சென்னை, மும்பை, டெல்லி மருத்துவமனைகளில் பெண் மருத்துவருக்கு பாதுகாப்பு எப்படி? பிபிசி கள ஆய்வு

கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், இரண்டாம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் போராட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள மருத்துவர்கள், இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை மருத்துவ சேவைகளை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். முழுமையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக பெண் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் அந்த மருத்துவர்கள்.
2007ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் மருத்துவ பணியாளர்கள் மீது 153 தாக்குதல் நடைபெற்றிருப்பதாக அறிவிக்கிறது லான்சாட்டின் கட்டுரை.
“இந்தியாவின் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்காணிக்கும் எங்களின் VAHCW இயக்கம், இன்செக்யூரிட்டி இன்சைட் அமைப்புடன் நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டு 225 தாக்குதல்களும், 2021ம் ஆண்டு 110 தாக்குதல்களும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிராக நடந்துள்ளன,” என்று தெரிவிக்கிறது அந்த கட்டுரை. மருத்துவத் துறையில் அடிமட்ட பணியாளர்களில் இருந்து ஜூனியர் மருத்துவர்கள் வரை பலரும் இந்த தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த கட்டுரை.
மருத்துவ பணியாளர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு தண்டனைகளை வழங்கும், பெருந்தொற்று நோய்கள் திருத்தச் சட்டம் 2020-ன் பிரிவுகளையும் அந்த கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள சில புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளை பிபிசி செய்தியாளர்கள் நேரில் பார்வையிட்டனர். அவர்கள் அங்குள்ள பெண் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அச்சம் மற்றும் இரவு நேர பணிகளின் போது பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி புரிந்து கொள்ள பிபிசி செய்தியாளர்கள் அவர்களிடம் பேசினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“நோயாளிகளின் உறவினர்கள் குடித்துவிட்டு வருகின்றனர் ” - டெல்லியில் நிலை என்ன?
உமாங் போடார், பிபிசி ஹிந்தி
டெல்லியின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் லோக் நாயக், ஜிபி பாண்ட், லேடி ஹார்திங்கே கல்லூரி மருத்துவமனைகள் மிக முக்கியமான மூன்று மருத்துவமனைகளாகும். முதல் இரண்டு மருத்துவமனைகளை டெல்லி அரசு நடத்தி வருகிறது. மூன்றாவது மருத்துவமனையை மத்திய அரசு நடத்துகிறது.
லோக் நாயக் மருத்துவமனையின் நுழைவாயிலில் ‘மெட்டல் டிடெக்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. “ஆனால் அவை செயல்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்,” என்று குற்றம்சாட்டுகிறார் மூத்த ரெசிடன்ட் மருத்துவர் ஒருவர்.
மூன்று மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் இன்னும் நிறைய பொருத்த வேண்டும் என்று கூறுகின்றனர். யாரும் அதனை கண்காணிக்கவில்லை என்று லோக் நாயக் மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த ரெசிடன்ட் மருத்துவர் குற்றம்சாட்டுகிறார்.
நோயாளிகளின் குடும்பத்தினர்கள் தரும் அச்சுறுத்தலுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் பயந்து போய் உள்ளனர். “இரவு நேரங்களில் குடித்து வரும் அவர்களை அடிக்கடி சமாளிக்க வேண்டியதாக உள்ளது,” என்று கூறுகிறார் லோக் நாயக்கில் பணியாற்றும் செவிலியர்.
“மருத்துவமனையின் சில பகுதிகளில் விளக்குகளே கிடையாது. நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை வளாகத்தில், தரையில் படுத்து தூங்குவார்கள்,” என்று கூறுகிறார் லோக் நாயக் மருத்துவமனையில் முதலாமாண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் மாணவர்.

இந்த மூன்று மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் இரவு நேரங்களில் மிகவும் குறைவாக உள்ளது. நான் உள்ளே வரும் போது ஒருவரும் என்னை பரிசோதிக்கவில்லை. இரண்டு மகப்பேறு அவசரப் பிரிவுகளில் மட்டுமே பெண் காவலர்கள் நான் மருத்துவமனைக்கு வந்த நோக்கம் என்ன என்று கேட்டனர். மற்ற கேள்விகள் எதையும் அவர்கள் கேட்கவில்லை.
