந்து பாதுகாக்க வைசர் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் ஒரு கண்ணால் துல்லியமாக குறிவைக்கும் பொருட்டு மற்றொரு கண்ணை மறைக்கும் ப்ளைண்டர் அணிகின்றனர்.
தங்கப் பதக்கம் வென்ற சீன துப்பாக்கி சுடும் வீரர் லியு யுகுனும் யூசுஃப்பைப் போலவே இயர் ப்ளக் மட்டுமே அணிந்திருந்தார். வைசரோ, பிளைண்டரோ அணியவில்லை.
இந்த ஒலிம்பிக்கில் யூசுஃப்பைத் தவிர தென் கொரிய துப்பாக்கி சுடும் வீரர் கிம் யெஜியின் தன்னம்பிக்கை குறித்தும் நிறைய விவாதங்கள் நடந்தன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












