வினேஷ் போகாட்டிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

வினேஷ் போகாட், பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டிற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா இல்லையா என்று தீர்மானிப்பதை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. வினேஷ் போகாட்டின் மேல் முறையீடு மீது வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024இல், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

ஆனால் இறுதிப்போட்டி நடக்கவிருந்த நாளன்று காலையில் அவரது எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக எடை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் வினேஷ் போகாட்.

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு பிரபலங்கள் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வினேஷ் மீதான எதிர்பார்ப்பு

வினேஷ் மீதான எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், Getty Images

வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது, அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம், முதல் நாளில் அவர் பெற்ற அடுத்தடுத்த மூன்று வெற்றிகள்.

குறிப்பாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் மல்யுத்த வீராங்கனை யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்திருந்தார்.

சுசாகி நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் இருப்பவர். சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் அதுவரை தோல்வியையே சந்திக்காதவராக அவர் வலம் வந்தார்.

அவரது சாதனைகளை பார்க்கும் போது, ​​பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை உணர முடியும்.

அதைத் தொடர்ந்து காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோனையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் வினேஷ்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிக எடையுடன் இருந்தார் என்ற காரணத்திற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சர்ச்சை தொடர்பாக வினேஷின் மருத்துவர் குழு மற்றும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

வினேஷ் மீதான எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து பேசிய இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா, “மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் ஜுடோ போன்ற விளையாட்டுகளில் போட்டியாளர்களின் எடை விவகாரத்தில் அந்தந்த போட்டியாளரும், பயிற்சியாளர்களும் தான் பொறுப்பு. இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்த மருத்துவர் குழு பொறுப்பாகாது.” என்று கூறினார்.

இதற்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் (UBT) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, பி.டி. உஷா தெரிவித்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

அதில், “பி.டி. உஷா கூறுவதை வைத்துப் பார்த்தால், எதிர்காலத்தில் இந்திய வீரர் அல்லது வீராங்கனைக்கு ஏதேனும் பிரச்னை என்றால் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உதவி செய்யாதா? இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது பொறுப்புகளில் இருந்து விலகி நிற்க முடியாது. மத்திய அரசும் வினேஷை ஆதரிக்க தவறிவிட்டது” என்று அவர் கூறியிருந்தார்.

வினேஷின் மேல் முறையீடு

வினேஷின் மேல் முறையீடு

பட மூலாதாரம், Getty Images

தனது தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம் வினேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.

அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வினேஷ் கூறியிருந்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, வினேஷின் சட்டக் குழுவில் பிரெஞ்சு வழக்கறிஞர்கள் ஜோயல் மோன்லூயிஸ், எஸ்டெல் இவனோவா, ஹபைன் எஸ்டெல் கிம் மற்றும் சார்லஸ் ஆம்சன் ஆகியோர் உள்ளனர். இது பாரிஸ் ஒலிம்பிக் குழுவால் வழங்கப்பட்ட சட்ட உதவிக் குழுவாகும்.

இந்த வழக்கில் அவருக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரும் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, வினேஷ் தரப்பிலான அனைத்து வாதங்களும் நடுவர் மன்றத்தில், மூத்த வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது. இந்த வழக்கின் விசாரணை சுமார் மூன்று மணிநேரம் நடந்துள்ளது.

வினேஷின் 100 கிராம் கூடுதல் எடை என்பது அவர் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும் போது, இயற்கையாக ஏற்படும் மாற்றத்தால் கூடிய எடை தானே தவிர, அவர் மோசடி செய்யவில்லை என்று வழக்கறிஞர்கள் வாதிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ஒரே போட்டியில் 2 வெள்ளி பதக்கங்கள் வழங்கப்படுமா?

இரு வெள்ளி பதக்கங்கள் வழங்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள்

கடந்த வெள்ளிக் கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பாக், “இரு வெள்ளி பதக்கங்கள் வழங்குவது சாத்தியமில்லை. ஆனால் நடுவர் மன்றத்தின் முடிவு வரும் வரை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. மல்யுத்த வீராங்கனையின் (வினேஷ்) உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் இதில் மல்யுத்தத்தை மேற்பார்வையிடும் சர்வதேச அமைப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்துள்ளது” என்று கூறினார்.

சச்சின் டெண்டுல்கர், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2008 ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரே, அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டான் எர்னஸ்ட் பர்ரோஸ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், பயிற்சியாளர்களும் வினேஷுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது வெள்ளிப் பதக்கம் கியூபாவைச் சேர்ந்த குஸ்மோனுக்கு வழங்கப்பட்டது. வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் குஸ்மோனுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வினேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டிற்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து வழங்கப்படுமா இல்லையா என்று தீர்மானிப்பதை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. வினேஷ் போகாட்டின் மேல் முறையீடு மீது வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு (பாரிஸ் நேரப்படி மாலை 6 மணி) தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

ஒருவேளை, வினேஷுக்கும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7ஆக உயரும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)