ராஜ் காட் அருகே அமைந்திருக்கும் ஜி.பி. பாண்ட் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், “பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மோசமாக நடந்து கொள்ளும் நோயாளிகளின் உறவினர்களை கவனித்துக் கொள்ள பவுண்சர்களை வைத்துக் கொண்டாலும் நல்லது தான்,” என்கிறார்.
24 மணி நேரமும் செயல்படும் உணவகங்கள் லோக் நாயக் மருத்துவமனையில் உள்ளன. ஆனால் அங்கே செல்வது அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்று இரண்டு பெண் மருத்துவர்கள் கூறுகின்றனர். “நான் பொதுவாக ஆன்லைனில் தான் ஆர்டர் செய்வேன்,” என்கிறார் மூத்த ரெசிடன்ட் மருத்துவர்.
லேடி ஹார்டிங்கே கல்லூரியில் பணியாற்றும் மூத்த மருத்துவர், இரவு நேரங்களில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றால் வளாகத்தில், தொலை தூரங்களில் அமைந்திருக்கும் ஆய்வகங்களுக்கு செல்ல வேண்டும்.
அங்கே பயிற்சி பெற்று வரும் மற்றொரு மருத்துவர், “சில நேரங்களில், ஆண்கள் மட்டுமே உள்ள உள் பிரிவுகளுக்கு பெண் மருத்துவர்கள், நோயாளிகளை பரிசோதிக்க அனுப்பப்படுகின்றனர். அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இரவு நேரங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுகாதாரமற்றதாகவும், பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.
எங்களுக்கு நல்ல அறைகள் வேண்டும் என்று கூறுகிறார் லோக் நாயக் மருத்துவமனையில் மகப்பேறு அவசரப் பிரிவு பகுதியில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர்.
லேடி ஹார்டிங்கேவில் பயிற்சி பெற்று வரும் மருத்துவர் ஒருவர், அங்கே சில துறைகளில் ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கு பொதுவான ஓய்வறைகள் (கழிப்பறைகள்) தான் உள்ளன என்று கூறுகிறார்.
மருத்துவமனை நிர்வாகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம்

லக்னோவில் நிலை என்ன?
சையத் மொஸிஸ் இமாம், பிபிசி ஹிந்தி
நான் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே முதன்மை நுழைவாயிலில் இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் மருத்துவமனைக்குள் செல்ல எந்த தடையும் இல்லை. பொது மருத்துவம் உள் நோயாளிகள் பிரிவில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் காவலர்கள் பணியில் இருந்தனர்.
மூத்த ரெசிடன்ட் மருத்துவர் (நீத்தா) ஒருவர், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.
“இதுபோன்ற சூழலில் நாங்கள் பாதுகாப்பு காவலர்களை அழைப்போம். ஆனால் அவர்கள் எப்போதாவது தான் இதுபோன்ற பிரச்னைகளில் தலையிடுவார்கள். இதுபோன்ற சூழலில் எங்களை நாங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,” என்ற தெரிவித்தார் அந்த பெண் மருத்துவர்.
விடுதிகள் அமைந்திருக்கும் இடங்கள் மிகவும் மங்கியும், வெளிச்சமே இல்லாமலும் இருக்கும்.
மருத்துவம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் ஹர்ஷிதா மற்றும் நீத்து, பல நேரங்களில் வெளியாட்கள் உள்ளே நடமாடுவதாகவும், மோசமாக பேசுவதாகவும் தெரிவிக்கின்றனர். மருத்துவ நிர்வாகம் இவர்களை நுழைவுப் பகுதியிலேயே தடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இங்கே ரோந்து நடப்பதால் தற்போது பல்கலைக் கழக வளாகம் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார் ஹர்ஷிதா.
பெண்களின் விடுதிக்கு எதிரே, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பு, பெண் ஒருவருக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது என்று தெரிவிக்கிறார் ஒரு மருத்துவர்.
