எம்பாக்ஸ் பரவல்: வேகமாகப் பரவும் குரங்கம்மை தொற்றுநோயின் புதிய திரிபு - ஏன் ஆபத்தானது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் & சிமி ஜோலாசோ
- பதவி, பிபிசி செய்திகள்
குரங்கம்மை (எம்பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
எம்பாக்ஸ்(MPox) அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.
தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
ஆப்பிரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
"நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்த்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உலக நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்," என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மிகவும் ஆபத்தான எம்பாக்ஸ் வைரஸின் புதிய திரிபு
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேரில், நால்வர் உயிரிழக்கும் அளவிற்கு இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எம்- பாக்ஸ் வைரஸில் கிளேட் 1, கிளேட் 2 (Clade 1 மற்றும் Clade 2) என இரண்டு வகைகள் உள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு, குரங்கம்மை(MPox) பரவியதால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடியானது, கிளேட் 2 வகை வைரஸால் ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதைவிட மிகவும் ஆபத்தான கிளேட் 1 வைரஸ் பரவி வருகிறது. இது இதற்கு முன் நோய்த்தொற்று பரவுவதைக் காட்டிலும் 10% வரை அதிக நோயாளிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வைரஸில் நடந்த மாறுபட்டால் கிளேட் 1பி என்ற புதிய வைரஸ் திரிபு உருவானது. இந்தப் புதிய மாறுபட்ட வைரஸ் ‘இன்னும் அதிக ஆபத்தானது’ என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காங்கோ நாட்டில் சுமார் 13,700க்கும் மேற்பட்ட மக்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு அதில் குறைந்தது 450 பேர் உயிரிழந்துள்ளனர்.
புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கென்யா, ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
‘சரியான நேரத்தில் வந்த அறிவிப்பு’

பட மூலாதாரம், Getty Images
குரங்கம்மை(எம்பாக்) நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்நோயைச் சரி செய்யத் தேவையான ஆராய்ச்சி, நிதியுதவி மற்றும் சர்வதேசப் பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் “இந்த அறிவிப்பு ஒரு வலுவான குறிப்பாக இருப்பதாக,” வெல்கம் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ஜோசி கோல்டிங் கூறினார். "இது இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துவதாக," எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் போகுமா டைட்டான்ஜி கூறினார்.
இந்த அறிவிப்பு "மிகவும் முக்கியமானது மற்றும் சரியான நேரத்தில் வந்துள்ளது," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச சுகாதாரக் கூட்டமைப்பின் இயக்குநரான பேராசிரியர் ட்ரூடி லாங் கூறினார். ஆனால் இந்த வைரஸின் புதிய திரிபு குறித்துப் பல அறியப்படாத விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், கிளேட் 2 வகை குரங்கம்மை(எம்பாக்ஸ்) ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட சுமார் 100 நாடுகளுக்குப் பரவியது.
இவ்வகை வைரஸ் பரவியதன் மூலம் 87,000க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 140 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
யார் வேண்டுமானாலும் குரங்கம்மையால் பாதிக்கப்படலாம். குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேதான் இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த்தொற்று அப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
செவ்வாக்கிழமையன்று, ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் குரங்கம்மை(எம்பாக்ஸ்) பரவுவதால் பொது சுகாதார நெருக்கடியை அறிவித்தனர்.
இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது பரவி வரும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்று இந்த அமைப்பின் தலைவர் ஜீன் கசேயா எச்சரித்தார்.
"இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பான மற்றும் வலிமையான முயற்சிகளுடன் செயல்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
குரங்கம்மை(எம்பாக்ஸ்) நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளில், காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை அடங்கும்.
காய்ச்சல் நின்றவுடன் தடிப்புகள் தோன்றலாம். பெரும்பாலும், முகத்தில் இது தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவும்.
அதிகப்படியான அரிப்பு அல்லது வலியுடன் கூடிய இந்த தடிப்புகள், பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக பொருக்குகளாக மாறும். அவை விழுந்த பின்னர் அவை இருந்த இடத்தில் வடுக்கள் தோன்றும்.
இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம்.
எம்பாக்ஸ் வைரஸ் எப்படிப் பரவுகிறது?
குரங்கம்மை(எம்பாக்ஸ்) நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகினால் இது பரவும். அதாவது, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, அல்லது அந்த நபருடன் நெருக்கமாகப் பேசுவது, சுவாசிப்பது ஆகிய செயல்களின் மூலம் இந்தத் தொற்று பரவும்.
தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும். இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது.
இந்த வைரஸ் பரவும் மற்றோரு வழி: குரங்குகள், எலிகள், அணில் போன்ற இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவது. 2022இல் இந்தத் தொற்று உலகளாவிய அளவில் பரவியபோது, அது பெரும்பாலும் பாலியல் உறவு மூலம் பரவியது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தொற்றுநோய்ப் பரவல் பாலியல் தொடர்பு மூலம் உண்டாகியிருக்கிறது. ஆனால் இது மற்ற சமூகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