அதிக அளவில் பாதுகாவல்கர்கள் நியமிக்க வேண்டும் என்றும், இருண்ட பகுதிகளில் மின்விளக்குகள் அதிகமாக வைத்தல் மற்றும் சிசிடிவி கேமராக்களை பொருத்தல் ஆகியவற்றையும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் மருத்துவர் அகன்ஷா.
மருத்துவமனை நிர்வாகத்தின் பதில்
கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் மருத்துவர் சுதிர் சிங், “இங்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மருத்துவமனை வளாகம், விடுதி மற்றும் நோயாளிகள் உட்பிரிவில் வைத்துளோம். மேலும் விடுதிகளில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குழுவை நியமித்துள்ளோம்.
வார்டுகளில் பாதுகாப்பு காவலர்கள் உள்ளனர். இதுவரை வளாகத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்ததாக எங்களிடம் புகார் ஏதும் வரவில்லை.
விசாகா கமிட்டியின் (POSH) வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றி வருகிறோம். வளாகத்தில் முக்கியமான பல சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

சென்னையில் நிலை என்ன?
சாரதா வெங்கடசுப்ரமணியன், பிபிசி தமிழ்
இரவு 9.30 மணிக்கு நான், வாலாஜா சாலையில் அமைந்திருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றேன். சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் அங்கே நான் என்னுடைய வாகனத்தை நிறுத்த சென்றேன். அப்போது அங்கு வந்த பாதுகாப்பு காவலாளி ஒருவர் என்னைப் பற்றி விசாரித்தார்.
அனுமதிப் பிரிவின் அருகே அமைந்துள்ள, வெளிச்சம் குன்றிய படிக்கட்டுகளில் நோயாளிகளின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டு காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர் அபர்ணா, "கொல்கத்தாவில் நடைபெற்ற துயர சம்பவம் இங்கே உள்ள பெண் பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய மருத்துவ நிர்வாகம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது" என்றார்.
பயிற்சி மருத்துவர்கள், மருத்துவர்களின் அறைகளை பயன்படுத்திக் கொள்ளவும், அதனைப் பூட்டிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு காவல்துறைக்கு தகவல் அளிக்க காவலன் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது என்றார். "எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்," என்று வருத்தம் தெரிவிக்கிறார் அவர்.
இண்டர்காம் வசதியும், வார்டுகளில் அவசர அழைப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் பட்டன்களும் உதவிகரமாக இருக்கும் என்று கூறிய அவர் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கோரிக்கை வைத்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்றார்.
தமிழகத்தில் செயல்படும் முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இரவு 10 மணி அளவில், செவிலியர்கள் ஓய்வெடுக்க அறை ஏதும் இல்லை என்ற புகாரை முன்வைத்தார் செவிலியர் ஒருவர். ஒரு நாற்காலியும் ஒரு நீளமான மேஜையும் தான் இரவு நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அவர்.
சில மீட்டர்கள் தொலைவில் தான் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. அவர்களின் தொலைபேசி எண்கள் என்னிடம் இருக்கிறது என்றார் அவர்.
மருத்துவமனை நிர்வாகம் கூறுவது என்ன?
மருத்துவர் ஏ. அரவிந்த், ஓமந்தூரார் மருத்துவமனையின் டீன் பிபிசியிடம் பேசிய போது, "வகுப்புகள் நடைபெறும் அரங்குகளுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. தற்போது அதில் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 20 பேர் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ரெசிடன்ட் மருத்துவ அதிகாரி மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறார். ஏதேனும் அவசர தேவை என்றால் உடனே நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவார்," என்று கூறினார்.
ஹைதராபாத்தில் நிலை என்ன?
பல்லா சதீஷ், பிபிசி தெலுங்கு
கொல்கத்தாவில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றனர் ஒஸ்மானியா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
ஆகஸ்ட் 12ம் தேதி அன்று நள்ளிரவு 11.40 முதல் 12.50 முதல் அங்கே பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் பேசினேன்.
"பாதுகாப்பு இல்லாததை போல் உணருகிறோம். வளாகத்தில் பாதுகாப்பு இல்லாத சில இடங்கள் உள்ளன," என்று போராட்ட வளாகத்தில் கூறினார் பயிற்சி மருத்துவர் ஹரிணி.
இரவு நேரங்களில் பணியில் இருக்கும் நாங்கள் ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு செல்ல வெவ்வேறு கட்டிடங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. அந்த கட்டிடங்களிலும் அங்கே செல்ல பயன்படுத்தப்படும் பாதைகளிலும் எந்த விதமான பாதுகாப்பும், காவலாளிகளும் இல்லை," என்றார் அவர்.
"மருத்துவமனைக்கும், விடுதிக்கும் இடையே போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருப்பது மருத்துவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனித்தனி அறைகள் இல்லை" என்று பெண் மருத்துவர் குற்றம் சாட்டினார்.
"ஆண் மற்றும் பெண் டாக்டர்களுக்கு அருகருகே படுக்கைகள் அங்கே போடப்பட்டிருக்கும். எனக்கு அது சரியாக இல்லை. நான் பாதுகாப்பாக உணரவில்லை. எனவே, இரவு நேரங்களில் அருகில் இருக்கும் என்னுடைய விடுதிக்கு சென்றுவிடுவேன்" என்றார் அவர்.
"ஒரு நாள் அதிகாலை நான் என்னுடைய விடுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது என்னை ஒரு சிலர் பின்தொடர்ந்தனர். அது ஒரு மோசமான அனுபவம்," என்று விவரிக்கிறார் அந்த மருத்துவர்.
விபத்து சிகிச்சைப் பிரிவில் சில காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தனியார் காவலாளிகள் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் கருத்துகளை பெற அவர்களை தொடர்பு கொண்டுள்ளது பிபிசி

சண்டிகரில் நிலை என்ன?
சராப்ஜித் சிங் தலிவால், பிபிசி பஞ்சாபி
கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGI) சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
நான் இரவு 11 மணிக்கு அங்கே சென்றேன். அவரச சிகிச்சைப் பிரிவில் இரண்டு காவலாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். நோயாளிகள் மற்றும் அவர்களை காணும் வரும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். நுழைவுப் பகுதியில் காவல்துறையின் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கே பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
வார்டுகளுக்கு உள்ளே மருத்துவர்கள், செவிலியர்கள், காவலாளிகள் இருந்தனர். அந்த சிகிச்சைப் பிரிவின் அருகே, பேனரில் "We want justice’ என்று பொறிக்கப்பட்டிருந்தது.
மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் இங்கே பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்று கூறினார் மருத்துவர் பூஜா. அவர் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்.
அவரின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளதை குறிப்பிடும் அவர், காவலாளிகள் உடனே தலையிட்டு மோதல்கள் பெரிதாவதை தடுத்துள்ளனர் என்பதையும் தெரிவிக்கிறார்.
சண்டிகரை ஒட்டி அமைந்துள்ள மொஹாலியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ககன்தீப் சிங் அங்கே போதுமான பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிடுகிறார்.
ஆகஸ்ட் 6ம் தேதி அன்று குழந்தை நல மருத்துவர் ஒருவர் பட்டியாலா பகுதியில் தாக்கப்பட்டதை தெரிவிக்கும் அவர், வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். "இங்கே பாதுகாப்பே இல்லை," என்கிறார் ககன்தீப்.
மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் என்ன?
பி.ஜி.ஐயின் இணை மருத்துவ கண்காணிப்பாளரான மருத்துவர் பங்கஜ் அரோரா, "மருத்துவமனை வளாகம் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் சிசிடிவி கேமராக்களையும் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். எதாவது பிரச்னை என்று மருத்துவர்கள் கூறும் பட்சத்தில் அது உடனே சரி செய்யப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஆமதாபாத்தில் நிலை என்ன?
லக்ஷ்மி படேல், பிபிசி குஜராத்தி
“பி.ஜி. விடுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு இரவு நேரப் பணிகளுக்காக நடந்து தான் செல்கிறோம். அங்கே போதுமான விளக்குகளும் இல்லை. பாதுகாப்பும் இல்லை,” என்று கூறுகிறார் அஹமதாபாத் சிவில் (பொது)மருத்துவமனையில் பணியாற்றும் மஹிமா ராமி.
24 மணி நேரமும் வேலை இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெண் மருத்துவர்கள், வார்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள அறைகளிலேயே பெரும்பாலான நேரங்களில் ஓய்வு எடுக்கின்றனர் என்று கூறுகிறார் மஹிமா.
சில நேரங்களில் அந்த அறைகளில் நுழையும் நோயாளிகளின் உறவினர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். இந்த அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்று தெரிவிக்கிறார் மற்றொரு மருத்துவர்.
அந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு இந்த வளாகத்தில் இயங்கி வரும் மிக முக்கியமான ஒரு பிரிவாகும். தற்போது அதற்கு வெளியே 8 காவலாளிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் இரவு நேரங்களில் வார்டுகளுக்கு வரும் நபர்களை விசாரிப்பதோ சோதிப்பதோ கிடையாது. நான் ஒரு வார்டில் நுழைந்து மற்ற வார்டுகளுக்கு சென்று வந்தேன். என்னிடம் ஒரு கேள்வியும் கேட்கவில்லை.
மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் என்ன?
அந்த மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவர் ரஜ்னிஷ் படேல், அங்கே பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் பலமாக இருப்பதாக தெரிவிக்கிறார். போதுமான வெளிச்சம் இல்லை என்று ஜூனியர் மருத்துவர்கள் சங்கம் புகார் அளித்தது. “மேலும் சில பிரச்னைகளை அவர்கள் மேற்கோள்காட்டினார்கள். அதில் நடவடிக்கைகள் எடுக்க துவங்கியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார் அவர்.

மும்பையில் நிகழ்வது என்ன?
திபாலி ஜக்தப், பிபிசி மராத்தி
திங்கள் கிழமை மாலை, ஜே.ஜே. மருத்துவமனை நுழைவு வாயிலில் பாதுகாப்பு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். மருத்துவமனை வளாகத்திற்குள் நம்மால் செல்ல இயலும். ஆனால் வார்டுகளுக்குள் செல்ல அனுமதி வேண்டும். இருப்பினும் இரவு நேரங்களில் பணியாற்றுவது பாதுகாப்பற்றதாக உள்ளது என்று பெண் மருத்துவர்களும் செவிலியர்களும் கூறுகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் வார்டுகளுக்கு வெளியிலும், வளாகத்திலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறார் அங்கு பணியாற்றும் ரெசிடன்ட் மருத்துவர் அதிதீ கனதே.
"இந்த வளாகம் மிகவும் பெரியது. ஆனால் பல்வேறு இடங்கள் வெளிச்சமற்று இருண்டு தான் உள்ளன. விடுதியில் இருந்து பணிக்கு செல்லும் போது பயமாக இருக்கும்" என்றார் அவர்.
"இறந்து போன நோயாளி ஒருவரின் உறவினர்கள் கோபம் அடைந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் நிலைமை அமைதி அடைய அறையை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று நினைவு கூறுகிறார் அவர்.
"இங்கே பல அறைகள், பாதைகள் சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் இருக்கின்றன. அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை அறைக்கு அருகே பெண் மருத்துவர்களுக்கு என்று தனி அறை தேவை. எங்களுக்கு என இங்கே தனியாக அறைகள் ஏதும் இல்லை" என்றும் அவர் கூறினார்.
26 வயதான செவிலியர் ஹெம்லதா கஜ்பே, போதுமான பாதுகாப்பு வசதிகள் அங்கே இல்லை என்று தெரிவிக்கிறார்.
நோயாளிகளின் உறவினர்கள் அவர்களை பார்க்க வரும் போது, ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் குடித்துவிட்டு வருகின்றனர். பலர் அரசியல் அழுத்தத்தை தர முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
சில நேரங்களில் மோசமான நிகழ்வு அரங்கேறும் போது, எங்களுக்கு உதவி செய்ய அருகில் யாருமே இருப்பதில்லை.
மருத்துவமனை நிர்வாகத்தின் பதில் என்ன?
ஜே.ஜே.மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பல்லவி சபலேவிடம் கருத்து கேட்க முயன்றது பிபிசி. இதுவரை பிபிசியின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












